Skip to main content

பாதி வானம் மீதி ஞானம் (மத். 2:2)


www.sinegithan.in


ஏரோதுராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து, யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம் என்றார்கள். (மத். 2:2) 


வேதத்தைப் பற்றிய ஞானம் நம்மில் நிறைந்து காணப்பட்டபோதிலும், வாழ்க்கையின் சில நேரங்களில் நாம் வழி விலகிப் பயணித்துவிடுகின்றோம். தேவன் கொடுத்த வார்த்தையும், அதற்கும் மேலாக வானத்திலிருந்து வழிகாட்டலும் நமக்குக் கிடைத்துக்கொண்டிருந்தபோதிலும், சில நேரங்களில் நம்முடைய அறிவுகளுக்கடுத்தவைகளோடு ஒன்றித்து, பயணத்தை மேற்கொண்டுவிடுகின்றோம். இயேசு கிறிஸ்துவின் பிறந்த செய்தியை அறிந்த சாஸ்திரிகளின் பயணம் இந்த சத்தியத்தை நமக்குப் போதிக்கும் ஓர் மாதிரியே! 

வானத்திலே விசேஷித்த ஓர் நட்சத்திரத்தைக் கண்டதும், அது 'கிறிஸ்துவின் நட்சத்திரம்' (மத். 2:2) என்பதை அறிந்துகொண்ட சாஸ்திரிகள், 'யூதருக்கு ராஜா பிறந்துவிட்டார்' என்ற செய்தியினை தங்களுக்கு இருந்த ஞானத்தினால் உடனே உறுதிசெய்துகொண்டார்கள். எங்கோ பிறந்திருக்கிறார், எப்படியும் எப்போதாவது இச்செய்தி வெளியிலே தெரியவரும் என்று அவர்கள் அங்கேயே அமர்ந்துவிடவில்லை, பிறந்திருக்கும் ராஜாவைக் பார்க்கவேண்டும் என்றும், பணிந்துகொள்ளவேண்டும் என்றும் உள்ளத்தில் உண்டான விருப்பதைத் நிறைவேற்ற, உடனே பயணத்தைத் தொடங்கினர். 

அதுமாத்திரமல்ல, சாஸ்திரிகள் இயேசு கிறிஸ்துவை தரிசித்த பின்பு, அவர்கள் ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டாமென்று சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, வேறு வழியாய்த் தங்கள் தேசத்திற்குத் திரும்பிப்போனார்கள் (மத் 2:12) என்று வேதத்தில் வாசிக்கின்றோம்; என்றாலும், இந்த நற்செய்தியை எத்தனை பேருக்கு, அறிவிக்கவேண்டியவர்களுக்கு அவர்கள் அறிவித்திருப்பார்கள் என்பது கேள்விக்குரியே! பிரியமானவர்களே! நம்முடைய வாழ்க்கையிலும், சில செய்திகள் நமக்கு அறிவிக்கப்படும்போது, நாம் எப்படி செயலாற்றுகிறோம் என்பதையும், பிரதிவினையாற்றுகின்றோம் என்பதையும் உணர்ந்துகொள்ளவேண்டியது அவசியம். செய்தித்தாளை வாசித்துவிட்டு, அப்படியே அங்கேயே விட்டுவிட்டுச் சென்றுவிடுவதைப் போல, தேவனிடமிருந்து வந்த செய்தியினையும் விட்டுவிட்டுச் சென்றுவிடுகின்றோமா? அல்லது அந்த செய்தியைச் சென்றடையும்படியாக அதனைப் பின்தொடருகின்றோமா?

வானத்தில் தோன்றியிருக்கின்ற நட்சத்திரம் 'கிறிஸ்துவினுடையது' என்பதை சாஸ்திரிகள் உறுதியாக அறிந்திருந்தபோதிலும், 'கிறிஸ்துவைக் காணவேண்டும்' என்ற விருப்பம் அவர்களது உள்ளத்தையும், சிந்தையையும் நிரப்பியிருந்தபோதிலும், தாங்கள் கிழக்கிலே கண்ட அந்த நட்சத்திரம், தோன்றிய இடத்திலேயே நின்றுகொண்டிராமல், தங்களுக்கு வழிகாட்டும்படியாக தொடர்ந்து பயணப்பட்டுக்கொண்டிருப்பதையோ உணர்ந்துகொள்ளாதிருந்தார்கள். அதனையே பின்பற்றவேண்டும் என்பதை மறந்து அரண்மனையினைச் சென்றடைந்துவிட்டார்கள். பயணத்திற்காகத் தங்கள் ஞானத்தையும், தங்கள் அறிவையுமே பயன்படுத்திக்கொண்டார்கள். 

நாமும் அடையாளங்கள் காட்டப்பட்டபின், வழிநடத்தும் ஆண்டவரை விட்டுவிட்டு, சில நேரங்களில் திசைமாறி பயணித்துவிடுகின்றோம்; அடையாளம் ஆண்டவரால் காட்டப்பட்டது உண்மையே; என்றபோதிலும், பயணத்தின்போது நமது கால்களோ தவறான இடங்களில் தரித்துநிற்கின்றன; காரணம் வானத்தைத் தொடரவேண்டிய நாம் நமது ஞானத்தைத் தொடர்ந்ததே. அழைப்பினைப் பெற்றபின், தங்கள் ஞானத்தினால் அகன்றுபோனவர்கள் ஏராளம். சாஸ்திரிகள் பயணம், பணிந்துகொள்ளவேண்டிய ராஜாவுக்கும், பெத்லகேமிலிருந்த பிற பிள்ளைகளுக்கும் பரிதாபமான விளைவைக் கொடுத்துவிட்டதே (மத். 2:16,17). நம்முடைய பயணத்தின் பாதை மாறும் என்றால், பிறரும் பாதிப்புக்குள்ளாவார்கள்; இதற்கு யோனா தீர்க்கதரிசியும் ஓர் உதாரணம்.

அவர்களுக்கு இருந்த ஞானம், 'ராஜாவின் அரண்மனை இருக்கும் எருசலேமிலேயே அடுத்த ராஜா பிறந்திருப்பார்' என்பதே. தங்களது சுய ஞானத்தைப் பயன்படுத்தி, எருசலேமிலே சுற்றிக்கொண்டிருந்தபோதிலும், அவர்கள் கண்ட நட்சத்திரம், அதாவது 'கிறிஸ்து' அவர்களை விட்டு விலகிச்சென்றுவிடவில்லை; அவர்கள் உணர்ந்துகொள்ளும்வரையும், சரியான வழிக்கு அவர்கள் திரும்பி வரும் வரையிலும் அவர்களுக்காகக் காத்திருந்தது. இத்தகைய அனுபவம் நம்முடைய வாழ்க்கையிலும் சில நேரங்களில் அரங்கேறுகின்றதல்லவா. தவறான வழியில் நாம் பயணித்துவிடும்போது, ஆண்டவருடைய வழிகாட்டுதலை விட்டு விலகி தவறான இடத்திற்குச் சென்றுவிடும்போது, 'நாம் திரும்புவதற்காக, கிறிஸ்து காத்திருக்கிறார்' என்பதை இந்த கிறிஸ்மஸ் நாட்களில் உணர்ந்துகொள்ளவேண்டியது அவசியம்.  

எருசலேமிற்கு வந்த சாஸ்திரிகள், உடனே ஏரோது ராஜாவின் அரண்மனைக்குச் சென்றுவிடவில்லை. யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம் (மத். 2:2) என்று எருசலேமிலிருக்கிற ஜனங்களிடத்திலேயே விசாரித்துக்கொண்டிருந்த செய்தியே முதலில் ஏரோது ராஜாவின் காதுகளுக்கு வந்தெட்டியது; ஏரோதுராஜா அதைக் கேட்டபொழுது, அவனும் அவனோடேகூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள் (மத். 2:3). சாஸ்திரிகள் அரண்மனைக்குச் செல்வதற்கு முன்பே, ஏரோது ராஜா பிரதான ஆசாரியர் ஜனத்தின் வேதபாரகர் எல்லாரையும் கூடிவரச் செய்து: கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பாரென்றே அவர்களிடத்தில் விசாரித்தான் (மத். 2:4). 'யூதருக்கு ராஜா எங்கே பிறப்பார்?' என்று அல்ல 'கிறிஸ்து எங்கே பிறப்பார்?' என்றே விசாரித்தது, யூதருக்கு ராஜா கிறிஸ்துவே என்பதைத்தானே நிரூபிக்கிறது. சிலுவையில் கூட 'யூதருக்கு ராஜா' என்று எழுதப்பட்ட வாசகத்தை எவராலும் மாற்றிவிடக்கூடாமற்போயிற்றே. 

வேதபாரகர் ஏரோதுவினிடத்தில், யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார்; அதேனென்றால்: யூதேயா தேசத்திலுள்ள பெத்லகேமே, யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல; என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார் என்று, தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது (மத் 2:4-6) என்று கொன்னபோது, அதற்குப் பின்னதாகவே சாஸ்திரிகளை ஏரோது இரகசியமாய் அழைத்து, நட்சத்திரம் காணப்பட்ட காலத்தைக் குறித்து அவர்களிடத்தில் திட்டமாய் விசாரித்து: நீங்கள் போய், பிள்ளையைக்குறித்துத் திட்டமாய் விசாரியுங்கள்; நீங்கள் அதைக் கண்டபின்பு, நானும் வந்து அதைப் பணிந்துகொள்ளும்படி எனக்கு அறிவியுங்கள் என்று சொல்லி, அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பினான் (மத் 2:7,8). அப்போது, கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது. 'அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்' (மத் 2:9,10) என்பது, மீண்டும் சாஸ்திரிகள் வானத்தை நோக்கிப் பார்த்ததையே குறிக்கின்றது. நம்முடைய வாழ்க்கையிலும், தவறிய பாதைகளை விட்டுவிட்டு, மீண்டும் வானத்தை நோக்கிப் பார்க்கும்போது ஆனந்த சந்தோஷம் உண்டாவது நிச்சயம். 


Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி