மரணமா? மன்னிப்பா?
அவர்மேல் குற்றஞ்சுமத்துவதற்கான காரணம் உண்டாகும்பொருட்டு அவரைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்கள். இயேசுவோ குனிந்து, விரலினால் தரையிலே எழுதினார். (யோவா 8:6)
தன்னுடைய புறமுதுகில் என்ன ஒட்டியிருக்கிறது? என்பதை அறியாமல், பிறருடைய வாழ்க்கைக்குத் தீர்ப்பு எழுதத் துடிக்கும் மக்கள் அநேகர். விபச்சாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை, வேதபாரகரும் பரிசேயரும் இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, அவளை நடுவே நிறுத்தி: போதகரே, இந்த ஸ்திரீ விபச்சாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள். இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் என்று கேட்டபோது, 'கல்லெறியுங்கள்' என்றோ அல்லது 'கல்லெறிய வேண்டாம்' என்றோ அவர் சொல்வாரென்றால், 'அவர்மேல் குற்றஞ்சுமத்துவதற்கானக் காரணம் கிடைத்துவிடும்' என்றே நினைத்தார்கள் (யோவான் 8:3-6). அதற்காகவே, அந்த ஸ்திரீயை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; இல்லையென்றால், சட்டம் தெரிந்திருக்கும் அவர்கள் அவளை சட்டென கல்லெறிந்து கொன்றிருக்கலாமே; ஆண்டவரிடம் அழைத்துவரவேண்டிய அவசியமில்லையே!
நம்மேல் குற்றஞ் சுமத்தவேண்டும் என்பதற்காக, நம்மிடத்திலும் குற்றவாளிகள் குற்றவாளிகளைக் கூட்டிக்கொண்டுவரக்கூடும். மனிதர்களின் நினைவுகளை இயேசு கிறிஸ்து அறிந்து செயல்பட்டதைப் போல (மத். 9:4), மற்றவர்களின் நினைவுகளை ஆவிக்குரிய கண்களோடு ஆராய்ந்து செயல்படவேண்டியது அவசியம்; இல்லையேல், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் நாமே அழுக்கினை உண்டாக்கிவிடக்கூடும். நம்மைத் தள்ளிக்கொண்டேயிருக்கும் மனிதர்களின் மனநிலைக்கு ஏற்றவாறு தீர்ப்பு செய்துவிட்டால், குற்றவாளியோடு கூட நாமும் குற்றவாளியாகிவிடக்கூடும்; அத்துடன், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையிலும் மரணத்திற்கேதுவான ஆறாத காயங்கள் உண்டாகிவிடக்கூடும். 'இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும்' (மத்:4:2) என்றும், தேவாலயத்து உப்பரிகையின்மேல் அவரை நிறுத்தி, 'நீர் தேவனுடைய குமாரனேயானால், தாழக் குதியும்' (மத். 4:5,6) என்றும், உயர்ந்த மலையின் மேல் கொண்டுபோய், 'நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன்' (மத். 4:9) என்றும் பிசாசு சொன்ன போதிலும், அவனது ஆலோசனைக்கு இயேசு கிறிஸ்து இணங்கவில்லையே. சத்திய வசனங்களிலிருந்து சட்டங்களை எடுத்துப் பேசியபோதிலும், அதிலிருக்கும் சதியினை அறிந்துகொண்ட இயேசு, சாத்தானை 'அப்பாலே போ' என்று அதட்டினாரே. நாம் கையிலே வைத்திருக்கும் பட்டயத்தைக் கொண்டு, நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையைக் கொன்றுவிடாதபடி நாம் எச்சரிக்கையாயிருக்கவேண்டியது அவசியம்.
மேலும், இந்த சம்பவத்தில், வேதபாரகரும் மற்றும் பரிசேயரும், தங்களுடைய வாழ்க்கையில் எங்கெங்கெல்லாம் வழுக்கி விழுந்திருக்கிறார்கள் என்பதைக் குறித்து எள்ளளவும் கவலைப்படாமலும், கண்டுகொள்ளாமலும், பிறருக்கும் காட்டிக்கொள்ளாமலும், அவளை நீதிவிசாரிக்கும்படியாக கொண்டுவந்து நிறுத்தியிருக்கும் நீதிபரராகிய
மற்றும் நியாயாதிபதியாகிய இயேசு கிறிஸ்துவுக்கு முன்பாக நின்றுகொண்டிருந்தார்கள். மேலும், 'விபச்சாரம் செய்த ஸ்திரீயை' மாத்திரமல்ல, இயேசுவையும் கூடவே குற்றவாளியாகத் தீர்த்துவிடவேண்டும் என்றே துடித்துக்;கொண்டிருந்தார்கள் அவர்கள். 'விபச்சாரம் செய்த ஸ்திரீயை கல்லெறிந்து கொல்லவேண்டும்' என்ற வார்த்தைகள் அவர்களது வாயில் காணப்பட்டபோதிலும், விபச்சாரம் செய்த ஸ்திரீயைக் கொண்டு இயேசு கிறிஸ்துவின் மீது 'குற்றம் சுமத்தும்' கல்லை எறிவதுதான் அவர்களது குறிக்கோளாயிருந்தது. அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக் கொண்டிருக்கையில், அவர் நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொன்னபோது, அவர்கள் அதைக் கேட்டு, தங்கள் மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு, பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்களே (யோவா 8:7,9).
குற்றவாளியாகக் கூட்டிக்கொண்டுவரப்பட்டவளை நோக்கி, 'நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே' என்று 'மன்னிப்பின் தீர்ப்பினை' எழுதி மறுவாழ்வோடு, மகிழ்ச்சியோடு அனுப்பிவைத்தார் இயேசு கிறிஸ்து; என்றபோதிலும், 'குற்றவாளிகள்' (பாவிகள்) என்று தீர்க்கப்பட்ட கூட்டிக்கொண்டு வந்தவர்களோ, 'மன்னிப்பின் தீர்ப்பினைப்' பெற்றுக்கொள்ளாமல், குத்தப்பட்டும் குற்றமுடைய மனசாட்சியோடேயே (யோவான் 8:9) திரும்பிப் போய்விட்டார்களே; மன்னிக்கிறவர் முன்னே இருந்தபோதிலும், மனந்திரும்புதலைப் பெற்றுக்கொள்ளவில்லையே. நம்மைச் சந்திக்கவரும் இத்தகைய மனிதர்களிடத்தில் நாம் சறுக்கி விழுந்துவிடாதபடிக்கு எச்சரிக்கையோடிருப்போம்.
என்றபோதிலும், இச்சம்பவத்தில் மிகப்பெரியதோர் நன்மை விளங்கியிருப்பதை வேதம் விவரிப்பது நாம் விளங்கிக்கொள்ளவேண்டியது. இயேசுவையும், அந்த ஸ்திரீயையும் குற்றவாளிகளாகத் தீர்க்கும்படியாகவே அவளை அவர்கள் கூட்டிக்கொண்டு வந்தார்கள்; ஆனால், 'இயேசு கிறிஸ்துவோ, அதனை நன்மையாக முடியப்பண்ணினார்.' நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார் (ஆதி 50:20) என்று யோசேப்பு சொன்னதைப் போலவே, இந்த ஸ்திரீயின் வாழ்க்கையிலும் நிகழ்ந்துவிட்டது. ஆம், 'பாவியை, பாவியாகத் தீர்த்துவிட அல்ல, பரிசுத்தத்திற்கு நேராக அவர்களை வழிநடத்தவே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.' இத்தகைய தேவ தரிசனத்தை மனதில் சுமந்துகொண்டேயிருப்பவர்கள், 'பாவத்திற்கான தண்டனையைக் கொடுக்க அல்ல, பரிசுத்தத்திற்கு நேரான தகப்பனைத் தொடும்படியாகவே அவர்களை வழிநடத்த முயல்வார்கள்.'
நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும். நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன? (மத் 7:1-3) என்று இயேசு போதித்ததின் அர்த்தம் இதுதானே. பாவிகளுக்குப் பாவத்தை உணர்த்துவது தவறல்ல; ஆனால், பாவிகளை பரிசுத்தத்தை நோக்கி வழிநடத்தாமலிருப்பது தவறே. 'குற்றவாளிகள்' என்று மாத்திரம் கூவிக்கொண்டேயிருப்பது, 'அவர்களுக்குக் குழிபறிப்பது' போன்றதே. இத்தகைய நிலைக்கு நம்மை தூரமாக்கிக்கொள்ளுவோம்.
மேலும், ஆதலால், உமக்கு எப்படித் தோன்றுகிறது? இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ, அல்லவோ? அதை எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டபோது, இயேசு அவர்கள் துர்க்குணத்தை அறிந்து: மாயக்காரரே, நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்? வரிக்காசை எனக்குக் காண்பியுங்கள் என்றார்; அவர்கள் ஒரு பணத்தை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அப்பொழுது அவர்: இந்தச் சுரூபமும் மேலெழுத்தும் யாருடையது என்று கேட்டார். இராயனுடையது என்றார்கள். அதற்கு அவர்: அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதைத் தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார். அவர்கள் அதைக்கேட்டு ஆச்சரியப்பட்டு அவரை விட்டுப் போய்விட்டார்கள் (மத் 22:17-22). தன்னை சோதிக்கும்படியாக வந்தவர்களை வீதிக்குத் திருப்பி அனுப்பிவிட்டாரே இயேசு கிறிஸ்து.
அத்துடன், உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிற சதுசேயர் அன்னையதினம் அவரிடத்தில் வந்து: போதகரே, ஒருவன் சந்தானம் இல்லாமல் இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை விவாகம் பண்ணி, தன் சகோதரனுக்குச் சந்தானம் உண்டாக்கவேண்டும் என்று மோசே சொன்னாரே. எங்களுக்குள்ளே சகோதரர் ஏழுபேர் இருந்தார்கள்; மூத்தவன் விவாகம் பண்ணி, மரித்து, சந்தானமில்லாததினால் தன் மனைவியைத் தன் சகோதரனுக்கு விட்டுவிட்டுப்போனான். அப்படியே இரண்டாம் மூன்றாம் சகோதரன்முதல் ஏழாம் சகோதரன் வரைக்கும் செய்தார்கள். எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் இறந்துபோனாள். ஆகையால், உயிர்த்தெழுதலில் அவ்வேழுபேரில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள்? அவர்கள் எல்லாரும் அவளை விவாகம்பண்ணியிருந்தார்களே என்று கேட்டபோது (மத் 22:23-28), உயிர்த்தெழுதலில் கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை; அவர்கள் பரலோகத்திலே தேவதூதரைப்போல் இருப்பார்கள்; (மத் 22:30) என்று சதுசேயரை வாயடைத்தாரே (மத். 22:34). அவ்வாறே, அவர்களில் நியாயசாஸ்திரி ஒருவன் அவரைச் சோதிக்கும்படி:போதகரே, நியாயப்பிரமாணத்திலே எந்தக் கற்பனை பிரதானமானது என்று கேட்டபோது, இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது (மத் 22:35-40) என்று சோதிக்கும்படியாக வந்தவனை போதித்து அனுப்பினாரே.
அதுமாத்திரமல்ல, பரிசேயர் கூடியிருக்கையில், இயேசு அவர்களை நோக்கி, 'கிறிஸ்து யாருடைய குமாரன்?' என்று கேட்டபோது, 'தேவனுடைய குமாரன்' என்று சொல்ல மனதற்றவர்களாக, 'தாவீதின் குமாரன்' என்ற அரை பதிலுடன் கூடிய உலகப்பிரகாரமான வம்சாவழியினை மாத்திரமே சுட்டிக்காட்டினபோது, அவர்கள் மறைத்த மறுமுனையைச் சுட்டிக்காட்டி, அவர்களை மௌனமாக்கினாரே (மத். 22:41-46). விழச்செய்யும் மனிதர்களை வீழ்த்தும் வீரர்களாக நாமும் மாறுவோம்.
Comments
Post a Comment