Skip to main content

பூட்டப்படாத ஆலயம்

பூட்டப்படாத ஆலயம்

 

நான் சிறுவனாயிருந்த நாட்களில், கிராம ஆலயத்தின் வாசல்கள் பூட்டப்படாமல் திறந்துவைக்கப்பட்ட நிலையிலேயே காணப்படும். ஆலயத்திற்குச் சென்று ஜெபிக்க விரும்பும் ஜனங்கள், ஆராதனை நடக்கும் நேரத்தில் மாத்திரமல்ல, தாங்கள் விரும்பும் எந்நேரமும் ஆண்டவரைத் தேடிச் செல்ல ஏதுவுண்டாயிருக்கும்படியும், தேடிவரும் ஆத்துமாக்களுக்கு ஆலயம் மூடியிருக்கக்கூடாது என்ற எண்ணத்துடனும் மூதாதையர்கள் அப்படிச் செய்துவந்தனர். இன்றைய நாட்களிலும், பல கிராமங்களில், நகரங்களில் திறந்தே இருக்கும் ஆலயங்களைப் பார்க்க இயலும். நம்முடைய சரீரமான ஆலயமும் ஜனங்களுக்காக அப்படியே இருக்கவேண்டும் என்பதே ஆண்டவரின் விருப்பம்.

அப்போஸ்தலனாகிய பவுல் எத்தனையோ பாடுகளின் மத்தியிலும், உபத்திரவங்களின் மத்தியிலும் சரீரத்தில் வாழுவதில் வெறுப்படையவில்லை. ஆறுகளால் வந்த மோசங்கள், கள்ளரால் வந்த மோசங்கள், என் சுயஜனங்களால் வந்த மோசங்கள், அந்நிய ஜனங்களால் வந்த மோசங்கள், பட்டணங்களில் உண்டான மோசங்கள், வனாந்தரத்தில் உண்டான மோசங்கள், சமுத்திரத்தில் உண்டான மோசங்கள், கள்ளச் சகோதரரிடத்தில் உண்டான மோசங்கள், பிரயாசங்கள், வருத்தங்கள், அநேகமுறை கண்விழிப்புகள், பச, தாகம், அநேகமுறை உபவாசங்கள், குளிர், நிர்வாணம், (2கொரி 11:26,27) என என வெளியிலிருந்து பல்வேறு சூரைக் காற்றுகள் பவுலின் ஆலயத்தைத் தாக்கின. அதுமாத்திரமல்ல, பவுலின் ஆலயத்தை உள்ளேயிருந்தும் முள் தாக்கியது. என்றாலும், கிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ? (ரோம 8:36) என்று அவர் சவாலிடுகின்றார். எத்தனை ஆபத்துக்களைச் சந்தித்தாலும், தனது சரீரமான ஆலயத்தின் அஸ்திபாரம் ஆண்டவர் மேல் நிற்கிறது என்பதை அறிந்திருந்த அவர்; அந்த ஆலயத்தை ஆத்துமாக்களுக்காகவே திறந்துவைத்திருந்தார்.

உள்ள பாடுகள் போதுமென்றிராமல், என் இனத்தாராகிய என் சகோதரருக்குப் பதிலாக நானே கிறிஸ்துவைவிட்டுச் சபிக்கப்பட்டவனாக வேண்டுமென்று விரும்புவேனே (ரோமர் 9:3) என்றும் எழுதுகிறார் பவுல். பவுல் அப்போஸ்தலனின் இந்த பாரமிக்க வரிகள் அவருக்குள் இருந்த ஆத்தும பாரத்தின் கொப்பளிப்பே. இரட்சிப்பின் சந்தோஷத்தை தான் சுவைத்திருந்தபோதிலும், தன் ஜனத்திற்காக தானே சபிக்கப்படும் நிலைக்குள்ளும் தன்னைத் தள்ளிக்கொள்ள பவுல் ஆயத்தமாயிருந்தார். அதுமாத்திரமல்ல, நாங்கள் உங்கள்மேல் வாஞ்சையாயிருந்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களுக்குக் கொடுத்ததுமல்லாமல், நீங்கள் எங்களுக்குப் பிரியமானவர்களானபடியினாலே, எங்கள் ஜீவனையும் உங்களுக்குக் கொடுக்க மனதாயிருந்தோம் (1தெச. 2:8) என்று தெசலோனியருக்கு எழுதுகிறார். ஆத்துமாக்களுக்காகச் செலவுபண்ணவும் செலவுபண்ணப்படவும் விரும்புகிறேன் (2கொரி. 12:15) என்கிறார்.

'தேகத்தை விட்டுப் பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு; அது அதிக நன்மையாயிருக்கும்; நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம்' (பிலி. 1:23:24) என்கிறார் பவுல். சரீரத்தில் முள்ளுடனேயே வாழ்ந்துகொண்டிருந்த பவுலுக்கு எப்பொழுது பாடுகள் இல்லாத பரலோகத்தைக் காணுவேன் என்ற வாஞ்சை இருந்திருக்கக்கூடும். என்றாலும், ஜனங்களுக்காக முள்ளுள்ள சரீரத்தில் இருப்பதை நன்மை என தெரிந்துகொண்டார் அவர். விண்ணகம் செல்லவேண்டும் என்ற ஆசையில் அவசரத்தில் மண்ணுலக வாழ்க்கையின் மரணத்தை அவசரப்பட்டு எதிர்நோக்கவில்லை, தன்னிலிருக்கும் முள்ளுக்கு முடிவுவேண்டும் என்று அவர் அவசரப்படவில்லை. 'நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது' (பிலி. 3:20) என்று பவுல் எழுதினாலும், தேகத்தில் குடியிருந்தால்தான் அநேகரை ஆதாயப்படுத்தமுடியும் என்பதால் தனது பணியில் தீவிரமாயிருந்தவர். பவுலின் சரீரத்தில் காணப்பட்ட முள், கர்த்தரால் நீக்கப்படவில்லை, மாறாக கர்த்தருடைய கிருபையினால் அவருடைய சரீரம் காக்கப்பட்டது. 'என் கிருபை உனக்குப் போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்' என்ற பதில் பவுலுக்குக் கிடைத்தபோது, 'கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன். அந்தப்படி நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்; ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்' (2கொரி 12:9,10) என்று எழுதுகின்றார். ஊழியத்தின் பாதையில் வியாதிகளில், போராட்டங்களில், துன்பங்களில் நாம் சிக்கிக்கொள்ளும்போது, நம்முடைய சிந்தையின் நிலை என்ன? வியாதியோடு பலவீனத்தோடு இருக்கும் ஊழியர்களுக்கு 'சரீரத்தில் தரித்திருப்பது அவசியம்' என்ற பவுலின் வார்த்தைகள் உற்சாகத்தைக் கொடுக்கட்டும்.

தேவதாசனான மோசேயும் இதே உணர்வினையே தனது வாழ்க்கையில் வெளிக்காட்டுகின்றார். ஜனத்தின் மீறுதல்களைக் கண்டு அவர்கள் மீது தேவன் கோபப்பட்டபோது, மோசே தேவனை நோக்கி: 'தேவரீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருளுவீரானால் மன்னித்தருளும்; இல்லாவிட்டால் நீர் எழுதின உம்முடைய புஸ்தகத்திலிருந்து என் பேரைக் கிறுக்கிப்போடும்' என்றான் (யாத். 32:32). இத்தனையாய் ஜனங்களுக்காக பாரமுடன் வாழ்ந்த மோசேயின் ஆலயக்கதவை, அவன் வாழ்க்கையின் இறுதி நாட்களில் ஆண்டவரே மூடினார். அவர் மூடிய கதவைக் கூட கண்டுபிடிக்கமுடியாத நிலைதான் பிசாசுக்கு ஏற்பட்டது. இவர்களுக்குள் ஏன் ஜனங்களைக் குறித்த இத்தனை வெறி? இவர்களுக்கு ஏன் ஜனங்களைக் குறித்த இத்தனை பாரம்? ஆத்துமாக்களுக்குப் பதிலாக அத்தனையையும் கொடுத்துவிடத் துணிந்து நின்றார்கள் இவர்கள். ஆத்துமாக்களுக்கு ஈடாக தங்கள் ஆத்துமாக்களையே பலிபீடத்தில் வைத்தார்கள்.

பிரியமானவர்களே! நாம் எத்தனை உபத்திரவப்பட்டாலும், எத்தனை கொடூரமான வியாதியினால் தாக்கப்பட்டாலும், நம்முடைய ஆலயம் ஜனங்களுக்காக திறந்தே இருக்கட்டும். ஆத்துமாக்களுக்காக நாம் செய்யவேண்டிய பணிக்கு முழுக்குப் போட்டுவிடாதிருப்போம். கரங்களில் கர்த்தர் கொடுத்த தாலந்துகள், அர்ப்பணிப்பின் நிமித்தம் பெற்றுக்கொண்ட பணிகள் அத்தனையையும் தொடர்ந்து செய்துகொண்டேயிருப்போம், கர்த்தர் நமது சித்தப்படி நம்மை அவரிடத்தில் சேர்த்துக்கொள்ளுவார்; அதுவரை ஜனங்களுக்காகவே உழைக்க நம்மை அர்ப்பணிப்போம்.

அழைப்பின் தூரம் எவ்வளவோ இருக்க, 'போதும்' என்று தேவனை நோக்கி அவசரப்பட்டுப் பேசிவிடுகிறோமா? 'போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்' (1இராஜா. 19:4) என்று வாழ்க்கையை முடித்துக்கொள்ள நினைத்து ஜெபித்தான் எலியா. தன்னுடைய ஆத்துமாவினால் இன்னும் எத்தனை ஆத்துமாக்களுக்கு நன்மையுண்டாகவேண்டும் என்பதை அறியாமல், அவசரப்பட்டு பேசினான் அவன். உபத்திரவங்கள், பாடுகள், சத்துருக்கள், துன்பங்கள் இவைகளைக் கண்டபோது, தன் உயிரைக் குறித்த பயம் அவனுக்கு உண்டானது. அதுவே, 'எடுத்துக்கொள்ளும்' என்று அவனை ஜெபிக்கும்படித் தூண்டியது. நம்முடைய சரீரம் நாம் தேவனைத் ஆராதிக்கிற ஆலயம் மாத்திரமல்ல, மற்றவர்களுக்கு தேவனை அறிவிக்கிற ஆலயமும்கூட. நம்முடைய ஆராதனை முடிந்தவுடன் ஆலயத்தைப் பூட்டிவிடுவது நியாயமாகுமோ? தேவனை நாம் ஏற்றுக்கொண்டு, தேவனிடத்திலிருந்து நன்மைகளைப் பெற்றுக்கொண்டு, தேவனிடத்திலிருந்து ஆசீர்வாதங்களைப் பெற்றனுபவித்துவிட்டால் மாத்திரம் போதுமோ? இந்த ஆலயத்தில் கர்த்தர் செய்த நன்மைகளைக் கண்டு, ஜனங்கள் தேவனண்டை திரும்பவேண்டுமே.

சமீபத்தில், புதியதலைமுறை தொலைக்காட்சி சேனலில் 'சாமானியருடன் ஒருநாள்' என்ற நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்துக்கொண்டிருந்தேன். திரு.செல்லையன் என்ற நபர் பேட்டியளித்துக்கொண்டிருந்தார். மாட்டுக்கு கொம்பு சீவுவது, ஈர்வலி செய்து விற்பது போன்ற வேலையைச் செய்துகொண்டிருக்கும் அவர், தனது பேட்டியின்போது, தனது ஆயுளைக் குறித்து, 'ரொம்பா வருஷம் ஓடாது, மிஞ்சிப்போனா ஒருவருஷம் அவ்வளவுதான், நாடி அடங்கிவிட்டது, வாழ்க்கை முடிந்துவிட்டது, இனி என்னங்க வாழ்க்கை' என்று நாதழுக்கச் சொன்னார். எப்படியோ கடினப்பட்டு, சம்பாதித்து தன்னுடைய ஜீவனை இம்மட்டும் காப்பாற்றிய அவர் 'போதும்' என்ற நிலைக்குள் தன்னைத் தள்ளிக்கொண்டார். இந்த நிலைக்குத்தான் இன்று நம்மிலும் அநேகர் வந்துவிடுகின்றோம்.

நோவாவை தேவன் நீதிமானாகக் கண்டார். ஜனங்களைக் காக்க பேழையை உண்டாக்கச் சொன்னார், ஆனால் ஜனங்களோ அதில் பிரவேசிக்கும் பாக்கியத்தை பெறாமற்போனார்கள். தேவன் அவனுக்குக் கட்டளையிட்டபடியே, ஆணும் பெண்ணுமாகச் சகலவித மாம்சஜந்துக்களும் உள்ளே பிரவேசித்தன; அப்பொழுது கர்த்தர் அவனை உள்ளே விட்டுக் கதவை அடைத்தார் (ஆதி 7:16). எவர்களையெல்லாம் நம்முடன் கூட்டிச் சேர்க்கமுடியுமோ, அவர்களையெல்லாம் கூட்டிச் சேர்ப்போம். நமது பேழையின் கதவை அடைக்கும் பணி கர்த்தருடையது. என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது (சங். 31:15) என்கிறான் சங்கீதக்காரன். நமது பேழையின் கதவை எப்போது மூடவேண்டும் என்பது அவருக்குத் தெரியும்; அதுவரை அது திறந்தேயிருக்கட்டும். அவர் திறந்து வைத்திருந்தால், ஒருவரும் பூட்டிவிடமுடியாது (ஏசாயா 22:22). ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர் நம் தேவன் (வெளி. 3:7). காலம் முடிந்து, கர்த்தர் அனுமதித்தால் ஒழிய, தேவன் குறித்த காலத்திற்கு முன்னர், மனிதர்களோ, வியாதிகளோ நமது ஆலயக்கதவுகளை அடைக்க சக்தியற்றவைகளே. சத்துருக்களால் சிலுவையில் அறையப்பட்டாலும், உயிரோடு எழுந்து இன்றும் பூட்டப்படாத ஆலயமாகவே இருப்பவர் இயேசு. 

Comments

Popular posts from this blog

கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்

  கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்   வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கிறிஸ்துவின் குணங்களை வெளிப்படுத்தவேண்டியதும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டியதும் கிறிஸ்தவனின் தலையாயக் கடமை.  கிறிஸ்துவுக்குள்  வாழும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சில உண்மைகளை பவுல் எபேசு சபைக்குச் சுட்டிக்காட்டுகின்றார். கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்  (எபே. 1:3),  பாவமன்னிப்பாகிய மீட்பு  (எபே. 1:7) இவைகள் பொதிந்திருக்கின்றன. ஆனால், இவ்விரண்டிற்கும் பலர் முக்கியத்துவம் கொடுக்காமல், உலகத்தின் ஆசீர்வாதங்களையே அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். பாவமன்னிப்பினைப் பெறாமல், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறாமல், உலகத்தின் ஆசீர்வாதங்களுக்காகவே அவரின் பின்னே ஓடினால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் முடிவு பரிதாபமாகவே இருக்கும். உன்னதங்களில் உட்காரவேண்டிய நாம் உலகத்தோடு ஒட்டிவிடுவோம், மணவாளனோடு வாழவேண்டிய நாம் மண்ணுக்காக வாழ்ந்துவிடுவோம். கிறிஸ்துவிடம் பிரதானமாய் பாவமன்னிப்பையே முதலில் பெற நாடுவோம்; அதற்காகத்தானே பிதா இயேசுவை இந்த பூமியில் அனுப்பினார். எனவே, பிதாவின் பி...

இறைச்சியா? இச்சையா?

இறைச்சியா?  இச்சையா? 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்' (மத். 6:11) என்றும், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத். 6:34) என்றும் பிதாவை நோக்கி ஜெபிக்க இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக்கொடுத்திருந்தபோதிலும், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே 'உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்' (மத். 6:8) என்பதுதானே பிதாவைக் குறித்து இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிமுகம். 'முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்' (மாற். 7:27) என்பதுதான் அவரது விருப்பமும் கூட. 'வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (மத். 10:10) என்றும், 'வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (லூக். 10:7; 1தீமோ. 5:18) என்றும் நாம் வாசிக்கின்றோமே. அப்படியிருக்க, 'ஆகாரத்திற்காக வேலை' மற்றும் 'கூலிக்காக வேலை' என்ற என்ற பார்வையில் நமது பயணம் தொடர்ந்துவிடக்கூடாததல்லவா! 'இழிவான ஆதாயம்' நமது வழிகளை மாற்றிவிடக்...

வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்

  வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்   அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது,  இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.  ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்;  ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.(லூக் 4:25-27) இஸ்ரவேலின் தேவனாக இருந்தபோதிலும், இஸ்ரவேல் தேசத்திலேயே தனது குமாரனை மேசியாவாகப் பிறக்கச் செய்தபோதிலும், பஞ்ச காலத்தின்போது, இஸ்ரவேலருக்குள் இருந்த அநேகம் விதவைகள் போஷிக்கப்படாமற்போனதற்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், ந...