பிசாசின்
பிரித்தாளும் தந்திரம்?
பிரியமானவர்களே! மனிதர்களையும் மனிதர்களையும் இணையவிடாமல் இடையிலே மறித்து நிற்கும் பிசாசின் தந்திரங்களையும், மனிதனை மனிதன் தொட முடியாதபடி தடையாய் நிற்கும் அவன் தீவினைகளையும் அடையாளம் கண்டுகொள்ளுவதுடன், உன்னதரின் பெலத்தினால் அவைகளை உடைத்தெறிந்து, மறுபுறத்திலிருக்கும் மனிதர்களை ஆண்டவருக்காக ஆதாயம் செய்துகொள்ள அழைக்கப்பட்டவர்கள் நாம். நம்மைக் குறித்த தேவ சித்தத்தை நாம் அறிந்துகொள்வது மாத்திரமல்ல, அத்துடன் அதனையே மையப்படுத்தி நமது வாழ்க்கையையும் அமைத்துக்கொள்வது மாத்திரமல்ல, மேலும், நமது கண்களுக்கு முன்பாகவே அதனை நிறுத்தி காலமெல்லாம் நமது வாழ்க்கையின் ஓட்டத்தை வடிவமைத்துக்கொள்வது மாத்திரமல்ல, நம்முடன் இணைந்து நிற்கும் மனிதர்களின் மீதான தேவ சித்தத்தையும் நாம் அறிந்துகொள்ளுவதும், புரிந்துகொள்ளுவதும் அவசியம்.
சிலருக்கு, பிற மனிதர்களைக் குறித்த அறிவு உண்டு; ஆனால், தங்களைக் குறித்த அறிவு இல்லை; வேறு சிலருக்கோ, தங்களைப் பற்றிய அறிவு மட்டுமே உண்டு; ஆனால், பிறரைப்; பற்றிய அறிவு இல்லை. மற்றவர்களைப் புரிந்துகொள்ளாததினாலும், அறிந்துகொள்ளாததினாலும், உள்ளத்தால் அவர்களை ஏற்றுக்கொள்ளாததினாலும், குழுவாகப் பயணிக்கவேண்டிய பலர், ஆங்காங்கே தனித்தனியே சிறு சிறு புழுக்களாக ஊர்ந்து சென்றுகொண்டிருக்கின்றனர். தன்மீதான நோக்கத்தையோ அல்லது பிறர் மீதான தேவ நோக்கத்தையோ புரிந்துகொள்ளாததினால், பிறரைப் பிறனாகவே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகாரங்கொடு; அவன் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர்கொடு (நீதி 25:21) என்ற சத்தியத்தைக் கொண்டிருக்கும் வேதத்தினை கைகளில் சுமந்துகொண்டிருந்தாலும், சகோதரர்களிடத்தில்கூட அதனை அப்பியாசப்படுத்திப் பார்க்கும் பழக்கம் இல்லாதவர்களாகவே பலருடைய வாழ்க்கை இந்நாட்ளில் அமைந்துவருவது வேதனையானதே. பிசாசின் பிரித்தாளும் தந்திரங்களுக்குள் சிக்கிக்கொண்ட ஊழியர்களில் பலரும் கூட சகோதரர்கள் செய்யும் ஊழியங்களுக்கு எதிராக எழும்பி நிற்பது துக்கமானதே. தனக்குத் தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாய்ப்போம்; தனக்குத் தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்தப் பட்டணமும் எந்த வீடும் நிலைநிற்கமாட்டாது (மத் 12:25) என்ற சூத்திரத்தைக் கையிலெடுத்து, பல ஊழியர்களையும்கூட தனது வில்லில் அம்புகளாகத் தொடுத்து, ஊழியர்களுக்கும் மற்றும் ஊழியங்களுக்கும் விரோதமாக சத்துரு எய்துவருவதை நம்முடைய கண்கள் அடையாளம் கண்டுகொள்ளவேண்டியது அவசியம். ஒரு கையினால் பரலோகப் பிதாவின் வீட்டை இடித்து, மறுகையினால் சத்துருவோடு போராடுவதைப் போலக் காட்சியளிக்கும் இத்தகைய ஊழியர்கள், சத்துருவுக்குச் சாதகமானவர்களே. சகோதரனிடத்தில் காணப்படும் குற்றங்களையும், குறைகளையும் நேரடியாக சென்று உணர்த்தாமல் சந்திக்குக் கொண்டுவந்துவிடுகிறவர்கள்; இதனால், ஊழியருடைய நாமம் மாத்திரமல்ல, பரலோக தேவனின் நாமமும் பிறரால் பரிகசிக்கப்படுகின்றது என்ற மறுபக்கத்தை உணரத் தவறுபவர்கள். இத்தகைய பிசாசின் பிரித்தாளும் சூழ்ச்சியிலிருந்து கர்த்தர் நம்மைக் காப்பாராக!
அடிமைத்தனத்திற்குள் அகப்பட்டுக் கிடந்த தன் ஜனமான இஸ்ரவேல் ஜனங்களை, எகிப்திலிருந்து விடுதலையாக்கி, கானானுக்கு நேராக நடத்திக்கொண்டுவரும் மாபெரும் கர்த்தருடைய திட்டத்துடன் எகிப்துக்குள் அனுப்பப்பட்டவன் மோசே. என்றாலும், அவனோ தன்மீதான தேவனுடைய திட்டத்தை அறிந்துகொள்ளவில்லை; அவ்வாறே, அடிமைத்தனத்திற்குட்பட்டிருந்த இஸ்ரவேல் ஜனங்களும், அவனைக் குறித்து தேவனுக்கு இருந்த திட்டத்தைப் புரிந்துகொள்ளவில்லை; எனினும், எகிப்திலிருக்கும் இஸ்ரவேல் ஜனங்களை விடுதலையாக்கவே, மோசே எகிப்திற்குள் அனுப்பப்பட்டிருக்கின்றான் என்பதைப் புரிந்துகொண்ட சத்துருவோ இருவரும் பிரிந்துபோவதற்கான வேலையைச் செய்யும்படி அவர்களைத் தூண்டிவிடுகின்றான். விடுவிக்கவேண்டிய மோசேயின் மூலம் தேவன் தன் பணியினைத் தொடங்கும் முன், விடுவிக்கும்படியாக வந்தவனையே வெளியேற்றிவிடும் காரியங்கள் அரங்கேறுகின்றன.
மோசே பெரியவனான காலத்தில், அவன் தன் சகோதரரிடத்தில் போய், அவர்கள் சுமைசுமக்கிறதைப் பார்த்து, தன் சகோதரராகிய எபிரெயரில் ஒருவனை ஒரு எகிப்தியன் அடிக்கிறதைக் கண்டு, அங்கும் இங்கும் பார்த்து, ஒருவனும் இல்லை என்று அறிந்து, எகிப்தியனை வெட்டி, அவனை மணலிலே புதைத்துப்போட்டான். அவன் மறுநாளிலும் வெளியே போனபோது, எபிரெய மனுஷர் இருவர் சண்டைபண்ணிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவன் அநியாயஞ் செய்கிறவனை நோக்கி: நீ உன் தோழனை அடிக்கிறது என்ன என்று கேட்டான். அதற்கு அவன்: எங்கள்மேல் உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யார்? நீ எகிப்தியனைக் கொன்றுபோட்டதுபோல, என்னையும் கொன்றுபோட நினைக்கிறாயோ என்றான். அப்பொழுது மோசே காரியம் நிச்சயமாக வெளிப்பட்டது என்று பயந்தான் (யாத் 2:11-14). தேவன் தனது திட்டத்தை அரங்கேற்றும் முன், மோசேயும் அவசரப்பட்டுவிட்டான், அவ்வாறே இஸ்ரவேல் ஜனங்களும் அவசரப்பட்டு மோசேக்கு எதிராகப் பேசிவிட்டார்கள். மீட்பிற்காக வந்தவனை மறுதலித்ததால், விடுதலையின் வருடம் தள்ளிப்போனது, அடிமைத்தனத்தின் ஆண்டுகளோ கூடிப்போனது.
நம்முடைய வாழ்க்கையிலும் இப்படிப்பட்ட காரியங்கள் நிகழ்ந்துவிடக்கூடாது. ஜனங்களை விடுதலையாக்கும் பணியில் முன்னேறிச் செல்லும் நாம், நமது பணிகளைத் தொடங்கும் முன்னமே சத்துரு நம்மை அவ்விடத்திலிருந்து வெளியேற்றிவிட முயற்சிப்பான்; எந்த மனிதரை கிறிஸ்துவுக்காக ஆதாயம்பண்ண விரும்புகின்றோமோ, அவர்களே நம்மை வெறுத்துவிடும் நிலைக்குள் உறவினை உடைக்கும்படியான திட்டங்களைத் உள்ளே நுழைப்பான். என்றபோதிலும், தேவனுடைய சித்தத்தையும், திட்டத்தையும் சுமந்து வந்திருந்திருக்கும் நாம், சத்துருவின் வலைக்குள் நமது வாழ்க்கையினைத் தள்ளி, அவர் அழைத்துவந்திருக்கும் இடத்திலிருந்து ஓடிவிடாமலும், வெளியேறிவிடாலும் பொறுமையோடு அவரது காலங்களுக்காகக் காத்திருக்கவேண்டியது அவசியம்.
எத்தனையாய் எகிப்திலிருந்து மோசே வெளியேறி ஓடினாலும், உயிருக்குப் பயந்து அதன் எல்லையினைவிட்டே அவன் வெளியேறினாலும், மீண்டும் அவனையே தன் ஜனத்தை விடுவிக்கும்படியாக எகிப்துக்கு அனுப்பினார் ஆண்டவர். 'உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யார் என்று சொல்லி இஸ்ரவேல் ஜனங்கள் மறுதலித்த மோசேயையே கர்த்தர் தலைவனாகவும் மீட்பனாகவும் அனுப்பினார் (அப் 7:35) என்றே மோசேயைக் குறித்து வேதத்தில் வாசிக்கின்றோம். இத்தகைய நிலையிலும், மோசேயை கொலைசெய்யத் தேடிய பார்வோன் (யாத். 2:15) மரித்துப்போனபோதிலும், உடைந்துபோயிருந்த இஸ்ரவேல் ஜனங்களுக்கும் மோசேக்கும் இடையிலான உறவை சரிசெய்வதுதான், மீட்பிற்கான முதற்பணியாயிருந்தது. அவ்வாறே, 'அவர்கள் என்னை நம்பார்கள்; என் வாக்குக்குச் செவிகொடார்கள்; கர்த்தர் உனக்குத் தரிசனமாகவில்லை என்று சொல்லுவார்கள்' (யாத் 4:1) என்பதுதானே மோசேயின் வாய்மொழியாகவும் இருந்தது. மோசேயின் கையும், கையிலிருந்த கோலும் (யாத். 4:6,2) முதன் முதலாக பார்வோனுக்கு முன் நிரூபிப்பதற்காகவோ அல்லது எகிப்து தேசத்து ஜனங்களுக்கு அடையாளமாக நிரூபிப்பதற்காகவோ அல்ல, இஸ்ரவேலருக்காகவே அடையாளமாகப் பயன்படுத்தப்பட்டது. சில நேரங்களில், யாரை நாம் விடுவிக்கும்படியாகச் செல்லுகின்றோமோ, அவர்களே நம்மைப் புரிந்துகொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும் தயங்கும் சூழ்நிலை உண்டாகக்கூடும். மனிதர்களைப் பிடித்துவைத்திருக்கும் சத்துருவினுடனான போராட்டம் இரண்டாவதே; முதல் போராட்டம், விடுதலையாக்கப்படவேண்டிய சகோதரர்களுடனானதே. இதனை நாம் புரிந்துகொள்ளவேண்டியது அவசியம். சத்துருவுடன் போராடும் முன்பாக, சகோதரர்களுடன் போராடி, போர்முனையை விட்டே ஓடிவிட்டவர்கள் அநேகர்.
யோசேப்பின் வாழ்க்கையிலும் இதற்கொத்ததான நிகழ்வு நடைபெற்றதே. குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காகத்தான் யோசேப்பை தேவன் தெரிந்துகொண்டார், என்றபோதிலும் அவனது உடன் பிறந்த சகோதரர்களால் அவனைப் புரிந்துகொள்ளமுடியவில்லை. யோசேப்பு தன் சகோதரர்களை நோக்கி: நான் கண்ட சொப்பனத்தைக் கேளுங்கள்: நாம் வயலில் அறுத்த அரிகளைக் கட்டிக்கொண்டிருந்தோம்; அப்பொழுது என்னுடைய அரிக்கட்டு நிமிர்ந்திருந்தது; உங்கள் அரிக்கட்டு என் அரிக்கட்டைச் சுற்றி வணங்கி நின்றது என்றான். இதனைக் கேட்ட மாத்திரத்தில், யோசேப்பின் சகோதரர்கள் கோபமூண்டவர்களாக அவனை நோக்கி: நீ எங்கள்மேல் துரைத்தனம்பண்ணுவாயோ? நீ எங்களை ஆளப்போகிறாயோ? என்று சொல்லி, அவனை அவன் சொப்பனங்களின் நிமித்தமும், அவன் வார்த்தைகளின் நிமித்தமும் இன்னும் அதிகமாய்ப் பகைத்தார்கள் (ஆதி 37:6-8) என்று வாசிக்கின்றோமே. பகைத்தது மாத்திரமல்ல, அவனை அழித்துவிடவேண்டும் என்ற நோக்கத்திலேயே அவர்கள் வரும் நாட்களில் செயல்பட்டார்கள்.
பாழுங் குழியிலே தூக்கிப்போட்டார்கள், இஸ்மவேலரிடத்தில் விற்றுப்போட்டார்கள். இச்செயல்கள் அனைத்தும் வெளிப்படுத்தும் ரகசியம் என்ன? எவர்களை காப்பாற்றும்படியாக தேவன் யோசேப்பை தெரிந்துகொண்டாரோ, அவர்களையே விட்டுப் பிரியும் நிலை யொசேப்புக்கு உண்டானது என்பதுதானே. என்றாலும், யோசேப்பின் வாழ்க்கையில் தேவன் அதனை நன்மையாக மாற்றிவிட்டார். எந்த யோசேப்பை அவர்கள் பகைத்தார்களோ, அவனைத்தான் அவர்களை போஷிப்பதற்குப் பயன்படுத்தினார் கர்த்தர். என்னை இவ்விடத்தில் வரும்படி விற்றுப்போட்டதினால், நீங்கள் சஞ்சலப்படவேண்டாம்; அது உங்களுக்கு விசனமாயிருக்கவும் வேண்டாம்; ஜீவரட்சணை செய்யும்படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார் (ஆதி 45:5) என்று தன் சகோதரர்களுடனான உறவை மீண்டும் சீர்படுத்திக்கொண்டான் யோசேப்பு.
அவ்வாறே, பாவிகளை இரட்சிப்பதற்காக இந்த உலகத்திற்கு வந்தார் இயேசு கிறிஸ்து. அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை (யோவா 1:11) என்றுதானே வாசிக்கின்றோம். எனினும், வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று (சங் 118:22). சிலுவையில் அறையப்பட்ட இயேசு சிந்திய இரத்தத்தினாலேயே மனுக்குலத்திற்கு இன்றும் பாவத்திலிருந்து இரட்சிப்பு கிடைத்துக்கொண்டிருக்கிறது. இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக்காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென் (வெளி 1:7) என்பதுதானே சத்தியம். ஆம், சத்துருவின் பிரித்தாளும் தந்திரத்தையே, தனக்குச் சாதகமாக மாற்றிவிட்டார் பரலோக தேவன். நாம் ஊழியம் செய்யும் இடங்களில், மக்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையில் சத்துரு உருவாக்கும் பிளவுகளை அடையாளம் கண்டுகொள்வோம். துரத்தப்படலாம், விற்கப்படலாம் அல்லது இயேசு சிலுவையில் அறையப்பட்டதைப்போல நாமும் பாடுகைளச் சந்திக்க நேரிடலாம் என்றாலும் நமது வாழ்க்கையின் மூலம் ஜனங்கள் விடுதலையாகட்டும்.
அதுபோலவே, இணைந்திருந்தால் குடும்பத்தின் வேலிக்குள் உட்புகுவது இயலாத காரியம் என்பதை உணர்ந்த சத்துரு, கணவனையும் மனைவியையும் தனித்தனியே பிரிந்துபோகச் செய்து, பல குடும்பங்களை இன்றைய நாட்களில் வேட்டையாடிக்கொண்டிருக்கின்றான். கிறிஸ்துவை வெளிப்படுத்தும் மாதிரியாய் இருக்கவேண்டிய குடும்பங்களை, மண்மேடுகளாக்கிக்கொண்டிருக்கின்றான். இத்தகைய நிலையில் சிக்கித் தவிக்கும் குடும்பங்கள் அநேகம். பிரிக்க வரும் பிசாசின் பிரச்சனைகளை இணைந்து நின்று எதிர்த்து, பாதங்களுக்குக் கீழாக்கி, குடும்பத்தின் பாதுகாப்பினை உறுதிசெய்யவேண்டிய கணவனும் மனைவியும், குஞ்சுகளாம் பிள்ளைகளைத் தவிக்கவிட்டு விட்டு, குடும்பம் என்ற கூட்டை விட்டுக் கலைந்து செல்வது வேதனையானதே. இத்தகைய சத்துருவின் வலையிலிருந்து தேவன் நம்மை விலக்கிக்காப்பாராக.
தனது பெலத்தையும், அத்துடன் தேவனது பெலத்தையும் புரிந்த பிசாசு, எத்தனையாய் இயேசு கிறிஸ்துவின் வஸ்திரங்களைக் கழற்றி, அவரை அரைநிர்வாண கோலமாக்கி சத்துரு அவரை சிலுவையில் அறைந்தாலும், வெற்றியோ இயேசு கிறிஸ்துவின் பக்கமே எதிரொலித்தது. துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையில் வெற்றிசிறந்தார் (கொலோ. 2:15) என்றுதானே வாசிக்கின்றோம். சிலுவையில் இயேசு கிறிஸ்துவை அறைந்து முடித்த பின்பு, நூற்றுக்கு அதிபதியும், அவனோடேகூட இயேசுவைக் காவல்காத்திருந்தவர்களும், பூமியதிர்ச்சியையும் சம்பவித்த காரியங்களையும் கண்டு, மிகவும் பயந்து: மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன் என்றார்கள் (மத் 27:54) என்றுதானே அவரது வெற்றியின் சத்தத்தினை சத்திய வேதம் வெளிப்படுத்துகின்றது. எத்தனையாய் பிரிவினையின் ஆயுதத்தை சத்துரு உபயோகித்தாலும், நாம் தேவனையே சார்ந்து நிற்போமென்றால், அது சத்துருவுக்கு பெரிய வினையாகத்தான் முடியும்.
Comments
Post a Comment