Skip to main content

பழியில்லை ஆனால் பதிலுண்டா?

 பழியில்லை ஆனால் பதிலுண்டா?



'கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள். பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன்' (ரோமர் 12:18) என்கிறார் கர்த்தர். 'ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக்கொடு' (மத் 5:39) என்று இயேசு போதித்தார். ஆனால், மனிதர்களாகிய நாமோ பல நேரங்களில் இவ்விடத்தில் தடுமாறுகின்றோம். தேவனுக்குப் பதிலாக, நம்மை விரோதிக்கிறவர்களை நாமே முண்டியடித்துக்கொண்டு எதிர்க்கிறோம்; இது நம்முடைய செயல் அல்லவே. கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் (யாத். 14:14) என்பதுதானே வசனம் போதிக்கும் விதம். கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால், சூட்டுக்குச் சூடு, காயத்துக்குக் காயம், தழும்புக்குத் தழும்பு பழி கொடுக்கவேண்டும் (யாத். 21:23,24) என்ற நியாயப்பிரமாணத்தினின்று, மனிதர்களாகிய நம்மை இயேசு விடுதலையாக்கிய பின்னரும், விடுதலையாக்கப்பட்ட பலர் இரட்சிக்கப்பட்டுவிட்டேன் என்றும், அபிஷேகம் பெற்றிருக்கிறேன் என்றும், அந்நியபாஷை பேசுகிறேன் என்றும் சொல்லிக்கொண்டு, இன்னும் இந்தச் சட்டத்திற்குள்ளேயே சிக்கிக்கிடக்கின்றனர். நமக்கு விரோதமாய் எழும்பும் மக்களுக்கு விரோதமாக நாம் எழும்பிவிடக்கூடாது. மனிதர்கள் நமக்கு என்னென்ன தீமைகளைச் செய்தாலும், பதில் வினையாய் அவர்களுக்கு ஏதாகிலும் செய்துவிடவேண்டும் என்ற எண்ணத்தை சத்துருவே நம்முடைய மாம்சத்தில் விதைக்கிறான்; எனவே எச்சரிக்கையாயிருப்போம். தங்களுக்கு விரோதமாக செயல்படுகிறவர்களுக்கு பதில் செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் புதிய உடன்படிக்கையின் மதிலை உடைத்துக்கொண்டு ஓடும் மக்கள் உண்டு. நாம் பதில் செய்யக்கூடாத இடங்களில், நம்மை பதில் செய்யத் தூண்டும் சத்துருவின் எத்தனத்திற்கு நாம் விலைபோய்விடக்கூடாது. இயேசுவை ஏற்றுக்கொண்ட நம்முடைய வாழ்க்கையில் பழி இல்லை.

சத்தியத்தின் ஒருபுறத்தில் நின்றுகொண்டு, மறுபுறத்திற்குப் பயணித்துவிடாதபடி பல நேரங்களில் சத்துரு தடுத்துவிகின்றான். 'இதைச் செய்யக்கூடாது' என்ற அறிவு மாத்திரமல்ல, எதைச் செய்யவேண்டும் என்ற அறிவும் அவசியம்லவா. ஒருபுறத்தைக் கடைபிடித்துவிட்டதினால், கீழ்ப்படிந்துவிட்டோம் என்று அர்த்தமாகிவிடாதே; மறுபுறத்திலோ நாம் கீழ்ப்படியக்கூடாதவர்களாக மரித்துக்கிடக்கின்றோமே. இத்தகைய நிலையிலிருந்து தேவன் நம்மைக் காப்பாராக. எதிர்ப்போரை பழிவாங்கக்கூடாதென்றால், அதற்குப் பதிலாக நாம் என்ன செய்யவேண்டும் என்றும் இயேசு போதித்தாரே. 'சத்துருக்களை சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும், உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்' (மத். 5:44) என்பதுதானே இயேசுவின் போதனை. பழிவாங்காமல் நாம் இருந்தாலும், அதற்குப் பதிலாக இந்தப் பதிலைச் செய்யமுடிகின்றதா? பழிவாங்காத நாம் இப்படி பதிற்செய்யாமற் போனால், இயேசுவின் போதனைக்குத் தூரமாயிருப்போமல்லவா. 'ஆண்டவரே, அவர்களை சந்தியும்' என்று ஜெபிக்கும் மக்கள் அநேகர்; ஆனால், ஆண்டவரே அவர்களை ஆசீர்வதியும் என்று ஜெபிக்கும் மக்கள் சிலர்தானே. தனிப்பட்ட வாழ்க்கையிலோ, உறவினர் மத்தியிலோ, அலுவலகத்திலோ, மற்றெந்த இடங்களிலுமோ நமக்கு எதிரிடையாகவே செயல்பட்டுக்கொண்டிருக்கும் மனிதர்களுக்கு, இத்தகைய பதிலை நாம் செய்யத் தவறவேண்டாம். அப்படிச் செய்யாமற்போனால், அவர்களைக் குறித்த விரோதம் நமது மனதிலே குடிகொண்டிருக்கும், அது குரோதமாகி நம்மை குழிக்குள் தள்ளிவிடுமல்லவா; கசப்பின் எட்டி அவ்வப்போது எழும்பிக்கொண்டேயிருக்கும். இப்படிப்பட்டவைகளை நமது இருதயத்தில் தொடர்ச்சியாக வைத்துக்கொண்டிருக்வேண்டும் என்றே சத்துரு நம்மை சத்துருக்களுக்குப் பதிற்செய்யவிடுகிறதில்லை. இந்தப் பதிலை செய்யவிடாதபடி இன்று அநேக ஆவிக்குரியவர்களை மதிலாக சத்துரு மறித்து நிற்கிறானே. நமக்கு விரோதமாகப் பேசித் திரிகிறவர்கள், நம்மை தவறாக அடையாளங் காட்டிக்கொடுத்தலைகிறவர்கள், நம்மை அவமானப்படுத்துகிறவர்கள், நிந்திக்கிறவர்கள், நம்மை ஒதுக்கிவைக்கின்றவர்கள் இவர்கள் அனைவரும் பழிவாங்கப்படவேண்டியவர்கள் அல்ல, பதில் செய்யப்படவேண்டியவர்கள். இப்படிச் செய்தால் மாத்திரமே நம்முடைய ஆத்துமாவை ஆவிக்குரியதாக நாம் காத்துக்கொள்ள முடியும்.

ஒருபுறத்திலே பழிவாங்கவேண்டும் என்ற எண்ணத்தில் ஆவிக்குரிய மதிலைத் தாண்டி ஓடிவிடும் கூட்டம்; மறுபுறத்திலோ, அவர்களுக்கு இயேசு சொன்ன வண்ணம் பதிற்செய்ய முடியாமல் முடங்கிக் கிடக்கும் கூட்டம். இவ்விரண்டு கூட்டத்தாரில் நாம் எந்த வகையினைச் சேர்ந்தவர்கள்; ஆராய்ந்து பார்ப்போம்.

ஒரு சீஷனான யூதாஸ் இயேசுவைக் காட்டிக்கொடுக்க முத்தம் கொடுத்துக்கொண்டிருந்தபோது, மற்றொரு சீஷனான பேதுரு இயேசுவை பிடிக்கவந்தவர்களுக்கு விரோதமாகப் பட்டயத்தை உருவினான். அப்பொழுது, இயேசு பேதுருவை நோக்கி: உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள். நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா? அப்படிச் செய்வேனானால், இவ்விதமாய்ச் சம்பவிக்கவேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும் (மத் 26:52-54) என்றார். எதிகளைக் கொண்டும் நிறைவேற்றப்படவேண்டிய காரியங்கள் நம்முடைய வாழ்க்கையில் எழுதப்பட்டிருக்கலாம்; அப்படியென்றால், நம்முடைய பட்டயம் எதிரிக்கு விரோதமாக அல்ல, 'இப்படி நடக்கவேண்டும்' என்று நம்முடைய வாழ்க்கையைக் குறித்து தேவனால் எழுதப்பட்ட வார்த்தைகளுக்கு விரோதமாகவே காணப்படும். நாம் எதிரியை அல்ல, தேவனால் எழுதியவைகளையே வெட்டிவிடுவோம்; அது நம்முடைய வாழ்க்கையில் நிகழாமலேயே போய்விடும். எதிரிகளைக் காணும்போது, சாத்தானே அநேகருடைய கண்களுக்குத் தென்படுகின்றான். எதிரிகளைக் காணும்போது, தேவனைக் காணும் சுபாவம் நம்மில் உருவாகட்டுமே. ஜனங்கள் மூர்க்கமடைந்து, ஸ்தேவானைப் பார்த்துப் பல்லைக் கடித்தபோது, அவன் பரிசுத்தஆவியினாலே நிறைந்தவனாய், வானத்தை அண்ணாந்துபார்த்து, தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலதுபாரிசத்தில் இயேசுவானவர் நிற்கிறதையும் கண்டு: அதோ வானங்கள் திறந்திருக்கிறதையும், மனுஷகுமாரன் தேவனுடைய வலதுபாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன் (அப் 7:54-56) என்று சொன்ன பெலன் நமக்கும் உண்டாகட்டும். பழிவாங்க அல்ல, நாம் பதில் செய்ய அழைக்கப்பட்டவர்கள். பழிவாங்குதல் அவருடையது, பதிற்செய்தல் நம்முடையது. நம்முடையதை நாம் செய்வோம்; அவருடையதை அவர் செய்வார்.











Comments

Popular posts from this blog

கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்

  கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்   வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கிறிஸ்துவின் குணங்களை வெளிப்படுத்தவேண்டியதும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டியதும் கிறிஸ்தவனின் தலையாயக் கடமை.  கிறிஸ்துவுக்குள்  வாழும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சில உண்மைகளை பவுல் எபேசு சபைக்குச் சுட்டிக்காட்டுகின்றார். கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்  (எபே. 1:3),  பாவமன்னிப்பாகிய மீட்பு  (எபே. 1:7) இவைகள் பொதிந்திருக்கின்றன. ஆனால், இவ்விரண்டிற்கும் பலர் முக்கியத்துவம் கொடுக்காமல், உலகத்தின் ஆசீர்வாதங்களையே அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். பாவமன்னிப்பினைப் பெறாமல், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறாமல், உலகத்தின் ஆசீர்வாதங்களுக்காகவே அவரின் பின்னே ஓடினால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் முடிவு பரிதாபமாகவே இருக்கும். உன்னதங்களில் உட்காரவேண்டிய நாம் உலகத்தோடு ஒட்டிவிடுவோம், மணவாளனோடு வாழவேண்டிய நாம் மண்ணுக்காக வாழ்ந்துவிடுவோம். கிறிஸ்துவிடம் பிரதானமாய் பாவமன்னிப்பையே முதலில் பெற நாடுவோம்; அதற்காகத்தானே பிதா இயேசுவை இந்த பூமியில் அனுப்பினார். எனவே, பிதாவின் பி...

இறைச்சியா? இச்சையா?

இறைச்சியா?  இச்சையா? 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்' (மத். 6:11) என்றும், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத். 6:34) என்றும் பிதாவை நோக்கி ஜெபிக்க இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக்கொடுத்திருந்தபோதிலும், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே 'உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்' (மத். 6:8) என்பதுதானே பிதாவைக் குறித்து இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிமுகம். 'முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்' (மாற். 7:27) என்பதுதான் அவரது விருப்பமும் கூட. 'வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (மத். 10:10) என்றும், 'வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (லூக். 10:7; 1தீமோ. 5:18) என்றும் நாம் வாசிக்கின்றோமே. அப்படியிருக்க, 'ஆகாரத்திற்காக வேலை' மற்றும் 'கூலிக்காக வேலை' என்ற என்ற பார்வையில் நமது பயணம் தொடர்ந்துவிடக்கூடாததல்லவா! 'இழிவான ஆதாயம்' நமது வழிகளை மாற்றிவிடக்...

வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்

  வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்   அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது,  இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.  ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்;  ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.(லூக் 4:25-27) இஸ்ரவேலின் தேவனாக இருந்தபோதிலும், இஸ்ரவேல் தேசத்திலேயே தனது குமாரனை மேசியாவாகப் பிறக்கச் செய்தபோதிலும், பஞ்ச காலத்தின்போது, இஸ்ரவேலருக்குள் இருந்த அநேகம் விதவைகள் போஷிக்கப்படாமற்போனதற்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், ந...