Skip to main content

தடம்புரளச் செய்யும் தேவைகள்

 

தடம்புரளச் செய்யும் தேவைகள்



முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும். (மத் 6:33)


தேவனுடைய ராஜ்யமா? அல்லது தேவைகளின் ராஜ்யமா? என்ற கேள்விக்கு வாழ்க்கையில் விடைகாண விழையும்போது, பயணித்துக்கொண்டிருக்கின்ற ஆவிக்குரிய வாழ்க்கையின் வழியிலிருந்தே விலகி வழுக்கி விழுந்துவிடும் மனிதர்கள் அநேகர். தேவைகள் வாழ்க்கையில் முந்திக்கொள்ளும்போது, தேவனையோ வாழ்க்கையில் பின்னுக்குத் தள்ளிவிடும் மக்கள் பலர் உண்டு. மேலும், தேவைகள் சந்திக்கப்பம்வரை தேவனோடு சம்பந்தம் கொண்டு,  தேவைகள் சந்திக்கப்பட்டுவிட்டவுடன் தேவனை விட்டே தூரமாகிவிடும் கூட்டத்தினரும் உண்டு. அதுமாத்திரமல்ல, தேவைகளைச் சந்தித்தால் மாத்திரமே, தேவனை தேவனென்று ஏற்றுக்கொள்ளுவோரும் இவ்வுலகத்தில் உண்டு; இத்தகை கூட்டத்தினரை, பாதையில், பாதியில், பசிக்காகக்கூட பிசாசு திசை திருப்பிவிடக்கூடும். ஆசீர்வாதத்திற்குப் பாத்திரனாயிருந்தபோதிலும் (ஆதி. 28:14,15), 'ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்ட  பின்னரே' பொருத்தனை என்பதில் யாக்கோபு கவனமாயிருந்தானே (ஆதி. 28:21,22). 'மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே' (மத் 4:4) என்ற இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள், பசியாயிருந்தாலும் 'அப்பத்திற்கு அல்ல' 'தேவனுடைய வார்த்தைக்கே' முதலிடம் என்பதை அல்லவோ நமக்கு பிரதியொலிக்றது. 

பிரசங்க மேடைகளிலும் தேவனுடைய ராஜ்யத்தைப் பின்னுக்குத் தள்ளி பூஜ்யமாக்கிவிட்டு, தேவைகளின் ராஜ்யத்தையே பிரசங்கித்துக்கொண்டிருக்கும் ஜனங்கள் அநேகர். இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் 

பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம் (1கொரி 15:19) என்பதல்லவோ பவுலின் ஆலோசனை. உலக ஆசைகள் நம்மிலே பெருகப் பெருக, தேவ ராஜ்யத்திற்கடுத்த ஆஸ்திகளை நம்மிடத்திலிருந்து சத்துரு திருடிக்கொள்ளுவது நிச்சயம். தேவ ராஜ்யத்தினையே நோக்கிக்கொண்டிருக்கும் கண்களை தேவைகளை நோக்கித் திருப்பி, தங்களிடத்திலிருக்கும் ஆஸ்திகளைக் கொண்டு தேவராஜ்யத்தின் தேவைகளைச் சந்திப்பதற்குப் பதிலாக, தேவனுடைய ராஜ்யம் தன்னுடைய தேவைகளைச் சந்திக்கவேண்டும் என்றே சிந்தித்துக்கொண்டிருக்கும் மனிதர்கள் உண்டு. அத்தகைய மனிதர்கள், 'இதோ, நான் என் சிறுமையிலே கர்த்தருடைய ஆலயத்திற்காக ஒரு லட்சம் தாலந்து பொன்னையும், பத்துலட்சம் தாலந்து வெள்ளியையும், நிறுத்து முடியாத திரளான வெண்கலத்தையும் இரும்பையும் சவதரித்தும், மரங்களையும் கற்களையும் சவதரித்தும் வைத்தேன்; நீ இன்னும் அவைகளுக்கு அதிகமாய்ச் சவதரிப்பாய்' (1நாளா 22:14) என்று தாவீதைப் போலவும், 'ஆதலால், நான் உங்களில் எவ்வளவு அதிகமாய் அன்புகூருகிறேனோ அவ்வளவு குறைவாய்  உங்களால் அன்புகூரப்பட்டிருந்தாலும், மிகவும் சந்தோஷமாய் நான் உங்கள் ஆத்துமாக்களுக்காகச் செலவுபண்ணவும் செலவுபண்ணப்படவும் விரும்புகிறேன்' (2கொரி 12:15) என்று பவுலைப் போலவும் சொல்வது கடினமே. அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும் (யோவா 3:30) என்றல்லவோ தன்னுடைய விருப்பத்தை அறிக்கை செய்கிறார் யோவான்.

ஊழியத்தின் பாதையிலும் இது பொருந்தக்கூடியதே. தேவனுடைய ராஜ்யத்திற்கடுத்தவைகளுக்கும், தேவனுடைய ராஜ்யத்திற்கே முன்னுரிமை கொடுப்பவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படாமல், சத்துருவின் சந்ததிகள் சந்துகளில் ஊடுருவ இடங்கொடுப்போமென்றால், எந்நேரத்திலும் சத்துரு ஊழியத்திற்கு முட்டுக்கட்டையாக மாறி அதன் ஓட்டத்தையே முடித்துவிடக்கூடும். பின்பு அவர்களுக்குள் இருந்த பலஜாதியான அந்நிய ஜனங்கள் மிகுந்த இச்சையுள்ளவர்களானார்கள்; இஸ்ரவேல் புத்திரரும் திரும்ப அழுது, நமக்கு இறைச்சியைப் புசிக்கக்கொடுப்பவர் யார்? நாம் எகிப்திலே கிரயமில்லாமல் சாப்பிட்ட மச்சங்களையும், வெள்ளரிக்காய்களையும், கொம்மட்டிக்காய்களையும், கீரைகளையும், வெண்காயங்களையும், வெள்ளைப் பூண்டுகளையும் நினைக்கிறோம். இப்பொழுது நம்முடைய உள்ளம் வாடிப்போகிறது; இந்த மன்னாவைத் தவிர, நம்முடைய கண்களுக்கு முன்பாக வேறொன்றும் இல்லையே என்று சொன்னார்கள் (எண்; 11:4-6) என்று இஸ்ரவேல் ஜனங்களைக் குறித்து வாசிக்கின்றோமே. புறஜாதியான மக்கள் பெருகினபோது, அவர்களுடைய இச்சைக்கு நேராக இஸ்ரவேல் மக்களின் வாழ்க்கையும் இழுக்கப்பட்டது. வனாந்தரத்திலே இச்சையுள்ளவர்களாகி, அவாந்தரவெளியிலே தேவனைப் பரீட்சைபார்த்தார்கள் (சங் 106:14). இத்தகைய பரீட்சையை நம்முடைய ஊழியத்தில் நாம் தொடங்கிவிடக்கூடாது. 


Comments

Popular posts from this blog

கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்

  கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்   வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கிறிஸ்துவின் குணங்களை வெளிப்படுத்தவேண்டியதும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டியதும் கிறிஸ்தவனின் தலையாயக் கடமை.  கிறிஸ்துவுக்குள்  வாழும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சில உண்மைகளை பவுல் எபேசு சபைக்குச் சுட்டிக்காட்டுகின்றார். கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்  (எபே. 1:3),  பாவமன்னிப்பாகிய மீட்பு  (எபே. 1:7) இவைகள் பொதிந்திருக்கின்றன. ஆனால், இவ்விரண்டிற்கும் பலர் முக்கியத்துவம் கொடுக்காமல், உலகத்தின் ஆசீர்வாதங்களையே அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். பாவமன்னிப்பினைப் பெறாமல், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறாமல், உலகத்தின் ஆசீர்வாதங்களுக்காகவே அவரின் பின்னே ஓடினால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் முடிவு பரிதாபமாகவே இருக்கும். உன்னதங்களில் உட்காரவேண்டிய நாம் உலகத்தோடு ஒட்டிவிடுவோம், மணவாளனோடு வாழவேண்டிய நாம் மண்ணுக்காக வாழ்ந்துவிடுவோம். கிறிஸ்துவிடம் பிரதானமாய் பாவமன்னிப்பையே முதலில் பெற நாடுவோம்; அதற்காகத்தானே பிதா இயேசுவை இந்த பூமியில் அனுப்பினார். எனவே, பிதாவின் பி...

இறைச்சியா? இச்சையா?

இறைச்சியா?  இச்சையா? 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்' (மத். 6:11) என்றும், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத். 6:34) என்றும் பிதாவை நோக்கி ஜெபிக்க இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக்கொடுத்திருந்தபோதிலும், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே 'உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்' (மத். 6:8) என்பதுதானே பிதாவைக் குறித்து இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிமுகம். 'முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்' (மாற். 7:27) என்பதுதான் அவரது விருப்பமும் கூட. 'வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (மத். 10:10) என்றும், 'வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (லூக். 10:7; 1தீமோ. 5:18) என்றும் நாம் வாசிக்கின்றோமே. அப்படியிருக்க, 'ஆகாரத்திற்காக வேலை' மற்றும் 'கூலிக்காக வேலை' என்ற என்ற பார்வையில் நமது பயணம் தொடர்ந்துவிடக்கூடாததல்லவா! 'இழிவான ஆதாயம்' நமது வழிகளை மாற்றிவிடக்...

வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்

  வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்   அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது,  இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.  ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்;  ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.(லூக் 4:25-27) இஸ்ரவேலின் தேவனாக இருந்தபோதிலும், இஸ்ரவேல் தேசத்திலேயே தனது குமாரனை மேசியாவாகப் பிறக்கச் செய்தபோதிலும், பஞ்ச காலத்தின்போது, இஸ்ரவேலருக்குள் இருந்த அநேகம் விதவைகள் போஷிக்கப்படாமற்போனதற்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், ந...