சீரழிக்கும் சீமாட்டிகள்
தேவஜனத்தில் ஒருவராக நாம் வாழ்ந்தாலும், தேவ ஜனமாக வாழ்ந்தாலும் தேவனுடைய திட்டத்தினின்று சிறிதும் பிசகிவிடாதவண்ணம் நம்மைக் காத்துக்கொள்ளும் பணியே பிரதானமானது. 'கிறிஸ்தவன்' என்ற பெயரைத் தரித்து வாழும் பல மனிதர்களை உரித்துப் பார்த்தால் உள்ளத்திலோ உலகம்தான். மனைவியையோ அல்லது கணவனையோ தெரிந்துகொள்வதில் மனம் மாறிவிடும் மனிதர்களின் பயணமே பாதை மாறிவிடுகின்றது. கர்த்தருக்கா சாதிக்கவிருக்கும் அவர்களை மனைவியை அல்லது கணவனைக் கொண்டு சமாதிக்குள் தள்ளிவிடும் சத்துருவின் யோசனைக்குள் சிக்கிக்கொள்ளாமல், கர்த்தருடைய சித்தத்தின்படி நடக்கின்றவர்களையே தெரிந்துகொள்வது பயணத்தை நிறைவேற்றி முடிக்க உதவியாயிருக்கும்.
ஆகாப் இஸ்ரவேலின் ராஜா; எனினும் இஸ்ரவேலின் தேவனுக்கு விரோதமாகவே வாழ்ந்துகொண்டிருந்தவன். கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாதவைகளையே செய்ததான்; பாகாலை சேவித்து அதைப் பணிந்துகொண்டு, தான் சமாரியாவிலே கட்டின பாகாலின் கோவிலில் பாகாலுக்குப் பலிபீடத்தை எடுப்பித்தான்; அத்துடன், சீதோனியரின் ராஜாவாகிய ஏத்பாகாலின் குமாரத்தி யேசபேலை விவாகம்பண்ணினான் (1இராஜா. 16:31,32). யேசபேலை மனைவியாகக் கொண்டபோது, அவனது தனிப்பட்ட வாழ்க்கையிலும், ராஜ்யத்திலும் பொல்லாப்புகள் மேலும் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கின. நோவாவின் குமாரன் காம், காமின் குமாரர்களில் ஒருவன் மிஸ்ராயீம். பெலிஸ்தியர்கள் மிஸ்ராயீமின் சந்ததியிலிருந்து பிறந்தவர்களே (ஆதி. 10:14). மேலும், காமின் மற்றொரு மகனான கானானின் மூத்த மகனே சீதோன் (ஆதி. 10:15); காம் தன் தகப்பனால் சாபத்தைப் பெற்றவன் (ஆதி. 9:25). காமின் சாபம் தலைமுறை தலைமுறயாகத் சந்ததியைத் தொடர்ந்துகொண்டிருந்தது. கானானின் வம்சத்தாரே 'கானானியர்' என்றும் அழைக்கப்பட்டனர் (ஆதி. 10:15-18). இத்தகைய சாபத்தைப் பெற்ற சீதோன் சந்ததியினரோடு சம்பந்தம் கலந்தான் ஆகாப். இஸ்ரவேலில் ராஜாவாக இருந்தபோதிலும், சாபத்தையும், ஆசீர்வாதத்தையும் அறியாத அவன், ஆசீர்வதிக்கும் தேவனையும் புரிந்துகொள்ளாத அவனது பயணம் திருமணத்திலும் தேவனுக்கு விரோதமாகவே தொடர்ந்தது. இருப்பது இஸ்ரவேலிலே, அழைக்கப்படுவது 'இஸ்ரவேலின் ராஜா' என்று, எனினும், உள்ளத்தால் அவன் சீதோனியன். ஆசா மணமுடித்த யேசபேல் கர்த்தரின் தீர்க்கதரிசிகள் சங்கரிக்கப்பட காரணமாயிருந்தாள் (1இராஜா. 18:4). கர்த்தரின் தீர்க்கதரிசியாகிய எலியாவுக்கு விரோதமாக எழும்பி நின்றாள் (1இராஜா. 19:2). அதுமாத்திரமல்ல, யேசபேல் கணவனை முந்திச் செல்லுகிறவளாயிருந்தாள். குடும்பத்தில் தலையைப் போல செயல்பட்டுக்கொண்டிருந்தாள். இராஜாவாக ஆகாப் இருந்தபோதிலும், ராஜ்யபாரத்தையோ தன்னுடையதாக்கிக்கொண்டாள்.
நாபோத்தின் திராட்சத்தோட்டத்தை ஆகாப் கேட்டபோது, அவனோ அதனைக் கொடுக்காது மறுத்துவிட்டான் (1இரா 21:6). அப்பொழுது ஆகாபின் மனைவி யேசபேல் தன் கணவனை நோக்கி, 'நாபோத்தின் திராட்சத்தோட்டத்தை நான் உமக்குக் கொடுப்பேன்' என்று வைராக்கியமாய் சொன்னாள். அதுமாத்திரமல்லாது, ஆகாபின் பெயரால் நிருபங்களை எழுதி, அவன் முத்திரையை அவைகளுக்குப் போட்டு, அந்த நிருபங்களை நாபோத் இருக்கும் பட்டணத்தில் அவனோடே குடியிருக்கிற மூப்பரிடத்துக்கும் பெரியோரிடத்துக்கும் அனுப்பினாள் (1இராஜா. 21:7-9). ஆகாபின் மரணமும், யேசபேலின் மரணமும், அவர்கள் பிள்ளைகளின் மரணமும் பரிதாபமாகவே முடிந்தது. தேவனுக்கு விரோதமான கணவனும், தேவனுக்கு விரோதமான மனைவியும் இணைந்ததால், குடும்பமே சீரழிந்தது.
தேவனிடத்தில் ஞானத்தையே கேட்டுப் பெற்றுக்கொண்டவன் சாலமோன். அவனைப் போல ஞானமுள்ளவன் புவியில் ஒருவனும் இருந்ததில்லை, இருக்கப்போவதுமில்லை என்று பட்டியலில் நிரந்தரமாக முதலிடத்தைப் பிடித்தவன். என்றாலும், அவன் பார்வோனின் குமாரத்தியை நேசித்தான்; அதுமாத்திரமல்ல, மோவாபியரும், அம்மோனியரும், ஏதோமியரும், சீதோனியரும், ஏத்தியருமாகிய அந்நிய ஜாதியாரான அநேகம் ஸ்திரீகள் மேலும் ஆசைவைத்தான் (1இராஜா. 11:1). இறுதியில், சாலொமோன் சீதோனியரின் தேவியாகிய அஸ்தரோத்தையும், அம்மோனியரின் அருவருப்பாகிய மில்கோமையும் பின்பற்றினான் (1இரா 11:5). மோவாபியரின் அருவருப்பாகிய காமோசுக்கும், அம்மோன் புத்திரரின் அருவருப்பாகிய மோளோகுக்கும் மேடையைக் கட்டினான். தன் ஸ்திரீகள் எல்லாருக்காகவும் அப்படிச் செய்தான் (1இராஜா. 11:7,8). அந்நிய தேவர்களைப் பின்பற்றவேண்டாம் என்று கர்த்தர் சாலமோனுக்குக் கட்டளையிட்டிருந்தும், அவனால் தன்னைக் கட்டுப்படுத்த இயலவில்லை. தேவ கட்டளையை விட கட்டிய ஸ்தீகளே அவனுக்குப் பிரதானமாகக் தோன்றினார்கள். கட்டளையை விட்டு சாலமோனை கட்டி இழுத்துச் சென்றவர்களும் அந்த ஸ்திரீகளே.
கிறிஸ்துவைப் பின்பற்றுவோரே, 'கிறிஸ்தவர்கள்' என்று அழைக்கப்படுவோரே, கிறிஸ்தவர்களாயிருந்தும் ஆகாபைப் போல நீங்கள் வாழுவீர்கள் என்றால் உங்கள் வாழ்க்கையையும் இப்படித்தான் அமைத்துக்கொள்ள முற்படுவீர்கள். மாம்சம் ஆவிக்கு விரோதமானதல்லவா (கலா. 5:17). மாம்சம் ஆவிக்குரிதை நாடிச் செல்லுமோ? மாம்சம் ஆவிக்குரிய மணப்பெண்ணைத் தேடுமோ? மாம்சம் மாம்சத்தைத்தானே தேடிச் செல்லும். இதுவே, அழிவுக்கு ஆரம்பம். திருமணத்தின்போது, ஆவிக்குரியவைகளுக்கு முதலிடம் கொடுக்க உங்களால் முடியாதிருக்குமென்றால், 'நீங்கள் மாம்சத்துக்குரியவர்கள்' என்பதை அறிந்துகொள்ளுங்கள்; அதுவே உங்களை அளக்கும் அளவுகோல். ஆவிக்குரிய கோட்டைத்தாண்டி சீதோனிலிருக்கும் சீமாட்டியைத் தேடி அலையும் எண்ணம் உருவாவதன் அடிப்படைச் சிந்தை மாம்சத்திலேயே பிறக்கிறது. 'அழகு' 'பணம்' 'வேலை' 'படிப்பு' 'செல்வாக்குள்ள குடும்பம்' என அளந்து, அளந்து, பெண்களைத் தேடும் பலர் ஆவிக்குரிய தேசத்தைத் தாண்டி சீதோனுக்குச் சென்றுவிடுகின்றனர். சீதோனிலிருந்து கொண்டுவரும் சீமாட்டிதான் வாழ்க்கையைச் சீரழித்துவிடுகின்றாள். நம்முடைய நிலை என்ன?
ஆபிரகாம் தன் குமாரனான ஈசாக்கிற்கு பெண் பார்க்கும்போது, தன் வீட்டிலுள்ளவர்களில் வயதில் மூத்தவனும், தனக்கு உண்டான எல்லாவற்றிற்கும் அதிகாரியுமாகிய தன் ஊழியக்காரனை நோக்கி: நான் குடியிருக்கிற கானானியருடைய குமாரத்திகளில் நீ என் குமாரனுக்குப் பெண்கொள்ளாமல்; நீ என் தேசத்துக்கும் என் இனத்தாரிடத்துக்கும் போய், என் குமாரனாகிய ஈசாக்குக்குப் பெண்கொள்வேன் என்று, வானத்துக்குத் தேவனும் பூமிக்குத் தேவனுமாகிய கர்த்தர்பேரில் எனக்கு ஆணையிட்டுக்கொடுக்கும்படிக்கு, நீ உன் கையை என் தொடையின்கீழ் வை என்றான் (ஆதி 24:4). அப்படியே ஈசாக்கும் தன் மகனான யாக்கோபை அழைத்து, அவனை ஆசீர்வதித்து, நீ கானானியருடைய குமாரத்திகளில் பெண்கொள்ளாமல், எழுந்து புறப்பட்டு, பதான் அராமிலிருக்கிற உன் தாயினுடைய தகப்பனாகிய பெத்துவேலுடைய வீட்டுக்குப்போய், அவ்விடத்தில் உன் தாயின் சகோதரனாகிய லாபானின் குமாரத்திகளுக்குள் பெண்கொள் என்று அவனுக்குக் கட்டளையிட்டான் (ஆதி 28:1,2) இது ஆபிரகாமின் சந்ததியாராகிய நம்மிடத்தில் தொன்றுதொட்டு இன்றுவரை தொடவேண்டிய பாடமல்லவா. ஆனால், இதிலிருந்து தவறிப்போகின்ற இளந்தலைமுறையினர் அநேகர். தங்கள் பெற்றோரின் விருப்பத்திற்கு அவர்கள் முதலிடம் தருவதில்லை; தங்களது விருப்பத்தினால் பெற்றோரின் விருப்பத்தைத் தடுத்துவிடுகின்றனர். இவர்களது கண்கள் கானானுக்குள்ளேயே உலாவிக்கொண்டிருக்கிறது. திருமணம் செய்த பின்னர் அவள் திருந்திவிடுவாள், இயேசுவை ஏற்றுக்கொண்டுவிடுவாள், இரட்சிக்கப்பட்டுவிடுவாள் என்று தீர்க்கதரிசனம் சொல்லிக்கொண்டிருக்கும் இளைஞர்கள் சாலமோனின் வாழ்க்கையில் ஏற்பட்டவைகளை ஒருமுறை நினைத்துப் பார்த்தால் நல்லது. நீங்கள் ஆகாபைப் போன்றவர்களா? சாலமோனைப் போன்றவர்களா அல்லது ஆபிரகாமைப் போன்றவர்களா?
Comments
Post a Comment