சத்துருவை வீழ்த்தும் சத்தியம்
மற்றவர்களை ரட்சித்தான்; தன்னைக் தான் ரட்சித்துக்கொள்ளத் திராணியில்லை; இவன் இஸ்ரவேலின் ராஜாவானால் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கிவரட்டும், அப்பொழுது இவனை விசுவாசிப்போம்.(மத் 27:42)
இயேசு கிறிஸ்து சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்தபோது, 'மற்றவர்களை ரட்சித்தான்; தன்னைக் தான் ரட்சித்துக்கொள்ளத் திராணியில்லை' (மத் 27:42) என்று ஜனங்கள் அவரை நிந்தித்தனர். தன்னை அல்ல, பிறரை இரட்சிப்பதற்காகவே சிலுவையில் இயேசு தொங்கிக்கொண்டிருக்கிறார் என்பதை அறியாத ஜனங்கள் அவர்கள். பிறருடைய ஜீவனைக் காக்க, தன்னுடைய ஜீவனை கடைசிச் சொட்டு ரத்தம் சிந்தும்வரை வெறுமையாக்கினார் இயேசு. ஆனால், இன்றோ 'தன்னை ரட்சித்தான், மற்றவர்களை ரட்சிக்கத் திராணியில்லை' என்று ஜனங்கள் நிந்திக்குமளவிற்கு பலரது வாழ்க்கை மாறிவிட்டது. நாம் நம்மை அல்ல, மற்றவர்களின் ஜீவனைக் காப்பாற்ற ஜீவனைக் கொடுக்க அழைக்கப்பட்டவர்கள். நான் பிதாவை வேண்டிக்கொண்டால், பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதர்கள் அனுப்பப்படுவார்கள் (மத் 26:53) என்றபோதிலும், பலியாவதையே தெரிந்துகொண்டார் இயேசு. ஆனால், இன்று பன்னிரெண்டு லேகியோனைத்தான் எதிர்பார்க்கின்றனர் அநேகர், பலியாகவோ எதிர்த்து நிற்கின்றனர்.
இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றும் நாம் நமக்கு நேரிடும் அத்தனை சோதனைகளிலும், வேதனைகளின் மத்தியிலும் இயேசு கிறிஸ்துவையே நாம் நோக்கிப்பார்த்தால், இடறாமல் இவ்வுலக வாழ்க்கையில் பயணிக்கலாம். இயேசு சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்தபோது, வலியின் மத்தியில் இருந்த அவரை அங்கிருந்தோர் வல்லமை இழந்தவராகவே பார்த்தனர். உன்னை நீயே ரட்சித்துக்கொள்; நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையிலிருந்து இறங்கிவா (மத். 27:40) என்று அவரை பரிகசித்தனர்.தேவன்மேல் நம்பிக்கையாயிருந்தானே; அவர் இவன்மேல் பிரியமாயிருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்றார்கள் (மத் 27:43). அப்படியே, இயேசு இரவும் பகலும் நாற்பதுநாள் உபவாசமாயிருந்தபின்பு, சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான் (மத் 4:2,3).
அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார் தேவன் (யோவா 1:12). என்றபோதிலும், சோதனைகளின் மத்தியிலும், வேதனைகளின் மத்தியிலும் சோதனைக்காரன் எழுப்பும் பிரதானமான கேள்வி 'நீ தேவனுடைய பிள்ளையா' என்பதே. நமக்கும் தேவனுக்கும் இடையிலான உறவில் சந்தேகத்தை விதைக்கிறவன் சத்துரு. சத்துருவின் சந்தேகத்தைத் தீர்க்க அவன் விரும்புகிறவண்ணம் நாம் செயல்படவேண்டிய அவசியமில்லை. நான் தேவனுடைய பிள்ளைகள் என்ற உறுதி நமக்குள் இருக்குமென்றால், வேதனைகளின் மத்தியிலும் நம்முடைய வாழ்க்கை தடுமாறாமல் பிதாவோடு நிலையாக நிற்கும்.
தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல (மத் 10:38) என்றுசிலுவையை எடுத்துக்கொண்டு பின்பற்றவே இயேசு கற்றுக்கொடுத்தார், ஆனால் சத்துருவோ, சிலுவையை இறக்கிவைத்துவிட்டு அவரைப் பின்பற்று எனக் கற்றுக்கொடுக்கிறான், அதற்கான ஆலோசனைகளையே கொடுக்கிறான். மோசே, எலியா என்பவர்களோடு மரணத்தைக் குறித்து இயேசு பேசிக்கொண்டிருந்த இடத்தில், பேதுரு இயேசுவை நோக்கி: ஐயரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது, உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்று சொன்னான் (லூக். 9:30-33). ஆனால், சிலுவையில் இயேசு அடிக்கப்படும் நாட்கள் சமீபித்துவந்தபோது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான். அவரோ திரும்பிப் பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார் (மத் 16:22,23). பலர் பாடுகளைக் குறித்து பேசுகிற இடத்தோடு தங்களை நிறுத்திக்கொள்கின்றனர், அவர்களது கூடாரங்களில் பாடுபடுவதைக் குறித்தே பேசிக்கொண்டிருப்பார்கள்ளூ ஆனால், பாடுபடும் வேளை சமீபிக்கும்போது ஓடிவிடுவார்கள். பேதுருவின் நிலை அப்படியே காணப்பட்டது. நான் உம்மோடே மரிக்கவேண்டியதாயிருந்தாலும் உம்மை மறுதலிக்கமாட்டேன் என்றான் பேதுரு (மத். 26:34), ஆனால், மரணம் வந்தபோது மறுதலித்துவிட்டான். சிலுவையில் இயேசுவை கொலை செய்ய முயன்றான் பிசாசு; ஆனால், அதே நேரத்தில் சிலுவையை விட்டு விட்டு அவராகவே ஓடவேண்டும் என்றும் தூண்டிக்கொண்டிருந்தான் பிசாசு. நம்முடைய வாழ்க்கையிலும், இப்படிப்பட்ட சத்துருவின் தூண்டுதல்கள் உண்டல்லவா. நம்முடைய பாடுகள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்தும் வேளை நெருங்கும்போது, பாதியில் அதினின்று ஓடும் மனநிலை உண்டாகுமென்றால், ஒருவேளை நாம் தப்பிக்கொண்டதைப் போன்ற உணர்வு நமக்கு உண்டாகலாம், ஆனால், பாடுகளின் மூலம் நிறைவேறவேண்டிய தேவ திட்டம் நமது வாழ்க்கையில் தடைபட்டுவிடும். தேவனை தூஷித்துவிடுவோம் என்ற எண்ணத்துடன் சத்துரு பாடுகளை நமது வாழ்க்கையில் கொண்டுவருவான். ஆனால், தூஷிக்காமல் நாம் தேவனை மகிமைப்படுத்தும் நிலைக்கு முன்னேறுவோமாகில், பாடுகளிலிருந்தே பாதியில் நம்மை இறக்கிவிட எத்தனிப்பான். பாடுகளை பூரணமாய் நிறைவேற அனுமதித்த யோபு பரத்தின் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டான்.
தன் ஜீவனை தப்புவித்துக்கொள்கிறவன் தேவனுடைய குமாரன் அல்ல, மற்றவர்களுக்காக தன் ஜீவனை விடுகிறவனே தேவனுடைய குமாரன் என்ற சத்தியத்தையும், மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் (மத் 4:4) என்ற சத்தியத்தையும் சத்துருவின் சோதனைகளுக்கு எதிர்கணையாக வீசி அவனை வீழ்த்தினார் இயேசு. நம்முடைய ஜீவன் காப்பாற்றப்பட்டால்தான் நாம் தேவனுடைய பிள்ளைகள் என்ற எண்ணத்திற்குள் சத்துரு பலரை வஞ்சித்துவைத்திருக்கிறான். தங்கள் ஜீவனுக்காகவும், தங்கள் ஜீவனத்திற்காகவுமே எப்போதும் தேவனைத் தேடும்படி அவர்கள் மனதை மாற்றிவிடுகின்றான். தங்கள் தேவைகள் சந்திக்கப்படாவிடில், நிந்தைகள் நீங்காவிடில், துன்பங்கள் மற்றும் துயரங்கள் தூரமாகாவிடில், நினைத்தது நடக்காவிடில் நாம் தேவனுடைய பார்வையில் இல்லாதவர்கள், அவருடைய பிள்ளையாகப் பாவிக்கப்படாதவர்கள் என்ற நினைவுக்குள் அத்தகைய மக்களை சத்துரு தள்ளிவிடுகின்றான், தேவனுடைய பிள்ளைகள் என்ற எண்ணத்தை அவர்களிடமிருந்து விலக்கி, தனது வலைக்குள் சிக்கவைத்துவிடுகின்றான். அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம் (1யோவா 3:16). நம்முடைய வாழ்க்கையில் நாம் சுமக்கவேண்டிய சிலுவைகளை விட்டு ஓடி சுகமாக வாழ்வதற்கு பிசாசு கொடுக்கும் ஆலோசனைகளுக்குள் நாம் பிடிபட்டுவிடக்கூடாது. ஆத்துமாக்களை ஆதாயம் செய்வதற்காக எத்தனையோ, மிஷனரிகள், ஊழியர்கள் இரத்தசாட்சிகளாக தங்களை விதைத்திருக்கின்றார்களே. பாடுகளிலிருந்து அவர்கள் விலகி ஓடியிருந்தால், அநேக ஆயிரம் ஆத்துமாக்கள் இயேசுவை விட்டு விலகி ஓடியிருக்குமே. நம்முடைய வாழ்க்கையில் தேவனால் நியமிக்கப்பட்ட சிலுவை, சிலுவையண்டைக்கே ஜனங்களை கூட்டிச் சேர்க்கும்.
லாசருவின் வியாதி மரணத்துக்கு ஏதுவாயிராமல் தேவனுடைய மகிமை விளங்குவதற்கு ஏதுவாயிருக்கிறது; தேவனுடைய குமாரனும் அதினால் மகிமைப்படுவார் (யோவா 11:4) என்பதை இயேசு அறிந்திருந்தார், எனவே லாசரு மரணத்தைச் சந்திக்க அனுமதித்தார். ஆனால், லாசரு வியாதிப்படுக்கையில் இருந்து, மரணத்தைத் தழுவியபோது, அங்கிருந்த ஜனங்கள்: இதோ, இவர் அவனை எவ்வளவாய்ச் சிநேகித்தார், குருடனுடைய கண்களைத் திறந்த இவர், இவனைச் சாகாமலிருக்கப்பண்ணவும் கூடாதா என்றார்கள் (யோவா 11:36,37). அவர்களால் இயேசு அனுமதித்த லாசருவின் மரணத்தைப் புரிந்துகொள்ளமுடியவில்லை.அவர்களுடைய கண்களுக்கு தேவனுக்கு மகிமையைக் கொண்டுவரும் அந்த மரணம் துக்கமாயிருந்தது. பிறவிக் குருடனாகிய ஒரு மனுஷனைக் கண்டபோது, சீஷர்கள் இயேசுவை நோக்கி: ரபீ, இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன் செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள். இயேசு பிரதியுத்தரமாக: அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும் பொருட்டு இப்படிப் பிறந்தான் (யோவா 9:1-3) என்றார். நம்முடைய மரணம் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துமென்றால், மரணத்தையும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வோம். சுமக்கும்படி தேவன் கொடுத்த சிலுவைதனை, சுகத்திற்காக இறக்கிவைத்து, சோரம் போனால் மனதின் பாரம் போகும், ஆத்துமாக்கள் அழிந்துபோகும், அறுவடை குறைந்துபோகும். சுமக்கவேண்டிய பாடுகளை சுகத்திற்காக இறக்கிவைக்கவேண்டாம்.
Comments
Post a Comment