Skip to main content

எறியப்படும் விளக்கு

 

எறியப்படும் விளக்கு

 

இயேசுவுக்காக ஊழியம் செய்யவது மாத்திரமல்ல, மீண்டும் அவர் வரும்போது வருகையில் உடன் செல்லவேண்டும் என்பது ஓவ்வொரு ஊழியரின் மனதிலும் ஆழப்பதிந்திருக்கவேண்டிய ஒன்று. எத்தனையோ அவருக்காகச் செய்தும், எவ்வளவோ அவருக்காகச் செயல்பட்டும், வருகையில் எடுத்துக்கொள்ளப்படாமல் அவரால் கைவிடப்படுவோமென்றால், நாம் பரிதபிக்கப்பட்டவர்களாகத்தான் காணப்படுவோம்; நம்முடைய பிரயாசசத்தினால் பலன்கள் பல உண்டாயிருந்தாலும், ஆத்துமாக்கள் பல உருவாயிருந்தாலும், நாமோ பரலோகத்தின் பலனை ருசிக்க இயலாமல் போய்விடுவோம்; இந்நிலைக்கு நம்முடைய வாழ்க்கையைத் தள்ளிவிடக்கூடாது. விருந்துக்கு ஆட்களை அனுப்புகிறவர்கள் மாத்திரமல்ல நாம், விருந்து வீட்டிலும் இருக்கவேண்டியவர்கள்; மறந்துவிடவேண்டாம்.

இயேசுவின் வருகை யாரும் அறியாத ஒன்று; 'அந்த நாளையும், அந்த நாழிகையையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்' (மத். 24:36) என்று இயேசுவே வெளிப்படையாய் வாழ்மொழியாய் நமக்குச் சொல்லியிருக்கின்றார்.

உண்டாக்கப்பட்ட மனிதர்கள் தங்களைக் கெடுத்துக்கொண்டபோது, தேவன் மனஸ்தாபப்பட்டார். 'நான் சிருஷ்டித்த மனுஷனைப் பூமியின்மேல் வைக்காமல், மனுஷன் முதற்கொண்டு, மிருகங்கள், ஊரும் பிராணிகள், ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும் உண்டாயிருக்கிறவைகளை நிக்கிரகம்பண்ணுவேன்; நான் அவர்களை உண்டாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது' என்றார் தேவன் (ஆதி. 6:7). அனைத்தையும் அழிக்கும் எண்ணத்தோடிருந்த தேவனின் கண்ணகளிலிருந்து நோவாவுக்கு மாத்திரமே கிருபை கிடைத்தது (ஆதி. 6:8). எனினும், நோவாவினிடமிருந்து மீண்டு உண்டான சந்ததி மீண்டும் தேவனுக்கு மனஸ்தாபத்தையே கொண்டுவந்தது. என்றபோதிலும், 'இனி நான் மனுஷன் நிமித்தம் பூமியைச் சபிப்பதில்லை; மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயது தொடங்கிப் பொல்லாததாயிருக்கிறது. நான் இப்பொழுது செய்ததுபோல, இனி சகல ஜீவன்களையும் சங்கரிப்பதில்லை. பூமியுள்ள நாளளவும் விதைப்பும் அறுப்பும், சீதளமும் உஷ்ணமும், கோடைலமும் மாரிகாலமும், பகலும் இரவும் ஒழிவதில்லை' (ஆதி. 8:21) என்று தேவன் சொன்ன தனது வார்த்தையின்படியும், வாக்குத்தத்தத்தின்படியும் பூமியையும், மனுஷனையும் இந்நாள்வரை அழிக்காதிருக்கிறார். எத்தனையோ பாவங்கள் பெருகிவிட்டபோதிலும், அக்கிரமங்கள் புவியை ஆட்சி செய்துகொண்டிருந்தபோதிலும், முந்நிலமையைக் காட்டிலும் நாளுக்கு நாள் மனிதர்களின் பின் நிலமை மோசமாகிக்கொண்டேயிருந்தபோதிலும், அன்று தேவன் தம்முடைய உள்ளத்தில் சொன்ன வார்த்தையின் நிமித்தம் ஒவ்வொரு நாளும் நாம் தப்பிப் பிழைத்துக்கொண்டிருக்கின்றோம். மீண்டும் இப்புவியை அழிக்க தேவன் ஜலப்பிரளயத்தை அனுப்பப்போவதில்லை, மாறாக இயேசுவையே அனுப்பப்போகின்றார். அவருடைய வருகைக்குப் பின் பூமியின் வாழ்க்கை முடிவுக்கு வரும். கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோம் (2பேது 3:10). இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது (2பேது 3:7) என்றே பேதுரு தனது நிருபத்தில் எழுதுகின்றார். பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்து போகும் (2கொரி. 5:1) என்றே பவுலும் எழுதுகின்றார்.

பூமியின் அழிவு தடுக்கப்பட்டுவிடவில்லை தள்ளிப்போடப்பட்டிருக்கின்றது. இந்த தள்ளிப்போடப்பட்டுள்ள நாட்களில், தேவன் தனது ஒரே பேரான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைக் கொண்டு, தனக்கு மனஸ்தாபமாயிருக்கும் மனிதர்களை மனம்திரும்பச் செய்ய முயற்சித்தார். இயேசுவின் முதலாம் வருகையினை உணர்ந்து பலர் மனந்திரும்பியிருந்தாலும், இன்னும் மனந்திரும்பாமல் தேவனை மனஸ்தாபப்படுத்தும் ஜனங்களின் தொகை பெருந்திரளாகவே இருக்கின்றது. தேவனுடைய மனஸ்தாபத்தைப் புரிந்துகொண்டவர்களாகவே ஊழியர்கள் ஆத்தும ஆதாயப்பணியில் தீவிரமாகச் செயல்பட்டுவருகின்றனர். நம்முடைய கவலைகளை தேவன் தீர்ப்பதைக் காட்டிலும், தேவனுடைய கவலையை நாம் தீர்க்கும் சிலாக்கியம் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றது; இப்பணியினைச் செய்வோர் ஒவ்வொருவரும் பாக்கியவான்கள். எனினும், இரண்டாம் வருகையில் இயேசு வரும்போது, அவருக்கு ஊழியம் செய்யும் நாம் உதறப்பட்டுவிடக்கூடாது என்பதிலும் ஊழியர்கள் கவனமாயிருக்கவேண்டும்.

ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள்வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண் கொண்டும் பெண்கொடுத்தும்,(மத்ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும் (மத் 24:38,39) என்றார் இயேசு. வயலில் இருக்கும் இரண்டு பேரில் ஒருவன் எடுத்துக்கொள்ளப்படுகின்றான், எந்திரம் அரைத்துக்கொண்டிருக்கும் இரண்டு ஸ்திரீகளில் ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுகின்றாள் (மத். 24:40,41) என்ற இயேசு அந்நாளில் கைவிடப்படும் ஓர் ஊழியனையும் எடுத்துரைக்கின்றார் (மத். 24:45-51). எஜமானுக்காக எத்தனையோ காரியங்களைச் அந்த ஊழியக்காரன் செய்திருந்தபோதிலும், எஜமான் வருவதற்குள் அவன் பொல்லாதவனாக மாறிவிட்டான். அவனுடைய குணங்களில் மாற்றம் உண்டானது, அவனுடை செயல்கள் தேவனுக்கு விரோதமாக மாறிப்போனது. வேலைக்காரர்களை விசாரிக்கும்படி அமர்த்தப்பட்டிருந்த ஊழியக்காரனாகிய அவனோ, வேலைக்காரர்களை அடிக்கத் தொடங்கிவிட்டான். அதுமாத்திரமல்ல, வெறியரோடே புசிக்கவும் குடிக்கவும் தலைப்பட்டுவிட்டான். நோவாவின் காலத்து ஜனங்களுக்கொத்த குணம் இவனில் உண்டாகிவிட்டது. எஜமான் வர நாள் செல்லும் என்று உள்ளத்தில் அவன் சொல்லிக்கொண்டான். முடிவோ, நினையாத நேரத்தில் திருடனைப்போல வந்த எஜமானால் தண்டிக்கப்பட்டான், அழுகையும் பற்கடிப்பும் உண்டான இடத்திற்குத் தள்ளப்பட்டான். கிறிஸ்துவுக்காக ஊழியம் செய்பவர்களே, வருகையின்போது உங்கள் விளக்கில் எண்ணெய் இருக்கவேண்டும், விளக்கு எரிந்துகொண்டிருக்கவேண்டும்; இல்லையெனில், விளக்காகிய நாம் எறிந்துவிடப்படுவோம்; எச்சரிக்கை! நாம் எஜமானை விட்டு தூரமாய் இருக்கும்போது, நம்முடைய குணங்களில் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றத்தைப் புகுத்த எத்தணிப்பான் சத்துரு. ஊழியனாக இருந்தாலும், ஊழியம் செய்துகொண்டிருந்தாலும் தேவனுக்கு விரோதமாக நாம் செயல்படும்படி மெல்ல மெல்ல நம்மைத் தள்ளுவான் சத்துரு. எனவே, வருகைக்குக் காத்திருக்கும் இந்நாட்களில், நமது ஆவிக்குரிய வாழ்க்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுவிடாதபடி கருத்தாயிருப்போம். எல்லா நிலைகளிலும் வருகையில் எடுத்துக்கொள்ளப்படவேண்டிய தகுதியை நாம் தக்கவைத்துக்கொள்ளுவோம். இயேசு இவ்வுலகத்தின் பணியை நிறைவு செய்து, பிதாவினிடத்திற்கு ஏறிச்சென்றது போல, நாமும் ஏறிச் செல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருப்போம்.

தனது ஊழியன் விழுந்துகிடக்கிறான் என்று இயேசுவின் வருகை தாமதப்படுத்தப்படவில்லை.அவன் பொல்லாதவனாயிருந்தபோதே, குடித்து வெறித்திருந்தபோதே, வேலைக்காரர்களை அடித்துக்கொண்டிருந்தபோதே இயேசு திருடனைப் போல வருகின்றார். ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும் (மத் 24:14) என்றார் இயேசு. ஆனால், அறிந்தும் ஆயத்தமாயிராமலும் இருந்த ஊழியக்காரன் அடிக்கப்படுவான் என்றார் (லூக். 12:47)). அறிந்தும் ஆயத்தமாயிராதவனுகு;காக அவர் தாமதமாகிறதில்லை. கிறிஸ்துவை அறிந்தவர்களே, நீங்கள் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டவர்கள், உங்களில் விழுந்த விதையினைக் காத்துக்கொள்ளவது உங்கள் பொறுப்பே. ஊழியத்தின் பாதையில் உண்மையில்லாமலும், உத்தமம் இன்றியும், தீர்ப்பு தாமதமாகும் என்று தொடர்ந்து தவறுகளையே செய்துகொண்டிருந்தால், திருடனைப் போல இயேசு வந்து நிற்பார் எச்சரிக்கை! எச்சரிக்கை!! எச்சரிக்கை!!! எரியும் விளக்காயிருப்போம், எறியப்படும் விளக்காகவேண்டாம்.

Comments

Popular posts from this blog

கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்

  கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்   வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கிறிஸ்துவின் குணங்களை வெளிப்படுத்தவேண்டியதும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டியதும் கிறிஸ்தவனின் தலையாயக் கடமை.  கிறிஸ்துவுக்குள்  வாழும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சில உண்மைகளை பவுல் எபேசு சபைக்குச் சுட்டிக்காட்டுகின்றார். கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்  (எபே. 1:3),  பாவமன்னிப்பாகிய மீட்பு  (எபே. 1:7) இவைகள் பொதிந்திருக்கின்றன. ஆனால், இவ்விரண்டிற்கும் பலர் முக்கியத்துவம் கொடுக்காமல், உலகத்தின் ஆசீர்வாதங்களையே அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். பாவமன்னிப்பினைப் பெறாமல், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறாமல், உலகத்தின் ஆசீர்வாதங்களுக்காகவே அவரின் பின்னே ஓடினால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் முடிவு பரிதாபமாகவே இருக்கும். உன்னதங்களில் உட்காரவேண்டிய நாம் உலகத்தோடு ஒட்டிவிடுவோம், மணவாளனோடு வாழவேண்டிய நாம் மண்ணுக்காக வாழ்ந்துவிடுவோம். கிறிஸ்துவிடம் பிரதானமாய் பாவமன்னிப்பையே முதலில் பெற நாடுவோம்; அதற்காகத்தானே பிதா இயேசுவை இந்த பூமியில் அனுப்பினார். எனவே, பிதாவின் பி...

இறைச்சியா? இச்சையா?

இறைச்சியா?  இச்சையா? 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்' (மத். 6:11) என்றும், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத். 6:34) என்றும் பிதாவை நோக்கி ஜெபிக்க இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக்கொடுத்திருந்தபோதிலும், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே 'உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்' (மத். 6:8) என்பதுதானே பிதாவைக் குறித்து இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிமுகம். 'முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்' (மாற். 7:27) என்பதுதான் அவரது விருப்பமும் கூட. 'வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (மத். 10:10) என்றும், 'வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (லூக். 10:7; 1தீமோ. 5:18) என்றும் நாம் வாசிக்கின்றோமே. அப்படியிருக்க, 'ஆகாரத்திற்காக வேலை' மற்றும் 'கூலிக்காக வேலை' என்ற என்ற பார்வையில் நமது பயணம் தொடர்ந்துவிடக்கூடாததல்லவா! 'இழிவான ஆதாயம்' நமது வழிகளை மாற்றிவிடக்...

வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்

  வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்   அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது,  இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.  ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்;  ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.(லூக் 4:25-27) இஸ்ரவேலின் தேவனாக இருந்தபோதிலும், இஸ்ரவேல் தேசத்திலேயே தனது குமாரனை மேசியாவாகப் பிறக்கச் செய்தபோதிலும், பஞ்ச காலத்தின்போது, இஸ்ரவேலருக்குள் இருந்த அநேகம் விதவைகள் போஷிக்கப்படாமற்போனதற்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், ந...