வீழ்வதற்கல்ல, வீரனாவதற்கே...
நாம் வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் ஆண்டவர் வகுத்துவைத்திருக்கின்ற வேலியையும், வேலிக்குள் உண்டாகவிருக்கும் சத்துருவுக்கு எதிரான போரினையும் நன்றாக அறிந்துணர்ந்துகொள்வது மிக அவசியமானது. தேவன் மனுஷனை உண்டாக்கினபோது, நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை
உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார். தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ;டித்தார். அதுமாத்திரமல்ல, பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார் (ஆதி 1:26-28).
எனினும், ஏதேனுக்குள்ளேயே அவர்களை அடக்கிவைப்பது தேவனுடைய சித்தமல்ல; மாறாக, அவர்களையும் அவர்களது சந்ததியையும் வீரர்களாக்கி பிசாசுக்கு எதிராக பூமியெங்கும் வெளியேறச்செய்யவேண்டும் என்பதுதான். ஏதேன் என்னும் தோட்டத்திற்குள் தொடக்கத்தில் அவர்கள் வைக்கப்பட்டிருந்ததின் நோக்கம், கர்த்தருடைய சத்தத்தைக் கேட்கும்படியாகவும் (ஆதி. 3:8), நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்காமல் அவருக்குக் கீழ்ப்படிந்து சோதனையில் (வநளவ) ஜெயிக்கும்டியாகவுமே (ஆதி. 2:17). தனது வார்த்தைகளினால் சத்துருவுடன் போராடுவதற்கு ஏற்ற சத்துவம் அவர்களுக்கு கிடைத்திருக்கும் என்ற நோக்கத்திலேயே, ஏதேனின் எல்லைக்குள் எதிரியாகிய பிசாசை அனுமதித்தார் ஆண்டவர். அது அவர்களை வீழ்த்துவதற்காக அல்ல, வீரர்களாக்குவதற்காகவே. வீழ்ந்த பின்பு தோட்டத்தைக் காக்கும்படியாக வைக்கப்பட்ட சுடரொளிப் பட்டயத்தைப்போல, வீழாதபடிக்கும் பிசாசு நுழையாதபடிக்கும் வைக்கப்படாததற்குக் காரணமும் அவர்களை வீரர்களாக்குவதற்காகவே. எனினும், இந்த போரைப் புரிந்துகொள்ளாத ஏவாள், சத்துருவோடு சமாதானமாகிவிட்டாள். ஏவாளைத் தொடர்ந்து ஆதாமும் இந்த யுத்தத்தில் வீழ்ந்துபோனானே. பிசாசு ஏவாளை சந்திக்கும்வரை அவர்கள் கர்த்தரின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்திருந்தனர். எனினும், பிசாசு சந்தித்தபோதோ, கீழ்ப்படிதல் முடிவுக்கு வந்துவிட்டது. வீரர்களாக வெளியே செல்லவேண்டியவர்கள், வீழ்ந்தவர்களாக அல்லவோ வெளியேற்றப்பட்டார்கள்.
ஒவ்வொரு ஆவிக்குரிய மனிதனும் இவ்விரு முனைகளையும் சந்திக்கவேண்டியது நிச்சயம் உருவாகும். நாம் வசிக்கும் இடங்களுக்குள் விரோதிகள் நுழைந்தால், அது நம்மை ஆவிக்குரிய வீரர்களாக்குவதற்கே மாறாக வீழ்ந்துவிடுவதற்கு அல்ல. அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார் (மத் 4:1) என்றே இயேசு கிறிஸ்துவைக் குறித்து நாம் வாசிக்கின்றோமே. நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்று சொன்னபோது, மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே (மத் 4:3,4)
என்று இயேசு கிறிஸ்து மறுத்தாரே. மேலும், நீர் தேவனுடைய
குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்று சொன்னபோது, அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே (மத் 4:6,7)
என்று பதிலுரைத்தாரே. அவ்வாறே, நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னபோது, அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே (மத் 4:9,10) என்று எழுதப்பட்டிருப்பதையே ஆயுதமாகச் சொல்லி பிசாசை ஜெயித்தாரே.
அவ்வாறே, ஏவாளை பிசாசு சந்தித்து, நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தைக் குறித்து, 'நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார்' (ஆதி 3:5)
என்று சொன்னபோது, 'நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம். அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டிருக்கிறார்' (ஆதி 2:17) என்று சொல்லி மறுத்திருக்கலாமே. சத்தியைத்தை மட்டுமே சுமந்துகொண்டிருக்கும் நம்முடைய காதுகளிலும், சத்துருவின் சத்தம் திடீரென கேட்குமென்றால், உடனே நாம் வீரர்களாக வார்த்தையைக் கொண்டு யுத்தத்திற்கு ஆயத்தமாகிவிடவேண்டும். ஆனால், வீரர்களென்று விளையாட்டில் அறிவிக்கப்படவேண்டிய ஏவாள் வீழ்த்தப்பட்டுவிட்டாளே! வீரர்களாகும்படிக்கு வீட்டில் நாம் அடைக்கப்பட்டிருக்கும் காலங்களில் கவனமாய் வாழக் கற்றுக்கொள்ளுவோம்; சத்துருவின் சத்தங்கள் ஒருவேளை நம்முடைய காதுகளில் தொனிக்கும்படி அனுமதிக்கப்படலாம்; என்றாலும், அது சத்துருவை வீழ்த்தி நாம் வீரர்களாவதற்கே. கரங்களில் வேதத்தை வைத்துக்கொண்டிருந்தும், வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டேயிருந்தும் இன்னும் பலர் வீரர்களாகாமல் விழுந்துபோனார்களே.
Comments
Post a Comment