பரத்திற்கு எதிரான பாரம்பரியம்
பாரம்பரியம் என்ற பெயரில் பாதாளத்திற்கு நேரான வாசல்களை பல திசைகளில் இன்றும் சத்துரு திறந்தே வைத்திருக்கின்றான். எனவே, தேவனுக்கும், கிறிஸ்துவுக்கும், கிறிஸ்தவத்திற்கும் தொடர்புடைய செயல்களைப் போலவும், அனுசரிப்புகைளப் போலவும், கொண்டாட்டங்களைப் போலவும் தோன்றும் அநேக காரியங்களில், சத்துருவாகிய சாத்தானுடைய தந்திரமான ஊடுருவலினால் கிறிஸ்தவர்களிடையேயும், கிறிஸ்தவத்திலேயும் உட்புகுத்தப்பட்டவைகள் எவைகள் என்பதை அறிந்துகொள்வதும், அடையாளங் கண்டுகொள்ளவேண்டியதும் இந்நாட்களில் மிகவும் அவசியம். நம்முடைய பழக்க வழக்கங்கள், தேவனுடைய கற்பனையிலிருந்து நம்மை வழுக்கிவிழச் செய்துவிடக்கூடாது.
உம்முடைய சீஷர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை ஏன் மீறி நடக்கிறார்கள்? கை கழுவாமல் போஜனம் பண்ணுகிறார்களே! என்று வேதபாரகரும் பரிசேயரும் இயேசுவினிடத்தில் கேட்டபோது, அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: நீங்கள் உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை ஏன் மீறி நடக்கிறீர்கள்? (மத் 15:2,3) என்றும், உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கிவருகிறீர்கள் (மத் 15:6) என்றும், பாரம்பரியத்தினால் பரத்திற்கு உண்டாகும் பாதிப்பைச் சுட்டிக்காட்டினார். அதுமாத்திரமல்ல, தேவனுடைய கற்பனைகளை மீறி நடந்து, மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, தேவனுடைய கற்பனையை மனிதர்கள் மீறி நடப்பதற்கு, 'மனுஷருடைய கற்பனைகள் உபதேசங்களாகப் போதிக்கப்படுவதே காரணம்' என்பதையும் சுட்டிக்காட்டுகின்றார் (மத் 15:9).
எனவே, அப்போஸ்தலனாகிய பவுல், யூதருடைய கட்டுக்கதைகளுக்கும், சத்தியத்தை விட்டு விலகுகிற மனுஷருடைய கற்பனைகளுக்கும் செவிகொடாமல், விசுவாசத்தினாலே ஆரோக்கியமுள்ளவர்களாயிருக்கும்படி, நீ அவர்களைக் கண்டிப்பாய்க் கடிந்;துகொள் (தீத் 1:13,14) என்று தீத்துவுக்கு குறிப்பாக எழுதுகின்றார்.
தேவனுடைய கற்பனையை மீறி நடக்கச் செய்யும் மனுஷருடைய கற்பனை என்றால் என்ன? என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டியது அவசியம். இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது (ஏசா 29:13) என்று உரைக்கிறார் ஏசாயா தீர்க்கதரிசி. இப்படிப்பட்ட போதனைகளே இன்றைய நாட்களிலும் மிகுந்து காணப்படுகின்றன. உள்ளத்தை கர்த்தருக்குத் தூரமாக வைத்துக்கொண்டு, உதடுகளால் மாத்திரம் சேரும்படியாகவே ஜனங்கள் உபதேசிக்கப்படுகிறார்கள். போதிக்கிறவர்களும், போதனையைக் கேட்கிறவர்களும் உள்ளத்தைக் குறித்துக் கவலைப்படுகிறதில்லை. இரட்சிப்பைக் குறித்தும், மனந்திரும்புதலைக் குறித்தும், மறுவுலக வாழ்வினைக் குறித்தும் கவலைகொள்ளாமல், ஆசீர்வாதத்தையும், சரீரப்பிரகாரமான சுகத்தையும் மாத்திரமே முன்நிறுத்தும் உபதேசங்கள் பரத்துக்கு விரோதமானவைகளே.
இனி வீண் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டாம்; தூபங்காட்டுதல் எனக்கு அருவருப்பாயிருக்கிறது; நீங்கள் அக்கிரமத்தோடே ஆசரிக்கிற மாதப்பிறப்பையும், ஓய்வுநாளையும், சபைக்கூட்டத்தையும் நான் இனிச்சகிக்கமாட்டேன். உங்கள் மாதப்பிறப்புகளையும், உங்கள் பண்டிகைகளையும் என் ஆத்துமா வெறுக்கிறது; அவைகள் எனக்கு வருத்தமாயிருக்கிறது; அவைகளைச் சுமந்து இளைத்துப்போனேன். நீங்கள் உங்கள் கைகளை விரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது (ஏசா 1:13-15) என்றும், மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் (1சாமு 16:7) என்றும் கர்த்தர் உரைக்கின்றாரே. மேலும், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான்; இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவனோ, பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான் (மத் 5:19) என்று கற்பனைகளுக்குக் கொடுக்கப்படும் கனத்தை இயேசு கிறிஸ்துவும் சுட்டிக்காட்டத் தவறவில்லையே நம்முடைய பாரம்பரியங்கள் பரத்திற்கு பாதிப்பினை உண்டாக்கிவிடக்கூடாது.
Comments
Post a Comment