Skip to main content

தாலத்திலே தலை

 

தாலத்திலே தலை



காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது தன் சகோதரனான பிலிப்புவின் மனைவி ஏரோதியாளினிமித்தமாகவும், தான் செய்த மற்றப் பொல்லாங்குகளினிமித்தமாகவும், யோவானாலே கடிந்து கொள்ளப்பட்டான் (லூக் 3:19). 'நீர் அவளை வைத்துக்கொள்வது நியாயமல்ல' (மத். 14:4; மாற்கு 6:18) என்று யோவான் ஏரோதைக் கடிந்துகொண்டதின் நிமித்தம், ஏரோது யோவானைப் பிடித்துக் கட்டிக் காவலில் வைத்திருந்தான் (மத். 14:3). ஏரோது யோவானை கொலைசெய்ய மனதாயிருந்தும், ஜனங்கள் அவனைத் தீர்க்கதரிசியென்று எண்ணினபடியால் அவர்களுக்குப் பயந்திருந்தான் (மத் 14:5). யோவானை கொலை செய்யாமல், சிறையிலேயே அடைத்து வைத்தான் ஏரோது. யோவானை சிறையில் அடைத்துவிட்டதினால், இனி எச்சரிப்பின் தொனி தனது காதில் விழப்போவதில்லை என்றும், என்னைக்குறித்து குறை பேசுவதற்கும், என்னைத் தட்டிக் கேட்பதற்கும் இனி இந்த தேசத்தில் யாருமில்லை என்று எண்ணினான் அவன். யோவானைக் கொல்லாமல் சிறையிலேயே வைத்துவிடவேண்டும் என்று நினைத்தான் ஏரோது; ஆனால், ஏரோதியாளோ யோவானைச் சிறைச்சேதம் செய்துவிடவேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்தாள். ஏரோதுவின் ஜென்ம நாளன்று ஏரோதியாளின் குமாரத்தி நடனம் பண்ணி ஏரோதுவைச் சந்தோஷப்படுத்தியபோது, 'நீ எதைக் கேட்டாலும் தருவேன்' என்றான் ஏரோது. அவள் தன் தாயினால் ஏவப்பட்டபடியே: யோவான்ஸ்நானகனுடைய தலையை இங்கே ஒரு தாலத்திலே எனக்குத் தாரும் என்று கேட்டாள் (மத். 14:6-8). 'எதைக் கேட்டாலும் தருவேன்' என்ற ஏரோதுவின் ஆணையை சத்துரு பயன்படுத்திக்கொண்டான். அவனது ஜென்ம நாளன்று யோவானைச் சிறைச்சேதம் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டான். சிறையில் வைக்க நினைத்தான் ஏரோது, ஆனால் சத்துருவோ அவனைச் சிறைச்சேதம் செய்யவைத்தான். ராஜா துக்கமடைந்தான், ஆகிலும் ஆணையினிமித்தமும், பந்தியில் கூட இருந்தவர்களினிமித்தமும், அதைக் கொடுக்கக் கட்டளையிட்டான் (மத். 14:9). உடனிருக்கும் எதிரியை நாம் புரிந்துகொள்ளாவிட்டால், தெரிந்துகொள்ளாவிட்டால் நம்முடைய வார்த்தைகளினால், நாமே எதிரியின் வாயில் சிக்கிக்கொள்ளுவோம்.

பிரதானிகளும், தேசாதிபதிகளும் தானியேலைக் குற்றப்படுத்தும்படி தேடினார்கள் (தானி. 6:4). தானியேலை அழித்துவிடவேண்டும் என்ற எண்ணத்துடன் ராஜாவிடம் சென்று: எவனாகிலும் முப்பது நாள்வரையில் ராஜாவாகிய உம்மைத்தவிர எந்தத் தேவனையானாலும் மனுஷனையானாலும் நோக்கி;, யாதொரு காரியத்தைக் குறித்து விண்ணப்பம்பண்ணினால், அவன் சிங்கங்களின் கெபியிலே போடப்பட, ராஜா கட்டளை பிறப்பித்து, உறுதியான தாக்கீது செய்யவேண்டுமென்று ராஜ்யத்தினுடைய எல்லாப் பிரதானிகளும், தேசாதிபதிகளும், பிரபுக்களும், மந்திரிமார்களும், தலைவர்களும் ஆலோசனைபண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஆதலால் இப்போதும் ராஜாவே, மேதியருக்கும் பெர்சியருக்கும் இருக்கிற மாறாத பிரமாணத்தின்படியே அந்தத் தாக்கீது மாற்றப்படாதபடி நீர் அதைக் கட்டளையிட்டு, அதற்குக் கையெழுத்து வைக்கவேண்டும் என்றார்கள் (தானி 6:8). ராஜாவாகிய தன்னை அவர்கள் தெய்வமாக உயர்த்திப் பேசுவதின் மேலேயே கவனத்தைச் செலுத்திய ராஜா, இவர்கள் யாருக்கு விரோதமாக எழுந்து நிற்கிறார்கள் என்பதை ராஜா அறிய முற்படவில்லை. எதிரே நிற்பவர்களின் திட்டத்தைக் குறித்த அறிவில்லாமலேயே, அவர்களுக்கு உடன் போகிறான் ராஜா; அவர்கள் விரும்பிய ஆணையைப் பிறப்பித்து கையெழுத்திட்டான் (தானி. 6:7,8). ஆனால், அந்த ஆணையோ தான் விரும்பிய தானியேலுக்கு விரோதமானதென்று இறுதியிலேயே ராஜா அறிந்தான். தன்னுடய ஆணையினால் தானியேல் குற்றஞ்சாட்டப்பட்டதை ராஜா கண்டபோது, தன்னில் மிகவும் சஞ்சலப்பட்டு, தானியேலைக் காப்பாற்றும்படிக்கு அவன் பேரில் தன்மனதை வைத்து, அவனைத் தப்புவிக்கிறதற்காகச் சூரியன் அஸ்தமிக்குமட்டும் பிரயாசப்பட்டுக்கொண்டிருந்தான் (தானி. 6:14). ட ஆணையைப் பிறப்பிக்கத் தூண்டிய மனிதர்கள், தானியேலைத் தப்புவிக்கிறதற்காக ராஜா முயற்சிப்பதைக் கண்டபோது, கூட்டமாய் ராஜாவினிடத்தில் வந்து: ராஜா கட்டளையிட்ட எந்தத் தாக்கீதும் கட்டளையும் மாற்றப்படக்கூடாதென்பது மேதியருக்கும் பெர்சியருக்கும் பிரமாணமாயிருக்கிறதென்று அறிவீராக என்றார்கள் (தானி 6:15) என்று ராஜாவின் ஆணையிலேயே ராஜாவைச் சிக்கவைத்துவிட்டனர். தானியேலை சிங்கக் கெபியில் போடும் நிலைக்கு ராஜா தள்ளப்பட்டான்.

சிம்சோனின் நிலையும் இதுவே, பெண் பார்க்கச் சென்ற அவன் அவ்வூரிலிருந்த வாலிபர்களிடத்தில் விடுகதையைச் சொல்லி சிக்கிக்கொண்டான். சிம்சோன் அவர்களை நோக்கி: ஒரு விடுகதையை உங்களுக்குச் சொல்லுகிறேன்; அதை நீங்கள் விருந்துண்கிற ஏழுநாளைக்குள்ளே கண்டுபிடித்து எனக்கு விடுவித்தால், நான் உங்களுக்கு முப்பது துப்பட்டிகளையும் முப்பது மாற்று வஸ்திரங்களையும் கொடுப்பேன். அதை எனக்கு விடுவிக்காதேபோனால், நீங்கள் எனக்கு முப்பது துப்பட்டிகளையும் முப்பது மாற்று வஸ்திரங்களையும் கொடுக்கவேண்டும் என்றான். அதற்கு அவர்கள்: உன் விடுகதையைச் சொல்லு, நாங்கள் அதைக் கேட்கட்டும் என்றார்கள் (நியா 14:12-13). எதிரே நிற்பவர்கள் தனக்கு விரோதமானவர்கள், தனது வீழ்ச்சியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறவர்கள் என்பதை சிம்சோன் அறியாதிருந்தான். அவர்கள் சிம்சோனின் பெண்சாதியைப் பார்த்து: உன் புருஷன் அந்த விடுகதையை எங்களுக்கு விடுவிக்கும்படிக்கு நீ அவனை நயம்பண்ணு; இல்லாவிட்டால் நாங்கள் உன்னையும் உன் தகப்பன் வீட்டையும் அக்கினியால் சுட்டெரித்துப்போடுவோம்; எங்களுக்குள்ளவைகளைப் பறித்துக்கொள்ளவா எங்களை அழைத்தீர்கள் என்றார்கள் (நியா 14:15). அத்தகைய மனிதர்களளின் வற்புறுத்தலால் விருந்துண்கிற ஏழு நாளும் சிம்சோனின் மனைவி அழுதுகொண்டேயிருந்தாள்; மனைவி அலட்டிக்கொண்டேயிருந்தபடியினால், விடுகதையை பெண்சாதிக்கு விடுவித்தான் சிம்சோன், அவள் அதை உடனே தன் ஜனங்களுக்கு வெளிப்படுத்தினாள் (நியா. 14:17). சிம்சோன் விடுவித்த விடுகதை எதிரியைச் சென்றடைந்தது. கர்த்தருடைய ஆவி அவன்மேல் இறங்கினதினால், அவன் அஸ்கலோனுக்குப் போய், அவ்வூராரில் முப்பது பேரைக் கொன்று அவர்களுடைய வஸ்திரங்களை உரிந்துகொண்டுவந்து, விடுகதையை விடுவித்தவர்களுக்கு அதனைக் கொடுத்தான், அவனுமட் கோபம் மூண்டவனாகப் புறப்பட்டுப் போகும் நிலை உண்டாயிற்று (நியா. 14:19). எதிரே நிற்கும் அவர்களை அறிந்துகொள்ளாததினாலேயே, சிம்சோனின் சந்தோஷமான நாள் அழுகையாக மாறியது. திருப்தியாகப் புறப்படவேண்டிய அவன் கோபத்துடன் புறப்படும் நிலை உருவானது. தனது வார்த்தைகளினால் எதிரியின் வாயில் சிக்கிக்கொண்டான் சிம்சோன்; அதுவே அவன் நிம்மதியைப் பறித்துப்போட்டது. 


இயேசு பிலாத்துவினிடத்திற்கு கொண்டுவரப்பட்டபோது, பொறாமையினாலே அவரை ஒப்புக்கொடுத்தார்கள் என்று அறிந்து ஒப்புக்கொடுத்தவர்களையே நோக்கி: எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்கவேண்டுமென்றிருக்கிறீர்கள்? என்று கேட்கிறான். இயேசு நீதிமான் என்ற அறிவு பிலாத்துவிற்கு இருந்தது (மத். 27:24), பிலாத்துவின் மனைவிக்கும் இயேசு நீதிமான் என்ற அறிவு இருந்தது (மத். 27:19). ஆனாலும், எதிரே நின்றுகொண்டிருக்கும் கூட்டத்தினரை எதிரி இயக்குவதைக் காணாமல், கேள்விக்கு அவர்களிடமே பதிலை எதிர்பார்த்த பிலாத்து, அவர்களின் பதிலிலேயே சிக்கிக்கொண்டான். முடிவு, இயேசுவை அவர்களது கைகளில் ஒப்புக்கொடுக்கும் நிலை உருவானது.

இன்றும், இத்தகைய கூட்டத்தினர் உலகத்திலும், சபைகளிலும், ஸ்தாபனங்களிலும் உண்டு. நம்முடன் கூடவே இருந்து நம்மைத் தடம் புரளச் செய்யும் இத்தகைய மனிதர்களை நாம் அடையாளம் கண்டுகொள்ளவேண்டும்; இல்லையேல், அவர்கள் நம்மை ஆளுகை செய்யும் சூழ்நிலை உண்டாகிவிடும்; நாமோ அத்தருணத்தில் செயலற்றவர்களாக நிற்கும் நிலை உருவாகும். நீதியை, சத்தியத்தை, வசனத்தைப் பிரசங்கித்து பாவத்தையும் நீதியையும் கண்டித்து உணர்த்தி பிரசங்கம் செய்யும் மனிதர்களை செயல்படவிடாமல் தடுக்கும் எண்ணத்துடன் அவர்களை தள்ளிவிடும் உபாயதந்திரங்களோடேயே செயல்படுபவர்கள் இவர்கள். சபைகளில் சத்தியத்தை அறிவிக்கும்போது, அந்தப் போதகரை அங்கிருந்து அகற்றி வேறு இடத்திற்கு மாற்றுதல் செய்துவிடுவார்கள். தேவ ஊழியர்களின் செய்தியினால் ஜனங்கள் குத்தப்பட்டு, மனந்திரும்பவேண்டும் என்பது வேதத்தின் போதனை; அப்போஸ்தலரின் நாட்களில் நடந்தது இதுவே. அப்போஸ்தலரின் பிரசங்கத்தை ஜனங்கள் கேட்டபோது, இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து: சகோதரரே, நாங்கள் என்னசெய்யவேண்டும் என்றார்கள் (அப் 2:37). ஆனால், இன்றோ, போதகரின் பிரசங்கம் சபையில் உள்ள யாரையாவது குத்திவிட்டால், போதகரைத் தள்ளிவிடுகின்றனர். நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொன்னதினாலே உங்களுக்குச் சத்துருவானேனோ? (கலா 4:16) என்று பவுல் கலாத்தியருக்கு எழுதினாரே.

உங்களுக்கு என் இருதயத்துக்கு ஏற்ற மேய்ப்பர்களைக் கொடுப்பேன், அவர்கள் உங்களை அறிவோடும் புத்தியோடும் மேய்ப்பார்கள் (எரே 3:15) என்றார் தேவன். ஆனால், இன்றோ, எங்கள் இருதயத்திற்கு ஏற்ற மேய்ப்பர்கள் வேண்டும் என்று நினைக்கின்றனர் ஜனங்கள். 'நீங்கள் செய்வது சரியில்லை' என்று பிரசங்கித்துவிட்டால், நீங்கள் செய்த பிரசங்கம் சரியில்லை என்கின்றனர் ஜனங்கள். இப்படிப்பட்ட ஜனங்களால் அகற்றப்பட்டு சிறைவாழ்வை அனுபவிக்கும் ஊழியர்களும், சிறைச்சேதத்தை எதிர்நோக்கி நிற்கும் ஊழியர்களும் உண்டு. சிறையில் அடைப்போரைக் கொண்டே சிறைச்சேதம் செய்யும் திட்டம் சத்துருவினுடையது. உண்மையான ஊழியர்களுக்கும், ஊழியங்களுக்கும் தங்களை சத்துருக்களாக்கிக்கொள்ளும் இத்தகைய மனிதர்களைக் கொண்டே சதியினை அரங்கேற்றுகிறான் சத்துரு. எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகின்றபோது (1பேது 5:8), இவனை விழுங்கு, என்று நாமே ஊழியருக்கு எதிராக நின்று சத்துருவுக்குத் துணைபோய்விடக்கூடாது. சிறையில் நாம் அடைத்தால், நம்மையே சிறைச்சேதமும் பண்ணவைத்துவிடுவான் பிசாசு. ஊழியர்களுக்கு நாம் விரோதியாக மாறும்போது, நம்மைக்கொண்டு தனது பகையைத் தீர்த்துக்கொள்ளுவான் பிசாசு. இதில் நாம் எச்சரிக்கையுடன் காணப்படவேண்டும். நம்முடைய திட்டம் சிறையாக இருக்கும், ஆனால், பிசாசின் திட்டமோ சிறைச்சேதமாயிருக்கும். சிறையிலிருந்து, சிறைச்சேதத்திற்கு நம்மைக் கொண்டுபோய்விடுவான் சத்துரு. மனிதர்கள் நம்மை இயக்காதவாறும், பிசாசின் வலையில் சிக்காதவாறும் காத்துக்கொள்ளுவோம்.

நாமும் பல நேரங்களில் நம்முடன் பேசிக்கொண்டிருக்கும் மனிதர்களை அடையாளம் கண்டுகொள்ள முடியாமல், அவர்கள் விரும்பும் காரியத்தைச் செய்ய உடன்போய்விடுகின்றோம். நமக்கு எதிரே நிற்கும் மனிதர் எதிரியால் இயக்கப்படுகின்றவர் என்ற புரிந்துகொள்ளும் திறன் இல்லாததே இத்தகைய ஆபத்தான நிலைக்கு நம்மைக் கொண்டு செல்லும். எதிரே இருக்கும் மனிதரை சத்துரு இயக்குவதை அடையாளம் கண்டுகொள்ளாவிட்டால், நாமும் மற்றவர்களின் தலையை தாலத்திலே வைத்துவிடுவோம். நீ உன் வாய்மொழிகளால் சிக்குண்டாய், உன் வாயின் வார்த்தைகளால் பிடிபட்டாய் (நீதி 6:2) என்று சத்துரு கூக்குரலிடாதபடி நம்மைக் காத்துக்கொள்ளுவோம்.

Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி