Skip to main content

அத்தி மரத்துக்குக் கத்தி

அத்தி மரத்துக்குக் கத்தி

 

ஒருவன் தன் திராட்சத்தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான்: அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது ஒன்றுங் காணவில்லை. (லூக் 13:6)

எந்த இடத்திலே நாம் வைக்கப்பட்டிருந்தாலும், எவர்கள் நடுவே நாம் வைக்கப்பட்டிருந்தாலும், கனி கொடுப்பது என்பது நமது பிரதானப் பணியாயிருக்கவேண்டும். மற்றவர்களின் கனியை உண்ணும் நாம், நமது கனியினையும் பிறருக்கு உண்ணக் கொடுக்கவேண்டுமே. சுவிசேஷம் கேட்பதோடு மாத்திரமல்ல, சுவிசேஷம் அறிவிக்கிறவர்களாகவும் மாறவேண்டும். இதையே பவுல், காலத்தைப் பார்த்தால், போதகராயிருக்கவேண்டிய உங்களுக்குத் தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களை மறுபடியும் உபதேசிக்கவேண்டியதாயிருக்கிறது; நீங்கள் பலமான ஆகாரத்தையல்ல, பாலை உண்ணத்தக்கவர்களானீர்கள் (எபி 5:12) என்று எழுதி எச்சரிக்கின்றார். நான் வேறொரு தோட்டத்திற்குள் வைக்கப்பட்டிருக்கிறேன், தனியாக வைக்கப்பட்டிருக்கிறேன், எனக்குத் துணையாக யாருமில்லை என்ற எண்ணம் நம்மில் மேலோங்கி நிற்குமானால், நம்முடைய கனியை நாம் மறந்துவிடுவோம், கனி கொடுக்கிற திராட்சச் செடிகளின் மத்தியில் அத்திமரம் கனிகொடாமல் நின்றுகொண்டிருந்தது போல, சுற்றிலும் நிற்கிற கனிகொடுக்கிறவர்கள் மத்தியில் கனிகொடாதவர்களாக நாம் நின்றுகொண்டிருப்போம். ஒவ்வொரு மனிதனுக்கும் தேவன் ஏதாகிலும் ஒரு கிருபையினை, தாலந்தினைக் கொடுத்திருக்கிறார். தாலந்தைப் பெற்ற மனிதனிடத்தில் 'தா' என்று கேட்க கொடுத்தவருக்கு உரிமை உண்டல்லவா. சுற்றிலும் திராட்சச் செடிகள்; திராட்சப் பழத்தின் சுவை வேறு, அத்தி மரத்தின் சுவை வேறு; திராட்சச் செடிகளின் எண்ணிக்கை யோ அதிகம், ஆனால், அத்தி மரமோ தனியாக நிற்கிறது. சுற்றிலும் இருக்கிற திராட்சச் செடிகள் கனிகளைக் கொடுத்துக்கொண்டிருக்கின்றன, ஆகையால், தனியாக நிற்கும் அத்தி மரமோ கனி கொடாமல் நின்றுகொண்டிருக்கிறது.

அத்திமரமே, அத்திமரமே திராட்ச் செடிகள் கனி கொடுக்கிகிறதைப் பார்த்து நீ ஏன் கனி கொடுக்கவில்லை? திராட்சச் செடியின் கனிகளைக் காட்டிலும் உனது கனிகள் வித்தியாசமானவைகள் அல்லவா! உனது கனியினை திராட்சச் செடிகள் கொடுக்க முடியாதே. எத்தனை உரம் போட்டாலும், எவ்வளவாய் பாதுகாத்தாலும் திராட்சச்செடிகளில் அத்திமரத்தின் பழங்களைப் பறிக்க முடியாதே. அத்தனை பெரிய திராட்சச் தோட்டமாயிருந்தாலும், தோட்டக்காரனான எனக்கு ஒரு அத்திப்பழம் தேவை என்றால், தனியாக நிற்கும் உன்னைத் தானே நான் தேடிவரவேண்டும். ஆயிரம் நபர்கள் பிரசங்கம் செய்தாலும், நீ பிரசங்கம் செய்தால் அது வித்தியாசமாயிருக்கும்; ஆயிரம் பேர் பாடல் பாடினாலும், நீ பாடினால் அது வித்தியாசமாயிருக்கும்; ஆயிரம் பேர் போதித்தாலும், நீ போதித்தால் அது வித்தியாசமாயிருக்கும். உனது சுவை உன்னிடத்தில்தான் இருக்கின்றது. அது மற்றவரிடத்திலிருந்து தோட்டக்காரனுக்குக் கிடைக்காது. ஆம், எனக்கு அருமையானவர்களே; தேவன் ஒவ்வொருவருக்கும் கொடுத்திருக்கும் கிருபை வித்தியாசமானது; தாலந்துகள் வித்தியாசமானவைகள். நாம் எங்கு வைக்கப்பட்டிருந்தாலும், தனியாக இருந்தாலும் நம்மிடத்தில் தேவன் கொடுத்த சுவையை வேறொருவரிடத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடியாது. எனவே, இயேசுவும், 'முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்புண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா?' (மத். 7:16) என்றும் 'அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்' (மத். 7:20) என்றும் போதிக்கின்றார்.

அத்திமரமாகிய உனது சுவை வித்தியாசமானது. அப்பொழுது மரங்கள் அத்திரமரத்தைப் பார்த்து: நீ வந்து, எங்களுக்கு ராஜாவாயிரு (நியா 9:10) என்று சொன்னபோது, அத்திமரம்: நான் என் மதுரத்தையும் என் நற்கனியையும் விட்டு, மரங்களை அரசாளப்போவேனோ (நியா 9:11) என்று சொன்னதே. கானான் தேசத்தைச் சுற்றிப் பார்க்கச் சென்றவார்களும், திராட்சக் குலைகளுடன், அத்திப் பழங்களில் சிலவற்றையும் கொண்டுவந்தார்கள் (எண். 13:23). அபிகாயில் தாவீதைச் சந்திக்கச் சென்றபோது, வற்றலாக்கப்பட்ட நூறு திராட்சக்குலைகளையும், வற்றலான இருநூறு அத்திப்பழ அடைகளையும் கொண்டு சென்றாள் (1சாமு. 25:18). உயிர் போகும் தருவாயில் இருந்த எகிப்தியனுக்கு, திராட்சக் குலைகளுடன், அத்திப்பழ அடை கொடுக்கப்பட்டபோது, சாகக் கிடந்த அவன் பிழைத்துக்கொண்டான். எசேக்கியா ராஜாவின் பிளவையின் மேல் அத்திப் பழத்து அடையின் பற்றைப் போட்டபோது அவன் உயிர் பிழைத்தான் (2இராஜா. 20:7). திராட்சப் பழம் இடம்பெறுகின்ற இடங்களிலெல்லாம் அத்திப்பழமும் இடம் பெறுகின்றதே (1நாளா. 12:40; நெகே. 13:15; எரே. 5:17) இத்தனை பயனுள்ள, சுவையுள்ள அத்திமரமாகிய நீ கனி கொடுக்காமல் நிற்கலாமோ?

எத்தனை பெரிய ஊழியத்தில் நாம் இணைந்திருந்தாலும், எத்தனை பெரிய ஊழியருடன் இணைந்திருந்தாலும் தேவன் நமக்குக் கொடுத்த கிருபைகளை நாம் வெளிப்படுத்துகின்றோமா அல்லது நம்மைச் சுற்றிலும் இருக்கின்ற திராட்சச் செடிகள் கனி கொடுப்பதைப் பார்த்து மகிழ்ந்துகொண்டிருக்கிறோமா? என்னுடைய தாலந்தினை வெளிப்படுத்த தருணம் கிடைக்கவில்லை என்று மற்றோரைக் குற்றஞ்சாட்டிக்கொண்டிருக்கின்றோமா? அத்தி மரமே கனி கொடுக்கவில்லையென்றால் உனக்குக் கத்திதான்! உங்களது வேருக்குக் கீழே கோடரி வைக்கப்பட்டிருக்கிறது. 'நான் பொறுத்துப் பொறுத்து இளைத்துப் போனேன்' (எரே. 15:6) என்று கர்த்தரின் பொறுமையை சோதிக்கிறவர்களாக நமது வாழ்க்கை காணப்படவேண்டாம். வெறுமையானவே வாழ்ந்துகொண்டிருக்கவேண்டாம்.

அத்திமரமே, அத்திமரமே 
வித்து போட்டவர் விரைந்து வருகிறார்
கொத்துக் கொத்தாய் பழங்கள் உண்டா - இல்லை

வெத்துக் கைதான் உன்னிடம் உண்டா 

Comments

Popular posts from this blog

கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்

  கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்   வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கிறிஸ்துவின் குணங்களை வெளிப்படுத்தவேண்டியதும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டியதும் கிறிஸ்தவனின் தலையாயக் கடமை.  கிறிஸ்துவுக்குள்  வாழும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சில உண்மைகளை பவுல் எபேசு சபைக்குச் சுட்டிக்காட்டுகின்றார். கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்  (எபே. 1:3),  பாவமன்னிப்பாகிய மீட்பு  (எபே. 1:7) இவைகள் பொதிந்திருக்கின்றன. ஆனால், இவ்விரண்டிற்கும் பலர் முக்கியத்துவம் கொடுக்காமல், உலகத்தின் ஆசீர்வாதங்களையே அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். பாவமன்னிப்பினைப் பெறாமல், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறாமல், உலகத்தின் ஆசீர்வாதங்களுக்காகவே அவரின் பின்னே ஓடினால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் முடிவு பரிதாபமாகவே இருக்கும். உன்னதங்களில் உட்காரவேண்டிய நாம் உலகத்தோடு ஒட்டிவிடுவோம், மணவாளனோடு வாழவேண்டிய நாம் மண்ணுக்காக வாழ்ந்துவிடுவோம். கிறிஸ்துவிடம் பிரதானமாய் பாவமன்னிப்பையே முதலில் பெற நாடுவோம்; அதற்காகத்தானே பிதா இயேசுவை இந்த பூமியில் அனுப்பினார். எனவே, பிதாவின் பி...

இறைச்சியா? இச்சையா?

இறைச்சியா?  இச்சையா? 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்' (மத். 6:11) என்றும், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத். 6:34) என்றும் பிதாவை நோக்கி ஜெபிக்க இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக்கொடுத்திருந்தபோதிலும், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே 'உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்' (மத். 6:8) என்பதுதானே பிதாவைக் குறித்து இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிமுகம். 'முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்' (மாற். 7:27) என்பதுதான் அவரது விருப்பமும் கூட. 'வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (மத். 10:10) என்றும், 'வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (லூக். 10:7; 1தீமோ. 5:18) என்றும் நாம் வாசிக்கின்றோமே. அப்படியிருக்க, 'ஆகாரத்திற்காக வேலை' மற்றும் 'கூலிக்காக வேலை' என்ற என்ற பார்வையில் நமது பயணம் தொடர்ந்துவிடக்கூடாததல்லவா! 'இழிவான ஆதாயம்' நமது வழிகளை மாற்றிவிடக்...

வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்

  வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்   அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது,  இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.  ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்;  ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.(லூக் 4:25-27) இஸ்ரவேலின் தேவனாக இருந்தபோதிலும், இஸ்ரவேல் தேசத்திலேயே தனது குமாரனை மேசியாவாகப் பிறக்கச் செய்தபோதிலும், பஞ்ச காலத்தின்போது, இஸ்ரவேலருக்குள் இருந்த அநேகம் விதவைகள் போஷிக்கப்படாமற்போனதற்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், ந...