அதிகாரமும், அஸ்திபாரமும்
எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது. (ரோம 13:1)
தன்னை உயர்த்திவைத்தவர்களையே, உதைத்துத் தள்ளும் மனிதர்களைக் கொண்ட இந்த உலகத்தில், தன்னால் உயர்த்தப்பட்டவர்கள் தனக்கு தீமைகளையே தொடர்ச்சியாகச் செய்துகொண்டிருந்தபோதிலும்கூட, அவர்கள் கீழே விழுந்துவிடாதபடி இன்னும் அவர்களைத் தாங்கி நிற்கும் விழுதுகளாகவும், அவர்களது அடிச்சுவர்களுக்கு அசையாத அஸ்திபாரங்களாக தங்களை மறைத்து வாழ்பவர்களும், அவர்கள் பாதங்கள் கல்லில் இடறிவிடாதபடிக்கு முழங்காலில் நின்று அவர்களுக்காக ஜெபிக்க தங்களை அர்ப்பணித்துக்கொள்பவர்களும் அநேகர் உண்டு. இத்தகையோரின் கண்ணீரே, உயர்ந்து நிற்கும் அத்தகைய மரங்களுக்கு தண்ணீராய் தினமும் ஊற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றது என்பதையும், இவர்களின் கண்ணீரால்தான் பதவியிலிருக்கும் அத்தகையோரின் மரம் எத்தகைய வெயிலிலும் பச்சைப் பசேலென பட்டுப்போகாமல் செழுமையாயிருக்கிறது என்பதையும் ஆவிக்குரியவர்களாயிருப்பினும் அறிந்தவர்கள் வெகு சிலரே.
தன்னை உயர்த்தும்படியாகவே தேவனால் இவ்வுலகத்தில் தெரிந்துகொள்ளப்பட்ட தூணைப் போன்ற ஆவிக்குரிய தலைவனையே தனது கண்களுக்கு முன்பாகச் துரத்திவிட்டு, தான் மட்டுமே பிறருக்கு முன் அரியணையிலும், அதிகாரத்திலும் உயர்ந்து நிற்கவேண்டும் என்று அனுதினமும் அடித்துக்கொண்டிருக்கும் மாம்சீகத்திற்கடுத்த உள்மனதின் ஒலியினையும், தூஷ்டனின் இஷ்டத்திற்கடுத்த வழியினையும் தங்கள் ஒவ்வொரு அடியிலும் பிறரறிய வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் மனிதர்கள் ஏராளம் உண்டு. அனைத்தையும் அவர்களிடமிருந்து பெற்றுவிட்டோம், இனி பெற்றுக்கொள்ளவேண்டியது என்று எதுவுமில்லை என்ற எண்ணத்தில், வெற்றுப் பாத்திரங்களைப்போல வெளியிலே வீசிவிடும் மனிதர்கள் உண்டு. எரியும்படியாக திரியாய் தன்னைத் திரித்தவர்களையே எதிரியாய் நினைத்து, போர்முகங்கான தனக்குச் சாதகமான வீரர்களைத் தன்னுடன் சேர்த்து, அவர்களுக்கு விரோதமாக எழுந்துவரும் மனிதர்களின் பக்கத்தில் தேவன் ஒருபோதும் நிற்பதில்லை.
தேவனாலே உருவாக்கப்பட்டிருந்தும், 'நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும், நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன்' என்றும் இருதயத்தில் சொன்னதினால், 'நீ அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய்' (ஏசா 14:13-15) என்ற வீழ்ச்சியை தேவன் வர்ணிக்கின்றாரே. ஒருவேளை நாற்காலி உயர்ந்ததாயிருக்கலாம், ஆனால், ஆவிக்குரிய நிலையோ நாறிப்போனதாய்தான் இருக்கும் என்ற அர்த்தமுடையதே இது. 'தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்' (லூக் 18:14) என்று இயேசு கிறிஸ்துவும் கூறினாரே.
ஆகையால் மனுஷர் அவருக்குப் பயப்படவேண்டும்; தங்கள் எண்ணத்தில் ஞானிகளாயிருக்கிற எவர்களையும் அவர் மதிக்கமாட்டார் (யோபு 37:24) என்ற யோபுவின் வரிகள் எத்தனையாய் நம்மில் கிரியை செய்யவேண்டும். கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் (நீதி 1:7) என்பதை சாலமோனும் தனது வரிகளால் மீண்டும் உறுதிப்படுத்தகின்றாரே. தங்கள் எண்ணத்தில் ஞானியாயிருக்கிற மனிதன், ஆவிக்குரிய வாழ்க்கையில் எளிமையை இழந்துபோவான். தனக்கே அனைத்து அறிவும் இருக்கிறது என்று இறுதி முடிவெடுப்பான். மற்றவர்களது ஆலோசனைகளை அசட்டைசெய்வதும், அதனை உள்ளத்தில் உள்வாங்கிக்கொள்ளாமல் அகன்று செல்வதும் அவனது அனுதின வழக்கமாகவே மாறிநிற்கும். இத்தகைய நடைமுறை இறுதியில் பரலோக ராஜ்யத்தையே இழந்து நிற்கும் நிலைக்குள்ளாக அவர்களைத் தள்ளிவிடும். ஏனெனில், 'ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது' (மத் 5:3) என்று இயேசு கிறிஸ்து சொல்லியிருக்கிறாரே. அதுமாத்திரமால்ல, அப்போஸ்தலனாகிய யாக்கோபுவும் தனது நிருபத்தில், 'அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்' (யாக் 4:6) என்பதை தனது நிருபத்தில் ஞாபகப்படுத்துகின்றாரே.
எதிரியாக சவுல் தன்னைத் தொடர்ந்துகொண்டிருந்தபோதிலும், தாவீது எழுந்திருந்துபோய், சவுலுடைய சால்வையின் தொங்கலை அவன் அறியாமல் மௌ;ள அறுத்துக்கொண்டபோது, தாவீதின் மனது அடித்துக்கொண்டிருந்தது (1சாமு 24:4,5) என்று வேதத்தில் வாசிக்கின்றோமே. ஆனால், இன்றோ, எடுத்துக்கொள்ளப்படுகின்ற நாளில் எலியாவின் சால்வை முழுவதுமாக எலிசாவுக்குக் கிடைத்தது போல (2 இராஜா. 2:13), அந்த நாளுக்காகக் காத்திராமல், இடையிலேயே தங்களது எஜமானின் இடையிலிருக்கும் சால்வையையும் எடுத்துக்கொண்டு ஓட நினைக்கும் மனிதர்கள் உண்டு; எனினும், அத்தகையோரின் தொடரோட்டம் தொடராது என்பதை நான் அறிந்துகொள்வது அவசியம். அரிதான காரியத்திலிருந்து நாம் அகன்றுபோய்விடக்கூடாது (2 இராஜா. 2:10).
சவுலை உயர்த்திவைக்க தேவன் தீர்க்கதரிசியாகிய சாமுவேலையே பயன்படுத்தினார். பென்யமீன் கோத்திரத்தாரில் சவுல் என்னும் பேருள்ள சவுந்தரியமான வாலிபனாகிய ஒரு குமாரன் இருந்தான்; இஸ்ரவேல் புத்திரரில் அவனைப்பார்க்கிலும் சவுந்தரியவான் இல்லை; எல்லா ஜனங்களும் அவன் தோளுக்குக் கீழாயிருக்கத்தக்க உயரமுள்ளவனாயிருந்தான் (1சாமு 9:2). காணாமல்போன தன் தகப்பனுடைய கழுதைகளைத் தேடும்படியாகப் சென்றுகொண்டிருந்த அவன், 'என் தகப்பன், கழுதைகளின்மேலுள்ள கவலையை விட்டு, நமக்ககாகக் கவலைப்படாதபடிக்குத் திரும்பிப்போவோம் வா' என்று தன் வேலைக்காரனை நோக்கி சொன்னபோது, வேலைக்காரன் சவுலை நோக்கி: இதோ, இந்தப் பட்டணத்திலே தேவனுடைய மனுஷன் ஒருவர் இருக்கிறார்; அவர் பெரியவர்; அவர் சொல்லுகிறதெல்லாம் தப்பாமல் நடக்கும்; அங்கே போவோம்; ஒருவேளை அவர் நாம் போகவேண்டிய நம்முடைய வழியை நமக்குத் தெரிவிப்பார் என்றான் (1சாமு 9:5,6). கர்த்தர் தன் மீது வைத்திருக்கும் சித்தத்தைக் குறித்த எந்த சிந்தையும் இல்லாதவனாக, தன்னைக் கொண்டு தேசத்தில் கர்த்தர் செய்யவிருக்கும் எதிர்காலத் திட்டத்தை முற்றிலும் அறியாதவனாக, கழுதையைத் தேடும் பணிக்காக தன்னோடு கூட வந்துகொண்டிருக்கும் வேலைக்காரனுக்குத் தேவமனுஷன் எங்கே இருக்கிறான் என்று தெரிந்திருந்தபோதிலும் தனக்கோ தேவ மனிதனைப் பற்றிய தெளிவும், அவர் எங்கே இருக்கிறார்; என்ற அறிவும் அற்றவனாக, கழுதையைத் தேடவேண்டும் என்று தன்னிடத்தில் பொறுப்பாக ஒப்புவிக்கப்பட்ட வேலையையே பாதியில் விட்டுவிட்டு வேலைக்காரனோடு வீட்டிற்குத் திரும்ப நினைத்தவன் சவுல்.
அரசனாக சவுலை அபிஷேகம் பண்ணும்படியாக தீர்க்கதரிசியாகிய சாமுவேல் ஒருபுறம் கர்த்தரால் ஆயத்தப்படுத்தப்பட்டுக் காத்திருக்க, போஜனசாலையிலே, தலைமையான இடத்திலே, சாப்பிடும்படியாக முன்னந்தொடையும் மற்றும் அதனோடிருந்ததும் சமைத்து சவுலுக்குப் பரிமாறப்படுவதற்காக ஆயத்தமமாக வைக்கபட்டிருக்க (1 சாமு. 9:22-24) சவுலோ, 'கழுதைக்காகவே கர்த்தரிடத்தில் விசாரிக்கச் சென்றான்;.' கால்சேக்கல் வெள்ளியோடுகூட மாத்திரமே கர்த்தருடைய மனிதனை சந்திக்கும்படியாகச் கால்நடையாகச் சென்ற சவுலை தன்னுடைய ஜனங்கள் மேல் அரசனாக ஆக்குவதே தேவனுடைய திட்டம். சாமுவேல் சவுலைக் கண்டபோது, கர்த்தர் அவனிடத்தில்: இதோ, நான் உனக்குச் சொல்லியிருந்த மனுஷன் இவனே; இவன்தான் என் ஜனத்தை ஆளுவான் என்றார் (1சாமு 9:17). என்றபோதிலும், கழுதையைத் தேடிக்கொண்டிருந்த சவுலுக்கு அப்போது அந்த அறிவு எள்ளளவும் இருந்ததில்லை. எனவே, 'இஸ்ரவேலின் அபேட்சையும் யாரை நாடுகிறது? உன்னையும் உன் வீட்டார் அனைவரையும் அல்லவா?' என்று சாமுவேல் தீர்க்கதரிசி சொன்னபோது, சவுல் பிரதியுத்தரமாக, 'நான் இஸ்ரவேல் கோத்திரங்களிலே சிறிதான பென்யமீன் கோத்திரத்தான் அல்லவா? பென்யமீன் கோத்திரத்துக் குடும்பங்களிலெல்லாம் என் குடும்பம் அற்பமானது அல்லவா? நீர் இப்படிப்பட்ட வார்த்தையை என்னிடத்தில் சொல்வானேன்' (1சாமு 9:20,21) என்றே சொல்கிறான்.
மேலும் ஒரு காரியத்தை நாம் இங்கே அறிந்துகொள்ளவேண்டியது அவசியம். சவுல் சாமுவேலோடே சாப்பிட்டு முடிந்த பின்பு, நான் உன்னை அனுப்பிவிடும்படிக்கு ஆயத்தப்படு என்றான்; சவுல் ஆயத்தப்பட்டபோது, அவனும் சாமுவேலும் இருவருமாக வெளியே புறப்பட்டார்கள். அவர்கள் பட்டணத்தின் கடைசிமட்டும் இறங்கி வந்தபோது, சாமுவேல் சவுலைப் பார்த்து: வேலைக்காரனை நமக்கு முன்னே நடந்துபோகச் சொல் என்றான்; அப்படியே அவன் நடந்து போனான்; இப்பொழுது நான் தேவனுடைய வார்த்தையை உனக்குத் தெரிவிக்கும்படிக்கு, நீ சற்றே தரித்து நில் என்றான் (1சாமு 9:26,27). நம்மையும் இந்த வேலைக்காரனைப் போல சில நேரங்களில் திசைகாட்டிகளாக தேவன் பயன்படுத்தக்கூடும். வீட்டிற்கு திரும்ப இருந்த சவுலை, தேவ மனிதனாகிய சாமுவேலினிடத்திற்கு அழைத்துக்கொண்டு வந்தது வேலைக்காரனே; என்றபோதிலும், கர்த்தருடைய வார்த்தையை சாமுவேல் சவுலுக்கு அறிவிக்கும் வேளையிலோ, சாமுவேல் சவுலைப் பார்த்து: 'வேலைக்காரனை நமக்கு முன்னே நடந்துபோகச் சொல்' என்றான்; அப்படியே அவன் நடந்து போனான்; இப்பொழுது நான் தேவனுடைய வார்த்தையை உனக்குத் தெரிவிக்கும்படிக்கு, நீ சற்றே தரித்து நில் என்றான் (1சாமு 9:27).
இத்தகைய நிலைக்கும் சில வேளைகளில் நம்மை நாமே அர்ப்பணிக்கவேண்டியதும் அவசியம். தீர்;க்கதரிசியே, உம்மிடத்தில் சவுலை அழைத்துவந்ததே நான்தான்; இப்போதோ, என்னையே தள்ளிவிடுகிறீரே என்று சவுலின் மேலோ அல்லது சாமுவேலின் மேலோ அந்த வேலைக்காரன் வருத்தப்படவில்லை. கர்த்தருடைய பணி பரிபூரமாய் நிறைவேறும்படியாக தன்னை ஒப்புக்கொடுத்தான். ஆபிரகாமின் வாழ்க்கையிலும் இது நடைபெற்றது. ஆபிரகாம் தன் வேலைக்காரரை நோக்கி: நீங்கள் கழுதையை நிறுத்தி இங்கே காத்திருங்கள், நானும் பிள்ளையாண்டானும் அவ்விடமட்டும்போய், தொழுதுகொண்டு, உங்களிடத்துக்குத் திரும்பி வருவோம் (ஆதி 22:5) என்று சொன்னபோது, வேலைக்காரர்கள் எஜமானாகிய ஆபிரகாமை நோக்கி, 'இவ்வளவு தூரம் எங்களைக் கூட்டிக்கொண்டு வந்துவிட்டு, இறுதியில் பலிசெலுத்தும் வேளையில் விட்டுவிட்டுப் போகிறீரே' என்று வருத்தப்படவில்லை. வேலக்காரர்களாக நாம் வாழ்ந்துகொண்டிருந்தாலும், நமது எல்லைகளைப் புரிந்துகொள்வது அவசியம்; இல்லையேல், அடுத்தவரது எல்லைக்குள் அநாவசியமாக அராஜகத்துடன் நுழைந்துவிடுவோம். தேவனுக்கும் பிறருக்கும் இடையிலான எல்லையில் பிழையாக நின்றுவிடுவோம்.
எத்தனையாய் சவுல் உயர்த்தப்பட்டிருந்தும், உயர்ந்தபின், தனது உயர்வுக்காக கர்த்தரால் உபயோகப்படுத்தப்பட்ட சாமுவேலின் வருகைக்காகக் காத்திரமல், ஜனங்கள் பக்கம் சாய்ந்து (1சாமு.13:8), தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பலி செலுத்தியபோது, சாமுவேல் சவுலைப் பார்த்து, 'புத்தியீனமாய்ச் செய்தீர்; கட்டளையைக் கைக்கொள்ளாமற்போனீர்; இப்போதோ உம்முடைய ராஜ்யபாரம் நிலைநிற்காது' (1சாமு 13:13,14) என்று சொன்ன நிலை நமக்கும் உண்டாகிவிடாதபடிக்கு கவனமாயிருப்போம், எச்சரிக்கையாயிருப்போம்.
Comments
Post a Comment