படையிலா? படுக்கையிலா?
எழுதப்பட்ட வார்த்தைகளை கர்த்தர் நமது கரங்களில் கொடுத்திருந்தபோதிலும், எழுந்துபோகவேண்டிய இடத்திற்கு நாம் எழுந்துபோனால் தகுந்த வார்த்தைகள் நம்முடைய வாயிலிருந்து வெளிப்படுவதை நாம் உணரமுடியும். அழைப்பிற்குக் கீழ்ப்படியாமல், அமர்ந்திருக்கும் இடத்திலேயே முழுமையான வெளிப்பாட்டையும் பெற்றுவிடவேண்டும் என்றோ, கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படியாமல், கர்த்தருடைய சத்தத்தைக் கேட்டுக்கொண்டேயிருக்கவேண்டும் என்றோ ஒருவேளை நாம் நினைத்துக்கொண்டிருந்தால், அது முடியாததாகிப்போய்விடக்கூடும்.
போர்வீரன் தன்னை எப்போதும் ஆயத்தமாக வைத்துக்கொள்ளவேண்டியது அவசியமே; போர் நடந்தாலும், நடைபெறாவிட்டாலும், வீரன் வீட்டிலே அனுதினமும் தன்னை ஆயத்தப்படுத்திக்கொள்வது அவசியமே; இல்லையேல், வீரனது ஆவிக்குரிய சரீரம் பெலவீனப்பட்டு வீணாகப்போய்விடும்; ஆயுதங்களைக்கூட கையாள பெலனற்றதாக அது மாறிவிடும். போர் என்றால் மாத்திரமே போராடையையும், ஆயுதங்களையும் தேடுவோர் அநேகர்; பிரசங்கிக்கவேண்டும் என்றால் மாத்திரம் வேதத்தை மணிக்கணக்காக தியானிப்போரும், உபவாசமிருப்போரும் அவசர சிகிச்சைப் பிரிவிலேயே (ஐஊரு) தங்களை ஆயத்தப்படுத்துகின்றனர். அப்படிப்பட்டோர், 'பெலவீனமான கைகளில் பெலமுள்ள ஆயுதத்தைச் சுமந்துகொண்டிருப்பவர்களே'.
கோலியாத் இஸ்ரவேலுக்கு எதிராக வந்துநின்று, இஸ்ரவேல் சேனைகளைப் பார்த்துச் சத்தமிட்டு, நீங்கள் யுத்தத்துக்கு அணிவகுத்து நிற்கிறது என்ன? நான் பெலிஸ்தன் அல்லவா? நீங்கள் சவுலின் சேவகர் அல்லவா? உங்களில் ஒருவனைத் தெரிந்துகொள்ளுங்கள். அவன் என்னிடத்தில் வரட்டும் (1சாமு 17:8) என்று சத்தமிட்டபோது, ஆயுதங்களோடு இருந்த, ராஜாவாகிய சவுல் முதலாய், வீரர்களில் ஒருவனும் புறப்பட்டுச் செல்லவில்லை. ஆயுதங்களோடு இருந்தும், எதிரியை எதிர்க்கப் பெலனற்றவர்களாக, வீரர்கள் என்ற பெயருடன் வீட்டிலேயே வாழ்ந்துகொண்டிருக்கும் மக்கள் இன்றும் ஆவிக்குரிய உலகத்தில் உண்டு. வீரர்களாக, போர்முனைக்கு இத்தகையோர் புறப்பட்டுச்செல்லாவிட்டாலும்; வீட்டிற்குத் தங்களைத் தேடிவரும் ஆத்துமாக்களையும் வேத வசனங்களைக் கொண்டு போரிட்டு அவர்களை வென்றுவிட இயலாத நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டுவிடுகின்றனர். போருக்குப் புறப்படும்போது மாத்திரமல்ல, வீட்டிலேயே எப்பொழுதும் வீரர்களாக நாம் வாழ்ந்துகொண்டிருந்தால், வீரனைத் தேடி ஜனம் வீட்டிற்கு வரும். இத்தகைய ஆயத்தத்தோடு அனுதினமும் வீரர்கள் என்று சொல்லிக்கொள்ளுவோர் வாழாததினாலே, வாள் இருந்தும் உருவ பெலனில்லை.
கிதியோன், தன் மூத்தகுமாரனாகிய யெத்தேரை நோக்கி: நீ எழுந்து, இவர்களை வெட்டிப்போடு என்று சொன்னபோது, அந்த வாலிபன் இளைஞனானபடியால் பயந்து தன் பட்டயத்தை உருவாதிருந்தான். அப்பொழுது சேபாவும் சல்முனாவும்: நீரே எழுந்து எங்கள்மேல் விழும்; மனுஷன் எப்படியோ அப்படியே அவன் பெலனும் இருக்கும் என்றார்கள்; கிதியோன் எழுந்து, சேபாவையும் சல்முனாவையும் கொன்றுபோட்டு, அவர்கள் ஒட்டகங்களின் கழுத்துக்களில் இருந்த சாந்துக்காறைகளை எடுத்துக்கொண்டான் (நியா 8:20,21). கிதியோனின் குமாரனான யெத்தேரைப் போன்று, வீட்டிற்குக் கொண்டுவரப்பட்ட பின்னும், வெட்ட இயலாத நிலைக்கு நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கை காணப்பட்டுவிடக்கூடாது. எனவே, அனுதின ஆயத்தம் வீரனுக்கு அவசியமே. எதிரியைச் சந்திக்காதவரை, வீரனுடைய பெலம் வெளிப்படுவதில்லை.
எத்தனை ஆயத்தங்களோடு நாம் காணப்பட்டாலும், அவர் காட்டும் இடத்திற்குப் புறப்பட்டுச் செல்லவும், அந்நேரத்தில் அருளப்படும் அவரது வார்த்தைகளுக்கும் நமது வாய் வழிவிடவும் ஆயத்தமாயிருக்கவேண்டும்; கர்த்தர் எரேமியாவை நோக்கி: நீ எழுந்து, குயவன் வீட்டிற்குப்போ; அங்கே என் வார்த்தைகளை உனக்குத் தெரிவிப்பேன் என்றார் (எரே 18:2). கர்த்தருடைய வார்த்தையின்படி, குயவன் வீட்டிற்கு எரேமியா புறப்பட்டுச் சென்றபோது, அங்கே கர்த்தருடைய வார்த்தை எரேமியாவுக்கு வெளிப்பட்டது (எரே. 18:5-11). அப்படியே, மோசேயை கர்த்தர் அழைத்தபோதும், 'நீ போ; நான் உன் வாயோடே இருந்து, நீ பேசவேண்டியதை உனக்குப் போதிப்பேன்' (யாத் 4:12) என்றே அவனை திடப்படுத்தினார். அவர் காட்டும் திசையில் நாம் பயணித்தால், வார்த்தைகளைத் தெரிவிப்பதோடு, வாயோடும் இருப்பார்.
Comments
Post a Comment