Skip to main content

ராஜ்யத்தின் பக்கமா? ராஜாவின் பக்கமா?

ராஜ்யத்தின் பக்கமா? 

ராஜாவின் பக்கமா?

 

'இரண்டு எஜமான்களுகு;கு ஊழியஞ் செய்ய ஒருவனாலும் கூடாது' என்றார் இயேசு (மத். 6:24). நமது எஜமான் ஒருவரே; ஊழியமும் அவருக்கே. எங்கு என்ன நடந்தாலும், நாம் நமது எஜமானின் பக்கம் நிற்கவேண்டியவர்கள்; உலகத்தாரின் பக்கம் அல்ல. இதனைப் புரிந்துகொண்டதாலேயே 'தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன், மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்?' (சங். 56:4) என்ற சங்கீதக்காரன் தான் நிற்கும் பக்கத்தையும், எவரும் தன்னை அசைக்க இயலாதென்பதையும் உறுதியாய் கூறுகின்றான். 'கன்மலையின் மேல் தன் வீட்டைக் கட்டும் மனிதர்களாக' 'கன்மலையின் மேல் நிற்கும் மனிதர்களாக' 'கன்மலையின் கூடவே நடக்கும் மனிதர்களாக' நாம் காணப்படுவோம். ஊழியத்தின் பாதையிலும் ஒவ்வொரு நாளும் நாம் யாரைச் சார்ந்தவர்களாக நமது வாழ்க்கையினை நகர்த்துகின்றோம் என்ற அறிவு நமக்குத் தேவை. 'எல்லாம் கிடைக்கின்ற இடத்தைச் சார்ந்து அல்ல, எல்லாவற்றையும் கொடுக்கின்ற தேவனைச் சார்ந்ததாய் நமது வாழ்க்கை அமையட்டும்.'

நமது வாழ்க்கை யாரைச் சார்ந்து நிற்கிறது என்பதையும், எதைச் சார்ந்ததாய் தொடர்கிறது என்பதையும் நாம் அறிந்துகொண்டால் மாத்திரமே, தேவனுடைய விருப்பத்திற்கேற்ற, சித்தத்திற்கேற்ற வழியில் தொடர்ந்து வெற்றியோடு செல்லமுடியும். தங்களோடு இருக்கும் மனிதர்கள் எப்போதும் தனக்கு ஒத்தாசையாகவும், உதவியாகவும், எந்த நிலையிலும் தனக்கு மாத்திரமே ஆதரவு தருவோராயும் இருக்கவேண்டும் என்று விரும்புகிற மனிதர்கள், தங்களைச் சார்ந்து நிற்போரை தன் திசையிலேயே இழுத்துச் செல்ல முயலுவர். ஒருவேளை, தவறான திசையில் அத்தலைவனின் பயணம் அமையுமானால், தொடர்வோரின் பயணமும் கர்த்தரை விட்டுத் தொலை தூரமாய்ப் போய்விடும். இவர்களுக்கு எதிர்த்திசையில் நாம் பயணிப்பது என்பது எதிர்நீச்சல் போன்றதே. அது, அவர்கள் நம்மை எதிரியாகப் பாவிக்கும் நிலைக்குக்கூடத் தள்ளிவிடும். இந்நிலைக்குத் தங்களை ஆளாக்கிக்கொள்ள விரும்பாத தொண்டர்கள் பலர், ஆவிக்குரிய வாழ்க்கையினைத் தொலைத்துவிட்டு, தொடர்ந்து அத்தலைவர்களோடு பயணம் செய்துகொண்டிருப்பர். மனிதனைச் சார்ந்து நிற்கவேண்டியவர்கள் அல்ல, நாம் தேவனைச் சார்ந்து நிற்கவேண்டியவர்கள். நாம் ராஜ்யத்தின் பக்கமா? அல்லது ராஜ்யத்தை ஆளும் ராஜாவின் பக்கமா?

யோசுவாவின் தலைமையின் கீழ், எரிகோவை நோக்கி இஸ்ரவேலர் அணிவகுத்துச் சென்றுகொண்டிருந்தபோது, உருவின பட்டயத்துடன் நின்ற ஒருவரைக் கண்டதும், யோசுவா அவரிடத்தில் போய்: நீர் எங்களைச் சேர்ந்தவரோ, எங்கள் சத்துருக்களைச் சேர்ந்தவரோ என்று கேட்டான். அதற்கு அவர்: அல்ல, நான் கர்த்தருடைய சேனையின் அதிபதியாய் இப்பொழுது வந்தேன் என்றார் (யோசுவா 5:14). அப்புறத்தில் எதிரி, இப்புறத்தில் தங்கள் சேனை இடையிலோ உருவின பட்டயத்தோடு ஒருவரைக் கண்டபோது அவர் யாரைச் சேர்ந்தவர் என்பதை அறிந்துகொள்வதிலேயே தனது முதற்கவனத்தைச் செலுத்தினான் யோசுவா. யோசுவா மாத்திரமல்ல, அநேகரின் நிலையும் இதுவே. பிரச்சனைகள் உருவெடுக்கும்போது, தங்களைச் சார்ந்து நிற்பர்கள் யார்? யார்? 'இவன் யாரைச் சேர்ந்தவன்' என்பதை அறிந்துகொள்வதிலேயே நேரம் செலவிடுகின்றனர். அவர்கள் தங்களைச் சார்ந்து நிற்பவர்களாக இருந்தால் யுத்தத்திற்கு அவர்களைப் பயன்படுத்திக்கொள்ளலாமே என்றும், அவர்களால் யுத்தத்தில் நமக்குப் பெலன் சேருமே என்றும் விருப்பஞ்கொள்கின்றனர். இப்படிப்பட்ட ஆசையுடன், தவறானவர்களையும், ராஜ்யத்திற்குப் புறம்பானவர்களையும் தன் பக்கம் சேர்த்துக்கொண்டால் சேர்ந்துகொண்டால் போரில் தோற்றுப்போவது நிச்சயம்.

யோசுவாவுக்கு முன்னால் பட்டயத்தோடு நின்ற அவர், தான் எதிரியைச் சேர்ந்தவர் என்றும் சொல்லாமல், உன்னைச் சேர்ந்தவர் என்றும் சொல்லாமல், 'கர்த்தருடைய சேனையின் அதிபதி' (யோசுவா 5:14) என்று தன்னை அடையாளப்படுத்தினார். அது மாத்திரமல்ல, தான் நின்றுகொண்டிருக்கும் இடம் 'பரிசுத்தமானது' (யோசுவா 5:15) என்பதையும் அறிவித்தார். உருவின பட்டயத்தோடு நின்ற தூதனைப் போல நாமும் வாழக் கற்றுக்கொள்ளவேண்டும். அந்த தூதனைப் போலவே நாமும் பதில் சொல்லக் கற்றுக்கொள்ளுவோம். 'நாம் யாரைச் சேர்ந்தவர்கள்' என்று ஆராய முற்படும் மனிதர்களுக்கு முன் 'நாம் கர்த்தரைச் சேர்ந்தவர்கள்' என்றே அறியப்படுவோராக வாழுவோம்.

தூதன் நின்ற பரிசுத்தமான இடத்தில் யோசுவாவும் நின்றுகொண்டிருந்ததால், அவர் யோசுவாவைச் சேர்ந்தவரே என்று நாம் அறிந்துகொள்ள முடிகின்றதல்லவா. பரிசுத்தமான இடத்தில் நீங்கள் நின்றுகொண்டிருந்தால், கர்த்தருடைய சேனையின் அதிபதியும் உங்களோடேதான் நின்றுகொண்டிருப்பார்; எனவே, பரிசுத்தத்தை விட்டுவிடவேண்டாம். பிரியமானோரே! நமது கால்கள் நிற்கும் இடம் எங்கே? நமது வார்த்தைகளுக்கு ஆதாரமாய் நாம் கொள்ளும் இடம் எங்கே? பரிசுத்தமான இடத்தில் நாம் நிற்போமென்றால், தேவன் நம்மைச் சார்ந்தவரே என்பதை கேட்டுத்தான் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற அவசியமில்லை; அவர் நம்மைச் சார்ந்தவரே. ராஜாவின் பக்கமாய் சேர்ந்த மனிதர்கள் ராஜ்யத்தையே அழித்துவிட்ட சம்பவங்கள் உண்டே.

இஸ்ரவேலின் ராஜாவும், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும், சமாரியாவின் ஒலிமுகவாசலுக்கு முன்னிருக்கும் விசாலத்திலே ராஜ வஸ்திரம் தரித்துக்கொண்டவர்களாய், அவரவர் தம் தம் சிங்காசனத்தில் உட்கார்ந்திருந்தார்கள்; சகல தீர்க்கதரிசிகளும் அவர்களுகு;கு முன்பாக தீர்க்கதரிசனஞ்சொன்னார்கள். 'இருப்புக்கொம்புகளை உண்டாக்கி, இவைகளால் சீர் சீரியரை முட்டி நிர்மூலமாக்கிப்போடுவீர்' என்று ஒருவன் ராஜாவின் பக்கமாய் தீர்க்கதரிசனம் சொல்ல, அனைவரும் அதற்கு இசைவாகவே சொன்னார்கள் (1இராஜா. 22:11,12). கர்த்தருடைய தீர்க்கதரிசியான மிகாயாவை அழைக்கப்போன ஆள் அவனுடன் பேசி: இதோ, தீர்க்கதரிசிகளுடைய வார்த்தைகள் ஏகவாக்காய் ராஜாவுக்கு நன்மையாயிருக்கிறது; உம்முடைய வார்த்தையும் அவர்களில் ஒருவர் வார்த்தையைப்போல இருக்கும்படி நன்மையாகச் சொல்லும் என்றான். அதற்கு மிகாயா: கர்த்தர் என்னிடத்தில் சொல்வதையே சொல்லுவேன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான் (1இரா 22:13,14). பொய்யின் தீர்க்கதரிசிகளையே சார்ந்துநின்ற ராஜாவோ வீழ்ந்துபோனான்.

சாலமோனின் மரணத்திற்குப் பின்னர், அவனது குமாரனான ரெகொபெயாமை ராஜாவாக்கும்படி, இஸ்ரவேலர் எல்லாரும் சீகேமுக்கு வந்திருந்தார்கள். அப்போது, சாலமோனின் நாட்களில் ஓடிப்போய் எகிப்திலே குடியிருந்த யேரொபெயாம் இச்செய்தியினைக் கேள்விப்பட்டான். ரெகொபெயாமை ராஜாவாக்கும் நிகழ்ச்சிக்காக, இஸ்ரவேல் ஜனங்கள் யெரொபெயாமை அழைப்பித்தார்கள். யெரொபெயாமுடன் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் இணைந்து, 'உம்முடைய தகப்பன் பாரமான நுகத்தை எங்கள்மேல் வைத்தார்; இப்போதும் நீர் உம்முடைய தகப்பன் சுமத்தின கடினமான வேலையையும், அவர் எங்கள்மேல் வைத்த பாரமான நுகத்தையும் லகுவாக்கும்; அப்பொழுது உம்மைச் சேவிப்போம்' என்றார்கள் (1இரா 12:4). தன் தகப்பனாகிய சாலமோன் உயிரோடிருக்கும்போது, அவர் சமுகத்தில் நின்ற முதியோருடன் ரெகொபெயாம் ஆலோசனை செய்தபோது, அவர்கள் ரெகொபெயாமுக்குப் பிரதியுத்தரமாக: நீர் இன்று இந்த ஜனங்களுக்கு சேவகனாகி, அவர்களுக்கு இணங்கி, அவர்கள் சொற்படி செய்து, மறுமொழியாக நல்வார்த்தைகளைச் சொல்வீரானால், எந்நாளும் அவர்கள் உமக்கு ஊழியக்காரராயிருப்பார்கள் என்றார்கள் (1இரா 12:7). சாலமோனின் சமுகத்தில் நின்ற முதியோர்கள், ராஜ்யத்தைக் காப்பாற்றும்படியான ஆலோசனையை ரெகொபெயாமுக்குக் கொடுத்தனர். ஆனால், யெரொபெயாமோ அவர்களது ஆலோசனையைத் தள்ளிவிட்டு, தன்னோடே வளர்ந்து தன் சமுகத்தில் நிற்கிற வாலிபரோரே அவன் ஆலோசனை பண்ணினான்; அவர்களோ, ராஜ்யத்தின் மேல் கரிசனையில்லாதவர்கள். ராஜ்யத்தில் வாழும் ஜனங்களின் மேல் கரிசனையற்றவர்கள். இன்பத்துக்குப் பதிலாக துன்பத்தைக் கொடுப்பவர்கள். ராஜ்யம் உடையக் காரணமாயிருப்பவர்கள்.

ராஜ்யத்தின் பக்கம் நிற்பவர்கள் யார் என்பதை அடையாளம் காணமுடியாதவனாயிருந்தான் ரெகொபெயாம். ராஜ்யத்தைக் காப்பாற்றிக்கொள்ள, ஜனங்களுக்கு நல்லதோர் தலைவனாயிருக்க சரியான ஆலோசனையினைச் சொல்வது யார்? என்பதை அறியாதவனாயிருந்தான் ரெகொபெயாம். தகப்பனோடு கூட இருந்த முதியவர்களோடு இருந்த தொடர்பைக் காட்டிலும், தன்னோடு கூட வளர்ந்த வாலிபர்களுடனான தொடர்பே அவனுக்கு அதிகமாயிருந்தது. தகப்பனுக்கு முதியவர்களோடு கூட தொடர்பு, ரெகொபெயாமுக்கோ தன் வயது வாலிபர்களுடன் தொடர்பு. இதுவே, ராஜ்யம் இடிந்துபோகக் காரணமாயந்தது. இன்றைய நாட்களிலும், ஊழியர்களின் பிள்ளைகள் பலர் இப்படியே வளர்ந்துவருகின்றனர். தகப்பனுடன் ஊழியத்தில் உடனிருந்த, அனுபவமிக்க, ஆவிக்குரிய ஆலோசனைகளைக் கொடுக்கக் கூடிய முதியவர்களுடன் தொடர்பு இல்லாமலேயே முதிர்ந்த ஊழியர்களின் பிள்ளைகள் பலர் வளர்கின்றனர். தங்கள் வயதினருடனேயே அவர்களது வாழ்க்கை கழிகிறது. தகப்பனின் மரணத்திற்குப் பின்னர், ராஜ்யத்தைக் காப்பாற்றும் ஆலோசனை தரக்கூடிய முதியவர்களை கையில் வைத்துக்கொள்ளாமல், தள்ளிவிடும் குணம் கொண்டவர்களாக அவர்கள் மாறிவிடுகின்றனர். தகப்பனோடு கூட இருந்த அனுபவமிக்கவர்கள், அவர்களின் கண்களுக்கு தேவையற்றவர்களாகக் காணப்படுகின்றனர். முதியோருடன் அதிகமான தொடர்பு இல்லாததினால், அதிகமாக முதியோருடன் பழகாததினால், முதியோருக்கும் தங்களுக்கு இடையில் இடைவெளி விட்டே வாழ்வதினால், தகப்பனின் மரணத்திற்குப் பின்னர், முதியவர்களின் ஆலோசனையையும் அவர்கள் விட்டெறியும் நிலைக்கு வந்துவிடுகின்றனர். 

இக்காலத்து ஊழியர்களின் பிள்ளைகள் இரண்டு இடைவெளிகளோடு வாழ்கின்றனர். ஒன்று, ஊழியர்களான தங்கள் பெற்றோருக்கு; இரண்டாவது, ஊழியத்திலிருக்கும் மூத்தவர்களுக்கு. இந்த இரு இடைவெளிகளுடன் வளரும் ஊழியர்களின் பிள்ளைகள் தாங்களாகவே வழியினை வகுத்துக்கொள்ள விரும்புகின்றனர்; அத்துடன், தங்கள் உடன் வளர்ந்தோருடைய வார்த்தைகளைக் கேட்டு வழிதனை வகுத்துக்கொள்கின்றனர். விளைவோ, தகப்பனுக்குத் தொடர்பில்லாத ஊழிய நெறிமுறைகள், ஊழியத் திட்டங்கள், எதிரான கொள்கைகள். ராஜ்யத்தின் பக்கத்தில் நிற்பவர்களை அடையாளம் கண்டுகொள்ளுங்கள், ராஜாவின் பலம் அதுவே. 

Comments

Popular posts from this blog

கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்

  கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்   வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கிறிஸ்துவின் குணங்களை வெளிப்படுத்தவேண்டியதும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டியதும் கிறிஸ்தவனின் தலையாயக் கடமை.  கிறிஸ்துவுக்குள்  வாழும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சில உண்மைகளை பவுல் எபேசு சபைக்குச் சுட்டிக்காட்டுகின்றார். கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்  (எபே. 1:3),  பாவமன்னிப்பாகிய மீட்பு  (எபே. 1:7) இவைகள் பொதிந்திருக்கின்றன. ஆனால், இவ்விரண்டிற்கும் பலர் முக்கியத்துவம் கொடுக்காமல், உலகத்தின் ஆசீர்வாதங்களையே அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். பாவமன்னிப்பினைப் பெறாமல், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறாமல், உலகத்தின் ஆசீர்வாதங்களுக்காகவே அவரின் பின்னே ஓடினால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் முடிவு பரிதாபமாகவே இருக்கும். உன்னதங்களில் உட்காரவேண்டிய நாம் உலகத்தோடு ஒட்டிவிடுவோம், மணவாளனோடு வாழவேண்டிய நாம் மண்ணுக்காக வாழ்ந்துவிடுவோம். கிறிஸ்துவிடம் பிரதானமாய் பாவமன்னிப்பையே முதலில் பெற நாடுவோம்; அதற்காகத்தானே பிதா இயேசுவை இந்த பூமியில் அனுப்பினார். எனவே, பிதாவின் பி...

இறைச்சியா? இச்சையா?

இறைச்சியா?  இச்சையா? 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்' (மத். 6:11) என்றும், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத். 6:34) என்றும் பிதாவை நோக்கி ஜெபிக்க இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக்கொடுத்திருந்தபோதிலும், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே 'உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்' (மத். 6:8) என்பதுதானே பிதாவைக் குறித்து இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிமுகம். 'முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்' (மாற். 7:27) என்பதுதான் அவரது விருப்பமும் கூட. 'வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (மத். 10:10) என்றும், 'வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (லூக். 10:7; 1தீமோ. 5:18) என்றும் நாம் வாசிக்கின்றோமே. அப்படியிருக்க, 'ஆகாரத்திற்காக வேலை' மற்றும் 'கூலிக்காக வேலை' என்ற என்ற பார்வையில் நமது பயணம் தொடர்ந்துவிடக்கூடாததல்லவா! 'இழிவான ஆதாயம்' நமது வழிகளை மாற்றிவிடக்...

வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்

  வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்   அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது,  இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.  ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்;  ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.(லூக் 4:25-27) இஸ்ரவேலின் தேவனாக இருந்தபோதிலும், இஸ்ரவேல் தேசத்திலேயே தனது குமாரனை மேசியாவாகப் பிறக்கச் செய்தபோதிலும், பஞ்ச காலத்தின்போது, இஸ்ரவேலருக்குள் இருந்த அநேகம் விதவைகள் போஷிக்கப்படாமற்போனதற்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், ந...