சந்திப்பு
'வசனங்கள் விதைக்கப்படும் முன், வாழ்க்கை உழப்படவேண்டும்.' வலியையும் பொருட்படுத்தாது உழுதால், வழியான அவர் வருவது எளிதாயிருக்கும். அவருக்கான ஆயத்தங்களைச் செய்யும்படியாக அனுப்பப்பட்டவர்களே நாம். எலிசபெத்து கர்ப்பவதியான ஆறாம் மாதத்திலே, காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத்தென்னும் ஊரில், தாவீதின் வம்சத்தானாகிய யோசேப்பு என்கிற நாமமுள்ள புருஷ னுக்கு நியமிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிகையினிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான்; அந்தக் கன்னிகையின் பேர் மரியாள். அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து: கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் (லூக். 1:26-28) என்று வாழ்த்தினான்; என்றபோதிலும், மரியாளோ, அவனைக் கண்டு, அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துதல் 'எப்படிப்பட்டதோ?' என்றும் (லூக். 1:29), 'எப்படியாகும்?' என்றும் சிந்தித்துக்கொண்டிருக்கும்போது (லூக். 1:34),
எப்படிப்பட்டது? என்ற கேள்விக்கு, அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது (லூக். 1:32,33) என்ற பதிலும், எப்படியாகும்? என்ற கேள்விக்கு, பரிசுத்தஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும் (லூக். 1:35) என்றும் பதிலாகச் சொல்லப்பட்டதுடன், இதோ, உனக்கு இனத்தாளாயிருக்கிற எலிசபெத்தும் தன் முதிர்வயதிலே ஒரு புத்திரனைக் கர்ப்பந்தரித்திருக்கிறாள்; மலடியென்னப்பட்ட அவளுக்கு இது ஆறாம் மாதம் (லூக். 1:36) என்ற அடையாளமும் சொல்லப்பட்டது. சாஸ்திரிகளுக்கு நட்சத்திரம் (மத். 2:2), மேய்ப்பர்களுக்கு முன்னணை (லூக். 2:12), மரியாளுக்கோ கர்ப்பவதியாயிருந்த எலிசபெத்து என அத்தனையும் உறுதிப்படுத்துவதற்கான அடையாளங்களே.
எலிசபெத்தோ, ஜனங்களுக்குள்ளே எனக்கு உண்டாயிருந்த நிந்தையை நீக்கும்படியாகக் கர்த்தர் இந்த நாட்களில் என்மேல் கடாட்சம் வைத்து, எனக்கு இப்படிச் செய்தருளினார் என்று சொல்லி, ஐந்து மாதம் வெளிப்படாதிருந்தாள் (லூக். 1:24,25). தூதன் சொன்னதைக் கேட்டதும், எலிசபெத்தைப் பார்க்கும்படியாகப் புறப்பட்டுச் சென்று, எலிசபெத்தை வாழ்த்தினாள் மரியாள், மரியாளுடைய வாழ்த்துதலைக் கேட்டபொழுது, அவளுடைய வயிற்றிலிருந்த பிள்ளை துள்ளிற்று (லூக். 1:41). எலிசபெத்து மரியாளின் வாழ்த்துதலைக் கேட்டதும் (லூக். 1:40), 'நான் கர்ப்பமாயிருப்பது மரியாளுக்கு எப்படித் தெரியும்?' என்று நினத்திருக்கக்கூடும். அவ்வாறே, எலிசபெத்து பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, உரத்த சத்தமாய்: ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது (லூக். 1:42) என்றும், கன்னிகையாயிருந்த மரியாளைப் பார்த்து, 'என் ஆண்டவருடைய தாயார்' என்னிடத்தில் வந்தது எனக்கு எதினால் கிடைத்தது (லூ க். 1:43) என்றும் சொல்லும்போது, 'நான் கர்ப்பவதியாகப்போவது எலிசபெத்துக்கு எப்படித் தெரியும்?' என்று மரியாள் நினைத்திருக்கக்கூடும். மேலும், 'ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள்' என்று தூதன் வாழ்த்தின வார்த்தைகளினாலேயே மீண்டும் எலிசபெத்து மரியாளை வாழ்த்துவது, தேவன் ஒருதரம் விளம்பினார், இரண்டுதரம் கேட்டிருக்கிறேன்; வல்லமை தேவனுடையது (சங். 62:11) என்ற வார்த்தையின் நிறைவேறுதல்தானே.
ஆறாம் மாதத்தில் எலிசபெத்தின் வீட்டிற்கு வந்த மரியாள் மூன்றுமாதங்கள் அவளுடனே இருந்து, தன் வீட்டுக்குத் திரும்பிப்போனாள் (லூக். 1:56); எலிசபெத்து யோவானைப் பெற்றெடுக்கும் வரை மரியாள் அவளுக்கு உடனிருந்து உதவிசெய்தாள். 'புத்திரனைக் கர்ப்பந்தரித்திருக்கிறாள்' (லூக். 1:36) என்ற வார்த்தையின் நிறைவேறுதலையும் பிரசவத்தின்போது மரியாள் கண்டு சந்தோஷப்பட்டிருப்பாளே. தேவனாலே கூடாதகாரியம் ஒன்றுமில்லை (லூக் 1:37) என்ற வார்த்தை, எலிசபெத்தின் வாழ்க்கையிலும், மரியாளின் வாழ்க்கையிலும் நிறைவேறியது. மேலும், 'அப்படியானால், யார் ரட்சிக்கப்படக்கூடும்' என்று சீஷ ர்கள் கேட்டபோது, இயேசு, அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; 'தேவனாலே எல்லாம் கூடும்' என்றாரே (மத் 19:26). சம்பவமில்லாதவைகள் சம்பவிப்பது, நாம் சந்தோஷப்படுவதற்கு மாத்திரமல்ல, பிறர் சந்திக்கப்படுவதற்காகவே.
Comments
Post a Comment