குற்றுயிர்
ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போய்க்கொண்டிருந்தபோது, கள்ளர் கையில் அகப்பட்டான்; அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்துகொண்டு, அவனைக் காயப்படுத்தி, குற்றுயிராக விட்டுப் போனார்கள் (லூக் 10:30).
இவ்வுலகத்தின் வாழ்க்கையில், பலவிதமான சோதனைகளிலும், வாழ்க்கையின் பிரச்சனைகளிலும் சிக்கி சின்னாபின்னமாகி குற்றுயிராகக் கிடக்கும் மனிதர்களும் குடும்பங்களும் அநேகம். அவர்கள் உயிரோடிருப்பதைப் போன்று நமக்குத் தென்பட்டாலும், அது குற்றுயிர் என்பதை அறிந்த ஆவிக்குரியவர்கள் வெகு சிலரே. பொருளாதாரத்திலும், கடன் பிரச்சனைகளிலும், பாவ வாழ்க்கையிலும், தவறான பழக்க வழக்கங்களிலும், போதை வஸ்துக்களிலும், விபச்சாரத்திலும் மேலும், பல பிசாசின் தந்திரமான வலைகளிலும் சிக்கி குற்றுயிராய் உயிரோடு வாழும் மனிதர்கள் பலகோடி. தங்களை யாராவது சந்திக்கமாட்டார்களா, தங்களுக்கு யாராவது உதவி செய்யமாட்டார்களா, தங்கள் நிலையை யாராவது புரிந்துகொள்ளமாட்டார்களா, தங்களை யாராவது நேசிக்கமாட்டார்களா என்ற ஏக்கப் பெருமூச்சுடன் வாழும் மக்களின் தாகத்தைத் தீர்க்கும் பொறுப்பு கிறிஸ்துவை அறிந்த நம் ஒவ்வொருவருக்கும் உண்டு. குற்றுயிராய் கிடப்பவர்களுக்கு முன் நாம் உயிரோடு வாழ்வது, அவர்களைக் காட்டிலும் நாம் சிறந்தவர்கள், உயர்ந்தவர்கள் என்பதைக் காட்ட அல்ல. நம்முடைய உயர்வான நிலையைக் குறித்து பெருமை பாராட்டவும் அல்ல. அவர்கள் மேல் இரக்கம் கொண்டு அவர்களுக்கு உதவி செய்யவே. பாதையில் கிடப்போரைக் குறித்த பாரம் அற்றவர்களாகவும், ஏங்குவோரைப் பார்த்து ஏளனமாகவும், உதவி கேட்போரை உதாசினப்படுத்தியும், தேவையோடிருப்பவர்களைத் தேடாமல் விட்டுவிட்டும், பசியோடிருப்பவர்களை போஷிக்காமலும், சிறைப்பட்டவர்களைக் குறித்த சிந்தையற்றவர்களாகவும் நாம் இருந்தால், குற்றுயிராய் கிடந்த அவர்கள் நியாயத்தீர்ப்பின் நாளில் எழுந்து நின்று, ' பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் போஜனங்கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், நீங்கள் என் தாகத்தைத் தீர்க்கவில்லை, அந்நியனாயிருந்தேன், நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; வஸ்திரமில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு வஸ்திரங்கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாயும் காவலிலடைக்கப்பட்டவனாயும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லை' (மத் 25:42,43) என்று நமக்கு விரோதமாகச் சாட்சி சொல்வார்களே. அப்போது, ஆண்டவரே நான் நன்றாகத்தானே பிரசங்கித்தேன், நன்றாகத்தானே ஊழியம் செய்தேன், கர்த்தாவே! கர்த்தாவே!உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? (மத் 7:22) என்று நாம் நியாதிபதியினிடத்தில் சொன்னாலும், நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் (மத் 7:23) என்று நியாயாதிபதியின் சமூகத்தினின்று நாம் அகற்றப்படுவோம். மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத் 25:45) என்பார். குற்றுயிராகக் கிடந்தவர்களைக் கண்டுகொள்ளாத குற்றத்தினிமித்தம் நித்திய ஆக்கினையின் பக்கமாக நாம் தள்ளப்படுவோம்.
ஆனால், ஆசாரியனும், லேவியனும் இந்த மனநிலையிலிருந்து வேறுபட்டிருந்தார்கள். அவர்களுக்கு வேதத்தின் சட்டமே பிரதானமாகக் காணப்பட்டது, அது யாருக்காக எழுதப்பட்டதோ அந்த மனிதர்கள் பிரதானமானவர்களாகத் தென்படவில்லை. ஆலயத்தில் சூம்பின கையையுடைய மனுஷன் இருந்தபோதிலும், அவனது சுகத்தை விரும்பாமல் அவர்களால் சிறப்பான ஆராதனை நடத்த முடியும் (மத். 12:10). ஆலயத்தில் பதினெட்டு வருஷமாய் பலவீனப்படுத்தும் ஆவியைக் கொண்டிருந்த ஒரு ஸ்திரீ இருந்தபோதிலும், அவளது பலவீனத்தைப் பார்க்காமல் ஆராதனையை நடத்தியவர்கள் அவர்கள் (லூக். 13:11). ஓய்வுநாளில் பரிசேயரில் தலைவனாகிய ஒருவனுடைய வீட்டிலே இயேசு போஜனம் பண்ணும்படிக்குப் போயிருந்தபோது, அவருக்கு முன்னால் இருந்த நீர்க்கோவை வியாதியுள்ள ஒரு மனுஷனும் அந்நாளில் குணமாக்கப்படுகிறது நியாயமல்ல என்று நினைத்தவர்கள் அவர்கள் (லூக். 14:1-6). பெதஸ்தா என்னப்பட்ட குளத்த்தின் கரையில் முப்பத்தெட்டு வருஷம் வியாதி கொண்டிருந்த ஒரு மனுஷன் இருந்தான். இயேசு அவனை நோக்கி: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார். உடனே அந்த மனுஷன் சொஸ்தமாகி, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, நடந்துபோனான். அந்த நாள் ஓய்வு நாளாயிருந்தது. ஆனால், யூதர்களோ, குணமாக்கப்பட்டவனை நோக்கி: இது ஓய்வு நாளாயிருக்கிறதே, படுக்கையை எடுத்துக்கொண்டு போகிறது உனக்கு நியாயமல்ல என்றார்கள் (யோவான் 5:1-10). ஓய்வு நாளில் வியாதியஸ்தர்களைக் இவர்கள் காணாதது மாத்திரமல்ல, அவர்கள் சுகத்தை விரும்பாதது மாத்திரமல்ல, வியாதியுள்ள மனிதர்களிடமிருந்து ஓய்வு நாளையே பக்கமாய் விலக்கிவிட்டனர் இவர்கள். அத்துடன், மதிகேடரே, குருடரே! எது முக்கியம்? காணிக்கையோ, காணிக்கையைப் பரிசுத்தமாக்குகிற பலிபீடமோ? (மத் 23:19) என்றும், மேலும், மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தையத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள், இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே (மத் 23:23) என்று பலிபீடத்தின் மேல் கவனம் வையாமல், காணிக்கையின்மேலேயே கவனம் வைத்தவர்களாக பக்கமாய் விலகிச் சென்ற ஆசாரியர்களை இயேசு எச்சரித்தாரே. இன்றும் குற்றுயிராய்க் கிடக்கும் மினதர்களைக் கண்டுகொள்ளாமல், காணிக்கை தரும் மனிதர்களையே தேடித் தேடிச் செல்லும் ஊழியர்கள் உண்டு. குற்றுயிராய்க் கிடந்தோரின் மரணம் நியாயத்தீர்ப்பின் நாளின் இப்படிப்பட்ட ஊழியர்களை மறித்து நிற்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஐசுவரியமுள்ள ஒரு மனுஷன் இருந்தான்; அவன் இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து, அநுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்துகொண்டிருந்தான். லாசரு என்னும் பேர்கொண்ட ஒருதரித்திரனும் இருந்தான்; அவன் பருக்கள் நிறைந்தவனாய், அந்த ஐசுவரியவானுடைய வாசலருகே கிடந்தான் (லூக் 16:19,20). ஆனால், மரணத்திற்குப் பின்னர் நிலமை தலைகீழாகிவிட்டது. தகப்பனை விட்டுப் பிரிந்து சென்று ஆஸ்தியை அழித்துப்போட்ட இளைய குமாரன், தேசத்தின் குடிகளில் ஒருவனிடத்தில் போய் ஒட்டிக்கொண்டபோது, பன்றிகள் தின்கிற தவிட்டைக் கூட கொடுக்க மறுத்தான் (லூக். 15:15,16); எத்தனை பரிதாபம். தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்? (1யோவா 4:20). நாம் உயிர்வாழ்வதற்காக, உணவை அல்ல உயிரையே சிலுவையில் கொடுத்தார் இயேசு. நித்தம் நாம் ஜீவனோடிருப்பதற்கு, அவரது இரத்தமே காரணம். அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்.(1யோவா 3:16)
கையில், சில்லரை இருந்தபோதும், பிச்சைக்காரர்களைக் கண்டதும், உடனடியாக வாயிலிருந்து 'சில்லரை இல்லை' என்ற வார்த்தைதான் பலரது வாயிலிருந்து வெளிவருகின்றது. ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலைகொள்ளுகிறதெப்படி?(1யோவா 3:17).
இப்படி ஓருபுறம் சார்ந்து சரிந்து வாழும் மனிதர்களால், கண்டுகொள்ளப்படாமல் குற்றுயிராய் கிடக்கும் ஆத்துமாக்கள் அநேகர். ஒரு சாரார், சுகம், சுகம் என்று சுகத்தையே முன் வைத்தவர்களாக, மெய்யான ஆராதனையை விரும்பும் மக்களை ஆராதிக்க விடாதபடி குற்றுயிராக விட்டுவிடுகின்றனர். மெய்யான ஆராதனையை விட்டு பக்கமாய் விலகிச் செல்கிறது அவர்களது ஆராதனை. மெய்யான ஆராதனையை விரும்பும் மக்களோ ஆராதனையின் ஆனந்தத்தை அனுபவிக்க முடியாமல் குற்றுயிராகக் ஆலயத்திலே கிடக்கின்றனர். மற்றொரு சாரார், ஆராதனை, ஆராதனை என்று ஜனங்களின் வாழ்க்கையைக் குறித்த கவலையற்றவர்களாக, ஆலயத்திலேயே அவர்களைக் குற்றுயிராய் விட்டுவிடுகின்றனர். ஜனங்களின் நிலையைக் கண்டும், காணாதபடி ஆராதனைக்கே முக்கியத்துவம் கொடுத்து பக்கமாய் விலகிச் சென்றுவிடுகின்றனர். வேறொரு சிலர், ஊழியத்தின் மேலேயே கரிசனையுள்ளோராய், தங்களுக்குக் கர்த்தர் கொடுத்த தாலந்துகளின் மேலேயே கரிசனையுள்ளோராய், தேவனோடு நிதம் சஞ்சரிப்பதிலும், வேதத்தை நித்தம் தியானிப்பதிலும் குறைச்சலுள்ளவர்களாய் தங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையினையும் குற்றுயிராக்கிவைத்திருக்கின்றனர்.
சில சபைகள், சபைகளுக்கு வரும் மக்களையே கருத்தில் கொண்டும், அவர்களையே கவனித்துக்கொண்டும், மந்தையில் சேர்க்கப்படாமல் வெளியில் கிடக்கும் ஆத்துமாக்களைக் குறித்த கரிசனையற்றவைகளாக இருக்கின்றன. ஆத்துமாக்களை ஆதாயம் செய்யும் மிஷனரி ஊழியங்களையும் ஆதரிக்க மனதற்றவர்களாக பக்கமாக விலகிச்செல்கின்றனர். புறஜாதியாரிடத்தில் ஒன்றும் வாங்காமல் அவருடைய நாமத்தினிமித்தம் புறப்பட்டுப்போனவர்கள் (3யோவா 1:7) மிஷனரிகள். நாம் சத்தியத்திற்கு உடன்வேளையாட்களாயிருக்கும்படி அப்படிப்பட்டவர்களைச் சேர்த்துக்கொள்ளக் கடனாளிகளாயிருக்கிறோம் (3யோவா 1:8) என்று யோவான் எழுதுகின்றார். எனினும், சபையில் முதன்மையாயிருக்க விரும்புகிற தியோத்திரேப்பு மிஷனரிப் பணி செய்வோரை ஏற்றுக்கொள்ளவில்லை (3யோவா 1:9). இவைகள் மிஷனரிகளைக் கண்டும் பக்கமாய் விலகிச் செல்லும் சபைகள்.
இப்படியே, பரிசுத்த ஆவியைக் குறித்த கவலையில்லாமலும், முழுக்கு ஞானஸ்நானத்தைக் குறித்த கவலையில்லாமலும், தாங்கள் செய்கிறவைகளையே தொடர்ந்து செய்துகொண்டு, பக்கமாய் விலகிச் செல்லும் திருச்சபைகளும் தேசத்தில் பெருகிவிட்டன. ஏதோ ஒரு வசனத்தைப் பிடித்துக்கொண்டு, வேதத்தின் பிற வசனங்களைப் பொருட்படுத்தாது போதித்துக்கொண்டிருக்கும் ஊழியர்கள், தாங்கள் மாத்திரமல்ல, முழு மந்தையையும் பக்கமாய் விலகிச் செல்லச் செய்துவிடுகின்றனர். ஆடுகள் அனைத்தும் தடம் புரண்டுச் செல்வதற்குக் காரணமான மேய்ப்பர்கள் அவர்கள். உன் பிறப்பின் வர்த்தமானம் என்னவென்றால்: நீ பிறந்த நாளிலே உன் தொப்புள் அறுக்கப்படவுமில்லை; நீ சுத்தமாவதற்குத் தண்ணீரினால் குளிப்பாட்டப்படவுமில்லை; உப்பால் சுத்திகரிக்கப்படவுமில்லை; துணிகளில் சுற்றப்படவுமில்லை. உனக்காகப் பரிதபித்து, இவைகளில் ஒன்றையாகிலும் உனக்குச் செய்ய ஒருகண்ணும் உன்பேரில் இரக்கமாயிருந்ததுமில்லை; நீ பிறந்தநாளில் நீ அருவருக்கப்பட்டதினால் வெளியில் எறிந்துவிடப்பட்டாய். நான் உன் அருகே கடந்துபோகும்போது, மிதிக்கப்படுவதற்கு ஏதுவாய் நீ உன் இரத்தத்தில் கிடக்கிறதைக் கண்டு, உன் இரத்தத்தில் கிடக்கிற உன்னைப்பார்த்து: பிழைத்திரு என்றேன்; ஆம், உன் இரத்தத்தில் கிடக்கிற உன்னைப்பார்த்து: பிழைத்திரு என்று சொன்னேன் (எசே 16:4-6). இதுவே கர்த்தரின் குணம், இப்படிச் நாம் செய்யவில்லையென்றால், 'நீ உன் வழியை மாற்றிமாற்றி இவ்வளவாய் விலகிப்போகிறது என்ன?' (எரேமியா 2:36) என்று கர்த்தர் நம்மைப் பார்த்து கேட்கும் காலம் வரும்.
Comments
Post a Comment