பாத்திரங்கள் பத்திரம்
மிதியிட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ? (ரோம 9:21)
நம்முடைய கரங்களில் கர்த்தர்; கொடுத்திருக்கும் பாத்திரங்களைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்வதும், பிதாவின் சித்தத்திற்கடுத்த பணிகளுக்கே பிரதானமாக அவைகளைப் பயன்படுத்துவதும், எவ்விதத்திலும் பிசாசு அவைகளை நம்முடைய உறவிலிருந்து பிரித்துவிடாதபடிக்கும், நம்முடைய கரங்களிலிருந்து பறித்துவிடாதபடிக்கும் கவனமாயிருக்கவேண்டியது நமது பொறுப்பு. மனுபுத்திரனே, உன்னை இஸ்ரவேல் வம்சத்தாருக்குக் காவலாளனாக வைத்தேன்; நீ என் வாயினாலே வார்த்தையைக்கேட்டு, என் நாமத்தினாலே அவர்களை எச்சரிப்பாயாக என்பதும், நீ ஆயத்தப்படு, உன்னுடனே கூடின உன் எல்லாக் கூட்டத்தையும் ஆயத்தப்படுத்து; நீ அவர்களுக்குக் காவலாளனாயிரு (எசே. 3:17; 38:7) என்பதும் அல்லவோ கர்த்தரிடத்திலிருந்து வரும் சத்தியத்தின் சத்தம். அப்படியிருக்க, 'காவலாளி' என்ற ஸ்தானத்தில் இருக்கும் நாம், கண்ணயர்ந்துவிட்டால், நம்முடைய கைகளில் இருக்கும் பொக்கிஷம் போன்ற மனிதர்களையும்
பிசாசு பொறுக்கிக்கொண்டு போய்விடக்கூடுமே. கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று, என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காகவும், புறஜாதியாரெல்லாரும் கேட்கிறதற்காகவும், என்னைப் பலப்படுத்தினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் நான் இரட்சிக்கப்பட்டேன் (2தீமோ 4:17) என்று கர்த்தரைக் குறித்து அப்போஸ்தலனாகிய பவுல் எழுதுவதுபோலும், மரணத்துக்கு ஒப்பிக்கப்பட்டவர்ளையும், கொலையுண்ணப்போகிறவர்களையும் விடுவிக்கக்கூடுமானால் விடுவி (நீதி 24:11) என்று சாலொமோன் எழுதுவது போலும், நாமும் போரில் பிறருக்குத் துணையாக நிற்கவேண்டுமல்லவா.
ஒவ்வொரு இழைகளாக இடையிடையே சத்துரு ஆத்துமாக்களை ஆங்காங்கே உருவத் தொடங்கினால், இறுதியில் ஆடையையே இழந்து நிற்கும் அவலமான நிலைக்கும் சத்துரு நம்மைத் தள்ளிவிடக்கூடும். 'சிறு துளி, பெரு வெள்ளம்' என்ற வாழ்மொழிக்கேற்ப, துளித் துளியாய் வெளியேறிச் செல்லுவதை நம்முடைய விழிகள் கவனிக்கத் தவறுமென்றால், இறுதியில் 'வெள்ளம்' போன்ற பெரியதோர் கூட்டம் வெளியேறிவிடுமே. பொற்குடமாயிருந்தாலும், மட்குடமாயிருந்தாலும், வெள்ளிக்குடமாயிருந்தாலும் அல்லது சிறிதோர் குவளையாயிருந்தாலும், சிறியதோர் துளை இருந்தால்கூட உள்ளிருக்கும் நீரனைத்தும் ஒழுகிப்போய்விடுமே. 'ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள்' (யோவான் 2:7) என்று கிறிஸ்து கட்டளையிட்டாலும், அதனை செய்து முடிக்க இயலாமல் போய்விடுமே. வேகமாய் செல்லும் வாகனத்தின் சக்கரத்திலும் சிறியதாக உண்டாகும் துளை, அனைத்து காற்றினையும் வெளியேறச் செய்து, பயணிகளோடுகூட வாகனத்தின் பயணத்தையே முற்றிலும் நிறுத்திவிடுமே. பிரச்சனைகளும், போரட்டங்களும் வரும்போது போனால் போகட்டும் என்ற மனநிலையோடு நாம் மௌனமாகிவிடாமல், அவைகளை உருவாக்கும் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நின்று போரிட்டு ஆத்துமாக்களைத் தப்புவிக்கவேண்டியது நம்முடைய கடமையல்லவா. இதற்கு, சகலவித ஆவிக்குரிய போராயுதங்களோடு (எபேசி. 6:11) கர்த்தர் நம்மை அனுதினமும் ஆயத்தப்படுத்துவாராக.
நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவுந்தக்கதாக ஒரு மனுஷனைத் தேடினேன், ஒருவனையும் காணேன் (எசே 22:30) என்று கதறும் ஆண்டவரின் குரலையாவது நமது செவிகள் கேட்கட்டுமே. சுவரில் உண்டாயிருக்கும் சிறியதோர் துளையிலிருந்துதான் தேசத்தின் அழிவு தொடங்குகிறது என்பதைத்தானே இந்த வசனம் நமக்கு தெளிவாக வெளிப்படுத்துகின்றது. எங்கோ உண்டாயிருக்கும் சிறியதோர் ஓட்டையினை நாம் அடைத்துவிட்டால், தேசத்தின் கோட்டையே முழுவதும் விழுந்துவிடாதபடிக்கு நம்மால் காத்துவிட முடியுமே. இத்தகைய சுவரை அடைக்கும் மனிதர்களை நாம் அடையாளம் கண்டுகொள்ளவேண்டியது அவசியமல்லவா; அத்தகைய துணிவு நம்மிடத்தில் துளிர்விடட்டும்.
மேலும், ஒரு பெரிய வீட்டிலே பொன்னும் வெள்ளியுமான பாத்திரங்களுமல்லாமல், மரமும் மண்ணுமான பாத்திரங்களுமுண்டு; அவைகளில் சில கனத்திற்கும் சில கனவீனத்திற்குமானவைகள். ஆகையால் ஒருவன் இவைகளை விட்டு, தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான் (2தீமோ 2:20,21) என்று வாசிக்கின்றோமே. அப்படியே, குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ? (ரோமர் 9:21) என்றும் வாசிக்கின்றோமே. இவ்விரு வசனங்களில் வெளிப்படும் அதிகாரங்களை நாம் விளங்கிக்கொள்ளவேண்டியது அவசியம். வீட்டெஜமானும் மற்றும் குயவனும், 'கனத்திற்குரிய பாத்திரங்களையும், கனவீனத்திற்குரிய பாத்திரங்களையும்' அடையாளம் கண்டுகொள்ளத் தவறிவிட்டாலோ, அல்லது கனத்திற்குரிய இடத்தில் கனவீனத்திற்குரிய பாத்திரங்களையும், கனவீனமான இடத்தில் கனத்திற்குரிய பாத்திரங்களையும் வைத்துவிட்டாலோ வீடே தலைகீழாகிவிடும்' என்பதே வேதம் காட்டும் வெளிச்சம்.
Comments
Post a Comment