ஆயத்தம்
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள். டிசம்பர் மாதம் என்றதும், நம்மையறியாமலேயே கிறிஸ்மஸ் பண்டிகைக்கான ஆயத்தப் பணிகள் நம்மைத் தொற்றிக்கொள்கின்றது. பண்டிகையினை எப்படி கொண்டாடுவது என்ற பரபரப்பு, பண்டிகை நாள் நெருங்க நெருங்க உள்ளத்தில் எழும் எதிர்பார்ப்பு என கொண்டாடி முடிக்கும் வரை நின்நாடியாகவே சுழல்கின்றது நமது வாழ்க்கை. அத்துடன், பண்டிகைத் தீயினை ஒருவருக்கொருவர் பற்றவைக்க அங்கும் இங்கும் பறக்கவிடும் வாழ்த்து அட்டைகளும் நமது வாழ்க்கையோடு ஒட்டிக்கொள்கின்றன. வீட்டை அலங்கரிக்கும் கிறிஸ்மஸ் மரம், மின்னும் விளக்குகள், நட்சத்திரங்கள் மற்றும் அலங்காரப் பொருட்கள் என வணிகத்துறையும் கிறிஸ்மஸ் அன்று ஒருபுறம் வியாபாரத்தைப் பெருக்கி வாழ்ந்துகொண்டுதானிருக்கின்றது. ஒருவரை ஒருவர் வாழ்த்துவதும், உறவுகள் மற்றும் நண்பர்களுடன் உணவுகளைப் பரிமாறிக்கொள்வதும் நமது வாழ்க்கையின் பெரும் பங்காகிவிடுகின்றது. கீத பவனிகள், கீத ஆராதனைகள், சிறப்பு நிகழ்ச்சிகள் என பாடல்களுக்கும், ஆடல்களுக்கும், நாடகங்களுக்கும் நாம் ஒரு குறைவும் வைக்காமல் வாழ நினைக்கும் மாதம் இது. இவைகள் அத்தனையும் தவறல்லவெனிலும், இத்தனைக்கும் ஆதாரமான ஓர் விஷயத்தை நாம் தவறவிட்டுவிட்டால், அன்றைய தின நடவடிக்கைகள் அனைத்தும் ஒரு நாடக வடிவிலேயே முடிந்துவிடும் என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும்.
நாம் மகிழ்ந்து கொண்டாடும் இத்தினத்தின் தொடக்கம் மரியாளிடத்திலேயே ஆரம்பமானது என்றால் அது மறுப்பதற்கில்லை. அந்த ஆரம்பத்திற்கு அவள் தகுதியுள்ளவளாகக் காணப்பட்டாள். அந்நாட்களில், மேசியா தங்கள் கர்ப்பத்தில் பிறக்கவேண்டும் என்று பல பெண்கள் திருமணத்தைத் தவிர்த்து கன்னிகைகளாகவே வாழ்ந்துகொண்டிருந்தார்கள். மேசியா தங்கள் வயிற்றில் பிறக்கவேண்டும் என்று எப்படியெல்லாம் தங்களை அவர்கள் ஆயத்தம்பண்ணி வைத்திருந்திருப்பார்களோ நான் அறியேன். என்றாலும், மேசியா வெளிப்புற மேக்-அப்பைக் கண்டு மயங்கிவிடமாட்டார் என்பதை மட்டும் நான் திட்டமாக அறிவேன். கன்னியாக இருந்துவிட்டால் மாத்திரம் போதும் கர்த்தர் பிறந்துவிடுவார் என்ற நினைவோடு வாழ்ந்தவர்கள் அந்த கன்னிகைகள். எனினும், மரியாள் அப்படிப்பட்ட பெண்களுள் ஒருவள் அல்ல; மரியாளோ, தன்னிடத்தில் மேசியாவாகிய இயேசு பிறக்கப்போகிறார் என்பதை முன்னறிந்து வாழ்ந்தவளும் அல்ல; மேசியா தன்னுடைய வயிற்றில் பிறக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்தவளும் அல்ல; ஏனெனில், மரியாள் யோசேப்பை கணவனாகத் தெரிந்துகொண்டு திருமணம் செய்துகொள்ள ஆயத்தமாயிருந்தாளே. யோசேப்பு என்ற நீதிமானாகிய புருஷனுக்கு நியமிக்கப்பட்டு திருமணத்திற்குக் காத்திருந்த ஓர் கன்னிகை அவள். திருமணம் முடிந்துவிட்டால், கன்னிகை என்கிற பருவம் அவளுடைய வாழ்க்கையிலிருந்து கடந்துபோயிருக்கும். அப்படி கடந்துபோயிருந்தால், அவளுடைய கருவில் கர்த்தராகிய மேசியா பிறப்பார் என்ற வரலாற்று நிகழ்வும் விலகிப்போயிருக்கும். மேசியா தன்னிடத்தில் பிறக்கவேண்டும் என்று மரியாள் காத்திருக்காவிட்டாலும், கன்னிமையின் எல்லையில் நின்றுகொண்டிருந்த மரியாளை கர்த்தர் தனக்காக எட்டிப் பிடித்துக்கொண்டார். கன்னிகைகளாக தங்களை ஒப்புக்கொடுத்து, வாழ்க்கையையே அதற்கென அர்ப்பணித்து, திருமணத்தைத் தவிர்த்து, தனிமையாக பாதுகாப்புடன் வாழ்ந்துகொண்டிருந்தவர்களிடத்தில் கர்த்தர் பிறக்கவில்லை; மாறாக, கிருபை பெற்ற மரியாளிடத்திலேயே பிறந்தார். ஆயத்தங்களைக் காட்டிலும் ஆத்துமா முதன்மையானது என்பது கிறிஸ்துவின் பிறப்பிலேயே நாம் உணர்ந்துகொள்ளவேண்டியது. கர்த்தருக்குப் பிரியமானவர்களாகவும், அவருடைய கிருபைக்குப் பாத்திரமானவர்களாகவும் நாம் வாழுவோமென்றால், நாம் எதிர்பாராத பெரிய காரியங்களை நம்முடைய வாழ்க்கையில் செய்ய கர்த்தர் விருப்பமுள்ளவர். ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார் (1கொரி 1:27) என்ற பவுலின் வார்த்தை மரியாளின் வாழ்க்கையில் பொருத்தமானதுதானே.
தூதனிடம் வாழ்த்துதல் செய்தியினைப் பெற்ற மரியாள், 'என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது. என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது' (லூக் 1:46,47) என்கிறாள். மரியாளின் வார்த்தைகள் வெளிக்கொணரும் ரகசியம் என்ன? அவளது ஆவி, ஆத்துமா, சரீரம் இம்மூன்றும் ஆண்டவராகிய இயேசுவை இப்புவியினில் பிறப்பிப்பதற்கு ஆயத்தமாயிருந்தது என்பதுதானே. இதனையே பவுலும், 'சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக' (1தெச 5:23) என்று அறிவுரையாக எழுதுகின்றார். இன்றைய நாட்களில் வாழுகின்ற நமது மனதில் இது பதியவேண்டிய ஓர் முக்கியமான படிப்பினை. கிறிஸ்மஸ் பண்டிகையினை மனதில் கொண்டவர்களாக பல நாட்களுக்கு முன்னதாகவே நாம் பல்வேறு ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கிவிடுகின்றோம். புத்தாடைகள், பலகாரங்கள், வீட்டு அலங்காரங்கள் என பல்வேறு ஆயத்தங்களைச் செய்துகொண்டிருக்கும் மக்களில் பலர் ஆண்டவரின் பிறப்பையோ தவறவிட்டுவிடுகின்றனர். மார்த்தாளைப் போல பற்பல வேலைகளைச் செய்து (லூக். 10:40) ஆண்டவரின் பாதத்தைத் தவறவிட்டுவிடுகிறார்கள். ஆயத்தமாயிருக்கும் இல்லங்களில் உள்ள மனிதர்கள் பலரின் உள்ளங்களில் ஆண்டவர் பிறக்காமலிருப்பது, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறையைப் போன்ற வெற்று வேட்டாகவே அவர்களது கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தை வெடிக்கச் செய்கிறது என்பதில் மாற்றுக் கருத்து ஏதுமில்லை. ஆயத்தத்தைக் காட்டிலும், ஆத்துமாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்ற உன்னத சத்தியம் இந்நாட்களில் உயர்த்திக் காட்டவேண்டிய ஒன்று. மரியாளைக் குறித்த மேலும் சில காரியங்களையும் நாம் அறிந்துகொள்வது நல்லது.
முதலாவதாக, காபிரியேல் தூதன், மரியாளை சந்தித்தபோது, 'கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள்' (லூக் 1:28) என்று சொன்னான். மரியாளைக் குறித்துச் சொல்லப்படும் ஓர் அடைமொழி 'கிருபை பெற்றவள்' (லூக். 1:28,30) என்பதே. அத்துடன், கர்த்தர் உன்னுடனே இருக்கிறார் என்பதையும் சுட்டிக்கொடுக்கிறான். ஆவி, ஆத்துமா, சரீரம் ஆயத்தமாயிருந்ததோடு மாத்திரமல்லாமல், தேவனுடைய கிருபையும் மரியாளை ஆண்டுகொண்டிருந்ததினால், இயேசுவின் பிறப்பிற்கு அவள் பயன்படுத்தப்பட்டாள். அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார் (லூக் 1:48) என்றே தன்னை நினைவுகூறுகிறாள் மரியாள். தேவன் தாழ்மையுள்ளவர்களுக்கு கிருபையளிக்கிறவர் (நீதி. 3:34, யாக். 4:6, 1பேதுரு5:5), இப்படிப்பட்ட கிருபையினை மரியாள் பெற்றிருந்தாள். எனவே, கிருபையும் சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும் (சங். 85:10) என்ற வசனத்தின்படி, 'நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் (யோவான் 14:6) என்ற இயேசு கிருபையைக் கொண்டிருந்த மரியாளைச் சந்தித்தார் என்பது எத்தனை தெளிவான செய்தி.
இரண்டாவதாக, இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது (லூக் 1:31-33) என்றும், இதோ, உனக்கு இனத்தாளாயிருக்கிற எலிசபெத்தும் தன் முதிர்வயதிலே ஒரு புத்திரனைக் கர்ப்பந்தரித்திருக்கிறாள்; மலடியென்னப்பட்ட அவளுக்கு இது ஆறாம் மாதம்
(லூக் 1:36) என்றும் தூதன் சொன்னபோது, 'தனக்கும் - யோசேப்புக்கும் பிறக்க இருக்கிற குழந்தையைக் குறித்தே இப்படிப்பட்டதோர் தீர்க்கதரிசனம் உரைக்கப்படுகின்றது' என்று மரியாள் நினைக்கவில்லை; மாறாக, அது புருஷனை அறிவதற்கு முன்னமே நடைபெறப்போகிற ஒன்று என்பதை மனதில் கொண்டவளாக, தேவதூதனை நோக்கி, 'இது எப்படியாகும்? புருஷனை அறியேனே' என்றாள் (லூக். 1:34). எலிசெபெத்து திருமணமானவள், அதைப்போலவே தனக்கும் திருமணத்திற்குப் பின் பிறக்கவிருக்கிற குழந்தையைக் குறித்தே சொல்லப்படுகின்றது என்று மரியாள் யோசிக்கவில்லை.
திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த ஒரு பெண்ணிடம் தேவதூதன் ஒருவன் தோன்றி இன்று இப்படிச் வாழ்த்தியிருப்பானென்றால், சரியான ஓர் கணவன், நீதிமானான ஒரு புருஷன் தனக்குக் கிடைத்ததினால்தான் இப்படிப்பட்ட வாழ்த்து தேவனிடத்திலிருந்து என்னைத் தேடி வந்திருக்கிறது என்று சாட்சி சொல்லியிருப்பாள். தேவனுக்கடுத்தவைகளை அவர்கள் மனம் தேடாதுபோயிருக்கும். தேவனுக்கடுத்தவைகளைக் குறித்து தேவன் பேசிக்கொண்டிருக்கும்போது கூட, தனக்கடுத்தவைகளைக் குறித்துதான் பேசுகிறார் என்ற சிந்தையிலேயே இன்றய உலகம் வாழுகிறது. மனதில் யாரையாவது நினைத்துக்கொண்டு ஆலயத்தில், ஆலயத்தில் செய்யப்படும் பிரசங்கங்களைக் கூட அதற்காக மாற்றிவிடும் யுகத்தில்தான் இன்றைய யுவதியர்கள் வாழுகின்றனர்.
மூன்றாவதாக, அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான் (மத் 1:19); ஆனால், தான் கர்ப்பவதியானபோதிலும், மேசியாவே வயிற்றில் வந்துவிட்டபோதிலும், மரியாள் மேட்டிமைகொள்ளவில்லை, இனி திருமணம் தேவையில்லை என்று திருமணத்தையும் தள்ளிவிடவில்லை. நிச்சயத்திற்கும், திருமணத்திற்கும் இடையில் தேவன் இடைமறித்து திருமணத்தைத் தடுப்பவரல்ல, தனது குடும்ப வாழ்க்கையில் அவர் இணைந்துகொள்பவரே என்பதை அறிந்தவள் மரியாள். பல வீடுகளில், 'இயேசு இந்த வீட்டின் தலைவர்' என்று எழுதப்பட்டிருக்கும். மரியாளின் வீட்டிலோ இயேசு பிள்ளையாகவே நுழைந்துவிட்டார்; எத்தனை பேரின்பமான நிகழ்வு.
இந்த ஆண்டு கிறிஸ்மஸ் பண்டிகையினை கொண்டாடும் நாம், நமது குடும்பத்தோடு இணைந்துகொள்ளும் இயேசுவை அடையாளம் கண்டுகொள்ளுவோம்; நம்முடைய அகம் மகிழட்டும்.
Comments
Post a Comment