பழுதுகள்
தேவன் நல்லவர் அவர் நன்மையானவைகளையே நமக்குச் செய்கிறவர். வாழ்க்கையில் நாம் காணும் தீமையான காரியங்கள் கூட தேவனால் நன்மையாக மாற்றப்படக்கூடியவைகளே. தேவனிடத்திலிருந்து வருகின்ற காரியங்கள் எவை, பிசாசினிடத்திலிருந்து வருகின்ற காரியங்கள் எவை என வேறுபிரித்துப் பார்க்கத் தெரிவதில்லை. கிறிஸ்துவை அறிந்த அநக மக்களாலும் கூட இதனை அடையாளம் கண்டுகொள்ள முடிவதில்லை. நன்மைகளைப் பெறும்போது நன்றி சொல்லும் மக்கள் தீமைகள் உண்டாகும்போது தேவனை தூஷிக்கத் தொடங்கிவிடுகின்றனர். அவைகள் தேவனால் நன்மையாக மாற்றப்படப்போகிறவைகள் என்ற அறிவற்றவர்களாக ஊளையிடுகின்றர், சண்டையிடுகின்றனர், சத்தமிடுகின்றனர், தேவனுக்கு எதிரான வார்த்தைகளை, ஆவிக்குரிய வாழ்க்கைக்கு முரண்பாடான வார்த்தைகளைப் பேசிவிடுகின்றனர். இப்படிப்பட்டோரை, சத்துரு வேத வசனத்திற்கு விரோதமாகவும், தேவனுக்கு விரோதமாகவும் நிறுத்திவிடுகின்றான். இன்று எனக்கு நடக்கும் இத்தீங்கினால் வருங்காலத்தில் விளையப்போவது என்ன? என்ற தீர்க்கதரிசனப் பார்வையினை பலரது கண்களிலிருந்து பிசாசு பிடுங்கிவிட்டு, ஆவிக்குரிய குருடர்களாக அவர்களை அலையவிடுகின்றான். 'நீ பார்வையடையும்டபடிக்கு உன் கண்களுக்குக் கலிக்கம் போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன்' (வெளி. 3:18) என்ற லவோதிக்கேயா சபைக்குச் சொல்லப்பட்ட ஆலொசனையே இத்தகையோருக்கும் சொல்லப்படவேண்டும். கர்த்தருடையதையும், சத்துருவுடையதையும் அடையாளம் கண்டுகொண்டு கர்த்தரையே எப்பொழுதும் துதிக்கும் பரலோக பிரஜைகளாக நாம் காணப்படவேண்டும். வாழ்க்கையில் நிகழும் விருப்பமற்ற செயல்களால் வெறுப்புறும் மனிதர்களின் மனதில் சத்துரு களைகளை விதைப்பது எளிது. தேவனையே சந்தேகப்பட்டுவிடும்போது, அவருக்குத் தூரமாக சத்துரு நம்மைத் துரத்திவிடுவது எளிது. 'என்ன வந்தாலும், எது நடந்தாலும் அப்பாவை ஸ்தோத்தரிப்பேன்' என்ற பாடல் வாழ்க்கையில் பாட மாத்திரமல்ல பாடமாகவேண்டியதல்லவா. 'நாம் தேவனுடைய பிள்ளைகள்' என்பதில் சந்தேகமிருக்கின்றவர்கள் இதிலே சறுக்கிவிழுவார்கள். அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம் (ரோம 8:28).
தீமைகளும், பொல்லாங்குகளும் தேவனிடமிருந்து வருவதில்லை; அவைகளை அனுப்புகிறவன் சத்துருவே. தேவனால் அனுமதிக்கப்பட்டிருக்கலாம்; ஆனால், அனுமதிக்கிற ஆண்டவரை அனுப்புகிறவர் என்று அர்த்தம்கொண்டு அவருக்கு எதிர்த்து நிற்பது நமது வாழ்க்கையையே தகர்த்துவிடும். யோபுவையே வேவு பார்த்த பிசாசு, கெர்ஜிக்கிற சிங்கம் போல சுற்றிவரும் பிசாசு, எந்நேரமும் எதற்கும் அவரிடத்தில் அனுமதி வாங்கிக்கொண்டுவரலாம். அவைகளைச் சந்திக்கும்போது நமது நோக்கமோ, தேவனை நேசிப்பதாகவும் பிசாசை ஜெயிப்பதாகவுமே இருக்கவேண்டும். மனிதனையும் தேவனையும் பிரிப்பதும், மனிதனையும் தேவனையும் எதிரிகளாக்குவதும், மனிதனையும் தேவனையும் எதிர்த்துருவங்களாக்கி மோதவிடுவதும் சத்துருவின் தந்திரம்; எனவே, அதற்கு நாம் விலைபோகவேண்டாம். நன்மைகள் நடக்கும்போது நன்றி சொல்லும் நாவினைக் கொண்டே தீமைகள் நடக்கும்போதும் நன்றி சொல்லுவோம்; எதிரியை வென்றுவிட இதுதான் வழி என்று வேதம் நமக்குக் கற்றுத்தருகின்றதே. என் வாழ்க்கையில் ஏன் இது? தேவனுக்குப் பிரியமான எனக்கு ஏன் இது? என்று கேள்விகளுக்கு மேல் கேள்விகளை அடுக்கச் செய்வது சத்துருவின் வேலை, அக்கேள்விகளே வலையாகவும் மாறி சிந்தையைக் கெடுத்துவிடும். அடுத்திருக்கும் மனிதரால் கெடுத்துப் பேசப்பட்டாலும், உடுத்திருக்கும் வஸ்திரத்தை வந்து உரிந்துகொண்டு சென்றாலும் எஞ்சி நிற்கும் நாமும் நம்முடையதும் தேவனுடையவைகள்.
தண்ணீர் சுத்திகரிக்கும் இயந்திரம், அதற்குள் செலுத்தப்படும் தூசி சலந்த, கிருமிகளுடனான, புழுக்களுடைய மற்றும் தேவையற்ற பிற பொருட்களுடனான தண்ணீரை எவ்விதத்திலும் சுத்திகரிக்காமல் அத்தனையையும் அப்படியே வெளியேமென்றால், அந்த இயந்திரத்தை நாம் என்ன சொல்லுவோம்? அது பழுதாகிவிட்டது என்று புறம்பே தள்ளுவோம், பயன்பாட்டிலிருந்து நிறுத்திவைப்போம், பழுதுநீக்கிய பின்னரே பயன்படுத்த முயலுவோம். அது பழுதாக இருந்தாலும் பரவாயில்லை என்று அதிலிருந்து வெளியேறும் சுத்திகரிக்கப்படாத நீரை அருந்தி நமது சுகத்தைக் கெடுத்துக்கொள்ளமாட்டோமே; அதுபோலவே, நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையும், பலரது ஆவிக்குரிய இயந்திரம் உள்வாங்கும் தண்ணீரை அப்படியேதான் வெளியே தள்ளுகின்றது; சில உள்ளே வரும் தண்ணீரையும் இன்னும் அதிகமாகக் கெடுத்து வெளியே தள்ளுகின்றன. அவர்கள் தங்கள் அவிக்குரிய இயந்தித்தை சரிவர பராமரிக்காமல் பழுதாக்கிவிட்டதே இதற்குக் காரணம். உள்ளே இருக்கும், பல்வேறு வேத வசனங்கள் என்னும் பில்டர்கள் வேலை செய்வதே இல்லை; அல்லது வேலை செய்யவிடுவதில்லை. உள்வாங்கும் தீமைகளை அப்படியே வெளியே தீமையாகவே தள்ளிக்கொண்டிருக்கின்றனர். கோபத்தை கோபமாகவே தள்ளிக்கொண்டிருக்கின்றனர். இப்படிப்பட்ட பழுதான இயந்திரங்களைப் போன்ற மனிதர்கள் பிறருக்கும் கேடான, தீமையானவைகளையே கொடுத்துக்கொண்டிருக்கின்றனர். இவர்களிடமிருந்து பலர் கெட்டுப்போன தண்ணீரையே குடித்துக்கொண்டிருக்கின்றனர்.
எவ்வித தீமைகளைச் சந்தித்தாலும், எத்தகையோர் தீங்குகளை விளைவித்தாலும் நன்மையானவைகளையே செய்யும் மனிதர்களாக நாம் மாறவேண்டும்; இதுவே தன்னுடைய பிள்ளைகளைக் குறித்து கர்த்தர் கொண்டிருக்கும் விருப்பம். நம்முடைய வாழ்க்கையில் தீமைகளைக் கொண்டுவரும் மனிதர்களோடு மோதாமல், தீமையை நன்மையினால் வெல்லும் மனிதர்களாக மாற்றப்பட்டவர்கள் நாம் (ரோமர் 12:21). நமக்காக உழப்பட்ட இயேசுவின் சரீரத்திலிருந்து வழியும் இரத்தத்தினால் அனுதினமும் நமது பழுதுகளை நீக்கிக்கொள்ளுவோம். சிலுவையில் கோரமாய் இயேசுவை அறைந்து தொங்கவிட்டிருந்தபோதிலும், 'பிதாவே இவர்களுக்கு மன்னியும்' என்றாரே. இயேசுவின் வாழ்க்கை சிலுவை பரியந்தம் தாழ்த்தப்பட்டது மாத்திரமல்ல, பழுதாகாததும் கூட. உலகத்தின் தீமைகள் அவரை பழுதடையச் செய்யவில்லை, உலக மனிதர்களின் விரோதமான பேச்சுக்கள் அவரை மாற்றிவிடவில்லை, எதிரிகளின் தந்திரமிக்க செயல்கள் அவரையும் தந்திரம் செய்யத் தூண்டவில்லை; அவர் அவராகவே இருந்தார்.
நன்மைகளுக்காக வரும் தீமைகளை உங்களால் அடையாளம் கண்;டுகொள்ள முடிகிறதா? ஆசீர்வாதத்திற்கு முன் வரும் ஆதங்கங்களை உங்களால் அடையாளம் கண்டுகொள்ள முடிகிறதா? விளைச்சலுக்கு முன்னாக உண்டாகும் வேதனையை உங்களால் அடையாளம் கண்டுகொள்ள முடிகிறதா? தேவனண்டை ஈர்க்கும் வேதனையான செயல்களை உங்களால் அடையாளம் கண்டுகொள்ள முடிகிறதா? ஆவிக்குரிய வளர்ச்சியைத் தூண்டும் சத்துருவின் கிளர்ச்சிகளை உங்களால் அடையாளம் கண்டுகொள்ள முடிகிறதா? நாம் தேவனுடைய பிள்ளைகள், பிசாசினால் வெல்லப்படக்கூடாதவர்கள். சுமையாகும் தீமைகளை சுகமாக எண்ணுவோம்; வேதனைப்படாத நம்மைக் கண்டு வேதனைப்படட்டும் சத்துரு. தீமையின் வேதனையை நம் சரீரம் உணரவேண்டாம், தேவனையே துதிக்கும் உணர்வு வேண்டும். பவுலும், சீலாவும் சிறையிலிருந்தாலும், சிந்தையோ இறைவனோடு இணைந்திருந்ததே; அழுதுகொண்டல்ல, ஆனந்தத்துடன், ஆராதித்துக்கொண்டல்லவா இருந்தார்கள். யோசேப்பு சிறையில் அடைக்கப்பட்டபோதும் அவனுக்குள் இவ்வுணர்வே காணப்பட்டது. நாம் தேவப் பிள்ளைகளானால், நமக்குள்ளும் இப்படிப்பட்ட எண்ணமே தலைதூக்கட்டும்; அச்சம் என்றாலும் அஞ்சவேண்டாம் ஆண்டவர் நம் பட்சம்; பஞ்சம் என்றாலும் பயப்படவேண்டும் தஞ்சமாய் அவர் நம் பக்கம். துளியும் நம்மை மறவாதவரின் விழி இன்னும் நம்மேலேயே வைக்கப்பட்டிருக்க கிலி எதற்கு?
Comments
Post a Comment