சந்தோஷத்தைத் தரும் சந்ததி
உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பினிமித்தம் அநேகர் சந்தோஷப்படுவார்கள். (லூக் 1:14)
சந்தோஷம் நமக்கு மட்டும் உண்டாகிவிட்டால் போதாது, அநேகரை அது சந்திக்கவேண்டும் என்பதே ஆண்டவரது விருப்பம். ஆசாரியனாகிய சகரியாவுக்கு தூதனாகிய காபிரியேல் தரிசனமானபோது, 'உனக்கு சந்தோஷம்' என்றும், 'அநேகர் சந்தோஷப்படுவார்கள்' என்றும் முன்னறிவித்தான். தங்களுக்குக் கிடைத்த சந்தோஷத்தை அனுபவித்துக்கொண்டிருக்கும்போது, மற்றவர்கள் என்ற மறுபுறத்தைப் பார்க்கத் தவறிவிடுபவர்கள் அநேகர். எனினும், நமக்குக் கிடைத்த சந்தோஷத்தில் மற்றவர்களையும் பங்குள்ளவர்களாக்குவது எப்படி என்பதை தொடர்ச்சியான வசனங்கள் நமக்கு விளக்கிக் காட்டுகின்றன. அவன் இஸ்ரவேல் சந்ததியாரில் அநேகரை அவர்கள் தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திருப்புவான் என்றும், பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான ஜனத்தைக் கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும்படியாக, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான் (லூக் 1:16,17) என்றும் யோவானைக் குறித்து தூதன் முன்னுரைத்தானே. இத்தகைய காரியங்கள் நம்முடைய வாழ்க்கையிலும் மற்றும் சந்ததியிலும் தொடரவேண்டும். பிள்ளைகளின் நிமித்தமாக நாம் மாத்திரமல்ல, பிறரும் சந்தோஷமடையவேண்டும் என்ற தரிசனம் நம்மில் உருவாகட்டும்.
கன்னிகையாயிருந்த மரியாளின் வயிற்றில் கருவாக இயேசு கிறிஸ்து தோன்றியதின் நோக்கமும் இதுவே. இயேசு கிறிஸ்து பிறந்தபோது, தேவதூதன் மேய்ப்பர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன் (லூக் 2:10) என்று சொன்னானே. மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடிவருமுன்னே அவள் கர்ப்பவதியானதைக் கண்ட யோசேப்பு இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான் (மத். 1:18,19). என்றபோதிலும், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனiவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே, அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் (மத் 1:20,21) என்று, அந்த சந்தோஷம் பிறரையும் தன்னுடன் எப்படி பங்குள்ளவர்களாக்கிக்கெ hள்ளப்போகிறது என்பதை தெளிவாக எடுத்துரைக்கின்றானே.
மனோவாவின் குடும்பதிலும் நடந்தது இதுதானே. கர்த்தருடைய தூதனானவர் மனோவாவின் மனைவிக்குத் தரிசனமாகி, அவளை நோக்கி: இதோ, பிள்ளைபெறாத மலடியான நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய். ஆதலால் நீ திராட்சரசமும் மதுபானமும் குடியாதபடிக்கும், தீட்டானது ஒன்றும் புசியாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு. நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படலாகாது; அந்தப் பிள்ளை பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான்; அவன் இஸ்ரவேலைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கத் தொடங்குவான் என்றார் (நியா 13:3-5). பிள்ளையற்றிருந்த தங்களுக்கு ஒரு குழந்தை கிடைக்கப்போகிறது என்ற சந்தோஷம் ஒருவேளை மனோவாவின் மனதை நிரப்பியிருந்தாலும், 'இஸ்ரவேலைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி' அவர்களுடைய வாழ்க்கையில் சந்தோஷத்தைக் கொடுக்கவே அவன் பிறக்கிறான் என்பதும் இணைந்தே முன்னுரைக்கப்பட்டது.
இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன். அவைகளால் தன் அம்பறாத்தூணியை நிரப்பின புருஷன் பாக்கியவான்; அவர்கள் நாணமடையாமல் ஒலிமுகவாசலில் சத்துருக்களோடே பேசுவார்கள் (சங். 127:3,5) என்கிறார் தாவீது. அடிமைத்தனத்திலும், இருளின் ஆதிக்கத்திலும் இருக்கும் ஜனங்களை இரட்சிப்புக்கு நேராக நடத்தும்படியாகவே பிள்ளைகள் நம்முடைய கரங்களில் தரப்படுகின்றார்கள்; எனினும், இந்த உயர்ந்த நோக்கத்தினை அறியாதுபோய்விட்டால் அல்லது பிள்ளைகளுக்கு அறிவிக்காதுபோய்விட்டால், உலகம் அவர்களை வாரிக்கொண்டுபோய்விடக்கூடும்.
Comments
Post a Comment