Skip to main content

நிறையும், குறையும்

 

நிறையும், குறையும்

 

நமக்கும் தேவனுக்கும் உள்ள உறவினைத் தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்றும், நமக்கும் தேவனுக்கும் உள்ள உறவில் எத்தகைய விரிசலோ, முறிவோ, பிளவோ ஏற்பட்டுவிடக்கூடாது என்றும் நாம் கரிசனையாயிருக்கின்றோம். பாவங்களை விட்டு விலகி பரிசுத்த வாழ்க்கையில் நுழைந்து வாழ்கின்றோம். நம்மையும் தேவனையும் பாவமோ, மீறுதலோ பிரித்துவிடாதபடி கண்ணும் கருத்துமாக இருக்கின்றோம். தேவனுடனான உறவைக் காத்துக்கொள்ள தேவனுக்குப் பிரியமானவைகளையே செய்ய முற்படுவதும், தேவன் நம்முடன் இருக்கிறார் என்பதை ஒவ்வொருநாளும் அறிய முற்படுவதும், அவருடைய சமூகத்தை உணரத் துடிப்பதும், அவருடைய சத்தத்தைக் கேட்க ஆவல் கொள்வதும் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் முக்கிய பங்கு வகிக்கிறது. இத்தனையாய் தேவனை மதிக்கும் நாம், தேவனுக்குச் செய்யவேண்டியவைகளையெல்லாம் அன்றாடம் செய்துகொண்டிருக்கும் நாம், பிறருக்குச் செய்யவேண்டிய பல காரியங்களை மறந்துவிட்டால் தேவனுக்கு முன்பாக குறைவுபட்டவர்களாகக் காட்சியளியளிப்போம்.

இயேசுவைத் தேடிவந்த தலைவனின் நிலை இதுவே. நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு நான் என்ன செய்யவேண்டும்? (லூக். 18:18) என்ற கேள்வியோடு இயேசுவை சந்தித்தான் அவன். தேவனுடைய தேவையும், வேதத்தின் சட்டங்களுமே அவனது கண்களுக்கு முன் நின்றது. நித்தியஜீவனுக்குள் பிரவேசிப்பதற்கு இவ்விரண்டிலும் தேர்ச்சி பெற்றால் போதும் என்றே அவன் நினைத்துக்கொண்டிருந்தான். தேவனுக்கு நான் செய்யவேண்டியவைகளையெல்லாம் சரியாகச் செய்துகொண்டிருக்கின்றேன், ஆனால் இன்னும் தேவனுக்குச் செய்யவேண்டியவற்றில் குறைவு ஏதாகிலும் இருக்கக்கூடுமோ என்ற மனநிலை அவனுக்குள் காணப்பட்டது. நான் அறிந்த அவண்ணம், நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிற வண்ணம் தேவனுக்குச் செய்யவேண்டிய அத்தனையையும் நான் செய்துகொண்டிருக்கிறேன்; எனினும், ஏதாகிலும் விடுபட்டிருக்கக் கூடுமோ? அல்லது ஏதாகிலும் அதிகமாக அவர் தன்னிடத்தில் எதிர்பார்க்கக்கூடுமோ? அவருக்குச் செய்யவேண்டியதில் நான் ஒன்றும் குறைவு வைத்துவிடக்கூடாது என்ற எண்ணத்திலேயே அந்தத் தலைவன் இயேசுவைச் சந்தித்தான். ஆண்டவரே! இன்னும் ஏதாகிலும் உமக்குச் செய்யவேண்டியதிருந்தால் எனக்குச் சொல்லிவிடும், உமக்கு நான் என்னவேண்டுமென்றாலும் செய்ய ஆயத்தமாயிருக்கிறேன் என்பதைத்தான் அவனது வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றன.

இயேசு நோக்கி: விபசாரஞ் செய்யாதிருப்பாயாக, கொலைசெய்யாதிருப்பாயாக, களவுசெய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்கிற கற்பனைகளை நீ அறிந்திருக்கிறாயே என்று இயேசு அவனிடத்தில் கேட்டபோது, அவனோ சந்தோஷமாக, இவைகளையெல்லாம் என் சிறு வயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன் என்றான் (லூக் 18:20,21) தனக்குச் செய்கிறதைச் அவன் சரியாகச் செய்துகொண்டிருக்கிறான் என்பதை இயேசு அறிந்திருந்தார்; அதேவேளையில், பிற மனிதருக்குச் செய்யவேண்டியதை அவன் செய்யாமலிருக்கிறான் என்பதையும் இயேசு அறிந்திருந்தார். எனவே, அவனை நோக்கி: இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார் (லூக் 18:22). தரித்திரருக்குக் கொடுப்பது இயேசுவுக்குக் கொடுப்பதே என்பதைப் புரிந்துகொள்ளாத அந்த ஐசுவரிமுள்ள தலைவன், இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டபோது 'துக்கமடைந்தான்' (லூக். 18:33). அவனது துக்கத்தைக் கண்ட இயேசு, ஐசுவரியமுள்ளவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது (லூக் 18:24) என்றார். 'உனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று தரித்திரருக்குக் கொடு என்றார் இயேசு. எல்லாவற்றையும் விற்றுவிட்டால், இவனும் தரித்திரரில் ஒருவனாகிவிடுவானல்லவா? இவனுக்கென்று எதுவும் இருக்காதே! அப்பொழுது இயேசுவைப் பின்பற்றுவதில் தடைகளும் இருக்காது. ஊழியத்தின் தொடக்கத்தில் இயேசு அழைத்த சீஷர்கள் அப்படித்தானே செய்தார்கள். அவர்கள் அப்படிச் செய்ததால்தான் இயேசுவுடன் கூட எங்கும் செல்வதில் அவர்களுக்கு தடையில்லாதிருந்தது. இத்தகைய தடைகளை அகற்றாமலேயே பலர் தாங்கள் இருக்கும் இடத்திலேயே தங்கிவிடுகின்றனர். அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார் (மத் 8:20). தலைசாய்க்கும் இடத்திலேயே இன்று பலர் தங்கிவிடுகின்றனர், நாட்கள் செல்லச் செல்லத் தூங்கியும்விடுகின்றனர். நித்தியஜீவனை நோக்கிய அவர்களது பயணம், ஐசுவரியத்துடனேயே அழிந்துவிடுகின்றது.

ஆண்டவரே, உமக்கு எதுவேண்டுமானாலும் கேளும் தருகிறேன், உமக்காக என்ன செய்யவேண்டுமென்றாலும் சொல்லும் செய்கிறேன், உமக்காகத்தான் சிறுவயதுமுதல் இதுவரை நான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறேன்; ஆனால், அடுத்தவனுக்குக் கொடுக்க நான் ஆயத்தமாக இல்லை; இதுதான் அந்த தலைவனின் நிலை. காணிக்கைப் பெட்டியில் நூறு ரூபாய் போடுவதையும், ஆலயத்திற்கு பிச்சைக்காரர்களுக்கு ஒரு ரூபாய் போவதையும் வாழ்க்கையின் வழக்கமாக்கிவிட்டான் சத்துரு. தேவனுக்குச் செய்ய வேண்டிய அத்தனையையும் சரியாகச் செய்துகொண்டிருந்தாலும், நித்தியஜீவனுக்குள் நாம் பிரவேசிக்கவேண்டுமென்றால், நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்களுக்கும் செய்யவேண்டியதைச் செய்யவேண்டும்.

இன்றைய ஐசுவரியவான்கள் பலரின் நிலைப்பாடும் இதுவே. தேவனுக்காக, சபைக்காக, ஊழியத்திற்காக, ஊழியக்காரர்களுக்காக அள்ளிக் கொடுத்துக்கொண்டேயிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் கண் எதிரே, பசியோடு வாடுகின்ற மக்களை, வறுமையில் உழலுகின்ற மக்களைக் காண மறுக்கின்றனர். தேவனுக்குச் செய்வதே பரலோகத்தில் பொக்கிஷத்தைச் சேர்க்கும் என்ற ஒரே எண்ணத்தோடேயே வாழ்பவர்கள் இவர்கள். இன்றைய நாட்களில் பிரசங்கங்களும் அப்படியேதான் செய்யப்பட்டுவருகின்றன. தங்களுக்கும், தங்கள் ஊழியத்திற்கும் தாருங்கள் என்றே பிரசங்கிப்போர் அதிகரித்துவிட்டனர்; தரித்திரருக்குக் கொடுங்கள் என்று அறைகூவல் விடுப்போர் எங்கே? எங்களுக்குக் கொடுத்தது போதும்; வறியோருக்குக் கொடுங்கள் என்று சொல்லுவோர் எங்கே? எங்களது ஊழியத்திற்குக் கொடுத்தால் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார், உங்கள் பிள்ளைகளை ஆசீர்வதிப்பார், உங்கள் தொழில் வளம் பெறும், உங்கள் நோய் தீரும், உங்கள் கடன் தொல்லை மாறும், அலுவலகத்தில் உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் என்றெல்லாம் சொல்லிச் சொல்லி எங்களுக்கே தாருங்கள், எங்களுக்கே தாருங்கள் என்றே பல ஊழியர்களின் பிரசங்கங்கள் பீடங்களில் தொனித்துக்கொண்டிருக்கின்றன. தரித்திரருக்குக் கொடுக்காத ஜனங்களின் குறைகளை கூவி அறிவிக்காமல், இன்னும் எங்கள் ஊழியத்தில் குறையிருக்கிறது, பணத்தேவை இருக்கிறது, எனவே, எங்களுக்கே கொடுங்கள் என்று பிற மனிதர்களின் தேவையினை கொடுப்போர் காணக்கூடாதபடி ஊழியர்கள் மறக்கடித்துவிடுகின்றனர். அவர்களுடைய குறை ஊழியர்களின் கண்களுக்குத் தெரிவதில்லை, தங்களின் குறையே ஊழியருக்கு எப்போதும் முன் நிற்கிறது. உங்களுடையதை விற்று எங்களுக்குத் தாருங்கள், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்; பரலோகத்திலும் உங்கள் பெலன் மிகுதியாயிருக்கும் என்று பிரசங்கிக்கும் ஊழியர்கள் அநேகர்.

ஊழியங்களுக்குக் கொடுத்துக் கொடுத்து நித்திய ஜீவனைப் பெற்றுவிடுவோம் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கும் மக்கள், தரித்திரரை மறந்துபோனதினால் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள இயலாமல் ஏமாற்றமடைவதைத்தான் இயேசு போதித்தார். அடுத்தவனுக்குக் கொடுக்க மனமில்லாத ஐசுவரியவான்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிதென்றார் (லூக். 18:24). பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்; வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள் (மத் 25:36) என்று தரித்திரருக்குக் கொடுத்தவர்களைப் பார்த்தல்லவா கர்த்தர் சொல்லுவார்.

ஊழியத்திற்கும், ஊழியக்காரனுக்கும் ஒரு லட்சம் ரூபாயைக் கொடுக்கும் ஜனங்களே, பிற தரித்திர நிலையில் உள்ள மனிதர்களுக்கு, உணவிற்கு வழியில்லாதோர்க்கு, அதே தொகையினைக் கொடுக்க உங்களால் கூடுமா? தேவனுக்குக் கொடுப்பதையே தெரிந்துகொண்டு, மனிதருக்குக் கொடுப்பதை மறந்துவிட்டவர்கள் நீங்கள்; உங்கள் மனந்திரும்புதலுக்காக தேவன் காத்துக்கொண்டிருக்கிறார். நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதைச் செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே (நீதி 3:27).

தேவனை நினைக்கும் நீங்கள், மனிதர்களை மறந்துவிடக்கூடாது. 

Comments

Popular posts from this blog

கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்

  கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்   வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கிறிஸ்துவின் குணங்களை வெளிப்படுத்தவேண்டியதும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டியதும் கிறிஸ்தவனின் தலையாயக் கடமை.  கிறிஸ்துவுக்குள்  வாழும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சில உண்மைகளை பவுல் எபேசு சபைக்குச் சுட்டிக்காட்டுகின்றார். கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்  (எபே. 1:3),  பாவமன்னிப்பாகிய மீட்பு  (எபே. 1:7) இவைகள் பொதிந்திருக்கின்றன. ஆனால், இவ்விரண்டிற்கும் பலர் முக்கியத்துவம் கொடுக்காமல், உலகத்தின் ஆசீர்வாதங்களையே அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். பாவமன்னிப்பினைப் பெறாமல், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறாமல், உலகத்தின் ஆசீர்வாதங்களுக்காகவே அவரின் பின்னே ஓடினால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் முடிவு பரிதாபமாகவே இருக்கும். உன்னதங்களில் உட்காரவேண்டிய நாம் உலகத்தோடு ஒட்டிவிடுவோம், மணவாளனோடு வாழவேண்டிய நாம் மண்ணுக்காக வாழ்ந்துவிடுவோம். கிறிஸ்துவிடம் பிரதானமாய் பாவமன்னிப்பையே முதலில் பெற நாடுவோம்; அதற்காகத்தானே பிதா இயேசுவை இந்த பூமியில் அனுப்பினார். எனவே, பிதாவின் பி...

இறைச்சியா? இச்சையா?

இறைச்சியா?  இச்சையா? 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்' (மத். 6:11) என்றும், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத். 6:34) என்றும் பிதாவை நோக்கி ஜெபிக்க இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக்கொடுத்திருந்தபோதிலும், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே 'உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்' (மத். 6:8) என்பதுதானே பிதாவைக் குறித்து இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிமுகம். 'முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்' (மாற். 7:27) என்பதுதான் அவரது விருப்பமும் கூட. 'வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (மத். 10:10) என்றும், 'வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (லூக். 10:7; 1தீமோ. 5:18) என்றும் நாம் வாசிக்கின்றோமே. அப்படியிருக்க, 'ஆகாரத்திற்காக வேலை' மற்றும் 'கூலிக்காக வேலை' என்ற என்ற பார்வையில் நமது பயணம் தொடர்ந்துவிடக்கூடாததல்லவா! 'இழிவான ஆதாயம்' நமது வழிகளை மாற்றிவிடக்...

வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்

  வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்   அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது,  இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.  ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்;  ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.(லூக் 4:25-27) இஸ்ரவேலின் தேவனாக இருந்தபோதிலும், இஸ்ரவேல் தேசத்திலேயே தனது குமாரனை மேசியாவாகப் பிறக்கச் செய்தபோதிலும், பஞ்ச காலத்தின்போது, இஸ்ரவேலருக்குள் இருந்த அநேகம் விதவைகள் போஷிக்கப்படாமற்போனதற்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், ந...