Skip to main content

எழுத்தாணிகள்

எழுத்தாணிகள்

 

ஆரம்பமுதல் கண்ணாரக்கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக் குறித்துச் சரித்திரம் எழுத அநேகம்பேர் ஏற்பட்டபடியினால், ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறியவேண்டுமென்று, அவைகளை ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று. (லூக் 1:1-4)

இது மருத்வரான லூக்கா கிறிஸ்துவைப் பற்றி எழுதிய சுவிசேஷத்தின் தொடக்க வரிகள். இயேசுவைக் கண்ணாரக் கண்டு போதித்தவர்கள் என்று சிலரை லூக்கா அடையாளம் காட்டுகின்றார்; அப்படி போதித்தவர்கள் 'உண்மையுள்ள மனுஷர்களிடத்தில் அந்தப் போதனைகளை ஒப்புவித்தார்கள்'; அதுமாத்திரமல்ல, அவர்களையும் 'உண்மையுள்ள மனுஷர்களிடத்தில் ஒப்புவிக்கும்படி' அறிவுரை சொன்னார்கள். எனவே பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதும்போது, 'அநேக சாட்சிகளுக்கு முன்பாக நீ என்னிடத்தில் கேட்டவைகளை மற்றவர்களுக்குப் போதிக்கத்தக்க உண்மையுள்ள மனுஷர்களிடத்தில் ஒப்புவி' (2தீமோ. 2:2) என்று எழுதுகின்றார். தேவனிடத்திலிருந்தும், நம்மை நடத்திய ஆவிக்குரிய தலைவர்களிடத்திலிருந்தும் நாம் பெற்றுக்கொண்டவைகளை அடுத்தத் தலைமுறையினருக்கு, வரும் சந்ததியினருக்குக் கடத்தவேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு. இதைச் செய்ய நாம் தவறிவிட்டால், சந்ததிக்குச் சந்ததி தொடர்பில்லாமலும், முன்னோர்கள் செய்ததைப் பற்றிய அறிவில்லாமலும் போய்விடும்.

இப்படி ஒப்புக்கொடுக்கப்பட்டவைகளைப் பெற்றுக்கொண்டவர்களுள் ஒருவரே லூக்கா. அவர்கள் போதித்தவைகளை எங்களுக்கு ஒப்புவித்தார்கள் என்றே அறிக்கை செய்கிறார். ஒப்புவிக்கப்பட்டவைகளை சரித்திரமாக எழுத அநேகர் தேவைப்பட்டபடியினால், அந்த எழுத்துப் பணிக்குத் தன்னைத் தத்தம் செய்தார் லூக்கா. பவுலுடன் ஊழியத்தில் இணைந்திருந்தவர்களுள் ஒருவர் லூக்கா; பவுலால் நடத்தப்பட்டவரும் கூட. மருத்துவம் கற்றிருந்த லூக்கா பவுலோடு கூடவே இருந்ததாக பவுல் தனது நிருபத்தில் எழுதுகின்றார். 'பிரியமான வைத்தியனாகிய லூக்கா' (கொலோ. 4:14) என்றும், 'லூக்கா மாத்திரம் என்னோடே இருக்கிறான்' (2தீமோ. 4:11) என்றும், 'உடன் வேலையாட்களாகிய லூக்கா' (பிலே 1:24) என்றும் லூக்காவைக் குறித்து பவுல் தனது நிருபத்தில் குறிப்பிடுகின்றார். மருத்துவம் அறிந்திருந்த லூக்கா, பவுலின் பிரசங்கத்தைக் கேட்கவருகின்ற ஜனங்களுக்கும், பவுலுக்கும் தான் அறிந்திருந்த மருத்துத்தின் மூலமாக உதவி செய்திருப்பார். 'என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது' (2கொரி. 12:7) என்ற பவுலுக்கு மருத்துவரான லூக்கா உடனிருப்பது உறுதுணையாயிருந்திருக்கும். என்றாலும், மருத்துவத்தை மாத்திரமே மனதில் கொள்ளாமல், கற்றதை மாத்திரமே கவனத்தில் கொள்ளாமல், பவுலோடும் பிற அப்போஸ்தலர்களோடும் உடனிருக்கும் நாட்களில், அவர்கள் மூலமாக தான் கேட்கும் உபதேசங்களையும், சத்தியங்களையும், இயேசுவைப் பற்றிய காரியங்களையும் எழுத்தாக்கினார் லூக்கா; இது எத்தனை பெரிய செயல். பிற சுவிசேஷங்களில் பதிந்திராத இயேசு செய்த ஆறு அற்புதங்கள், இயேசு உபதேசித்த பத்து உவமைகள் மேலும், இயேசுவின் இருபத்திரண்டு சம்பவங்களை லூக்கா தனது சுவிசேஷத்தில் குறிப்பிட்டிருப்பது, அவர் எத்தனையாய் 'திட்டமாய் இயேசுவின் ஊழியத்தை விசாரித்து அறிந்ததையே' நமக்குச் எடுத்துக்காட்டுகின்றது.

அப்படியே மாற்குவும், மாற்கு இயேசு வாழ்ந்தபோது இருந்தவரல்ல. இயேசுவின் வாழ்க்கையைப் பிரதிபலித்துக்கொண்டிருந்த சீஷர்களோடும், அப்போஸ்தலர்களோடும் வாழ்ந்தவர்; பர்னபாவுக்கு இனத்தவர் (கொலோ 4:10), 'என் குமாரனாகிய மாற்கு' என்று பேதுருவால் அழைக்கப்பட்டவர் (1பேது. 5:13), 'உடன்வேலையாள்' என்ற பவுலின் பட்டியலில் இடம் பெற்றிருந்தவன் (பிலே. 1:24). என்றபோதிலும், உடன் இருப்பதை மாத்திரமே ஊழியம் என்று மாற்கு கருதவில்லை, தன்னோடிருப்போர் செய்யும் உபதேசங்களை புத்தகமாகவும் தொகுத்து எழுதினான் மாற்கு. மத்தேயுவும், யோவானும் நேரடியாக இயேசுவைக் கண்டவர்கள்; மாற்குவும், லூக்காவும் அப்போஸ்தலர்களோடு வாழ்ந்தவர்கள். மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு சுவிசேஷங்களில், மாற்குவும், லூக்காவும் எழுதியவையும் சுவிசேஷமாக இணைந்துவிட்டதே; எத்தனை ஆனந்தம்.

எழுதுகிற நபர்கள் ஆண்டவருக்கு அநேகர் தேவை. சரித்திரத்தை அடுத்த சந்ததிக்குக் கொண்டு செல்வோர் இவர்களே. நாம் உபதேசித்தவைகள், போதித்தவைகள், பிரசங்கித்தவைகள் நமது மரணத்திற்குப் பின்னும் மக்களைச் சென்றடையவேண்டுமென்றால் அவைகளை எழுத்துருவாக்குவதற்கு நீங்கள் மறுப்புச் சொல்லாதிருங்கள். என்ன நடந்தது? எப்போது நடந்தது? எங்கே நடந்தது? யாரால் நிகழ்ந்தது? தேவன் என்ன செய்தார்:? தேவனின் குணம் என்ன? தேவனின் விருப்பம் என்ன? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை சொல்லும் வேதம் ஆவியானவரின் துணைகொண்டு பலரால் எழுதப்பட்டதுதானே. தேவன் உங்களுக்குக் கொடுக்கும் பொக்கிஷத்தைப் பத்திரப்படுத்தி, தலைமுறைக்குச் சேர்க்க சோர்வுறவேண்டாம். தேவன் எத்தனையோ காரியங்களை மோசேயுடன் பேசியிருந்தாலும், மோசேயை நோக்கி: இதை நினைவுகூரும்பொருட்டு, நீ ஒரு புஸ்தகத்தில் எழுதி யோசுவாவின் செவிகேட்கும்படி வாசி என்றார் (யாத் 17:14). மோசே கர்த்தருடைய வார்த்தைகள் எல்லாவற்றையும் எழுதிவைத்தபடியினாலேயே (யாத். 24:4) இன்று வேதமாக அதனை நாம் வாசித்துக்கொண்டிருக்கின்றோம். தேவனோடு தாங்கள் வாழும் வாழ்க்கை குறித்தும், தேவன் தங்களில் செயல்பட்டதைக் குறித்தும் சரித்திரம் எழுத அநேகம் பேர் தேவனுக்குத் தேவை.

சில நாட்களுக்கு முன்னர், 'நீ தரிசனத்தை எழுதி, அதைக் கடந்தோடுகிறவன் வாசிக்கும்படிப் பலகைகளிலே தீர்க்கமாயக வரை' (ஆபகூக் 2:2) என்ற வசனத்தை கர்த்தர் எனக்கு திடீரென ஞாபகப்படுத்த, அந்த வசனத்தின் சத்தியத்தினை அறிந்துகொள்ள முயன்றேன். அப்போது கர்த்தர் எனக்கு வெளிப்படுத்தின காரியம் எனக்கு மேலும் உற்சாகத்தைக் கொண்டுவந்தது. ஒவ்வொரு நாளும் நான் எழுதிக்கொண்டுவரும் செய்திகளை 'www.youthline.in' என்ற இணையதளத்தில் வெளியிட்டுவருகின்றேன். பயணித்துக்கொண்டிருந்தாலும், வீட்டிலிருந்தாலும், வேலையிலிருந்தாலும் தங்களது கைபேசியிலேயே இச்செய்தியினை வாசித்துவிட முடியும். கடந்தோடும் மனிதன், கையில ;வைத்திருக்கும் கைபேசியாகிய பலகையிலேயே நான் எழுதிக்கொண்டிருக்கிறேன் என்பதை நான் உணர்ந்துகொண்டபோது, எனக்குள் மேலும் உற்சாகம் அதிகரித்தது. பிரியமானவர்களே, பணத்தைப் பத்திரப்படுத்துவது போல, நம் மனதில் உள்ளவற்றைப் பத்திரப்படுத்த எழுத்து போதுமானது. தேவனைக்குறித்தும் எழுதப்பட்டுள்ள எழுத்தே அதிகம் நமக்கு எடுத்துச் சொல்லுகின்றது.

வரும் சந்ததியினருக்கு, தேவனுடன் நாம் கொண்டிருந்த உறவைத் தெரிவிக்கவேண்டுமெனில், அதனை எழுதிப் பத்திரப்படுத்துவதே சிறந்த வழி. லூக்கா ஓர் மருத்துவர், மருந்துகளால் வியாதிகளுக்கு சிகிச்சை கொடுக்க அறிந்திருந்தவர். என்றபோதிலும், பரம வைத்தியனான இயேசுவுடன் லூக்காவுக்கு உண்டான தொடர்பு, அவரை சரித்திர எழுத்தாளனாக மாற்றியது. பவுல் இன்று இல்லை, ஆனால் அவரது நிருபங்கள் நம்மை வளர்க்கப் போதுமான ஞானப்பாலாக இருக்கின்றதே; அநேக சபைகளைக் கட்டியெழுப்பப் போதுமானதாயிருக்கின்றதே.

முகமுகமாய் தேவன் மோசேயோடு பேசியிருந்தாலும், தனது மகிமையைக் காணும்படியாக அவனுக்கு கிருபை செய்திருந்தாலும், உபதேசிப்பதற்கோ, 'நான் எழுதிய நியாயப்பிரமாணத்தையும் கற்பனைகளையும் கொடுப்பேன்' என்றார் (யாத். 24:12). 'எழுதிக்கொடுப்பேன்' என்று தேவன் சொன்னதற்குக் காரணம் என்ன? எழுதப்பட்டதாக இருந்தால் மாத்திரமே, மோசேயின் மரணத்திற்குப் பின்னர் அடுத்த தலைவனிடத்தில் அதனை ஒப்புவிக்கமுடியும். கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே பிரயாணங்களையும் மோசே எழுதிவைத்தான் (எண் 33:2). லேவியராகிய ஆசாரியரிடத்திலிருக்கிற நியாயப்பிரமாண நூலைப்பார்த்து, தனக்காக ஒரு பிரதியை எழுதி, தன்னிடத்தில் வைத்துக்கொண்டு, தன் ஜீவனுள்ள நாளெல்லாம் அதை வாசிக்கக்கடவன்; இப்படிச் செய்வதினால், தானும் தன் குமாரரும் இஸ்ரவேலின் நடுவே தங்கள் ராஜ்யத்திலே நீடித்து வாழுவார்கள் (உபா 17:20) என்றார் கர்த்தர். இன்றோ, பார்த்து எழுதும் கஷ்டம் நமக்கு இல்லை, வேதாகமம் அழககாக அச்சடிக்கப்பட்டு நமது கரங்களை வந்தடைந்துள்ளது. மோசே கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை பேசிவிட்டு, உபதேசித்துவிட்டு மாத்டதிரம் சென்றுவிடவில்லை அவைகளை எழுதி ஒப்புவித்தான் (உபா. 31:9).

யூதாவும் தனது நிருபத்தில், பிரியமானவர்களே, பொதுவான இரட்சிப்பைக்குறித்து உங்களுக்கு எழுதும்படி நான் மிகவும் கருத்துள்ளவனாயிருக்கையில், பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் போராடவேண்டுமென்று உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாய்க் கண்டது (யூதா 1:3) என்று எழுதுகின்றார். பிசாசு இயேசுவை சோதித்தபோது, 'மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே' (மத். 4:4) என்றும், 'உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்று எழுதியிருக்கிறதே' (மத். 4:7) என்றும், 'அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே' (மத். 4:10) என்றும் சொல்லி பிசாசை ஜெயித்தாரல்லவா. சத்துருவை மேற்கொண்டு ஜெயிக்கும்படியாக, வேதத்தின் மகத்துவங்கள் நமக்கு எழுதிக்கொடுக்கப்பட்டிருக்கின்றது (ஓசியா 8:12).

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் உன்னோடே சொன்ன எல்லா வார்த்தைகளையும் ஒரு புஸ்தகத்தில் எழுதிக்கொள் (எரே 30:2) என்றார். தேவன் சொன்னவைகளை மனதில் எத்தனை நாட்கள் நம்மால் ஞாபகத்தில் கொண்டிருக்க முடியும். நாட்கள் செல்லச் செல்ல கொஞ்சம் கொஞ்சமாய் தேவன் பேசினவைகளை நாம் மறந்துவிடும் நிலை ஏற்படுமே. முதிர்வயதான பின்னரும், அதனை மற்றவர்களுக்குக் கடத்தமுடியாத நிலையில் காணப்படுவோமே; எனவே, 'எல்லா வார்த்தைகளையும் எழுதிக்கொள்' என்று கர்த்தர் சொல்லுகின்றார்.

கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த விலைமதிப்பற்ற செய்திகள், ஆலோசனைகள், கட்டுரைகள், கருத்துக்கள், கவிதைகள், கேள்விகளுக்கான பதில்கள் போன்றவற்றை எழுதிவைத்துள்ளீர்களா? உங்கள் மரணத்திற்குப் பின்னர் பலரிடம் பேசும் உங்கள் வாயாக அந்த எழுத்துக்கள் மாறும் என்பதை மறந்துவிடாதீர்கள்.  

Comments

Popular posts from this blog

கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்

  கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்   வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கிறிஸ்துவின் குணங்களை வெளிப்படுத்தவேண்டியதும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டியதும் கிறிஸ்தவனின் தலையாயக் கடமை.  கிறிஸ்துவுக்குள்  வாழும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சில உண்மைகளை பவுல் எபேசு சபைக்குச் சுட்டிக்காட்டுகின்றார். கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்  (எபே. 1:3),  பாவமன்னிப்பாகிய மீட்பு  (எபே. 1:7) இவைகள் பொதிந்திருக்கின்றன. ஆனால், இவ்விரண்டிற்கும் பலர் முக்கியத்துவம் கொடுக்காமல், உலகத்தின் ஆசீர்வாதங்களையே அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். பாவமன்னிப்பினைப் பெறாமல், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறாமல், உலகத்தின் ஆசீர்வாதங்களுக்காகவே அவரின் பின்னே ஓடினால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் முடிவு பரிதாபமாகவே இருக்கும். உன்னதங்களில் உட்காரவேண்டிய நாம் உலகத்தோடு ஒட்டிவிடுவோம், மணவாளனோடு வாழவேண்டிய நாம் மண்ணுக்காக வாழ்ந்துவிடுவோம். கிறிஸ்துவிடம் பிரதானமாய் பாவமன்னிப்பையே முதலில் பெற நாடுவோம்; அதற்காகத்தானே பிதா இயேசுவை இந்த பூமியில் அனுப்பினார். எனவே, பிதாவின் பி...

இறைச்சியா? இச்சையா?

இறைச்சியா?  இச்சையா? 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்' (மத். 6:11) என்றும், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத். 6:34) என்றும் பிதாவை நோக்கி ஜெபிக்க இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக்கொடுத்திருந்தபோதிலும், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே 'உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்' (மத். 6:8) என்பதுதானே பிதாவைக் குறித்து இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிமுகம். 'முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்' (மாற். 7:27) என்பதுதான் அவரது விருப்பமும் கூட. 'வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (மத். 10:10) என்றும், 'வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (லூக். 10:7; 1தீமோ. 5:18) என்றும் நாம் வாசிக்கின்றோமே. அப்படியிருக்க, 'ஆகாரத்திற்காக வேலை' மற்றும் 'கூலிக்காக வேலை' என்ற என்ற பார்வையில் நமது பயணம் தொடர்ந்துவிடக்கூடாததல்லவா! 'இழிவான ஆதாயம்' நமது வழிகளை மாற்றிவிடக்...

வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்

  வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்   அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது,  இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.  ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்;  ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.(லூக் 4:25-27) இஸ்ரவேலின் தேவனாக இருந்தபோதிலும், இஸ்ரவேல் தேசத்திலேயே தனது குமாரனை மேசியாவாகப் பிறக்கச் செய்தபோதிலும், பஞ்ச காலத்தின்போது, இஸ்ரவேலருக்குள் இருந்த அநேகம் விதவைகள் போஷிக்கப்படாமற்போனதற்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், ந...