தாழ்மையினால் பெருகும் கிருபை
அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார். (1பேது 5:5)
மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார் (ஏசா. 54:10) என்பது ஏசாயாவின் மூலமாக நமக்காக எழுதப்பட்டிருக்கும் தீர்க்கதரிசன வார்த்தை. இச்சத்தியத்தினையே, 'நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை' (புல. 3:22) என்று உள்ளத்தில் உணர்ந்தவனாக எழுதுகின்றான் எரேமியா தீர்க்கதரிசி. இவ்வுலக வாழ்க்கையில் நம்மை பத்திரமாகப் பாதுகாப்பதாக மாத்திரம் காணப்படாமல், மறுவுலகிற்குள் நம்மை நித்தியமாகப் பிரவேசிக்கும்படியான மறுவாழ்வையும் மறுபிறப்பின் மூலமாக தருவது கிருபையே (எபே. 2:8).
'இரட்சிப்பு' என்பது கிருபையின் தொடக்கமானால் (எபே 2:8), தாழ்மை என்பதே கிருபையின் பெருக்கத்தை வாழ்க்கையில் தொடரப்பண்ணும் ஆதாரமானது. இதனை உணர்ந்துகொண்டோரின் ஆவிக்குரிய வாழ்க்கை, 'இரட்சிப்பு' என்ற புள்ளியில் நின்றுவிடாமல், கிருபையினால் தங்களது ஆவிக்குரிய வாழ்க்கையில் பெருகிக்கொண்டிருக்கும் தாலந்துகளினாலும், வரங்களினாலும் பரலோகத்தை தினம் தினம் நிரப்பிக்கொண்டிருக்கும்.
எனினும், தாழ்மைக்கும், கிருபைக்கும் இடையிலான பாலத்தை தகர்த்துவிட்டு, ஆவிக்குரிய வாழ்க்கையின் உயர்தரமான நிலையினை நோக்கிய பயணம் என்பது சாத்தியமில்லாதது. கிருபையினால் விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டபோதிலும், 'தாழ்மை' என்றும் சுவரைத் தகர்க்காததினால், தொடர்ந்து பயணிக்க இயலாதபடி, தாங்கள் நின்ற இடத்திலேயே இன்றும் நின்றுகொண்டிருக்கும் மக்கள் அநேகர். ஆவிக்குரியவர்களாயிருந்தபோதிலும், தங்கள் ஆத்துமாவைக் காப்பாற்றிக்கொண்ட பலர், இன்னும் அடுத்தவருக்கோ இலாபமற்றவர்களாகவே தொடர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். மரணபரியந்தம் தன்னைத் தானே தாழ்த்திய இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை உலக மக்களின் இரட்சிப்புக்குக் காரணமாயிற்றே. அவ்வாரே, நம்முடைய வாழ்க்கையின் தாழ்மையான பயணம் பிற ஆத்துமாக்களை கிறிஸ்துவின் மந்தையில் நிச்சயம் சேர்க்கும். இகழ்வோரை அவர் இகழுகிறார்; தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார் (நீதி. 3:34) என்று எழுதுகிறான் சாலொமோன்; இதனையே, யாக்கோபும் தனது நிருபத்தில் உறுதிப்படுத்துகின்றார் (யாக். 4:6).
மேலும், அவர் (இயேசு கிறிஸ்து) மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தினார் (பிலி. 2:8,9) என்று தாழ்மைக்கும், உயர்வுக்கும் இடையிலான தொடர்பினை பவுல் வலியுறுத்துகின்றாரே. மேலும், கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார் (யாக் 4:10) என்று யாக்கோபுவும் தாழ்மையின் முக்கியத்துவத்தை முன்வைக்கின்றனரே. தாழ்மை நம்முடைய வாழ்க்கையில் கிருபையைப் பெருகப்பண்ணுவதோடு மாத்திரமல்லாமல், வாழ்க்கையின் உயர்வுக்கும் காணரமானது. நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, போய், தாழ்ந்த இடத்தில் உட்காரு; அப்பொழுது உன்னை அழைத்தவன் வந்து சிநேகிதனே, உயர்ந்த இடத்தில் வாரும் என்று சொல்லும்போது, உன்னுடனே கூடப்பந்தியிருக்கிறவர்களுக்கு முன்பாக உனக்கு கனமுண்டாகும் (லூக் 14:10) என்று தாழ்மையினால் கிடைக்கும் உயர்வினை இயேசுவும் உபதேசித்தார். பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார் (லூக் 1:52) என்று மரியாளும் பாடுகின்றாளே.
அத்துடன், அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார் (1பேது 5:5) என்று பேதுருவும் ஆலோசனையாக எழுதி உணர்த்துகின்றார். தேவனது பக்கத்தில் நம்மை நிறுத்துவது தாழ்மையே.
Comments
Post a Comment