Skip to main content

பாவியும் நீயும் ஒன்றா?

பாவியும் நீயும் ஒன்றா?

 

துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும் (சங் 1:1) இருக்கவேண்டும் என்ற ஆலோசனையினைப் பெற்ற நாம், பாவிகளை நேசித்தும், பாவங்களைக் கண்டு விலகியும் செல்லும் நமது பயணத்தின் தொடர்ச்சி, எந்நிலையிலும் பாதிக்கப்படாதபடிக்கு தொடரோட்டமாய் சென்றுகொண்டிருக்கவேண்டும். பாவங்களைக் கண்டு விலகவேண்டும், ஆனால் பாவிகளையோ நேசிக்கப் பழகவேண்டும் என்ற இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று முரணாயிருந்தாலும், ஆவிக்குரிய வாழ்க்கையில் நாம் முன்னேறிச் செல்வதற்கும், வளர்ச்சியடைந்துகொண்டிருக்கிறோம் என்பதைக் காட்டுவதற்கும் அப்படிச் செய்வதே சிறந்த பயிற்சி என்பதை மறந்துவிடவேண்டாம். பாவத்தையே கிள்ளி எறிய நாம் அனுப்பப்பட்டவர்கள்; பாவிகளை தள்ளி எறிய அல்ல. கோபத்திற்காக, கோபம் கொண்டவனையும், பொய்க்காக பொய் சொன்னவனையும், திருட்டிற்காக திருடியவனையும் தண்டிப்பவது இவ்வுலக வழக்கு மாத்திரமல்ல, நியாயத்தீர்ப்பிலும் கூட அப்படியே. எனினும், மரணத்திற்கு முன்பாக மனிதர்களை பாவத்திலிருந்து பிரித்தெடுத்துவிடும் அழைப்பு நம்முடையது. எனினும், பாவத்திற்கும் மனிதனுக்கும் இடையில் உள்ள இந்த வலுமையான பிணைப்பை உடைத்தெறிய வல்லவர் இயேசு ஒருவரே; அதனைச் செய்யவே அவரது இரத்தம் நமக்காகச் சிந்தப்பட்டது. பாவத்தைவிட்டு பாவியைப் பிரித்தெடுக்கத் திணறுவோர், 'இனி அவன் திருந்தவே மாட்டான்' என்ற வாசகத்தோடு தன் பணியினை முடித்துக்கொள்கின்றனர். பாவத்தையும், பாவியையும் பிரித்துப் பார்க்க பெலன் இருந்தால் மாத்திரமே, பாவியை நாம் நேசிக்க முடியும்; இல்லையென்றால், பாவியையும் பாவத்தோடு சேர்த்து வீசிவிடுவோம்.

நான் வாலிபனாக இருந்தபோது, கன்னியாக்குமரி மாவட்டம் முட்டம் பகுதியில் கிருபையின் ஊழியத்தினர் நடத்திய வாலிபர் முகாமிற்கு ஜெபக்குழு நண்பர்களுடன் சென்றிருந்தேன். அப்போது ஒருநாள், எனது நண்பன் சகோதரன் கழிவறைக்குச் சென்றிருந்தபோது, கையில் கட்டியிருந்த கைக்கடிகாரத்தை உள்ளே தவறவிட்டுவிட்டான்.எனினும், அதை அப்படியே விட்டுவிட்டு வந்துவிட அவனுக்கு மனமில்லை. அவன் வெளியே வந்தபோது செய்த முதல் செயல், அந்த கழிவறைக்கு காவலாக நின்றதே. வேறு யாரையும் கழிவறைக்குள் செல்ல அனுமதிக்காமல், வேறு கழிவறைக்குச் செல்லுங்கள் இதிலே எனது கைக்கடிகாரம் விழுந்துவிட்டது நான் எடுக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தான். நானும் அவனுடன் சேர்ந்து பல வழிகளில் அதனை எடுக்கப் போராடியும், ஏமாற்றமே மிஞ்சியது. எனினும் விட்டுவிட மனமற்ற அவன் சிலரை அழைத்து வெகுநேர போராட்டத்திற்குப் பின்னர் அதனை வெளியே எடுத்து லைப்பாய் சோப்பினால் அதனை தீரக் கழுவி தன் கையிலே கட்டிக்கொண்டான்; அப்போது அவனது முகத்தில் இருந்த ஆனந்தத்தைக் கண்டவன் நான்.

எனக்கருமையானவர்களே, மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதருக்கு முன்பாகச் சந்தோஷமுண்டாகும் (லூக். 15:10) என்று இயேசுவும் சொன்னாரே. இதற்காகவே, அவர் பாவிகளைத் தேடித் தேடிச் வந்தார். பாவிகளை பாவத்தோடு விட்டுவிடவில்லை. பாவிகள் தன்னிடத்தில் தானாகவே மனந்திரும்பி வரட்டும் என்று காத்திருக்கவில்லை; அவரே தேடிவந்தார். பாவிகளை பாவத்தினின்று பிரிக்க தன்னையே சிலுவையில் உடைக்கக் கொடுத்தார். பாவிகளோடு பந்தியிருந்தார் (மத். 9:11), பாவிகளுக்கு சிநேகிதனாயிருந்தார் (மத். 11:19), 'நான் பாவியான மனுஷன், நீர் என்னைவிட்டுப் போகவேண்டும்' (லூக். 5:8) என்று சொன்ன பேதுருவை பாவியாக அப்படியே விட்டுவிடாமல், சீஷனாக்கி கூட அழைத்துக்கொண்டுபோனார் (லூக். 5:8,10). இயேசு பாவிகளோடு பழகியதற்கான காரணம் நமக்குத் தெரிகிறதல்லவா? சகேயுவின் வீட்டிற்கு இயேசு சென்றபோது, 'இவர் பாவியான மனுஷனிடத்தில் தங்கும்படி போனார்' (லூக். 19:7) என்று ஜனங்கள் முறுமுறுத்தார்கள்; ஆனால், அவரது வருகை அந்த வீட்டிற்கு இரட்சிப்பைக் கொண்டுவந்தது. இயேவால் குணமாக்கப்பட்ட குருடனிடத்தில், 'இந்த மனுஷன் பாவி' (யோவான் 9:24) என்று சொன்னார்கள், ஆனால் அந்தக் குருடனுடைய கண்களோ திறந்திருந்தது. 'உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது' என்று சொல்லி பாவத்தினின்று பாவியைப் பிரித்தெடுத்தார்.

பாவிகளை இயேசு ஒதுக்காதபடியினாலே, பாவிகளும் அவரைத் தேடிவந்தார்கள் (லூக். 7:37). சகல ஆயக்காரரும், பாவிகளும் அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்திற்கு வந்தார்கள் (லூக். 15:1). அவர்களை அவர் தள்ளிவிடவில்லை, அவர்களை விட்டு அவர் ஒதுங்கிப்போய்விடவுமில்லை.

ஆனால், பரிசேயரும் வேதபாரகருமோவென்றால், பாவிகளைக் கண்டு ஓரம்போய்க்கொண்டிருந்தனர். லேவியனும், ஆசாரியனும் அடிபட்டுக்கிடந்தவனைக் கண்டு அப்புறமாய் போய்க்கொண்டிருந்தனர்; மனிதாபிமானமற்றவர்களாகவே அவர்கள் காணப்பட்டனர். எனவே, பாவிகளும் ஆசாரியர்களையும், லேவியர்களையும் கண்டு ஓரமாய் ஒதுங்கிக்கொண்டிருந்தனர். பாவத்தின் பிடியில் சிக்கிக்கிடப்போரைக் கண்டு நாம் ஒதுங்கிச் செல்வோரா நாம்? பாவிகள் நம்மைத் தேடிவரவேண்டும், அவர்களை நாம் ஏற்றுக்கொண்டால்தான், ஜீவ ஊற்றினால் அவர்கள் பாவங்களைக் கழுவமுடியும். பாவிகளை தூரத்தில் துரத்திவிட்டால், அவர்கள் பாவங்களை உணர்த்துவது எப்படி? பாவிகளைக் கண்டு ஓரம்போகவேண்டாம்; கூடையில் இருக்கும் மீன்களுக்கல்ல, கடலில் கிடக்கும் மீன்களுக்காகப் பிரயாசப்படுவோம், வலையை வீசுவோம்.

இயேசுவைப்போல, பாவிகளை நேசிக்கும் வளர்ச்சி நமக்குள்ளும் உண்டாகவேண்டுமென்றால், அவருடைய போதித்தவைகளில் நாம் பயிற்சிபெறவேண்டும். இல்லயென்றால், பாவத்திலிருந்து நாம் பிரிந்து வந்திருந்தாலும், பரிசுத்தவான்களாக நம்மை அடையாளம் காட்டினாலும், பாவிகளுக்கும் நமக்கும் வித்தியாசம் இராது. இந்த வட்டத்திற்குள் அடைந்து கிடப்போர் ஏராளம். உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகித்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் தங்களைச் சிநேகிக்கிறவர்களைச் சிநேகிக்கிறார்களே. உங்களுக்கு நன்மைசெய்கிறவர்களுக்கே நீங்கள் நன்மைசெய்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் அப்படிச் செய்கிறார்களே. திரும்பக் கொடுப்பார்களென்று நம்பி நீங்கள் கடன்கொடுத்தால் உங்களுக்குப் பலன் என்ன? திரும்பத் தங்களுக்குக் கொடுக்கப்படும்படியாகப் பாவிகளும் பாவிகளுக்குக் கடன்கொடுக்கிறார்களே (லூக் 6:32-34) என்று சொன்னார். ஓரம்போய்கொண்டிருக்கிறவர்களே! செயல்களில் நீங்களும் பாவிகளும் ஒன்றாகத்தானே இருக்கிறீர்கள் என்பதை என்று எச்சரித்தார். அதைக் காட்டிலும் மேற்படிக்கு முன்னேற வர இயேசு அழைப்பு விடுத்தார்.

உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மைசெய்யுங்கள், கைம்மாறுகருதாமல் கடன் கொடுங்கள்; அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள்; அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிறாரே. ஆகையால் உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள். மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்; அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள்; மற்றவர்களை ஆக்கினைக்குள்ளாகும்படி தீர்க்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதிருப்பீர்கள்; விடுதலைபண்ணுங்கள், அப்பொழுது நீங்களும் விடுதலைபண்ணப்படுவீர்கள் (லூக் 6:35-37); உங்களைச் சபிக்கிறவர்களைச் ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள் (மத் 5:44). நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக்கொடு.உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு. ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம்வரப் பலவந்தம்பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ. உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன்வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே (மத் 5:39-42) என்றார்.

உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகிப்பீர்களானால், உங்களுக்குப் பலன் என்ன? ஆயக்காரரும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா? உங்கள் சகோதரரைமாத்திரம் வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன? ஆயக்காரரும் அப்படிச் செய்கிறார்கள் அல்லவா? (மத், 5:46,47)

பாவத்தைவிட்டு விலகி பரிசுத்தவான்களுடைய கூட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாம், பாவிகளைக் காட்டிலும் மேன்மையானவைகளைச் செய்கிறோமா? இல்லையெனில், பாவிகள் எப்படிச் செய்கிறார்களோ, அப்படியே செய்துகொண்டிருக்கிறோமா? வித்தியாசமில்லாமல் வாழ்ந்தால், வாழ்க்கையில் நாம் அவர்களுக்குச் சமமானவர்களாகவே இருப்போம் என்பதை மறந்துவிடவேண்டாம். 

Comments

Popular posts from this blog

கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்

  கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்   வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கிறிஸ்துவின் குணங்களை வெளிப்படுத்தவேண்டியதும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டியதும் கிறிஸ்தவனின் தலையாயக் கடமை.  கிறிஸ்துவுக்குள்  வாழும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சில உண்மைகளை பவுல் எபேசு சபைக்குச் சுட்டிக்காட்டுகின்றார். கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்  (எபே. 1:3),  பாவமன்னிப்பாகிய மீட்பு  (எபே. 1:7) இவைகள் பொதிந்திருக்கின்றன. ஆனால், இவ்விரண்டிற்கும் பலர் முக்கியத்துவம் கொடுக்காமல், உலகத்தின் ஆசீர்வாதங்களையே அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். பாவமன்னிப்பினைப் பெறாமல், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறாமல், உலகத்தின் ஆசீர்வாதங்களுக்காகவே அவரின் பின்னே ஓடினால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் முடிவு பரிதாபமாகவே இருக்கும். உன்னதங்களில் உட்காரவேண்டிய நாம் உலகத்தோடு ஒட்டிவிடுவோம், மணவாளனோடு வாழவேண்டிய நாம் மண்ணுக்காக வாழ்ந்துவிடுவோம். கிறிஸ்துவிடம் பிரதானமாய் பாவமன்னிப்பையே முதலில் பெற நாடுவோம்; அதற்காகத்தானே பிதா இயேசுவை இந்த பூமியில் அனுப்பினார். எனவே, பிதாவின் பி...

இறைச்சியா? இச்சையா?

இறைச்சியா?  இச்சையா? 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்' (மத். 6:11) என்றும், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத். 6:34) என்றும் பிதாவை நோக்கி ஜெபிக்க இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக்கொடுத்திருந்தபோதிலும், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே 'உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்' (மத். 6:8) என்பதுதானே பிதாவைக் குறித்து இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிமுகம். 'முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்' (மாற். 7:27) என்பதுதான் அவரது விருப்பமும் கூட. 'வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (மத். 10:10) என்றும், 'வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (லூக். 10:7; 1தீமோ. 5:18) என்றும் நாம் வாசிக்கின்றோமே. அப்படியிருக்க, 'ஆகாரத்திற்காக வேலை' மற்றும் 'கூலிக்காக வேலை' என்ற என்ற பார்வையில் நமது பயணம் தொடர்ந்துவிடக்கூடாததல்லவா! 'இழிவான ஆதாயம்' நமது வழிகளை மாற்றிவிடக்...

வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்

  வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்   அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது,  இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.  ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்;  ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.(லூக் 4:25-27) இஸ்ரவேலின் தேவனாக இருந்தபோதிலும், இஸ்ரவேல் தேசத்திலேயே தனது குமாரனை மேசியாவாகப் பிறக்கச் செய்தபோதிலும், பஞ்ச காலத்தின்போது, இஸ்ரவேலருக்குள் இருந்த அநேகம் விதவைகள் போஷிக்கப்படாமற்போனதற்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், ந...