ஆத்துமாவா?
ஆதாயமா?
ஜெப ஆலயங்களின் ஆசனங்களில் ஆசாரியர்கள் அமர்ந்திருந்த நாட்கள் அவை. அவர்கள் இயற்றுகின்ற சட்டதிட்டங்களுக்குட்பட்டே நடக்கவேண்டுமென ஜனங்கள் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்; அதற்குச் சாதகமாக, மோசேயின் நியாப்பிரமாணங்களைக் கையில் எடுத்து ஜனங்களை ஆண்டுகொண்டிருந்தனர். இயேசு சிலுவையில் அறையப்பட்டு, உலகத்தின் பாவங்களைச் சுமந்து தீர்த்த பின்னரும், 'நீங்கள் இந்த மலையிலும், எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங் காலம் வருகிறது' (யோவான் 4:21) என்று இயேசு சொன்ன பின்னரும், ஜெப ஆலயத்தில்தான் ஆராதனை, எங்குமல்ல, இங்குதான் ஆராதனை என்று இரத்தத்தினால் இயேசு விரித்துவிட்ட எல்லையை தங்களது சுயத்திற்காகச் சுருக்கிவைத்திருந்தார்கள். பிதாவுக்கு ஊழியம் செய்யும் அவர்களுக்கு ஜனங்களினாலேயே பிழைப்பு உண்டாயிருக்கவேண்டும் என்றபோதிலும், பிழைப்புக்காக பிதா என்ற நிலைக்குத் தங்களைத் புரட்டிப்போட்டுக்கொண்டார்கள். அதன் காரணமாகவே, 'புறா விற்கிறவர்களும், காசுக்காரர்களும் பிதாவின் வீட்டிற்குள் குடிபுகுந்திருந்தனர்' (யோவான் 2:15,16). பிதாவுக்கடுத்ததான ஆலயத்தை (லூக். 2:49), பிழைப்புக்கடுத்ததான ஆலயமாகவே மாற்றிவிட எத்தணிப்பவன் சாத்தான் என்பதில் எச்சரிக்கையாயிருங்கள். தண்டில் சேவகம்பண்ணுகிற எவனும், தன்னைச் சேவகமெழுதிக்கொண்டவனுக்கு ஏற்றவனாயிருக்கும்படி, பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ளமாட்டான் (2தீமோ. 2:4) என்று எழுதுகின்றார் பவுல். இதனை மறந்துவிட்டதினாலேயே, தண்டில் சேவகம்பண்ணி சுவிசேஷத்தை அறிவிக்கும் பணியில் முனைந்து நிற்கவேண்டிய சபைகள் பிழைப்புக்கடுத்ததாகச் சிக்கிக்கொண்டன. அன்று காசுக்காரர்களும், புறா விற்கிறவர்களும் ஜெப ஆலயத்தை ஆக்கிரமித்துக்கொண்டிருந்ததுபோல, இன்று, தியோத்திரேப்புக்கள் பலர் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றார்கள் (3யோவான் 1:9). அவர்கள் சபையின் ஆஸ்திகள் வெளியே போய்விடாதபடிக்குக் கவனமாயிருக்கின்றனர்; காவலாளிகளாயிருக்கின்றனர். கர்த்தரின் பணியில் காசை செலவிட மனதில்லா கஞ்சர்களாயிருக்கின்றனர். ஆத்துமாக்களுக்காக செலவிடுவதை வரவுக்கணக்கில் பரலோகம் எழுதிக்கொண்டிருக்க, இவர்களோ செலவுக்கணக்கில் அவைகளை எழுதிக்கொண்டிருந்தனர். 'நான் உங்கள் ஆத்துமாக்களுக்காகச் செலவு பண்ணவும், செலவுபண்ணப்படவும் விரும்புகிறேன்' (2கொரி. 12:15) என்ற பவுலின் வாசகத்திற்கு விரோதமான போக்குடையவர்கள் இவர்கள்.
சகோதரர் ஒருவர் என்னிடத்தில் பேசிக்கொண்டிருந்தார், இந்த வட்டாரத்தில் அதிக காணிக்கை வருகின்ற சபை எது என்று உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்; இல்லை என்றேன் நான். அப்போது அவர், குறிப்பிட்ட ஊரில் உள்ள ஒரு சபையின் பெயரைச் சொல்லி பெருமையடைந்துகொண்டார். கர்த்தருடைய ஆலயத்திற்கு ஜனங்கள் தங்கள் செல்வங்களைக் கொண்டுவந்து கொட்டுவது தவறல்ல; அதை தேவனும் விரும்புகின்றார். ஆனால், அவைகள் ஆஸ்திகளாகவே அங்கு இருக்கின்றதா? அல்லது ஆத்துமாக்களுக்காக செலவு பண்ணப்படுகின்றதா? அரசியல்வாதிகள் அன்றைய நாட்களில் பல லட்சங்களைக் கொடுத்து தங்கள் அந்தஸ்தை ஊராரின் மத்தியில் உயர்த்திக்காட்டுவது போல, போதகர்களும் ஊழியர்களும் கூட இந்நாட்களில் விலையுயர்ந்த வாகனங்களைக் கொண்டும், ஆடம்பரமான பங்களாக்களைக் கொண்டும் தங்கள் அந்தஸ்தை உயர்த்திக் காட்டத் தொடங்கிவிட்டனர். இத்தனையாய் இவர்கள் செலவிடுவதற்கும், இத்தனையாய் விலையுயர்ந்த வஸ்துக்களாலும், பொருட்களாலும் தங்களை அலங்கரித்துக்கொள்வதற்கும் சபையிலிருந்தும், விசுவாசிகளிடமிருந்தும் வந்த காணிக்கைகள் பயன்படுத்தப்பட்டிருக்குமானால் எச்சரிக்கை! ஆலயம் ஆஸ்தியைச் சம்பாதிப்பதற்கல்ல, ஆத்துமாக்களைச் சம்பாதிப்பதற்கே! போதகர்களின் பிள்ளைகள் பலர் எந்த கம்பெனியிலும் வேலை செய்யாமலும், ஊழியம் செய்யாமலும் தகப்பனுடைய ஆஸ்தியை அழிக்கும் இளையகுமாரர்களாக உலாவத் தொடங்கிவிட்டனர். அவர்கள் கைமுதல் தலைவரை அலங்கரித்திருக்கும் பொருட்கள் அனைத்தும் ஆலயத்தின் காணிக்கைப் பணத்தைத் கொண்டு வாங்கப்பட்டிருந்தால் எச்சரிக்கை! இதில் தவறினால், சவுக்கு சந்ததியையும் தொரும். இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், இயேசுவைக் காட்டிக்கொடுத்தததற்குக் கூலியாக வாங்கிய வெள்ளிக்காசை தேவாலயத்திலே வீசிவிட்டுச் சென்றபோது, 'இது இரத்தக்கிரயமானதால், காணிக்கைப் பெட்டியிலே இதைப் போடலாகாது' (மத். 27:6) என்றனர். சகோதரனோடு ஒப்புரவாகி செலுத்தப்படும் காணிக்கை அது (மத். 5:24). கர்த்தருடைய காணிக்கையில் இத்தனை கட்டுப்பாடுகள் இருக்க, காணிக்கைதனைச் செலவழிப்பதில் எத்தனைக் கட்டுப்பாடுடன் இருக்கவேண்டும். வயிற்றுக்கு ஊழியம் செய்ய (ரோமர் 16:18) உங்களை விற்றுவிடாதிருங்கள். ஆதாயமல்ல, ஆத்துமாவுக்கே முதலிடம். மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள், அவன் உங்கள் மார்க்கத்தானான போது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள் (மத் 23:15) என்றார் இயேசு. அப்படியென்றால், அவர்கள் சுற்றித்திரிவது எதற்காக? தங்கள் மார்க்கத்தானாகிவிட்டால் தங்களுக்கு ஆதாயம் உண்டாகும் என்பதற்காகவே; அவர்களுக்கு ஆதாயம் உண்டாகும் என்பதற்கல்ல.
பிலிப்பி பட்டணத்தில் பவுல் தங்கியிருந்தபோது, குறிசொல்ல ஏவுகிற ஆவியைக் கொண்டிருந்து, குறிசொல்லுகிறதினால் தன் எஜமான்களுக்கு மிகுந்த ஆதாயத்தை உண்டாக்கின ஒரு பெண் எதிர்ப்பட்டாள் (அப். 16:16). அவள் பவுலையும் அவருடன் இருந்தவர்களையும் பின்தொடர்ந்து வந்து: இந்த மனுஷர் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர், இரட்சிப்பின் வழியை நமக்கு அறிவிக்கிறவர்கள் என்று சத்தமிட்டாள். இப்படி அநேகநாள் செய்துகொண்டு வந்தாள். 'இந்த மனுஷர் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர், இரட்சிப்பின் வழியை நமக்கு அறிவிக்கிறவர்கள்' என்று உண்மையத்தான் சொன்னாள் அவள். ஒவ்வொரு நாளும் இதயேதான் சொல்லிக்கொண்டுவந்தாள். பவுலையும் சீலாவையும் குறித்து எதிராகப் பேசவில்லை, கெடுதியாகப் பேசவில்லை; என்றாலும், அவளுக்குள் இருந்த அசுத்த ஆவி செய்யும் அந்த விளம்பரத்தை பவுல் விரும்பவில்லை. எனவே, பவுல் சினங்கொண்டு, திரும்பிப்பார்த்து: நீ இவளை விட்டுப் புறப்படும்படி இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அந்த ஆவியுடனே சொன்னான்; அந்நேரமே அது புறப்பட்டுப்போயிற்று (அப் 16:17,18). ஆவி செய்யும் விளம்பரத்தை அல்ல, ஆத்துமாவைப் பார்த்தான் பவுல். அதுவரையில் அமைதியாயிருந்த எஜமான்கள், ஆதாயத்து நம்பிக்கை அற்றுப்போயிற்று என்று கண்டு, பவுலையும் சீலாவையும் பிடித்து, சந்தைவெளியிலுள்ள அதிகாரிகளிடத்தில் இழுத்துக்கொண்டு போனார்கள் (அப். 16:19). அந்த ஸ்திரீ குறிசொல்லுகிறவளாக இருந்தால்தான், எஜமான்களுக்கு ஆதாயம் கிடைக்கும், சுகமாகிவிட்டால் எஜமான்களுக்கு ஆகாரம் எங்கிருந்து கிடைக்கும்? மற்றவர்கள் பிசாசினால் பிடிக்கப்பட்டிருந்தால்தான் அந்த எஜமான்களுக்குப் பிழைப்பு ஓடும். சத்துருவின் இத்திட்டம் எத்தனை கொடூரமானது. ஆதாயத்திற்காக மற்றவர்களைப் பிடித்துவைத்து தங்கள் பிழைப்பை ஓட்டுவது அபாயகரமானது. பாவத்தை அப்படியே மன்னித்துவிட்டால் எப்படி? பலி செலுத்தும் முறை இருந்தால்தானே? ஜெப ஆலயத்திற்கு வரவேண்டியது வரும். ஜெப ஆலயத்திற்கு வெளியிலேயே பாவத்தை மன்னித்து, வருமானத்தின் வழியையே அடைத்துவிட்டால் எப்படி? இயேசு அதைத்தான் செய்தார்? அவர் தன்னைத் தானே பலியாக்கி, பலியின் வழியை அடைத்தார். எனக்குப் பிரியமானவர்களே, ஆதாயத்தை அல்ல ஆத்துமாக்களையே பாருங்கள்.
இந்த பயம் இன்றும் பல ஊழியர்களிடத்தில் இல்லாமல் இல்லை, ஆத்துமாக்களை ஆதாயம்பண்ணவேண்டும் என்ற பிரத்தியேக கற்பனைக்குக் கீழ்ப்படிந்து தங்கள் ஓட்டத்தை நித்தியத்தை நோக்கி வேகமாக்குவதற்குப் பதிலாக, தங்கள் ஊழியங்களை விட்டு ஆத்துமாக்கள் போய்விடக்கூடாது என்று அரண்களைக் கட்டி எழுப்பிக்கொண்டிருக்கின்றனர். இத்தகைய ஆதாய மனமுள்ளோருக்கு, சகோதரர்களே சத்துருக்கள்தான். சகோதர சபையாயிருந்தாலும், சத்துருதான். ஆத்துமாக்கள் சபையை விட்டுப் போய்விட்டால், ஆதாயம் போய்விட்டது என்ற மனநிலைக்குள் மரிக்கச் செய்துவிடுவான் சத்துரு எச்சரிக்கை! வௌ;வேறு பெயர்களில் சபைகளையோ, ஊழியங்களையோ நாம் நடத்டதிக்கொண்டிருந்தாலும், நாம் அனைவரும் கிறிஸ்து என்ற ஒரே கன்மலையின்மேல் தான் நமது வீட்டைக் கட்டியிருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
தெமேத்திரியு என்னும் பேர்கொண்ட ஒரு தட்டான், தியானாளின் கோவிலைப்போல் வெள்ளியினால் சிறிய கோவில்களைச் செய்து, தொழிலாளிகளுக்கு மிகுந்த ஆதாயம் வருவித்துக்கொண்டிருந்தான் (அப். 19:24). அவன் அநேகருக்கு வேலை வாய்ப்பினையும் கொடுத்துக்கொண்டிருந்தான். ஆனால், 'கைகளினால் செய்யப்பட்ட தேவர்கள் தேவர்களல்லவென்று' (அப். 19:26) பவுல் பிரசங்கித்தபோது, அநேகர் பவுலின் பிரசங்கத்தை ஏற்றுக்கொண்டபோது, அவர்களுடய தொழில் அற்றுப்போகும்படியான அபாயம் நேரிட்டது (அப். 19:27). இத்தகைய முறைகளை இன்றும் புறஜாதியினர் மத்தியில் நாம் காணமுடியும். வாகனங்களிலும், வீடுகளிலும், அலுவலகத்திலும், இருக்கும் இடமெங்கும் கோவில்களைப் போன்ற மாதிரிகளை ஜனங்கள் வைத்துக்கொண்டு வழிபடுவதை நாம் காணமுடியும். விக்கிரகங்கள் மட்டுமல்ல, விக்கிரகங்கள் வைக்கப்பட்டிருக்கும் ஆலயங்களும் விற்பனைக்கே என்பதுதான் சத்துருவின் வியாபாரம். அவைகள் அனைத்தும் ஜனங்களை ஏமாற்றுபவைகளே.
ஏலியின் குமாரர்கள் பேலியாளின் மக்களாயிருந்தார்கள்; அவர்கள் கர்த்தரை அறியவில்லை. அந்த ஆசாரியார்கள் ஜனங்களை நடப்பித்த விதம் என்னவென்றால், எவனாகிலும் ஒரு பலியைச் செலுத்துங் காலத்தில் இறைச்சி வேகும்போது ஆசாரியனுடைய வேலைக்காரன் மூன்று கூறுள்ள ஒரு ஆயதத்தைத் தன் கையிலே பிடித்துவந்து, அதினாலே, கொப்பரையிலாவது பானையிலாவது சருவத்திலாவது சட்டியிலாவது குத்துவான்; அந்த ஆயுதத்தில் வருகிறதையெல்லாம் ஆசாரியன் எடுத்துக் கொள்ளுவான். அப்படி அங்கே சீலோவிலே வருகிற இஸ்ரவேலருக்கெல்லாம் செய்தார்கள். கொழுப்பைத் தகனிக்கிறதற்கு முன்னும், ஆசாரியனுடைய வேலைக்காரன் வந்து பலியிடுகிற மனுஷனை நோக்கி: ஆசாரியனுக்குப் பொரிக்கும்படி இறைச்சி கொடு; பச்சை இறைச்சியே அல்லாமல் அவித்ததை உன் கையிலே வாங்குகிறதில்லை என்பான். அதற்கு அந்த மனுஷன் இன்று செய்யவேண்டியபடி முதலாவது கொழுப்பைத் தகனித்துவிடட்டும்; பிற்பாடு உன் மனவிருப்பத்தின்படி எடுத்துக்கொள் என்று சொன்னாலும்; அவன்: அப்படியல்ல, இப்பொழுதே கொடு, இல்லாவிட்டால் பலவந்தமாய் எடுத்துக் கொள்வேன் என்பான் (1சாமு 2:13-16). ஆதாயத்தைத் தேடுவோரின் நிலை இதுவே; ஆத்துமாக்களுக்குப் பெலன் இல்லாவிட்டாலும், பலவந்தமாய் பறித்துக்கொள்ளவே அவர்கள் மனம் துணியும்.
கிறிஸ்து எனக்கு ஜீவன்; சாவு எனக்கு ஆதாயம் (பிலி. 1:21) என்றார் பவுல். ஆனால், சத்துருவின் வியாபாரத் திட்டத்தின்படி, ஆத்துமாக்களையே பலர் தங்களுக்கு ஆதாயமாக்கிக்கொள்கின்றனர். அப்படிப்பட்டோரின் ஆடம்பரமும், அலங்காரமும், வாழ்க்கையுமே அதனை வெளிப்படுத்தும். இதையே பேதுருவும், கள்ளத்தீர்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள். அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; அவர்கள் நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும். பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்; பூர்வகாலமுதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆக்கினை அயர்ந்திராது, அவர்களுடைய அழிவு உறங்காது (2பேது 2:1-3) என்று பேதுரு வர்ணிக்கிறார். நியாயாதிபதிக்கு முன் நாம் நீதியாய் நடக்காவிட்டால், நியாயத்தீர்ப்பின் நாளில் வீதியில் விடப்படுவோம்
Comments
Post a Comment