மகிமையே மகிழ்ச்சி
தூதன் அவனை நோக்கி: சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது; உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக. (லூக் 1:13)
'குறைவுகள்' நாம் கூனிக்குறுகுவதற்கல்ல; மாறாக, கூடவே அவர் நம்மை வைத்துக்கொள்வதற்கே. ஜனங்களுக்காக தேவசந்நிதியில் ஆசாரியனான சகரியா பிரவேசித்திருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் குறைவுள்ளவனாகவே அவன் காணப்பட்டான். ஜனங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அதே வேளையில், தன்னுடைய விண்ணப்பமும் கேட்கப்பட்டுவிடாதா என்ற எதிர்பார்ப்புடனேயே அவன் வாழ்ந்துகொண்டிருந்தான். ஒருவேளை 'தேவாலயத்துக்குள் தூபங்காட்டுகிறதற்குச் சீட்டைப் பெற்றதும்' (லூக். 1:9), முதலில் தன்னுடைய தேவைகளுக்காக அவன் விண்ணப்பம் செய்திருக்கலாம்; அல்லது, இவ்வளவு நாள் விண்ணப்பம் செய்துவிட்டேன், இப்போதோ, 'இருவரும் வயதுசென்றவர்களாகிவிட்டோம்' என்ற எண்ணத்தில் விசுவாசக் குறைவினால் விண்ணப்பிப்பதை நிறுத்தியிருந்திருக்கலாம். என்றாலும், அன்றோ அல்லது என்றோ அவன் செய்த விண்ணப்பத்திற்கு பதில் கிடைத்தது. அவர்கள் இருவரும் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தபோதிலும் (லூக் 1:6), அவர்களுடைய வாழ்க்கையில் குறைவு காணப்பட்டது. என்றாலும் வேளை வந்தபோது அவர்களது வாழ்க்கையின் குறை, தேவனால் நிவிர்த்திசெய்யப்பட்டது.
கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஓர் கலியாணம் நடைபெற்றபோது, இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். அவர் அந்த கலியாண வீட்டில் இருந்தபோதிலும், திராட்சரசம் குறைவுபட்டது (யோவா 2:2,3). குறைவு உண்டாகிவிட்டபோதிலும், 'என்வேளை இன்னும் வரவில்லை' (யோவான் 2:4) என்றே கூறுகின்றார் இயேசு கிறிஸ்து. வேளை வந்தபோதோ, தண்ணீர் திராட்சரசமாக மாறினதே.
மேலும், அவர் அப்புறம் போகையில் பிறவிக் குருடனாகிய ஒரு மனுஷனைக் கண்டார். அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன் செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள். இயேசு பிரதியுத்தரமாக: அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும் பொருட்டு இப்படிப் பிறந்தான் (யோவா 9:1-3) என்று சொன்னதோடு, அவனை நோக்கி: நீ போய், ஸீலோவாம் குளத்திலே கழுவு என்றார். ஸீலோவாம் என்பதற்கு அனுப்பப்பட்டவன் என்று அர்த்தமாம். அப்படியே அவன் போய்க் கழுவி, பார்வையடைந்தவனாய்த் திரும்பிவந்தான் (யோவா 9:7). குறைவுகள் நம்முடைய வாழ்க்கையில் காணப்படுமென்றால், அது தேவனுடைய கிரியைகள் நம்மிடத்தில் வெளிப்படுவதற்காகவே.
எனினும், சிலருடைய வாழ்க்கையிலோ, 'குறைவுகள், குறைவுளாகவே விடப்பட்டுவிடுவதால், தேவனுடைய கரம் குறுகிப்போயிற்று என்று சொல்லிவிடமுடியாது' என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார் (பிலி 4:19) என்று பவுல் எழுதுகின்றாரே. இதன் அர்த்தமென்ன? இவ்வுலகத்தில் ஒருவேளை குறைவுள்ளவர்களாக நாம் காணப்பட்டாலும், 'கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நாம் நிறைவாகிவிடுவோம்' என்பதுதானே. எனவே, இவ்வுலகத்தில் நமக்கு இருக்கும் குறைவுகளைக் குறித்து நாம் கவலைகொள்ளவேண்டிய அவசியமில்லை; பரலோகம் நம்மை நிறைவாக்கும்.
லாசரு என்னும் பேர்கொண்ட ஒரு தரித்திரன், பருக்கள் நிறைந்தவனாய், ஐசுவரியவானுடைய வாசலருகே கிடந்தான். நாய்கள் வந்து அவன் பருக்களை நக்கிற்று; என்றபோதிலும், அவன் மரித்தபோது, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான் (லூக். 16:19,20,22). இவ்வுலகத்தில் அவனுக்குக் கிடைக்காத சந்தோஷமும், மகிழ்ச்சியும் மறுவாழ்வில் ஆபிரகாமின் மடியில் அவனுக்குக் கிடைத்தது. உலகத்தின் பார்வையில், பிறருடைய கண்களுக்கு முன் ஒன்றுமில்லாதவன் அவன். பசியை ஆற்றிக்கொள்ளக்கூட பிறரையே சார்ந்திருக்கவேண்டியவன்; என்றாலும், அவனுடைய குறைவுகள் அனைத்தும் 'மகிமையிலே நிறைவானது.' மகிமையே நம்முடைய வாழ்க்கையை நிறைவாக்கும்; எனவே, இம்மைக்காக பரிதவித்து, நம்முடைய சந்தோஷத்தைப் பறிகொடுத்துவிடவேண்டாம்; மகிமையே மனதை நிறைக்கட்டும்.
Comments
Post a Comment