ஆலயம்
நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? (1கொரி. 3:16)
இடிபோல மனிதர்களின் மீது தொடர்ச்சியாக விழுந்துகொண்டிருக்கும் கொரோனாவின் பிடியிலிருந்து விடுபடுவதற்கு முழு உலகமும் தன்னால் இயன்ற முயற்சிகள் அனைத்தையும் இடைவிடாது செய்துகொண்டிருக்க, கூடி ஆராதிக்கும் கட்டிடங்களாகிய ஆலயங்கள் அனைத்தும் அரசாங்கத்தின் அதிகாரங்களுக்கு உட்பட்டு அடைபட்டிருக்க, 'ஆலயங்கள்' என்று அடையாளம் காட்டப்படும் ஆவிக்குரியவர்களாகிய ஒவ்வொரு தனி மனிதர்களுடைய இருதயங்களும் அடைபட்டுவிடக்கூடாது என்பதிலும், இருளடைந்துவிடக்கூடாது என்பதிலும், ஆண்டவருக்கு அவர்களது ஆலயத்தின் கதவுகள் மூடப்பட்டுவிடக்கூடாது என்பதிலும் நாம் கவனமுடன் காணப்படவேண்டியது அவசியம்.
இயேசு தேவாலயத்தை விட்டுப் புறப்பட்டுப்போகையில், அவருடைய சீஷர்கள் தேவாலயத்தின் கட்டிடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடத்தில் வந்தபோது, இயேசு அவர்களை நோக்கி: இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே, இவ்விடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் (மத் 24:1,2). இன்றைய நாட்களிலும், உலகப்பிரகாரமான ஆலயக் கட்டிடங்களை உயரமாகக் கட்டுவதிலும், பண்டிகை என்ற பெயரிலும், அசனம் என்ற பெயரிலும் பணத்தைச் செலவழித்து கல்லையும் மண்ணையும் அலங்கரிப்பதிலுமே கவனமாயிருக்கும் மனிதர்கள் இன்றைய நாட்களில் ஏராளம் ஏராளம். என்றபோதிலும், ஆண்டவரது கண்கள், உலகப்பிரகாரமாக நாம் அலங்கரித்துவைத்திருக்கும் ஆலயங்களையும் மற்றும் அவைகளின் அழகையும் கண்டு அசந்துவிடாது; மாறாக, உள்ளமாகிய நம்முடைய ஆலயத்தின் அலங்காரத்தையே அவர் அளந்து பார்ப்பார் (1 சாமு. 16:7). ஆனால், உள்ளமாகிய நம்முடைய ஆலயம் உள்ளே அவர் நுழைய இயலாதபடி அலங்கோலமாகவும், அசுத்தமாகவும், அந்தகாரத்தினால் நிறைந்ததாகவும், அருவருப்புகளால் பெருகினதாயும் காணப்படுமென்றால், கட்டிடமாகிய ஆலயத்தில் நாம் அமர்ந்திருந்தாலும், கட்டாயம் நம்முடைய சரீரமாகிய ஆலயத்திற்குள் அவரது பாதங்கள் நுழையாது.
மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள்; உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது. குருடனான பரிசேயனே! போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு. மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள், அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும். அப்படியே நீங்களும் மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள் (மத் 23:25-28) என்று இயேசு கிறிஸ்து எச்சரிக்கின்றாரே.
வானம் எனக்குச் சிங்காசனம், பூமி எனக்குப் பாதபடி; நீங்கள் எனக்குக் கட்டும் ஆலயம் எப்படிப்பட்டது? நான் தங்கியிருக்கும் ஸ்தலம் எப்படிப்பட்டது? (ஏசா 66:1) என்றல்லவோ ஏசாயா தீர்க்கதரிசியைக் கொண்டு தேவன் கேள்வி எழுப்பினார். அப்படியே சாலொமோனும், தேவன் மெய்யாக பூமியிலே வாசம்பண்ணுவாரோ? இதோ, வானங்களும் வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே; நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்? (1 இரா 8:27) என்றும், வானங்களும் வானாதிவானங்களும் அவரைக் கொள்ளக்கூடாதிருக்க, அவருக்கு ஒரு ஆலயத்தைக் கட்ட வல்லவன் யார்? அவர் சந்நிதியில் தூபங்காட்டுகிறதற்கே ஒழிய, வேறே முகாந்தரமாய் அவருக்கு ஆலயம்கட்டுகிறதற்கு நான் எம்மாத்திரம்? (2 நாளா 2:6) என்றும்தானே ஜெபிக்கின்றான்.
மேலும், கர்த்தருக்கென்று ஆலயத்தைக் கட்டவேண்டுமென்ற விருப்பம் தாவீதின் உள்ளத்தில் உண்டானபோது, கர்த்தர் தாவீதை நோக்கி, நான் வாசமாயிருக்கத்தக்க ஆலயத்தை நீ எனக்குக் கட்டுவாயோ? நான் இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணின நாள்முதற் கொண்டு இந்நாள்வரைக்கும், நான் ஒரு ஆலயத்தில் வாசம்பண்ணாமல், கூடாரத்திலும் வாசஸ்தலத்திலும் உலாவினேன். நான் இஸ்ரவேலராகிய என் ஜனத்தை மேய்க்கும்படி கட்டளையிட்ட இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒரு கோத்திரத்தையாவது நோக்கி: நீங்கள் எனக்குக் கேதுரு மரத்தால் செய்யப்பட்ட ஆலயத்தைக் கட்டாதிருக்கிறது என்ன என்று நான் இஸ்ரவேல் புத்திரருக்குள் உலாவிவந்த எவ்விடத்திலாவது யாதொரு வார்த்தையைச் சொன்னதுண்டோ? (2சாமு 7:5-7) என்றல்லவோ கூறுவதின் உண்மையான பொருள் என்ன? கைவேலையல்லாத ஆலயம் நாம்தான் என்பதுதானே.
கயிற்றினால் ஒரு சவுக்கையுண்டுபண்ணி, அவர்கள் யாவரையும் ஆடுமாடுகளையும் தேவாலயத்துக்குப் புறம்பே துரத்திவிட்டு, காசுக்காரருடைய காசுகளைக் கொட்டி, பலகைகளைக் கவிழ்த்துப்போட்டு, 'என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள்' (யோவா 2:15,16) என்ற இயேசு கிறிஸ்துவின் வைராக்கியம், இன்று ஆலயம் என்னும் உள்ளத்திலும் ஆரம்பமாகட்டும்.
Comments
Post a Comment