கைக்கூலி
எவனை விழுங்கலாமென்று சுற்றித் திரியும் சத்துரு வெளியே தீட்டும் திட்டத்திற்கு, தேவ திட்டத்திற்குள் இருக்கும் நாம் பயன்படுத்தப்பட்டுவிடக்கூடாது. உள்ளே இருக்கும் நாமே சத்துருவின் திட்டத்திற்கு உடன்போய்விட்டால், வேலியை உடைக்காமல், தானும் உள்ளே வராமல், உள்ளே இருப்போரைக் கொண்டே தனது சதித்திட்டத்தைச் சாத்தியப்படுத்திவிடுவான் சத்துரு. தன்னிடமும், தேவனிடமும் தொடர்பு வைத்துக்கொள்ளும் மனிதர்கள் சாத்தானுக்குத் தேவை. தன்னுடையவைகளையும், தேவனுடையவைகளையும் செய்யும் மனிதர்கள் சாத்தானுக்குத் தேவை. தன்னிடமும், தேவனிடமும் போக்கு வரவு வைத்துக்கொள்ளும் மனிதர்களும், தனக்கும் தேவனுக்கும் கீழ்ப்படியும் மனிதர்களும் சாத்தானுக்குத் தேவை. அத்தகையோரே சத்துருவின் செயல்திட்டத்திற்கு முழு செயல்வடிவம் கொடுக்க அவனால் பயன்படுத்தப்படுபவர்கள். எலியா சகல ஜனத்தண்டைக்கும் வந்து: நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்; கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள் என்றான் (1இரா 18:21). இதனையே யாக்கோபும் தனது நிருபத்தில், இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான் (யாக் 1:8) என்று எழுதுகின்றார். இருமனமுள்ளவனுக்குள் நிலைவரமான ஆவி இருக்காதே.
இன்றும் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் மக்களை சாத்தான் இந்த நிலையிலேயே வைத்துக்கொள்ள ஆசைப்படுகின்றான். தேவாலயத்திற்குப் போனாலும், கூட்டங்களில் பங்குபெற்றாலும், கர்த்தருக்காக காணிக்கை கொடுத்தாலும், சத்துருவின் காரியங்களோடும் பல கிறிஸ்தவர்களுக்குத் தொடர்பு உண்டு. நாள் பார்க்குதல், ஜாதகம் பார்க்குதல், வேதத்திற்கு விவாகரத்துக்களை ஏற்றுக்கொண்டு மறுமணத்தை அங்கீகரித்தல், இரண்டு மனைவிகள், லஞ்சம் வாங்குதல் போன்ற செயல்களைச் செய்யும் அவர்கள் இருமனமுள்ளவர்கள்தானே. இத்தகையோரால்; தேவ திட்டத்திற்கு இழுக்கும், பாதிப்பும், அவப்பெயரும் உண்டாவது உறுதி. இதையே பவுல், இப்படியிருக்க, மற்றவனுக்குப் போதிக்கிற நீ உனக்குத்தானே போதியாமலிருக்கலாமா? களவுசெய்யக்கூடாதென்று பிரசங்கிக்கிற நீ களவுசெய்யலாமா? விபசாரம் செய்யக்கூடாதென்று சொல்லுகிற நீ விபசாரம் செய்யலாமா? விக்கிரகங்களை அருவருக்கிற நீ கோவில்களைக் கொள்ளையிடலாமா? நியாயப்பிரமாணத்தைக்குறித்து மேன்மைபாராட்டுகிற நீ நியாயப்பிரமாணத்தை மீறிநடந்து, தேவனைக்கனவீனம்பண்ணலாமா? எழுதியிருக்கிறபடி, தேவனுடைய நாமம் புறஜாதிகளுக்குள்ளே உங்கள் மூலமாய்த் தூஷிக்கப்படுகிறதே (ரோம 2:21-24) என்று எழுதுகின்றார். குடித்துக்கொண்டு ஆலயத்திற்கும் சென்றுகொண்டிருக்கும் மனிதர்களால் கிறிஸ்தவத்திற்க்கு அவமானம் ஏற்படுகின்றதே. லவோதிக்கேயா சபையை நோக்கி, 'இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்' (வெளி 3:16) என்றார், ஆனால், இன்றோ 'வாந்திப்பண்ணிப்போடப்படவேண்டியவர்களெல்லாம் தேவ திட்டத்திற்குள் வந்துபோய் இருக்கின்றனர்'. பரிசுத்த ஸ்தலத்துக்குப் போக்குவரவு செய்த துன்மார்க்கர் அடக்கம்பண்ணப்பட்டதைக் கண்டேன்; அவர்கள் அப்படி செய்துவந்த பட்டணத்திலேயே மறக்கப்பட்டுப்போனார்கள் (பிர 8:10) என்று எழுதுகிறான் சாலமோன். தான் உள்ளே செல்ல இயலாவிட்டாலும், உள்ளே இருக்கும் மனிதர்கள் அவனது கரங்களில் வீழ்ந்துவிடுவார்களென்றால், அவர்களைக் கொண்டே தான் நினைத்ததை நிறைவேற்றிவிடுவான் சத்துரு. தேவபுத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றபோது, சாத்தானும் அவர்கள் நடுவிலே வந்து நின்றான்; அப்பொழுது கர்த்தர் சாத்தானை நேரடியாக அடையாளம் கண்டுகொண்டு, சாத்தானைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வருகிறாய்? (யோபு 1:7) என்று கேட்டார். அப்படியே, பிரதான ஆசாரியனாகிய யோசுவாவுக்கு விரோதஞ்செய்ய அவனது வலது பக்கத்திலே நின்றான் சாத்தான் (சகரியா 3:1) நேரடியாகவே அனைவராலும் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டான். ஆனால், மற்றவர்களுக்குள் மறைந்திருந்து செயலாற்றும் அவனது தந்திரத்தையும் நாம் அறிந்துகொள்ளவேண்டுமே.
கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் பல மனிதர்களுக்குள் மறைந்திருக்கும் சாத்தான் கிறிஸ்தவர்களுக்கு விரோதமாகவே செயல்படுகின்றான். பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் இயேசுவை கொலைசெய்யும்படி யோசித்துக்கொணடிருந்தனர், அவர்கள் இயேசுவின் திட்டத்தின் வட்டத்திற்கு வெளியே அவருக்கு விரோதமாகவே கிரியை செய்துகொண்டிருந்தனர். ஜனங்களுக்கு அவர்கள் பயப்பட்டபடியினால், எவ்விதமாய் இயேசுவைக் கொலை செய்யலாமென்று வகைதேடிக்கொண்டிருந்தார்;கள். அவர்களது திட்டம் நிறைவேற்றப்படவேண்டுமென்றால், இயேசுவின் வட்டத்டதிற்கு உள்ளே உள்ள ஓர் மனிதன் அவர்களுக்குத் தேவை. அப்பொழுது பன்னிருவரில் ஒருவனாகிய ஸ்காரியோத்தென்னும் மறுபேர் கொண்ட யூதாசுக்குள் சாத்தான் புகுந்தான் (லூக் 22:2,3). சாத்தானின் முதல் பணி எதிரிகளோடு யூதாசை இணைத்ததே. யூதாஸ் வேலியை விட்டு வெளியே வந்தான். அடைப்பைப் பிடுங்குகிறவனைப் பாம்பு கடிக்கும் (பிர 10:8) என்பது வேத வார்த்தையல்லவா. என் சகோதரியே! என் மணவாளியே! நீ அடைக்கப்பட்ட தோட்டமும், மறைவு கட்டப்பட்ட நீரூற்றும், முத்திரிக்கப்பட்ட கிணறுமாயிருக்கிறாய் (உன் 4:12) உன் அடைப்பைப் பிடுங்கிவிட்டு வெளியே வரவேண்டாம். ஏவாளைத் தீண்டிய சத்துரு, தீமை செய்யும்படி உன்னையும் தூண்டுவான் எச்சரிக்கை. யூதாசுக்குள் புகுந்த சாத்தான் அவனை அவிசுவாசியாகவும் (யோவான் 6:64), திருடனாகவும் (யோவான் 12:6) மாற்றியிருந்தான்.
பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து பிரதான ஆசாரியரிடத்திற்குப் போய்: நான் அவரை உங்களுக்குக் காட்டிக்கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான். யூதாஸுக்குள் சாத்தான் புகுந்தபோது, அவன் வட்டத்தை விட்டு வெளியே சென்று சாத்தானின் திட்டத்தில் உள்ளோரைச் சந்தித்தான். அவர்கள் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுக்க உடன்பட்டார்கள் (மத் 26:15). இணைப்பிற்கு பணம் ஒரு காரணமாக அமைந்தது.
இன்றும், பணம் என்ற பெயரில் சத்துருவோடு நீங்கள் இணைந்திருக்கிறீர்களா? வியாபாரத்தில் பொய் அது சாதராணம் என்று சொல்லும் மனிதர்கள் பலரை நான் கண்டிருக்கிறேன். அது சாதாரணமால்ல, சதி என்பதை நினைவில் கொள்ளுங்கள். எப்படியென்றாலும், என்ன செய்தாலும் பரவாயில்லை, பணம் கிடைத்தால் போதும் என்று பிசாசுடன் உங்கள் பொழுது போய்க்கொண்டிருக்கின்றதா? எச்சரிக்கை! ஏமாந்துவிடாதீர்கள். நீங்கள் கிறிஸ்தவன் என்ற வட்டத்திற்குள் இருந்தும், சாத்தானுடன் தொடர்புடைய யூதாஸ் என்பதை நினைவில் கொள்ளுங்கள். யூதாஸுக்குள் புகுந்த சாத்தான் பணத்தினால் பிரதான ஆசாரியரோடும், வேதபாரகரோடும் அவனை இணைத்தான். அதுமுதல் அவன் அவரைக் காட்டிக் கொடுப்பதற்குச் சமயம் பார்த்துக் கொண்டிருந்தான்.(மத் 26:16)
நமது எதிராளியாகிய பிசாசானவன், கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான் (1பேது 5:8). ஊழியத்திற்கு விரோதமாகவோ, ஸ்தாபனத்திற்கு விரோதமாகவோ, சபைக்கு விரோதமாகவோ சத்துரு வெளியில் திட்டங்களைத் தீட்டிக்கொண்டிருந்தாலும், உள்ளே நுழைய வழியில்லையென்றால், சுற்றி சுற்றித்தான் வந்துகொண்டிருக்கவேண்டும். சத்துரு சுற்றித்திரியும்போது, கூட்டத்திற்கு உள்ளேயோ, ஸ்தாபனத்திற்குள்ளேயோ அல்லது சபைக்குள்ளேயோ யாராவது கைவசம் கிடைத்துவிட்டால், அவர்களுக்குள் புகுந்து தனது திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கிவிடுகிறான். எதிரிகளோடு அத்தகையோரை இணைத்து, தாங்கள் இருக்கும் இடத்தையே அவர்கள் காட்டிக்கொடுக்கும் நிலைக்கு அவர்களைத் தள்ளிவிடுகின்றான். தாங்கள் இருக்கும் இடத்தில் உள்ள குறைகளையும், களைகளையும் களைய முற்படாமல், அவைகளைத் தூற்றித் திரியும் பணியாளனாக அவர்களை பணியமர்த்திவிடுகின்றான். அத்தகையோரின் குரலில் குறைகளே மேலோங்கியிருக்கும். குறைகளையே சொல்லிச் சொல்லி, உள்ளிருக்கும் மற்றோருடைய நல்லெண்ணங்களையும் கரைந்துபோகச் செய்யும் கள்ளர்களாக அவர்கள் மாறிவிடுகின்றனர். தேவனுடைய பணியில் இணைந்திருக்கும் நாம், சத்துருவின் இத்தகைய வலையில் சிக்கிக்கொள்ளாதபடி எச்சரிக்கையாயிருப்போம். நம்மை இருக்கும் இடத்திற்கு விரோதமாக மாற்றி, எதிரிகளோடு நம்மை இணைக்கும் பணி சத்துருவினுடையது. வகைதேடிக்கொண்டிருக்கும் ஜனங்களோடு நாம் இணைந்துவிடாமல் தேவன் நம்மை அழைத்த வழியின் மேலேயே விழி வைத்தோராக நம்மைக் காத்துக்கொள்ளுவோம்.
மோசே பார்வோனின் குமாரத்தியினால் வளர்க்கப்பட்டான், அவளுடைய குமாரன் என்றே அவன் அழைக்கப்பட்டான். பார்வோனின் குமாரத்தியினாலேயே 'மோசே' என்று பெயர் சூட்டப்பட்டான். பார்வோனின் குடும்பத்தில் ஒருவனாக மோசே இருந்தபோதிலும், தான் ஒரு எபிரேயன் என்பதை அவன் அறிந்திருந்தான், அவனது மனமும் தன் ஜனத்தையே சார்ந்திருந்தது. மோசே பெரியவனான காலத்தில், அவன் தன் சகோதரரிடத்தில் போய், அவர்கள் சுமைசுமக்கிறதைப் பார்த்து, தன் சகோதரராகிய எபிரெயரில் ஒருவனை ஒரு எகிப்தியன் அடிக்கிறதைக் கண்டு, அங்கும் இங்கும் பார்த்து, ஒருவனும் இல்லை என்று அறிந்து, எகிப்தியனை வெட்டி, அவனை மணலிலே புதைத்துப்போட்டான் (யாத் 2:11,12). தனது தேசத்திற்குள்ளே, தனது வீட்டிற்குள்ளே, தனது அரண்மனைக்குள்ளேயே வளர்ந்த ஒருவன் தனக்கும், தேசத்திற்கும், தன் ஜனத்திற்கும் எதிரியாக எழுந்திருப்பதை பார்வோன் அறிந்துகொண்டபோது, மோசேயைக் கொல்ல வகைதேடினான் (யாத். 2:15). தனக்குத் தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாய்ப்போம்; தனக்குத் தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்தப் பட்டணமும் எந்த வீடும் நிலைநிற்கமாட்டாது (மத் 12:25) என்றார் இயேசு. தன்னுடைய ராஜ்யத்தைக் காப்பாற்றிக்கொள்ளவே, மோசேயை கொல்ல வகைதேடினான் பார்வோன். நமக்கு விரோதமாய் பிரிந்திருக்கும் மனிதர்களையும், செயல்படும் மனிதர்களையும் நம்மால் அடையாளம் கண்டுகொள்ள முடிகின்றதா? அவர்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் நமது, ஊழியம், சபை, ராஜ்யம் பல பிரிவினைகளைச் சந்திக்கும் என்பதில் சந்தேகமில்லை.
மோசேயைக் கொண்டு இஸ்ரவேல் மக்களை தேவன் நடத்திக்கொண்டு சென்றபோது, மோசேக்கு விரோதமாக மிரியாமும், ஆரோனும் பேசினார்கள்; தன் ஜனத்திற்குள்ளேயே இருந்துகொண்டு, தலைவனுக்கு விரோதமாகப் பேசிய மிரியாமை தேவன் தண்டித்தார் (எண். 12:10). அதுபோலவே, லேவிக்குப் பிறந்த கோகாத்தின் குமாரனாகிய இத்சேயாரின் மகன் கோராகு என்பவன் ரூபன் வம்சத்திலுள்ள எலியாபின் குமாரனாகிய தாத்தானையும் அபிராமையும் பேலேத்தின் குமாரனாகிய ஓனையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் புத்திரரில் சபைக்குத் தலைவர்களும் சங்கத்துக்கு அழைக்கப்பட்டவர்களும் பிரபலமானவர்களுமாகிய இருநூற்று ஐம்பது பேர்களோடும் கூட மோசேக்கு முன்பாக எழும்பி, மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூட்டங்கூடி, அவர்களை நோக்கி: நீங்கள் மிஞ்சிப்போகிறீர்கள்; சபையார் எல்லாரும் பரிசுத்தமானவர்கள்; கர்த்தர் அவர்கள் நடுவில் இருக்கிறாரே; இப்படியிருக்க, கர்த்தருடைய சபைக்கு மேலாக உங்களை ஏன் உயர்த்துகிறீர்கள் (எண்; 16:1-3) என்றபோது, பூமி தன் வாயைத் திறந்து, அவர்களையும் அவர்கள் வீடுகளையும், கோராகுக்குரிய எல்லா மனிதரையும், அவர்களுக்கு உண்டான சகல பொருள்களையும் விழுங்கிப்போட்டது. அவர்கள் தங்களுக்கு உண்டானவை எல்லாவற்றோடும் உயிரோடே பாதாளத்தில் இறங்கினார்கள்; பூமி அவர்களை மூடிக்கொண்டது; இப்படிச் சபையின் நடுவிலிருந்து அழிந்துபோனார்கள் (எண்; 16:32,33). இஸ்ரவேல் மக்களை அழிக்க பாலாக் ராஜா பல வழிகளில் முயன்றான், பிலேயாம் தீர்க்கதரிசியையும் வேண்டிக்கொண்டான்; என்றாலும், வெளியிலிருந்து அவர்களை அழிக்க அவனால் கூடாது போயிற்று; ஆனால், தன்னுடைய பெண்களை இஸ்ரவேலருக்குள் அனுப்பி, விபச்சாரம் செய்யப்பண்ணி, இஸ்ரவேலர் தங்களைத் தாங்களே கெடுத்துக்கொள்ளும் ஆலோசனையை பிலேயாம் பாலாக்கிற்குக் கொடுத்தான். இஸ்ரவேலைத் தொகையிடும்படி தாவீதையும் சாத்தான் ஏவிவிட்டான் (1நாளா. 21:1). அப்போஸ்தலரின் நாட்களிலும், காணியாட்சியை விற்று காணிக்கை கொண்டுவந்த அனனியா மற்றும் அவனது மனைவி சப்பீராள் இருவரையும் பேதுரு நோக்கி: அனனியாவே, நிலத்தின் கிரயத்தில் ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, பரிசுத்த ஆவியினிடத்தில் பொய்சொல்லும்படி, சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன? (அப். 5:1-3) என்றான். நம்முடைய இருதயத்தை சாத்தான் நிரப்பிவிடாதபடி எச்சரிக்கையாயிருப்போம். தேவஜனத்திற்குள்ளே ஒருவன் கிடைத்துவிட்டால், அவனைக் கொண்டே சுவரை இடித்துவிட சத்துரு முயற்சிப்பான். பாளையத்திற்குள் சத்துரு கிரியை செய்துவிடாமல், சுத்தம் செய்வதற்கு எப்போதும் ஆயத்தமாயிருப்போம். திறப்பின் வாசலிலே நிற்கவும், சுவரை அடைக்கவுந்தக்கதாக ஒரு மனுஷனைத் தேடுகிறார் தேவன்; சாத்தானோ, சுவரை இடித்துவிட உள்ளேயே ஒரு மனிதனைத் தேடிக்கொண்டிருக்கிறான். பாவத்தில் விழுவோரை சத்துரு தனது பாலமாகப் பயன்படுத்துகிறான்.
Comments
Post a Comment