Skip to main content

சொல்வதைச் செய்யுங்கள்

 

சொல்வதைச் செய்யுங்கள்

 

என்றோ தேவன் பேசியதை மாத்திரம் மனதில் கொண்டவர்களாக, இன்று நமக்கு முன்னே நின்று பேசும் தேவனது வார்த்தைகளை உணராமல் உதறிவிடும் மனிதர்களாக நாம் காணப்படக்கூடாது. அவர் தனது வார்த்தையில் மாறுபடுகிறவரல்ல, ஆனால், நமது வாழ்க்கையை அவ்வப்போது மாற்றியமைக்கிறவர். இயேசு தனது சீஷர்களை அனுப்பியபோது, 'புறப்பட்டுப்போங்கள்; ஆட்டுக்குட்டிகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறது போல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன். பணப்பையையும், சாமான் பையையும், பாதரட்சைகளையும் கொண்டுபோக வேண்டாம்; வழியிலே ஒருவரையும் வினவவும் வேண்டாம் (லூக் 10:4) என்று கட்டளையிட்டார். உங்களை ஏற்றுக்கொள்ளும் வீட்டிலே நீங்கள் தங்கியிருந்து, அவர்கள் கொடுக்கிறவைகளைப் புசித்துக் குடியுங்கள்; வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான், வீட்டுக்கு வீடு போகாதிருங்கள் (லூக். 10:4,7,8) என்றார். பணப்பையையும், சாமான் பையையும், பாதரட்சைகளையும் வைத்திருந்த சீஷர்களுக்கு அவைகளை விட்டுச் செல்லும் நிலை ஏற்பட்டது. நமக்குத் தேவையானவைகளை தேவையற்றவைகள் என்று இயேசு சொல்லுகிறாரே, தேவைகள் எப்படி சந்திக்கப்படும் என்ற சந்தேகம் அவர்களுக்குள் உண்டாகியிருக்கலாம். சிலர், கட்டாயத்தின் பேரில் அவைகளை விட்டு வந்திருக்கலாம், சிலர் எப்போதாவது நமக்கு மீண்டும் உதவும் என்று பத்திரப்படுத்தி வைத்துப் போயிருக்கலாம். எனினும், எலியாவுக்கு காகத்தையும், ஆகாரத்தையும், விதவையையும், வீட்டையும் ஆயத்தப்படுத்தியிருந்த தேவன், கட்டளையின்படி புறப்பட்டுச் சென்ற சீஷர்களுக்கான தங்குமிடத்தையும், போஜனத்தையும் ஆயத்தம்பண்ணியிருந்தார் என்பதை ஊழியப்பாதையின்போது அவர்கள் உணர்ந்தார்கள்.

என்றாலும், இயேசுவின் சிலுவை மரணம் சமீபித்தபோது, அவர் தனது சீஷர்களை நோக்கி: நான் உங்களைப் பணப்பையும், சாமான்பையும், பாதரட்சைகளும் இல்லாமல் அனுப்பினபோது, ஏதாகிலும் உங்களுக்குக் குறைவாயிருந்ததா என்று கேட்டார்; அதற்கு அவர்கள், ஒன்றும் குறைவாயிருந்ததில்லை என்றார்கள். இப்பொழுதோ, பணப்பையும், சாமான்பையும் உடையவன் அவைகளை எடுத்துக்கொள்ளக்கடவன்; பட்டயம் இல்லாதவன் தன் வஸ்திரத்தை விற்று ஒன்றைக் கொள்ளக்கடவன். அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்று எழுதியிருக்கிற வாக்கியம் என்னிடத்தில் நிறைவேறவேண்டியதென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். என்னைப்பற்றிய காரியங்கள் முடிவுபெறுங் காலம் வந்திருக்கிறது என்றார் (லூக் 22:36,37).

இதுவரை நான் வேண்டாம் என்று சொன்னவைகள், இனி உங்களுக்கு வேண்டும் என்று இயேசு சொன்னபோது, 'நல்லவேளை பணப்பையையும், சாமான் பையையும் பத்திரப்படுத்தி வைத்திருந்தோம்' என்று பத்திரப்படுத்தி வைத்திருந்தவர்கள் அவைகளை உடனே எடுத்திருக்கலாம். ஆனால், 'பட்டயம் இல்லாதவன் தன் வஸ்திரத்தை விற்று ஒன்றைக் கொள்ளக்கடவன்' என்றார் இயேசு. பணம் இல்லையென்றாலும், பட்டயம் இருக்கவேண்டும் என்றார் இயேசு. யார் யாருக்கெல்லாம் பட்டயம் இல்லையோ, அவர்கள் அனைவரும் தங்கள் வஸ்திரத்தை விற்றாகிலும் ஒரு பட்டயத்தை கொள்ளுங்கள் என்றார். ஒவ்வொருவரின் கையிலும் பட்டம் இருக்கவேண்டும் என்பதையே இயேசு குறிப்பிட்டுச் சொன்னார். ஆனால், சீஷர்களாலோ அதனைப் புரிந்துகொள்ள இயலாதிருந்தது. 'ஒவ்வொருவருக்கும் பட்டயம் இருக்கவேண்டும்' என்பதைப் புரிந்துகொள்ளாத சீஷர்களோ இயேசுவை நோக்கி: 'ஆண்டவரே, இதோ, இங்கே இரண்டு பட்டயங்கள் இருக்கின்றன' என்றார்கள் (லூக். 22:38). அப்பொழுது இயேசு 'போதும்' என்றார். தங்கள் வஸ்திரங்களை விற்று பட்டயத்தை வாங்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தது. இருக்கிறதை வைத்து சமாளித்துக்கொள்ளலாமே, இரண்டு இருக்கிறது இது போதுமே, உண்டானதை விற்று இன்னொன்றைக் கொள்ளவேண்டுமா? ஒவ்வொருவருக்கும் ஒன்று எதற்கு? அனைவருக்கும் இரண்டு போதும் என்று அவர்கள் நினைத்தார்கள். தேவையை அறிந்து இயேசு சொல்லும் ஆலோசனையினைப் புரிந்துகொள்ளாமல், போதாதவைகளோடிருந்த அவர்களுக்கு 'போதும்' என்ற பதில் கிடைத்தது. தேவனுடைய காரியங்களை நாம் குறைத்து மதிப்பிடுகின்றோமா? அவருடைய எதிர்பார்ப்புகள் அல்ல, நம்முடைய எதிர்பார்ப்பினாலே அவருக்கு எதிர்த்து நிற்கிறோமா?

எலிசா இஸ்ரவேல் ராஜாவை நோக்கி: வில்லையும் அம்புகளையும் பிடியும், உம்முடைய கையை வில்லின் மேல் வையும், கிழக்கே இருக்கிற ஜன்னலைத் திறவும், எய்யும் என்றபோது, அவன் எய்தான். பின்பு அம்புகளைப் பிடியும், தரையிலே அடியும் என்றபோது, மூன்றுதரம் அடித்து நின்றான் (2 இராஜா. 13:15-18). இஸ்ரவேலின் ராஜா ஐந்து அல்லது ஆறுவிசயாகிலும் அம்பை தரையில் அடிப்பார் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த எலிசாவுக்கோ, ராஜாவின் செயல் ஏமாற்றத்தைக் கொடுத்தது. அப்பொழுது எலிசா அவன் மேல் கோபமாகி: நீர் ஐந்து ஆறுவிசை அடித்தீரானால், அப்பொழுது சீரியரைத் தீர முறிய அடிப்பீர்; இப்பொழுதோ சீரியரை மூன்றுவிசைமாத்திரம் முறிய அடிப்பீர் என்றான் (2இரா 13:19). எதற்கு ஒப்புவமையாக எதைச் செய்கிறோம் என்ற புரிதல் இல்லாததினால், அதிகமாகச் செய்யவேண்டியதை குறைவாகச் செய்து, எதிரிரியை தீர முடியடிக்கும் வாய்ப்பினைத் தவறவிட்டான் இஸ்ரவேலின் ராஜா.

தீர்க்கதரிசிகளின் புத்திரர் எலிசாவை நோக்கி: இதோ, நாங்கள் உம்முடன் குடியிருக்கிற இந்த இடம் எங்களுக்கு நெருக்கமாய் இருக்கிறது. நாங்கள் யோர்தான்மட்டும் போய் அவ்விடத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு உத்திரத்தை வெட்டி, குடியிருக்க அங்கே எங்களுக்கு ஒரு இடத்தை உண்டாக்குவோம் என்றார்கள். அதற்கு அவன்: போங்கள் என்றான் (2இரா 6:1,2). ஆனால், அவர்களுள் ஒருவன் கோடரியை இரவலாக வாங்கிச் சென்றிருந்தான். இரவலாக அவன் வாங்கியிருக்கவேண்டிய அவசியமில்லை, 'ஒவ்வொருவரும் ஒவ்வொரு உத்திரம் வெட்டவேண்டும்' என்பதுதான் அவர்களது நோக்கம், எனவே, யாராவது ஒருவர் உத்திரத்தை வெட்டிய பின்னர், அவர்களது கோடரியை வாங்கி இவன் வெட்டியிருக்கலாம். தங்களுக்குள் ஒருவர் கோடரியை ஒருவருக்குக் கொடுத்து உதவியிருக்கலாம்; ஆனால், அவர்களோ, ஒவ்வொருவரும் வெட்டவேண்டுமென்றால், ஒவ்வொருவருக்கும் தனித்தனியே கோடரி தேவை என்ற சிந்தைக்குள் சிக்கியிருந்தனர்; இதுவே, ஒருவன் இரவல் வாங்க காரணமாயிற்று. ஆனால், இயேசுவோ, சீடர்களை இரவல் வாங்கச் சொல்லவில்லை, வஸ்திரத்தையாகிலும் விற்று வாங்கும்படிச் சொன்னார். இன்றைக்கும் கோடரியை இரவல் வாங்கிவிட்டு, பட்டயம் வாங்காமல் வாழும் ஜனங்கள் ஏராளம். குடும்பத்திற்கு, எதிர்கால்த்திற்கு, பிள்ளைகளுக்கு என சொத்து சேர்க்கவும், பொருட்களை சவதரிக்கவும் பலர் கோடரிகளை இரவலாகவும் வாங்கத் தயங்குவதில்லை; கோடரியை இரவலாக வாங்குவோரே, உங்களிடத்தில் பட்டயம் உண்டா?

பட்டயத்தை எதற்கு எடுக்கச் சொன்னார் என்பதின் காரணத்தையும் சீஷர்கள் அப்போது அறியாதிருந்தார்கள். யூதாஸ் முத்தமிட்டு அவரைக் காட்டிக்கொடுத்தபோது, இயேசுவோடு கூட இருந்தவர்களில் ஒருவன் கை நீட்டி தன் பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காதற வெட்டினான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: உன் பட்டயத்தை திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்துபோவார்கள் என்றார் (மத். 26:51,52). நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா? என்று பிதாவின் பெலத்தையும் அவர்களுக்கு எடுத்துக் கூறினார். அடுத்தவரை வெட்டும் பட்டயத்தை உறையில் போட்டுவிட்டு, வேதவாக்கியங்கள் நிறைவேறக் காத்திருங்கள் என்றே இயேசு அவர்களுக்குப் போதித்தார் (மத். 26:53,54). சீஷர்களுடைய மாம்ச சிந்தை, மாம்ச கோபம் பட்டயத்தோடு ஒட்டிக்கொண்டிருந்ததால், பகை என்ற உணர்வு வந்தவுடன் பட்டயம் உறையை விட்டு வெளியே வந்துவிட்டது. தேவனுடைய எதிர்பார்ப்பு என்ன? நம்முடைய செயல்பாடுகள் என்ன? எதற்காக இதைச் செய்யச் சொன்னார் என்ற அறிவு நமக்கு இராவிடில், அதைக்கொண்ட அவருக்கு விரோதமாக நாம் சென்றுவிடுவோம். பிதாவின் பெலன் எனக்கு இருக்கிறது நான் அதனை உபயோகிக்கவில்லையே, அதுபோல உறையிலே பட்டயம் இருக்கிறது அது எதிரிக்காக உபயோகிப்பதற்கல்ல என்பதை இயேசு எடுத்துச் சொன்னார். உங்கள் உடலில் (உறையில்) உள்ள குணங்களை, சுபாவங்களை எங்கு உபயோகிக்கவேண்டும் என்ற அறிவு உங்களுக்கு உண்டா? சர்ப்பங்களைப்போலவினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய் இருங்கள் (மத் 10:16); ஆனால், சர்ப்பம் யாரைக் கடிக்கவேண்டும் என்று தெரிந்திருக்கவேண்டும்ளூ இல்லையெனில், சுவிசேஷம் அறிவிக்கவேண்டிய இடத்தில் விஷம் ஏறிவிடும். 

 

Comments

Popular posts from this blog

கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்

  கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்   வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கிறிஸ்துவின் குணங்களை வெளிப்படுத்தவேண்டியதும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டியதும் கிறிஸ்தவனின் தலையாயக் கடமை.  கிறிஸ்துவுக்குள்  வாழும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சில உண்மைகளை பவுல் எபேசு சபைக்குச் சுட்டிக்காட்டுகின்றார். கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்  (எபே. 1:3),  பாவமன்னிப்பாகிய மீட்பு  (எபே. 1:7) இவைகள் பொதிந்திருக்கின்றன. ஆனால், இவ்விரண்டிற்கும் பலர் முக்கியத்துவம் கொடுக்காமல், உலகத்தின் ஆசீர்வாதங்களையே அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். பாவமன்னிப்பினைப் பெறாமல், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறாமல், உலகத்தின் ஆசீர்வாதங்களுக்காகவே அவரின் பின்னே ஓடினால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் முடிவு பரிதாபமாகவே இருக்கும். உன்னதங்களில் உட்காரவேண்டிய நாம் உலகத்தோடு ஒட்டிவிடுவோம், மணவாளனோடு வாழவேண்டிய நாம் மண்ணுக்காக வாழ்ந்துவிடுவோம். கிறிஸ்துவிடம் பிரதானமாய் பாவமன்னிப்பையே முதலில் பெற நாடுவோம்; அதற்காகத்தானே பிதா இயேசுவை இந்த பூமியில் அனுப்பினார். எனவே, பிதாவின் பி...

இறைச்சியா? இச்சையா?

இறைச்சியா?  இச்சையா? 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்' (மத். 6:11) என்றும், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத். 6:34) என்றும் பிதாவை நோக்கி ஜெபிக்க இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக்கொடுத்திருந்தபோதிலும், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே 'உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்' (மத். 6:8) என்பதுதானே பிதாவைக் குறித்து இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிமுகம். 'முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்' (மாற். 7:27) என்பதுதான் அவரது விருப்பமும் கூட. 'வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (மத். 10:10) என்றும், 'வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (லூக். 10:7; 1தீமோ. 5:18) என்றும் நாம் வாசிக்கின்றோமே. அப்படியிருக்க, 'ஆகாரத்திற்காக வேலை' மற்றும் 'கூலிக்காக வேலை' என்ற என்ற பார்வையில் நமது பயணம் தொடர்ந்துவிடக்கூடாததல்லவா! 'இழிவான ஆதாயம்' நமது வழிகளை மாற்றிவிடக்...

வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்

  வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்   அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது,  இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.  ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்;  ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.(லூக் 4:25-27) இஸ்ரவேலின் தேவனாக இருந்தபோதிலும், இஸ்ரவேல் தேசத்திலேயே தனது குமாரனை மேசியாவாகப் பிறக்கச் செய்தபோதிலும், பஞ்ச காலத்தின்போது, இஸ்ரவேலருக்குள் இருந்த அநேகம் விதவைகள் போஷிக்கப்படாமற்போனதற்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், ந...