Skip to main content

பட்டாவும் தோட்டாவும்

 

பட்டாவும் தோட்டாவும்

 

சத்துரு அன்றன்று நம்மீது தொடுக்கும் யுத்தங்கள் இன்றுவரை நின்றுபோய்விடவில்லை, முன்நாட்களில் அவன் தொடங்கியதுதான் தொய்வின்றி இந்நாள்வரையிலும் தொடர்ந்துகொண்டிருக்கின்றது. வெற்றியோ தோல்வியோ எது என்பதை கருத்தில் கொள்ளாமல், தொடர்ந்து போரிடுவதிலேயே குறியாயிருந்து, தனது முழு கவனத்தையும் பெலத்தைச் செலவழிப்பவன் சத்துரு. ஆங்காங்கே வெளிக்காட்டப்படும் சத்துருவின் பெலம் வெளியிலிருக்கும் நம்மை வீட்டுக்குள் அடைத்துவிடக்கூடாது, பயணத்தில் நம்மைப் பின்னடையச் செய்துவிடக்கூடாது, ஓட்டத்தில் நம்மைப் பிந்தப்பண்ணவுங்; கூடாது. முன்னேறும் நாம் பின்வரும் அவனது தந்திரங்கால் தடம்மாறிச் சென்றுவிடக்கூடாது. பாதையெல்லாம் பாதுகாப்பும், பாதமிடறாதபடி பாதுகாப்பவரும் கூட இருப்பதால், நாமல்ல, நம்மீது மோதுகிறவர்களே இடறிவிழுவார்கள் என்பதில் நமது எண்ணம் திண்ணமாயிருக்கட்டும். சத்துரு தனது கையிலெடுக்கும் ஆயுதங்கள் பழமையானவைகளே. என்றோ உபயோகப்படுத்திய ஆயுதங்களைத்தான் இன்றும் காட்டிக் காட்டி ஆத்துமாக்களை அடித்துச் செல்லவும், அறுத்துக்கொல்லவும் முயற்சிக்கிறான்.

சுதந்தரத்தை அபகரித்தவன் :

யெஸ்ரயேலனாகிய நாபோத்துக்கு, யெஸ்ரயேலிலே சமாரியா ராஜாவாகிய ஆகாபின் அரமனை அண்டையில் ஒரு திராட்சத் தோட்டம் இருந்தது. பிதாக்களின் சுதந்தரமான அந்த திராட்சத் தோட்டத்தின் உரிமை வாரிசான நாபோத்திற்கே. எனினும், ராஜாவாயிருந்த ஆகாப் அந்த திராட்சைத் தோட்டத்தின் மேல் கண்போட்டு, நாபோத்தை நோக்கி: உன் திராட்சத்தோட்டம் என் வீட்டிற்கு அடுத்திருக்கிறபடியால், அதைக் கீரைக்கொல்லையாக்கும்படி எனக்குக் கொடு, அதைப் பார்க்கிலும் நல்ல திராட்சத்தோட்டத்தை அதற்குப் பதிலாக உனக்குத் தருவேன்; அல்லது உனக்கு வேண்டுமானால், அதின் விலைக்கிரயமான பணத்தைத் தருவேன் என்றான். 'திராட்சத் தோட்டத்திற்குப் பதில் நல்ல திராட்சத்தோட்டம்' 'விலைக்கிரயமான பணம்' இவ்விரண்டும் மனிதனை எளிதில் ஈர்க்கக்கூடியதுதான்; என்றாலும், சுதந்தரமான தனது திராட்சத்தோட்டத்திற்கு அவைகள் ஈடானவைகள் அல்ல என்பதை அறிந்த நாபோத், பிரதியுத்தரமாக, 'என் பிதாக்களின் சுதந்தரத்தை உமக்குக் கொடாதபடி கர்த்தர் என்னைக் காப்பாராக' என்று பதில் கொடுத்து ராஜாவை அனுப்பிவிட்டான் (1இரா 21:3). இத்தகைய நாபோத்தின் தைரியமான பதில் இன்று நம்மிடத்தில் உண்டா?

சிறப்பான வாழ்வு வேண்டும், பணம் வேண்டும் என்ற ஆசையில் விழுந்தோரை, தேவ சித்தத்தை விட்டும், தேவன் கொடுத்த சுதந்தரத்தை விட்டும் விலக்கிவிடுவது எளிதானது என்பதை அறிந்த சத்துரு அப்படிப்பட்டவைகளையே கண்களுக்கு முன்பாகக் காட்டுகின்றான். எப்படியாகிலும், எதையாகிலும் பார்த்து ஆசைப்பட்டு, தேவ சித்தத்தை விட்டு நாம் விலகிச் செல்லவேண்டும் என்று விரும்பும் அவனது வார்த்தைகளுக்கு நாபோத்தைப் போன்ற ஏற்ற உத்தரவு கொடுக்க அறியாதிருந்தோமானால், நமது வாழ்க்கையின் நோக்கம் அழிக்கப்பட்டுப்போம்.

தேவஜனத்தை தனக்குச் சொந்தமாக்கிக்கொண்டு, தன்னுடையவைகளை தேவஜனத்திற்குள் விதைக்கவேண்டும் என்று விரும்புவன் சத்துரு. நாம் சற்று நித்திரை செய்தால்கூட, அத்தரை சத்துருவுக்குச் சொந்தமானதாகிவிடும்; எச்சரிக்கை! உங்கள் வாழ்க்கையில் வளர்வதும், விளைவதும் எது? கர்த்தர் உங்களை அழைத்த அழைப்பிற்கடுத்தவைகளைச் செய்யவிடாமல், அத்திமரமாகிய உங்களில் கனிகள் உண்டாகாமல், பச்சை பசேலென்று இலைகளோடு, கீரைகளாக நின்றுகொண்டிருப்பீர்களென்றால் கவனமாயிருங்கள். உங்களிடத்தில் கர்த்தர் தேடுவது 'நிழல் அல்ல கனி.' இதோ, பிள்ளைகள் (நாம்) கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி (நாம்) அவரால் கிடைக்கும் பலன் (சங் 127:3) என்று எழுதி உணர்த்துகின்றான் சங்கீதக்காரன். பிதாவுக்குச் சொந்தமானதும், பிதாவின் சுதந்தரமுமான நிலத்தை பிசாசு சொந்தமாக்கிக்கொள்வதற்கும், பிசாசு வந்து விதைப்பதற்கும் விட்டுவிட்டவர்கள் அநேகம். ஆகாப் வந்து தன்னை ஆக்கிரமித்துக்கொள்ள அனுமதித்துவிட்டவர்கள் ஏராளம். நாபோத்தைப் போன்று, 'பிதாக்களின் சுதந்தரத்தைக் கொடேன்' என்றும், யோசேப்பைப் போன்று 'தேவனுக்கு விரோதமாக பாவம் செய்வது எப்படி?' என்றும் சொல்லும் தைரியமான வார்த்தைகள், பதிலாக நமது வாயிலிருந்து புறப்பட்டால் மாத்திரமே நமது வாழ்க்கை பாதுகாக்கப்படும். உங்களுடையதை பத்திரமாகக் காத்துக்கொள்ளுங்கள், கூழுக்காக சேஷ்டபுத்திரத்தைக் இழந்துவிடவேண்டாம். நாபோத் தன்னுடைய சுதந்தரத்தைக் காப்பாற்ற நினைத்தான்; நாட்டின் ராஜாவே வந்து கேட்டபோதிலும், கர்த்தர் கொடுத்ததை விட்டுக்கொடுக்க அவன் விரும்பவில்லை.

எனினும், யேசபேல் கணவனான ஆகாபை நோக்கி: 'நீர் இப்போது இஸ்ரவேலின்மேல் ராஜ்யபாரம்பண்ணுகிறவர் அல்லவா? நீர் எழுந்து போஜனம்பண்ணி மனமகிழ்ச்சியாயிரும்; யெஸ்ரயேலனாகிய நாபோத்தின் திராட்சத்தோட்டத்தை நான் உமக்குக் கொடுப்பேன்' என்று சொன்னாள் (1இரா 21:7). யேசபேல், ஆகாபின் பெயரால் நிருபங்களை எழுதி, அவன் முத்திரையை அவைகளுக்குப்; போட்டு, அந்த நிருபங்களை நாபோத் இருக்கும் பட்டணத்தில் அவனோடே குடியிருக்கிற மூப்பரிடத்துக்கும் பெரியோரிடத்துக்கும் அனுப்பினாள் (1இரா 21:8). பட்டணத்திலே குடியிருக்கிற மூப்பரும் பெரியோருமாகிய அவன் பட்டணத்து மனுஷர், யேசபேல் தங்களுக்கு அனுப்பின நிருபங்களில் எழுதிக் கட்டளையிட்டபடியே செய்தார்கள் (1இரா 21:11). 'தேவனையும், ராஜாவையும் தூஷித்தான்' என்று பொய்சாட்சியைக் கூறி நாபோத்தைக் கல்லெறிந்து கொன்றார்கள்.

நாபோத் கல்லெறியுண்டு செத்ததை யேசபேல் கேட்டபோது, புருஷனும் அரசனுமான ஆகாபை நோக்கி: நீர் எழுந்திருந்து, யெஸ்ரயேலனாகிய நாபோத் உமக்கு விலைக்கிரயமாய்க் கொடுக்கமாட்டேன் என்று சொன்ன திராட்சத்தோட்டத்தைச் சொந்தமாய் எடுத்துக்கொள்ளும்; நாபோத் உயிரோடில்லை, அவன் செத்துப்போனான் என்றாள் (1இரா 21:15). சுதந்தரத்தை விற்று அதன் பணத்தை வாங்க விரும்பாத நாபோத், சுதந்தரத்திற்காக தன் உயிரையே கொடுத்தான். ஆகாப் ராஜாவுக்கோ நிலம் இவசமாகக் கிடைத்தது. ஆனால், நாபோத்தோ தனது உயிரையே அந்த நிலத்திற்காக விலைக்கிரயமாகச் செலுத்தியிருந்தான். கொடுக்கவில்லை என்ற காரணத்திற்காக கொடூரமாகக் கொலை செய்யப்பட்டான் நாபோத். இத்தகைய இரத்தசாட்சிகளாக மரிக்கவேண்டிய நிலையில் இருப்பவர்கள் எத்தனைபேரோ? பிரியமானவர்களே; வாழ்க்கை என்னும் உங்கள் தோட்டத்தை எதிரியின் தோட்டாக்கள் குறிவைத்துக்கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தவர்களாக வாழக் கற்றுக்கொள்ளுங்கள். பாவத்திற்கு விரோதமாய்ப் போராடுகிறதில் இரத்தஞ்சிந்தப்படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்துநிற்கவில்லையே (எபி 12:4).

ஆகாபை எச்சரிக்க எலியாவை அனுப்பினார் கர்த்தர். 'நீ எழுந்து, சமாரியாவிலிருக்கிற இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபைச் சந்திக்கும்படி போ; இதோ, அவன் நாபோத்தின் திராட்சத்தோட்டத்தைச் சொந்தமாய் எடுத்துக்கொள்ள அங்கே போயிருக்கிறான். நீ அவனைப் பார்த்து: நீ கொலை செய்ததும் எடுத்துக்கொண்டதும் இல்லையோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; நாய்கள் நாபோத்தின் இரத்தத்தை நக்கின ஸ்தலத்திலே உன்னுடைய இரத்தத்தையும் நாய்கள் நக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார் (1இரா 21:18-19).

சுந்தரியை அபகரித்தவன் :

ஆபிரகாம் எகிப்துக்குச் சமீபமாய் வந்தபோது, தன் மனைவி சாராயைப் பார்த்து: நீ பார்வைக்கு அழகுள்ள ஸ்திரீ என்று அறிவேன். எகிப்தியர் உன்னைக் காணும்போது, இவள் அவனுடைய மனைவி என்று சொல்லி, என்னைக் கொன்றுபோட்டு, உன்னை உயிரோடே வைப்பார்கள். ஆகையால், உன்னிமித்தம் எனக்கு நன்மை உண்டாகும்படிக்கும், உன்னாலே என் உயிர் பிழைக்கும்படிக்கும், நீ உன்னை என் சகோதரி என்று சொல் என்றான் (ஆதி 12:11-13). எகிப்துக்குள் நுழைந்தபோது, கர்த்தரை அறியாத எகிப்தியரின் குணத்தை அப்படித்தான் கணித்திருந்தான் ஆபிரகாம். அவன் எகிப்திலே வந்தபோது, அவன் நினைத்ததுபோலவே நடந்தது, எகிப்தியர் அந்த ஸ்திரீயை மிகுந்த அழகுள்ளவளென்று கண்டார்கள். பார்வோனுடைய பிரபுக்களும் அவளைக் கண்டு, பார்வோனுக்கு முன்பாக அவளைப் புகழ்ந்தார்கள். அப்பொழுது அந்த ஸ்திரீ பார்வோனுடைய அரமனைக்குக் கொண்டுபோகப்பட்டாள் (ஆதி 12:14,15). அவளை தன் சகோதரி என்று ஆபிரகாம் சொன்னதினால், பார்வோன் சராளை தன்னிடத்திற்கு அழைத்தான்; எனினும், சாராள் ஆபிரகாமின் மனைவி என்பதை பார்வோன் அறிந்துகொண்டபோது, பார்வோன் ஆபிரகாமை அழைத்து, 'நீ எனக்கு ஏன் இப்படிச் செய்தாய்? இவள் உன் மனைவி என்று நீ எனக்கு அறிவியாமற்போனதென்ன? (ஆதி. 12:18) என்று சொல்லி சாராளை அவளது கணவனான ஆபிரகாமினிடத்திற்கு அனுப்பிவிட்டான்.

அப்படியே, ஆபிரகாம் தன் மனைவியாகிய சாராளை தன் சகோதரி என்று சொன்னதினால், கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்கு ஆள் அனுப்பி சாராளை அழைப்பித்தான். தேவன் இரவிலே அபிமெலேக்குக்குச் சொப்பனத்திலே தோன்றி, நீ அழைப்பித்த ஸ்திரீயினிமித்தம் நீ செத்தாய்; அவள் ஒருவனுடைய மனைவியாயிருக்கிறாளே, அந்த மனுஷனுடைய மனைவியை அவனிடத்திற்கு அனுப்பிவிடு என்று சொன்னபோது (ஆதி. 20:1-3) அபிமெலேக்கு ஆபிரகாமை அழைப்பித்து: நீ எங்களுக்கு என்ன காரியஞ்செய்தாய், நீ என்மேலும், என் ராஜ்யத்தின்மேலும் கொடிய பாவம் சுமரப்பண்ணுகிறதற்கு உனக்கு நான் என்ன குற்றம் செய்தேன்? செய்யத்தகாத காரியங்களை என்னிடத்தில் செய்தாயே (ஆதி 20:9) என்று சொல்லி, ஆபிரகாமின் மனைவியாகிய சாராளை ஆபிரகாமினிடத்தில் திரும்ப ஒப்புவித்தான் (ஆதி. 20:14).

எனினும் தாவீதின் குணமோ வேறு, ஒருநாள் சாயங்காலத்தில் தாவீது தன் படுக்கையிலிருந்து எழுந்து, அரமனை உப்பரிகையின்மேல் உலாத்திக் கொண்டிருந்தபோது, ஸ்நானம்பண்ணுகிற ஒரு ஸ்திரீயை உப்பரிகையின் மேலிருந்து கண்டான்; அந்த ஸ்திரீ வெகு சௌந்தரவதியாயிருந்தாள். அப்பொழுது தாவீது, அந்த ஸ்திரீ யார் என்று விசாரிக்க ஆள் அனுப்பினான்; அவள் எலியாமின் குமாரத்தியும், ஏத்தியனான உரியாவின் மனைவியுமாகிய பத்சேபாள் என்றார்கள் (2சாமு 11:2-3). தாவீது தேவனால் அபிஷேகம்பண்ணப்பட்டவனாயிருந்தபோதிலும், மற்றொருவனுடைய மனைவி என்று தாவீது அறிந்திருந்தபோதிலும், தாவீது ஆள் அனுப்பி அவளை அழைத்து வரச் சொன்னான்; அவள் அவனிடத்தில் வந்தபோது, அவளோடே சயனித்தான் (2சாமு. 11:4). பத்சேபாளின் அழகைக் கண்ட அவனால் தன்னை அடக்கிக்கொள்ள முடியவில்லை. உரியாவைக் கொன்று உரியாவின் மனைவியாகிய பத்சேபாளை எடுத்துக்கொண்டான் தாவீது. தேவனை அறியாதவர்கள் செய்ததைக் கூட, தேவனை அறிந்த தாவீதினால் செய்யமுடியவில்லை.

கர்த்தர் நாத்தான் தீர்க்கதரிசியை அனுப்பி தாவீதை எச்சரித்தார். நாத்தான் தாவீதினிடத்தில் வந்து: ஒரு பட்டணத்தில் இரண்டு மனுஷர் இருந்தார்கள்; ஒருவன் ஐசுவரியவான், மற்றவன் தரித்திரன். ஐசுவரியவானுக்கு ஆடுமாடுகள் வெகு திரளாயிருந்தது. தரித்திரனுக்கோ தான் கொண்டு வளர்த்த ஒரே ஒரு சின்ன ஆட்டுக்குட்டியைத் தவிர வேறொன்றும் இல்லாதிருந்தது; அது அவனோடும் அவன் பிள்ளைகளோடுங் கூட இருந்து வளர்ந்து, அவன் வாயின் அப்பத்தைத் தின்று, அவன் பாத்திரத்திலே குடித்து, அவன் மடியிலே படுத்துக் கொண்டு, அவனுக்கு ஒரு மகளைப் போல இருந்தது. அந்த ஐசுவரியவானிடத்தில் வழிப்போக்கன் ஒருவன் வந்தான்; அவன் தன்னிடத்தில்வந்த வழிப்போக்கனுக்குச் சமையல் பண்ணுவிக்க, தன்னுடைய ஆடுமாடுகளில் ஒன்றைப் பிடிக்க மனதில்லாமல், அந்தத் தரித்திரனுடைய ஆட்டுக் குட்டியைப் பிடித்து, அதைத் தன்னிடத்தில்வந்த மனுஷனுக்குச் சமையல் பண்ணுவித்தான் என்றான் (2சாமு 12:1-4). நாத்தானின் வார்த்தைகளைக் கவனியுங்கள் 'தரித்திரனுக்கு அந்த ஆட்டுக்குட்டி மகளைப்போல இருந்தது' 'அவன் வாயின் அப்பத்தையே அது தின்றுகொண்டிருந்தது' 'அவன் பாத்திரத்திலே குடித்தது' 'அவன் மடியிலே படுத்திருந்தது' 'தரித்திரனுக்கு வேறொன்றும் இல்லாதிருந்தது' என்ற ஆட்டுக்குட்டியினைப் பற்றியும், தரித்திரனைப் பற்றியும் சொல்லப்படும் அடைமொழிகள் எத்தனை பற்றும் பாசமுமானவைகள். இது உரியாவுக்கும் பத்சேபாளுக்கும் இருந்த பாசமிக்க உறவின் அளவைத்தானே உயர்த்திக்காட்டுகின்றது. கர்த்தர் கொடுத்த ஒன்றே போதும் என்ற மனநிலையோடு வாழ்ந்தவன் உரியா. ஆனால், அநேகம் வேண்டும், அழகானவைகளெல்லாம் வேண்டும் என்ற எண்ணத்தோடு வாழ்ந்த தாவீது அடுத்தவருடையதின்மேலும் கண்போட்டுக்கொண்டிருக்கிறான். இத்தகையவர்கள் எங்கிருந்தாலும் ஆபத்துதானே. அபிஷேகம் பெற்றவர்களோ, சுவிசேஷகர்களோ, ஊழியர்களோ, போதகர்களோ, தலைவர்களோ, தீர்க்கதரிசிகளோ தாவீதைப் போன்ற இத்தகைய குணம் இருந்தால், அது பத்சேபாளை படுக்கையறை வரை இழுத்துக்கொண்டுவரச் செய்துவிடும். பிறனுடைய மனைவியோடே சேரும்படி சயனித்து, அவளால் உன்னைத் தீட்டுப்படுத்திக்கொள்ளவேண்டாம் (லேவி 18:20). ஒருவன் பிறனுடைய மனைவியோடே விபச்சாரம் செய்தால், பிறன் மனைவியோடே விபச்சாரம் செய்த அந்த விபசாரனும் அந்த விபசாரியும் கொலைசெய்யப்படக்கடவர்கள் (லேவி 20:10) என்ற கட்டளைக்கு விரோதமாக செயல்படத் தூண்டிவிடும். ஊழியனும், விபச்சாரியும் என்றல்ல, விபச்சாரனும் விபச்சாரியும் என்றே வேதம் அடைமொழிப்படுத்துவதைக் கவனியுங்கள். வேசியோடு இசைந்திருக்கிறவன் அவளுடனே ஒரே சரீரமாயிருக்கிறானென்று அறியீர்களா? இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று சொல்லியிருக்கிறதே (1கொரி 6:16) என்று பவுலும் எச்சரிக்கின்றாரே.

அடுத்தவருடைய தோட்டத்திற்குள் பாயும் தோட்டாக்களாக சத்துரு உங்களை மாற்றிவிடாதபடி எச்சரிக்கையாயிருங்கள். இச்சை என்னும் அவனுடைய துப்பாக்கியினுள் நீங்கள் விழுந்துவிட்டால், உங்களைத் தோட்டாக்களாக மாற்றிவிடுவான், அதுமாத்திரமல்ல, உங்களைக் கொண்டு அடுத்தவரையும் விபச்சாரியாக்கிவிடுவான் எச்சரிக்கை!! இயேசு போதித்த ஐசுவரியவான், லாசரு சம்பவத்தில் (லூக். 16 அதி.), ஐசுவரியவான் தரித்திரனாகிய லாசருவுக்கு எதுவும் கொடுக்கவில்லை, வாசலில் தரித்திரன் கிடந்தபோதிலும் தன் வாயிலிருக்கும் அப்பத்தில் பங்கு கொடுக்கவில்லை. இருவரின் மரணத்திற்குப் பின்னர், ஐசுவரியவானுக்கும் பரலோகத்திற்கும் இருந்த இடைவெளியோ பெரியது. அந்த ஐசுவரியவான் தரித்திரனுக்குக் கொடுக்காதவன்; ஆனால், ஆகாபைப் போன்றவர்கள், விழுந்துபோன தாவீதைப் போன்றவர்கள், தரித்திரர்களிடமிருந்தும் தங்களுக்காகப் பிடுங்கிக்கொள்பவர்கள். சமாரியாவின் மலைகளிலுள்ள பாசானின் மாடுகளே, நீங்கள் இந்த வார்த்தைகளைக் கேளுங்கள்; தரித்திரரை ஒடுக்கி, எளியவர்களை நொறுக்கி, அவர்களுடைய எஜமான்களை நோக்கி: நாங்கள் குடிக்கும்படிக்கொண்டுவாருங்கள் என்று சொல்லுகிறீர்கள் (ஆமோ 4:1) என்று உரைக்கிறான் ஆமோஸ் தீர்க்கதரிசி. 'தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்' (லூக். 18:22) என்றார் இயேசு. தரித்திரர்களிடமிருந்து பிடுங்கிக்கொள்பவர்கள் பரலோத்திற்குத் தூரமானவர்களே.

பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார் தேவன் (யாத் 20:17). ஆனால், இத்தகைய இச்சைகளில் விழுந்து அடுத்தவருடையவைகளை அபகரித்துக்கொள்பவர்கள் அநேகர். திருமணத்திற்குப் பின் கணவன் மனைவியை விட்டு விட்டு வேறொருவருடன் ஓடிப்போவதும், மனைவி கணவனை விட்டுவிட்டு வேறொருவருடன் வாழத்தொடங்குவதும் இந்த அத்தியாயத்தின் வரிகளே. புருஷன் வீட்டில் இல்லாதபோது, வேறொருவருக்காக தன்னை ஆயத்தப்படுத்தும் மனைவிகளால் விழுந்துபோன குடும்பங்கள் உண்டே (நீதி. 7 அதி.).

தேசத்தில் இன்றைய நாட்களில் இயற்றப்படவேண்டும் என்று முன்நிறுத்தப்பட்டிருக்கிற 'நில கையகப்படுத்தும் சட்ட மசோதா' செய்யவிருக்கும் காரியம் இதுதானே. யேசபேல் எழுதிக்கொடுத்தது போலவும், தாவீது எழுதிக்கொடுத்தது போலவும் எழுதிக்கொடுத்து பிறருக்குச் சொந்தமான நிலங்களை எடுத்துக்கொள்ளவும், அபகரித்துக்கொள்ளவும், அக்கிரமித்துக்கொள்ளவும், வலுக்கட்டாயமாகப் பறித்துக்கொள்ளவும் வழிகோலும் சட்டமே இது. இச்சட்டத்தின் வாயிலாக ஐசுவரியவான்கள் பலருக்கு தரித்திரர்களின் நிலங்களை சமையல்பண்ணவே அரசு முயற்சித்துக்கொண்டிருக்கிறது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. விவசாயிகளின் நிலம் பறிபோய்விடும் என்று மாத்திரமே அம்பலப்படுத்தப்பட்டுவரும் நிலையில், விசுவாசிகளின் நிலங்களும், கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களின் நிலங்களும், கிறிஸ்தவ ஸ்தாபனங்களின் நிலங்களும் என்னவாகும் என்பதை அறியும் அறிவு தேவனை அறிந்தோராகிய நமக்கு வேண்டும். நமது நிலங்களின் பட்டாக்களையும் எதிரியின் தோட்டாக்கள் குறிவைத்துக்கொண்டிருக்கிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

உரியாவின் மனைவியாகிய பத்சேபாளை தாவீது எடுத்துக்கொண்ட செயலை மறைமுகமாக நாத்தான் தாவீதினிடத்தில் சொல்லிக்கொண்டிருந்தபோது, யார் அந்த இரக்கமற்ற மனுஷன்? என்று தாவீது கொதித்தெழுந்தான்; நாத்தானோ, 'நீயே அந்த மனுஷன்' என்று தாவீதைக் காட்டிக்கொடுத்தான். தாவீது தவறு செய்தபோது, தன்னைத் திருத்திக்கொள்ள ஆயத்தமானான். தவற்றிற்கான தண்டனையையும் தேவனிடமிருந்து பெற்றுக்கொள்ள தன்னை ஒப்புக்கொடுத்தான். ஆனால், தேவனுக்கு விரோதமாகவே செயல்பட்டுக்கொண்டிருந்த யேசபேலோ மேலும் மேலும் தனது கோபத்தை தீவிரமாக்கினாள். தேவனை அறியாதவர்களின் குணம் இதுவே. இஸ்ரவேல் ஜனங்களை விடுவிக்க மோசேயும், ஆரோனும் எகிப்துக்குச் சென்றார்கள்; ஜனத்தை விடுவிக்கும்படி பார்வோனிடத்தில் பேசினார்கள்; என்றாலும், உடனே அது நடந்துவிடவில்லை. மோசேயை சந்தித்த நாள் முதல் பார்வோனின் கோபம் தேவ ஜனத்தின் மேல் அதிகரித்தது. இஸ்ரவேலர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: நீங்கள் பார்வோனின் கண்களுக்கு முன்பாகவும் அவருடைய ஊழியக்காரரின் கண்களுக்கு முன்பாகவும் எங்கள் வாசனையைக் கெடுத்து, எங்களைக் கொல்லும்படி அவர்கள் கையிலே பட்டயத்தைக் கொடுத்ததினிமித்தம், கர்த்தர் உங்களைப் பார்த்து நியாயந்தீர்க்கக்கடவர் என்றார்கள் (யாத் 5:21) என்று சொல்லுமளவுக்கு தேவ ஜனங்களை வாதித்தான் பார்வோன். மோசே ஆண்டவரை நோக்கி: நான் உமது நாமத்தைக்கொண்டு பேசும்படி பார்வோனிடத்தில் பிரவேசித்தது முதல் அவன் இந்த ஜனங்களை உபத்திரவப்படுத்துகிறான்; நீர் உம்முடைய ஜனங்களை விடுதலையாக்கவில்லையே என்றான் (யாத் 5:23). தேவனை அறிந்தவர்கள் தவறும்போதும், தேவனை அறியாதவர்கள் தவறு செய்யும்போதும் காணப்படும் பெருத்த வித்தியாசம் இதுவே.

Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி