வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்
எங்கே விழுவேன்? எப்படி விழுவேன்? யாரால் விழுவேன்? எதனால் விழுவேன்? ஏன் விழுவேன்? எதற்காக விழுவேன்? போன்ற அத்தனை கேள்விகளையும் சுயமாகக் கேட்டுப்பார்த்தால், உத்தரவு கொடுக்க உதடுகளுக்கு பெலனிருக்காது. நினையாத நேரத்தில் விழுந்துபோவார் பலர், நினைத்திருந்தும் கவனக்குறைவினால் விழுந்துபோவார் பலர், தடுக்குவதும், தள்ளுவதும் பெலமாயும் தங்களுக்குள்ளோ பெலமில்லாமையும் காணப்படுவதால் வீழ்ந்துபோவார் பலர், உதவுவார் யாரின்றியும், தூக்கிவிடுவார் எவரின்றியும் ஒண்டியாய் வீழ்ந்து கிடப்பார் பலர்; எதிரியின் பாதையிலேயே தொடர்ந்து பயணித்துக்கொண்டிருப்பதால்,
தொலைதூரம் சென்றபின்பு வீடு திரும்ப வழிதெரியாமல் சிக்கிக்கொண்டார் பலர், பாவத்திற்குள் போகப் போகப் பாவியின் மீது தனது பெலத்தை அதிகரிக்கச் செய்பவன் சத்துரு. மறுகணம் என்ன நடக்கும்? காலடி வைக்கும்போது, காலை எது பதம் பார்க்கும்? என்ற அத்தனை அறிவும் தனக்கு இல்லாவிடினும், விழுகையைக் குறித்த பயத்திற்கு இடங்கொடுக்காமல், ஆத்துமாவில் பெலத்தை அதிகரித்துக்கொண்டால், தொடர்ந்து ஓடலாம்.
கிறிஸ்துவை விட்டு நம்மைப் பிரித்துவிடவேண்டும் என்றும், தன்னோடு நம்மையும் சேர்த்துவிடவேண்டும் என்றும் வௌ;வேறு விதங்களில் நம்மைச் சூழ சத்துருவின் போராட்டங்கள் நடந்துகொண்டிருந்தாலும், கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ? இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூறுகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே (ரோம 8:36,37) என்ற பவுலின் வாழ்க்கை நம்மிடத்திலும் காணப்படட்டும். உயிரைப் பறித்தாலும், உறுதியாயிருக்கும் நம்மை கர்த்தருடனான உறவினின்று பிரிக்க பெலமற்றவன் சத்துரு என்பதுவே சத்தியம். மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன் (ரோம 8:38,39) என்ற அழுத்தமான அர்ப்பணிப்பை அறிந்த நமக்கு அச்சம் தேவையில்லையே.
என் சிநேகிதராகிய உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: சரீரத்தைக் கொலைசெய்து, அதன்பின்பு அதிகமாக ஒன்றும் செய்யத் திராணியில்லாதவர்களுக்குப் பயப்படாதிருங்கள். நீங்கள் இன்னாருக்குப் பயப்படவேண்டுமென்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: கொலைசெய்தபின்பு நரகத்திலே தள்ள வல்லமையுள்ளவருக்குப் பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் (லூக். 12:4,5) என்கிறார் இயேசு.
இப்போதனையின் பெலத்தை அறியாமல் வாழும் மனிதர்களே பயத்தினால் சத்துருவின் வலையில் விழுந்துவிடுகின்றனர். பயமுறுத்தும் சத்துருவைக் கண்டு, சத்தியத்தை விட்டு விலகி, சத்துருவுக்குச் சாதமாகச்; சரிந்துவிடுகின்றனர். இந்தக் காலத்தில் இப்படித்தான் வாழவேண்டும் என்று தங்களின் பயத்தை சமன் செய்யும் வண்ணம் பிறருக்கும் போதிக்கத் தொடங்கிவிடுகின்றனர்; பயப்படவேண்டிய தேவனுக்குப் பயப்படாமலும், பயப்படக்கூடாத பிசாசுகளைக் கண்டு பயப்படும்படியாகவும் இயேசுவின் போதனைக்கு விரோதமான வாழ்க்கை முறையினை மனிதர்களிடத்தில் மாற்றியமைத்துவிட முயற்சிக்கிறான் சத்துரு. சாராயம் குடிக்கிறவர்களாகவும், சிகரெட் புகைக்கிறவர்களாகவும், விபச்சாரக்காரர்களாகவும், சினிமா மற்றும் காம லீலைகளுக்கு தங்களை விற்றுப்போட்டவர்களாகவும் வாழும் மனிதர்கள் பலர் தேவாலயத்திற்குச் செல்ல பயப்படுவதில்லை; ஆனால், பிசாசினைக் குறித்த பயம் அவர்களுக்கு உண்டு. தங்களுக்கு விரோதமாக மந்திரம் செய்துவிடுவார்கள் என்றும், சூனியம் வைத்துவிடுவார்கள் என்றும், செய்வினையில் சிக்கிக்கொள்ளக்கூடாது என்றும், சுடுகாடு மற்றும் கல்லறைகளைக் கண்டும் அலறி ஓடும் குணமும் தன்மையும் அவர்களுக்கு உண்டு. ஜாதகம் பாராமல் திருமணம் செய்துவிட்டால் பாதகம் நேரிடும் என்றும், சடங்காச்சாரங்களை சரிவரச் செய்து தீர்க்காவிட்டால் குடும்பத்திற்கு சங்கடங்கள் உண்டாகிவிடும் என்றும், ராகு காலம், எம கண்டம் என்று பல்வேறு காலங்களை மனதில் கொண்டு, சரியான நாட்களில் காரியங்களை நடத்தாவிட்டால் முழுவதுமே கெட்டுப்போகும் என்றும் பயந்துகொண்டிருக்கும் மனிதர்கள் பலருக்கு தேவ பயம் இல்லை; தேவஜனம் என்று அழைக்கப்படும் பலரும் இத்தகைய பயத்தில் வாழ்ந்தும், தேவனுக்குப் பயப்படாமல் வாழ்வதும் பரிதாபமானதே. யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதம் இல்லை, இஸ்ரவேலுக்கு விரோதமான குறிசொல்லுதலும் இல்லை (எண். 23.23) என்ற வாக்கு வேதத்தில் இருந்தும், நாங்கள் இஸ்ரவேலர்கள் அல்ல என்பதை பயத்தின் மூலம் வெளிக்காட்டும் பயணிகள் அவர்கள். இஸ்ரவேலர் எல்லாரும் இஸ்ரவேலர் அல்லவே என்பதை அவர்களது இத்தகைய செயல்களும் பயமும் அடையாளம்காட்டிக்கொடுத்துவிடும். தேவஜனத்தோடு அவர்கள் கலந்திருக்கலாம் ஆனால் அவர்கள் தேவஜனம் அல்ல. ஆலயத்திற்குச் செல்லலாம் ஆனால் அவர்கள் ஆண்டவருடையவர்கள் அல்லவே.
'தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும், அன்பும், தெளிந்த புத்தியுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்' (2தீமோ. 1:7). அப்படியிருக்க, பயத்தை சத்துரு உங்கள் வாழ்க்கையில் புகுத்தும் சந்துபொந்துகளை அடையாளம் கண்டுகொண்டு அடைத்துவிடுங்கள். பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள் (எபே. 4:27). பயம் என்பது, பிசாசு தன்னோடு உங்களைத் தங்கவைத்துக்கொள்ள உபயோகப்படுத்தும் பெலமுள்ளதோர் ஆயுதம்.
இப்படி சத்துருவின் யுக்தியினால் யுத்தத்தில் ஆவிக்குரிய உயிரை விட்டவர்கள், ஆவிக்குரிய வாழ்க்கையில் பிணங்களாகிப்போனாலும், சத்துருவின் சேனைகளிலோ போர்க்கணைகளாகப் பயன்படுத்தப்படும் மறுபக்கத்தை நாம் அறிந்துகொள்ளவேண்டியது அவசியம். சத்துருவினால் வீழ்த்தப்பட்டவர்கள், தங்களோடு கூட ஒருகூட்ட ஜனங்களை சத்துருவின் பாதைக்கு நேராக வாரிக்கொண்டு சென்றுவிடுகின்றனர். யானைகளைக் கொண்டே காட்டு யானைகளைப் பிடிப்பதைப் போல, இறந்த மனிதர்களைக் கொண்டே ஆவிக்குரிய சிறந்த மனிதர்களைப் பிடிக்கிறவன் சத்துரு. 'மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும்' என்றார் இயேசு; அனால், மரித்தோர் பலர் உயிருள்ளோரை அடக்கம்செய்துவிடுகின்றனர். தன்னோடு பேசுகிறவர்களும், பழகுகிறவர்களும் யாரென்ற அறிவில்லாதவர்களின் சிந்தையிலிருந்து ஆண்டவரை எளிதாக எடுத்துவிட அத்தகையோரைப் பயன்படுத்துகின்றான். வீழ்ந்தோரின் சோர்புள்ள வார்த்தைகளும், தோல்விக்கான காரணங்களைச் சொல்லும் விதங்களும் உயிரோடு இருக்கும் பலரைக்கூட உயிரை விடச்செய்துவிடுகின்றன. தங்களுக்குள் இருக்கும் பயம், அவிசுவாசம் மற்றும் உலகத்துக்கடுத்த காரியங்களை பிறருக்குள் விதைத்து, பிசாசின் சத்திரத்தில் சேர்த்துவிடுகின்றனர். காயம்பட்டுக்கிடக்கும் நேரத்தில் கண்ணீர்விடுவது யாரென்று தெரியாமல், அவர்கள் தண்ணீரில் அடித்துச் செல்லபட்டோர் அநேகர் உண்டு.
ஆற்றின் இக்ககரையிலே குரங்கு ஒன்று அக்கரைக்கு செல்ல இயலாமல், போவதற்கு வழியறியாமல் பரிதாபமாக அமர்ந்திருந்த கதைதான். ஆற்றங்கரையில் இருந்த குரங்கை, நீந்திக்கொண்டிருந்த முதலை தன்னிடமாய் அழைத்தது; உன்னை அக்கரை சேர்க்கிறேன் என்று சொல்லி குரங்கின் கறியைத் தின்ன ஆசைப்பட்டது. கரைக்குச் சென்றால், தன்னால் குரங்கை விரட்டிச் சென்று பிடிக்க முடியாது; குரங்கு தன்னைவிட வேகமாக ஓடும் திறனும், தாவும் வலிமையும் படைத்தது என்பதை அறிந்திருந்தது முதலை. மெல்ல குரங்கினிடம் பேச்சு கொடுத்தது, நீ என் முதுகில் ஏறி அமர்ந்துகொள், நான் உன்னை அக்கரைக்கு கொண்டு சென்றுவிட்டுவிடுகிறேன் என்றது. முதலையை நம்பி, அதன் முதுகிலே ஏறியது குரங்கு. நடு ஆற்றிலே, குரங்கினைக் கொன்று அதன் ஈரலைத் தின்னத் திட்டம் தீட்டியது முதலை. இதனை அறிந்த குரங்கு சமயோசிதமாக, முதலையை நோக்கி, என் ஈரலை அந்தக் கரையிலே மரத்திலேயே வைத்துவிட்டு வந்துவிட்டேனே, என்னை கரைக்கு கொண்டு செல், ஈரலை எடுத்துவருகிறேன் என்றது. முதலை கரையில் விட்டபோது, தலைதெறிக்க ஓடியது குரங்கு. தவறான கப்பல் உங்களை கரை சேர்க்காது, யோனாவை நினைத்துக்கொள்ளுங்கள்; காக்கும் கர்த்தர் உடனுண்டு அவருக்குச் செவிகொடுத்தால் தப்பிக்கொள்வீர்கள்.
குரங்கு முதலையின் முதுகில் ஏறி இறங்கியதைப்போல, யோனா கப்பல் ஏறி தள்ளப்பட்டதுபோலத்தான் அநேகருடைய நிலை இன்று காணப்படுகின்றது; உங்கள் நிலை எப்படி? யார்மீதாகிலும் ஏறி, யாருடைய உதவியையாகிலும் பெற்றுக்கொண்டு, தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிவிடவேண்டும் என்று விரும்புகின்றீர்களா?
'செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமள தைலத்தை நாறிக் கெட்டுப்போகப்பண்ணும்' (பிர. 10:1) என்பதை சத்துருவும் அறிந்தவன், செத்த ஈக்களை மற்ற ஈக்களோடு கலந்து, மொத்த ஈக்களும் தன்னையே மொய்த்துக்கொண்டிருக்கவேண்டும் என்ற எண்ணத்துடனேயே பிசாசு செயல்படுகிறான். இயேசுவை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கொடுக்கும் ஆலோசனைகளைக் குறித்தும், அறிவுரைகளைக் குறித்தும் கவனமாயிருங்கள், அவைகள் உங்களை இயேசுவை விட்டு பிசாசின் எல்லைக்குள்ளாக இழுத்துச்சென்றுவிடலாம். நேர்வழியாகச் சென்றுகொண்டிருக்கும்போது, இடைவழியில் வரும் இவர்களால் இடறிவிழுந்துவிடாதிருங்கள். அவர் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது என்று அநியாயத்தைச் செய்துவியாதிருங்கள், அவர் சொல்வதையுந்தான் செய்துபார்ப்போமே என்று சத்தியத்திற்குச் சத்துருவாகிவிடாதிருங்கள். உங்கள் காலடிகள் கன்மலையின் மேல் உறுதியாயிருக்கட்டும். யாருக்காக எதை விட்டுவிட்டீர்கள்? உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையின் அங்கங்களை அழிக்கும் சத்துருவின் அஸ்திரங்கள் எவை? என்பவைகளையெல்லாம் சரியாக அடையாளம் கண்டுகொண்டு உங்களை உயிரோடு காத்துக்கொள்வது உங்களுடைய கடமை. தேவனால் பிறந்த எவனும் பாஞ்செய்யான் (1யோவான் 3:9); தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான், பொல்லாங்கன் அவனைத் தொடான் (1யோவான் 5:18). விழுந்தவர்களைக் கொண்டு மற்றவர்களை வீழ்த்தும் சத்துருவின் தந்திரத்தை அறிந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்வோம்.
பாவஞ்செய்த தூதர்களைத் தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்தார் (2பேது 2:4) என்று எழுதுகிறார் பேதுரு. 'சாத்தான்' என்று ஒருமையிலேயே அவனை நாம் அடையாளம் காட்டினாலும், பன்மையிலேயே அவன் பலரை இழுத்துக்கொண்டு விழுந்தவன் என்பதை மறந்துவிடக்கூடாது. எத்தனை தூதர்கள் பாவம் செய்தார்கள்? என்ற அறிவு நமது எண்ணிக்கைக்கு அடங்காதது அல்லவா? அசுத்த ஆவிகளினால் பிடிக்கப்பட்டிருந்த ஒரு மனிதனை இயேசு சந்தித்தபோது, அவர் அவனை நோக்கி: உன் பேர் என்னவென்று கேட்டார். அதற்கு அவன்: நாங்கள் அநேகராயிருக்கிறபடியால் என் பேர் லேகியோன் என்று சொன்னான் (மாற். 5:9). அவைகளை இயேசு துரத்தியபோது, ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகள் கடலிலே பாய்ந்து அமிழ்ந்து மாட்டன (மாற். 5:13). இந்த ஒரு சம்பவத்திலேயே சுமார் இரண்டாயிரம் ஆவிகள் அடையாளம் காட்டப்படுகின்றன; வானத்திலிருந்து வீழ்ந்தவைகள் இன்னும் எத்தனை ஆயிரங்களோ? லட்சங்களோ? அல்லது கோடிகளோ? இயேசுவைக் காட்டிக்கொடுக்க யூதாஸ் உடன் மனிதர்கள் பலர் வந்தபோது, இயேசு பேதுருவை நோக்கி, 'நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா?' (மத். 26:53) என்றார். 'உலகத்திலிருக்கிறவனிலும், உங்களிலிருக்கிறவர் பெரியவர்' என்பதைப் போல, உலகத்தில் இருக்கும், அந்தகார லோகாதிபதியோடு இயங்கும் தள்ளப்பட்ட தூதர்கள் அதாவது பிசாசுகளைக் காட்டிலும், நம்முடைய தேவனுடைய கட்டளையின்படி இயங்கும் தூதர்கள் கூட்டம் அதிகம் என்பதை மறந்துவிடக்கூடாது; நாம் பெருங்கூட்டத்தின் பக்கம் நிற்கின்றவர்கள்; நாம் பலுகிப் பெருகுகிறவர்கள்; பலுகிப் பெருக பெலமற்ற பிசாசுகளோ விழுந்த எண்ணிக்கையுடனேயே வாழ்ந்துகொண்டிருக்கின்றன. பலுகிப் பெருகும் மனிதர்களையோ பிசாசுகள் பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கின்றன. அவனது வலைக்குள் விழுந்துவிட்டீர்களோ? அவனது எல்லைக்குள் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்களோ? வெளியே வாருங்கள்.
Comments
Post a Comment