திறக்கப்படாத கண்கள்
திறக்கப்படாத கண்களைக் கொண்ட மனிதன், தரிசனத்தை நோக்கி தைரியமாகப் பயணிக்கும் மனிதனுக்கும் தடையாகவே பேசிக்கொண்டிருப்பான். தேவனுடைய மனுஷனின் வேலைக்காரன் அதிகாலமே எழுந்து வெளியே புறப்படுகையில், இதோ, இராணுவமும் குதிரைகளும் இரதங்களும் பட்டணத்தைச் சுற்றிக்கொண்டிருக்கக் கண்டான்; அப்பொழுது வேலைக்காரன் அவனை நோக்கி: ஐயோ, என் ஆண்டவனே, என்னசெய்வோம் என்றான் (2இரா 6:15). அப்பொழுது எலிசா விண்ணப்பம்பண்ணி: கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும் என்றான்; உடனே கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார்; இதோ, எலிசாவைச்சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான். (2 இரா 6:17)
இன்றும், தலைவர்களோடு இருந்துகொண்டிருந்தபோதிலும், அவர்களது தரிசனங்களைக் காணக்கூடாதவர்களாகவே வாழும் உடன் ஊழியர்கள் உண்டு. தலைவர்கள் போகும் இடமெல்லாம் அவர்களுடனே பயணித்தபோதிலும், தலைவர்களுடனேயே இணைந்து செயல்பட்டபோதிலும், தலைவர்களோடு ஒன்றாக உண்டு உறங்கினபோதிலும், தலைவர்களது உணர்வில் கலந்திருக்கும் தரிசனத்தை உணராதவர்கள் அநேகர் உண்டு. எலிசா அன்று ஜெபித்தது போலவே, உடன் ஊழியர்களைப் பார்த்து 'இவர்கள் கண்களைத் திறந்தருளும்' என்று ஜெபிக்கவேண்டிய நிலை அநேக தலைவர்களுக்கு உருவாகியிருக்கின்றது. எலிசாவின் வேலைக்காரனுக்கு சத்துருவின் சேனையைக் காணும் கண்கள் இருந்தது; ஆனால், கர்த்தருடைய சேனையைக் காணும் கண்கள் இல்லையே. வேலைக்காரன் அதிகாலமே எழுந்து வெளியே புறப்படுகையில், இதோ, இராணுவமும் குதிரைகளும் இரதங்களும் பட்டணத்தைச் சுற்றிக்கொண்டிருக்கக் கண்டபோது, எலிசாவை நோக்கி: ஐயோ, என் ஆண்டவனே, என்னசெய்வோம் (2இரா 6:15) அதிர்ச்சியோடு உணர்ச்சியை வெளிப்படுத்தினான். இந்த நிலையில் காணப்படும் மக்கள் இன்றும் உண்டு; அவர்களது கண்கள் சத்துருக்களை மாத்திரமே காணும் சக்திகொண்டவை; கர்த்தருடைய சேனையைக் காணவோ பெலனற்றவை. சீரிய இராணுவத்தினரின் கண்களுக்கு, கர்த்தருடைய சேனை தென்படவில்லை; அதுபோலவே, எலிசாவின் வேலைக்காரனின் கண்களுக்கும் தென்படவில்லை. சத்துருவின் கண்களும், வேலைக்காரனின் கண்களும் ஒரே சக்திகொண்டவைதானோ! பார்வையற்றவனாக இருந்ததே வேலைக்காரனது பதட்டத்திற்குக் காரணம். வேலைக்காரனின் கண்மயக்கத்திற்குக் காரணம் என்னவோ! நம்முடைய கண்களின் பெலன் என்ன? தலைவர்களோடு இணைந்து ஊழியம் செய்துகொண்டிருந்தபோதிலும், தலைவர்களின் கண்கள் காணும் தரிசனங்களை நம்மால் காணமுடிகிறதா? அப்படி முடியவில்லையென்றால், தலைவர்கள் செய்கிற காரியங்களையும் நம்மால் புரிந்துகொள்ள இயலாது, 'ஐயோ, என் ஆண்டவனே, என்ன செய்வோம்' என்ற பயமே பல நேரங்களில் தொற்றிக்கொள்ளும்.
தன்னை பிடிக்கும்படியாக வந்த மனிதர்களை, கண்மயக்கம் உண்டாகச் செய்து, அவர்களை சமாரியாவுக்கே கூட்டிக்கொண்டு சென்றான் எலிசா. அவர்கள் சமாரியாவில் வந்தபோது, எலிசா: கர்த்தாவே, இவர்கள் பார்க்கும்படிக்கு இவர்கள் கண்களைத் திறந்தருளும் என்றான்; பார்க்கும்படிக்குக் கர்த்தர் அவர்கள் கண்களைத் திறக்கும்போது இதோ, அவர்கள் சமாரியாவின் நடுவே இருந்தார்கள் (2இரா 6:20). இப்படியே, ஒருநாள் அவர் மேகங்களுடனே வரும்போது, கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக்காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள் (வெளி 1:7). வருகையின்போது கண்கள் திறக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்பட அல்ல, பரலோக வாசலுக்குள் பிரவேசிக்க இன்றே, நம்முடைய கண்கள் திறக்கட்டும்.
இப்பிரபஞ்சத்தின் தேவனானவன், அவர்களுடைய மனதைக் குருடாக்கிவைத்திருக்கிறான் (2கொரி. 4:4); இருளின் ஆதிக்கத்தால் இன்றும் குருடர்களாகவே வாழும் மக்கள் (1யோவா. 2:11) கண்கள் திறக்கப்படாமல் அவரை அறிந்துகொள்வது கூடாதது (லூக் 24:31). கர்த்தருடைய சேனையைக் காண மாத்திரமல்ல; அவரது சேனையில் போர்வீரர்களாகவும் மாற அழைப்பு பெற்றவர்கள் நாம். கண் திறக்கப்படாததினால், கழுதை கண்டதைக்கூட பிலேயாமினால் காணமுடியவில்லையே. கண்திறக்கப்பட்ட பின்னரே, 'கண்திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது' (எண் 24:15) என்று திறக்கப்பட்ட கண்களோடு இஸ்ரவேல் மக்களை பிலேயாம் பார்த்தான்.
Comments
Post a Comment