எஜமானுக்கா? எனக்கா?
உங்களில் ஒருவனுடைய ஊழியக்காரன் உழுது அல்லது மந்தைமேய்த்து வயலிலிருந்து வரும்போது, எஜமான் அவனை நோக்கி: நீ முன்பு போய்ச் சாப்பிட்டுவா என்று அவனுக்குச் சொல்வானோ? நீ எனக்குச் சாப்பாடு ஆயத்தம் பண்ணி, அரைகட்டிக்கொண்டு, நான் போஜனபானம்பண்ணுமளவும் எனக்கு ஊழியஞ்செய், அதற்குப்பின் நீ புசித்துக் குடிக்கலாம் என்று அவனுக்குச் சொல்லுவானல்லவா? தான் கட்டளையிட்டவைகளை அந்த வேலைக்காரன் செய்ததற்காக அவனுக்கு உபசாரஞ்செய்வானோ? அப்படிச் செய்யமாட்டானே. அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்த பின்பு: நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள் என்றார். (லூக் 17:7-10)
இரண்டு காரியங்கள் வாழ்க்கையில் நம்மை சந்தோஷப்படுத்தக் கூடியவைகள்; ஒன்று, நாம் விருந்தினராக யாராலாது உபசரிக்கப்படுவது; இரண்டாவது, நம்முடைய செயல்களைக் கண்டு யாராவது நம்மைப் பாராட்டுவது. ஆனால், கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்யும் நாம் இவ்விரண்டிலும் சிக்கிக்கொள்ளக் கூடாது என்று இயேசு போதிக்கின்றார். என்னை யாரும் கண்டுகொள்ளவில்லையே, எனது செயல்களை யாரும் பாராட்டவில்லையே என்று சோர்புக்குள் தனது வாழ்க்கையைத் தள்ளிக்கொள்ளும் ஊழியர்கள் அநேகர் உண்டு. பிரதிபலனை எதிர்பார்த்தே வாழ்க்கையை நகர்த்துகிறவர்களாக நாம் காணப்படக்கூடாது. பேதுரு இயேசுவை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே; எங்களுக்கு என்ன கிடைக்கும் என்றான் (மத் 19:27). பேதுருவின் மனதை 'என்ன கிடைக்கும்?' என்ற கேள்வி நிறைத்திருந்தது; ஏனென்றால், அவன் எல்லாவற்றையும் விட்டு வந்தவன். இத்தனையை இழந்தால் எத்தனை கிடைக்கும்? என்றல்ல, எத்தனையை இழந்தாலும் பலன் என் எஜமானுக்கே கிடைக்கும் என்ற நோக்கம் நமது வாழ்வில் மேலோங்கி நிற்கட்டும். இந்த நிலையிலிருந்து தவறும் மக்களே தவறு செய்கிறார்கள். ஊழியத்தில், அலுவலகத்தில், தொழில்களில் எஜமானான ஒருவர் தன்னை பணியில் அமர்த்தியிருந்தாலும், எஜமானின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளாமல், அவரை திருப்தி செய்யவேண்டும் என்ற அறிவில்லாமல், தான், தனது குடும்பம் இவைகளையே கவனத்தில் கொண்டு எஜமானுக்குச் செய்யவேண்டியவைகளை மறந்துவிடுகின்றனர்.
கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்யும் நாம் கருத்தில் கொள்ளவேண்டிய பல காரியங்களை, இயேசு இவ்வுலகத்தில் வாழ்ந்து, உபதேசித்தபோது சொன்னவைகளிலிருந்தே நாம் உணர்ந்துகொள்ள முடியும். தேவனைத் தேடும்போதும், தேவ சமூகத்தில் நுழையும் போதும், தேவைகளையே முன் நிறுத்தி தேவனது தேவைகளை பல நேரங்களில் நாம் மறந்துவிடுகின்றோம். அவர் பசியாயிருக்கும்போது நாமோ போஜனம் பண்ணிக்கொண்டிருக்கிறோம், அவர் வஸ்திரமில்லாதிருக்கும்போது நாம் அலங்கார ஆடையுடன் திரிந்துகொண்டிருக்கிறோம், அவர் தாகமாயிருக்கும்போது நாமோ திருப்தியாயிருக்கிறோம். 'முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்' (மாற் 7:27) என்ற வார்த்தை எப்போதும் நமக்கு முன்னே நின்றுகொண்டிருப்பதினால், தேவனைத் தேடும் நாம்தான் முதலில் திருப்தியடையவேண்டியவர்கள் என்ற சிந்தை உருவெடுத்து, நாம் திருப்தியாகாமலிருந்தாலும் முதலில் தேவனைத் திருப்திப்படுத்தவேண்டும் என்ற சிந்தையைப் பின்னுக்குத் தள்ளிவிடுகின்றது. இதனை நாம் புரிந்துகொள்ளவேண்டியே இயேசு இந்த உவமையினை சொன்னார். எனக்கு ஊழியம் செய்யும் ஊழியக்காரனே, முந்தி திருப்தியாகவேண்டியது நீ அல்ல நான் என்பதை அழுத்திக் கூறுகின்றார். மாடு தன் எஜமானையும், கழுதை தன் ஆண்டவனின் முன்னணையையும் அறியும்; இஸ்ரவேலோ அறிவில்லாமலும், என் ஜனம் உணர்வில்லாமலும் இருக்கிறது (ஏசா 1:3) என்கிறார் நம்முடைய பிதா. நான் பிதாவானால் என் கனம் எங்கே? நான் எஜமானானால் எனக்குப் பயப்படும் பயம் எங்கே? (மல். 1:6) என்ற சத்தம் இன்றும் நமது செவிகளை நோக்கி வந்துகொண்டிருக்கின்றதல்லவா. முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும் (மத் 6:33) என்றல்லவா போதித்தார் இயேசு. ஆனால், பல நேரங்களில் நாம் முதலாவது நம்முடையவைகளையும், தேவனுடைய ராஜ்யத்தையோ அதற்குப் பின்னாலும் தள்ளிவிடுகின்றோமல்லவா. வாழ்க்கையில் திருப்தியடைந்தவர்களை தேவனை விட்டுத் தூரமாக இழுத்துச் செல்வது சத்துருவுக்கு எளிதானது. எனவே இயேசு, ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார் (மாற் 10:25). சாலமோனும், திருப்தியடைந்தவன் தேன்கூட்டையும் மிதிப்பான் (நீதி 27:7) என்று எழுதுகிறான்.
என்னை அனுப்பினவருடைய சித்தத்தின் படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது (யோவா 4:34) என்ற இயேசு, தன்னுடைய சரீரத்தை நமக்கு போஜனமாக சிலுவையில் கொடுத்தாரே. இயேசு அப்பத்தை எடுத்து ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது (மாற். 14:22) என்றார். தேவனுடைய போஜனம் எது என்பதை அறிந்திருந்தவர் இயேசு? தேவனை எப்படி போஷிக்கவேண்டும் என்று தெரிந்திருந்தவர் இயேசு? ஆலயத்திற்குச் செல்வதினாலும், உட்கார்ந்து பிரசங்கத்தைக் கேட்டுவிட்டுவந்துவிடுவதினாலும் தேவனை நாம் போஷித்துவிடமுடியாது. தேவ சித்தத்தை நமது சிந்தையில் சுமந்து, அதை நம்முடைய பாரமாக்கிக்கொண்டு பாரை ஆதாயம் செய்யாவிடில் தேவனது பசியினை நம்மால் தீர்த்துவிடக் கூடாதே.
தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான் (மத் 10:39) என்றார் இயேசு. என் ஜீவனை நானே காக்கவேண்டும், என் ஜீவனுக்கு நானே பொறுப்பு என்று தனது ஜீவனையே எண்ணத்தில் கொண்டு, தனது ஜீவனுக்காகவே ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்கள் தங்கள் ஜீவனை இழந்துபோவார்கள் என்பதும், இழந்துபோகிறவர்களே அதனைக் காத்துக்கொள்கிறார்கள் என்பதும் இயேசுவின் போதனையல்லவா. இப்படியிருக்க, இழக்கவேண்டியதை காத்துக்கொண்டிருப்பதால் பிரயோஜனம் என்ன? கொடுக்கவேண்டியதை வைத்துக்கொண்டேயிருப்பதினால் பிரயோஜனம் என்ன? மற்றவர்களுக்கானதை நம்முடனேயே வைத்துக்கொண்டிருப்பதில் பிரயோஜனம் என்ன? ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை (யோவா 15:13) என்பதும், உன்னிடத்தில் அன்புகூருவது போல பிறனிடத்திலும் அன்புகூருவாயாக (மத். 19:19) என்பதும் இயேசுவின் போதனைகளில் உள் அடங்கியவைகளே. உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? (1கொரி 6:19) என்று பவுல் எழுதுகின்றார். ஆம், அது உண்மையே, நாம் நம்முடையவர்கள் அல்ல. ஆனால், நம்முடைய வாழ்க்கை இரண்டு பேருக்குச் சொந்தமானது, இரண்டு பேருக்காக செலவழிக்கப்படவேண்டியது. ஒன்று தேவன், மற்றொன்று மனிதன். தேவனுக்காகவே என்னுடைய வாழ்க்கையை செலவழித்தேன் என்று சொல்லும் மக்களது வாழ்க்கை, தேவனை அறியாத மக்களுக்காகவும் செலவழிக்கப்பட்டிருக்கவேண்டும். நான் தேவனுடையவன் அல்ல என்பது மாத்திரமல்ல, நான் 'என்னைச் சுற்றியிருக்கும் மனிதர்களுக்காகவும் ஜீவனைக் கொடுக்கவேண்டியவன்' என்ற உணர்வு நமக்கு வேண்டும். இதுவே நம்மை சீரான சத்தியத்திற்குள்ளும், சீரான ஊழியத்தின் வழிக்குள்ளும், இடறிவிடாமல் தேவனின் சித்தத்தையே நிறைவேற்றும் கரிசனைக்குள்ளும் நம்மை உந்தித்தள்ளும்.
நான் போஜனபானம்பண்ணுமளவும் எனக்கு ஊழியஞ்செய்,
அதற்குப்பின் நீ புசித்துக் குடிக்கலாம்
Comments
Post a Comment