Skip to main content

தகர்ந்துபோன தலைவன்

 

தகர்ந்துபோன தலைவன்



அப்பொழுது சவுல் தாவீதைச் சுவரோடே சேர்த்து உருவக் குத்திப்போடுவேன் என்று ஈட்டியை அவன்மேல் எறிந்தான்; ஆனாலும் தாவீது விலகி இரண்டுதரம் அவனுக்குத் தப்பினான்.(1சாமு 18:11)


தன்னைப் பார்க்கிலும் தரத்தில் இன்னும் உயர்ந்தவர்களாகவும், சிறந்தவர்களாகவும் உடனிருப்பவர்களை உருவாக்கணே;டும் என்ற உள்ளத்துடனும், அதற்கேற்ற எண்ணத்துடனும் செயல்படுபவர்களே உன்னதம் விரும்பும் தலைவர்கள். பிதாவின் சித்தத்தை நிறைவேற்றும்படியாக இப்பூமிக்கு வந்த இயேசு கிறிஸ்துவும், 'மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய 

கிரியைகளையும் செய்வான்' (யோவா 14:12) என்றுதானே விரும்பி உரைத்தார். ஆனால், இன்றைய நாட்களில் தலைவர்கள் சிலரோ, தன்னோடிருப்பவர்கள் தன்னைக் காட்டிலும் உயர்வாகப் பேசப்பட்டுவிடக்கூடாது என்றும், தன்னைக் காட்டிலும் அதிகமாக ஜனங்களுக்கு முன் காட்சியளித்துவிடக்கூடாது என்றும், தங்களைக் காட்டிலும் அதிகமாகச் செயல்பட்டுவிடக்கூடாது என்றும், தங்களைவிட சிறந்தவர்களாகவும், உயர்ந்தவர்களாகவும் பெயர்பெற்றுவிடக்கூடாது என்றுமே நினைத்துக்கொண்டிருக்கின்றனர். ஆவிக்குரிய ஆசீர்வாதங்களிலும் மற்றும் ஆண்டவருக்கிடையிலான உறவிலும், தாலந்துகளிலும் தன்னோடிருப்பவர்களின் பாத்திரம் பரலோக தேவனால் நிறைந்து வழிந்துகொண்டிருக்கின்றபோதிலும், சகோதரர்களாக

அவர்களைப் பாவிக்காமல் சத்துருக்களாகவே தங்களுக்கு முன் பார்த்துக்கொண்டிருக்கிற தலைவர்கள் உண்டு (சங். 23:5). அரசனைப் போல அரியனையில் தான் அமர்ந்திருந்தபோதிலும், அடுத்தவர்கள் தன்னைக் காட்டிலும் அதிகமாக அளக்கப்படும்போது, தன்னுடைய பாத்திரத்தில் இருப்பதையும் இழந்து, சத்துருவோடு இணைந்துவிடுபவர்கள் இவர்கள். சவுல் இருந்த நாளெல்லாம் பெலிஸ்தரின்மேல் கடினமான யுத்தம் நடந்தது; சவுல் ஒரு பராக்கிரமசாலியையாகிலும் ஒரு பலசாலியையாகிலும் காணும்போது, அவர்கள் எல்லாரையும் தன்னிடமாகச் சேர்த்துக் கொள்ளுவான் (1சாமு 14:52) என்பதுதான் சவுலின் குணம்; என்றபோதிலும், தன்னைக் காட்டிலும் அதிகமாக தாவீது பாராட்டப்பட்டபோது, தாவீது பலசாலியாயிருந்தபோதிலும், பழிவாங்கத் துடித்துவிட்டானே! 

சுரமண்டலம் வாசிக்கிறதில் தேறின ஒருவனைத் தேடும்படிக்கு, எங்கள் ஆண்டவனாகிய நீர் உமக்கு முன்பாக நிற்கிற உம்முடைய அடியாருக்குக் கட்டளையிடும்; அப்பொழுது தேவனால் விடப்பட்ட பொல்லாத ஆவி உம்மேல் இறங்குகையில், அவன் தன் கையினால் அதை வாசித்தால் உமக்குச் சவுக்கியமுண்டாகும் என்று சவுலின் ஊழியக்காரர் சொன்னபோது, அந்த வேலைக்காரரில் ஒருவன் பிரதியுத்தரமாக: இதோ, பெத்லெகேமியனாகிய ஈசாயின் குமாரன் ஒருவனைக் கண்டிருக்கிறேன்; அவன் வாசிப்பதில் தேறினவன், அவன் பராக்கிரமசாலி, யுத்தவீரன், காரியசமர்த்தன், சவுந்தரியமுள்ளவன்; கர்த்தர் அவனோடேகூட இருக்கிறார் என்றான். அதுமாத்திரமல்ல, அப்படியே தாவீது சவுலிடத்தில் வந்து, அவனுக்கு முன்பாக நின்றான்; அவன் இவனை மிகவும் சிநேகித்தான்; அவனுக்கு இவன் ஆயுததாரியானான்

என்றும், தாவீது எனக்கு முன்பாக நிற்கட்டும்; என் கண்களில் அவனுக்குத் தயவு கிடைத்தது என்றும் சவுல் சொன்னதாக வாசிக்கின்றோமே. (1சாமு 16:16,18,21,22) வாசிக்கின்றோமே. 'பராக்கிரமசாலி, யுத்தவீரன், காரியசமர்த்தன், சவுந்தரியமுள்ளவன்' என்று தாவீது வர்ணிக்கப்பட்டிருந்தபோதிலும், பெலிஸ்தியருடன் நடைபெற்ற யுத்தத்திற்கும், கோலியாத்தை எதிர்கொள்வதற்கும் தாவீதை சவுல் அழைத்துச் செல்லவில்லை; அவன் ஆட்டு மந்தைகளோடேயே விடப்பட்டிருந்தான். என்றபோதிலும், 'பராக்கிரமசாலியான தாவீதுக்கு தகப்பன் ஈசாயின் வழியாக யுத்தத்திற்குச் செல்ல பாதையை உண்டாக்கிக்ககொடுத்தார் ஆண்டவர்'. அதுமாத்திரமல்ல, தாவீது பெலிஸ்தியனான கோலியாத்தைக் வென்றபோதும், சவுல் அவனை அவன் தகப்பன் வீட்டுக்குத் திரும்பிப்போக ஒட்டாமல், அன்றுமுதல் தன்னிடத்தில் வைத்துக்கொண்டான் (1சாமு 18:2). தாவீது சவுல் தன்னை அனுப்புகிற எவ்விடத்திற்கும்போய், புத்தியாய்க் காரியத்தை நடப்பித்ததினால், சவுல் அவனை யுத்தமனுஷரின்மேல் அதிகாரியாக்கினான்; அவன் எல்லா ஜனத்தின் கண்களுக்கும், சவுலுடைய ஊழியக்காரரின் கண்களுக்கும்கூடப் பிரியமாயிருந்தான் (1சாமு 18:5) என்றும் காண்கிறோமே.  

எனினும், தாவீது பெலிஸ்தனைக் கொன்று திரும்பிவந்தபின்பு,  ஸ்திரீகள் இஸ்ரவேலின் சகல பட்டணங்களிலுமிருந்து, ஆடல்பாடலுடன் புறப்பட்டு, மேளங்களோடும் கீதவாத்தியங்களோடும் சந்தோஷமாய் ராஜாவாகிய சவுலுக்கு எதிர்கொண்டு வந்தபோது, அந்த ஸ்திரீகள் ஆடிப்பாடுகையில்: சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று முறைமுறையாகப் பாடினபோது (1சாமு 18:6,7) சவுலினால் அதனைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை; தனக்குள்ளேயே சவுல் தகர்ந்துபோனது மாத்திரமல்ல, தாவீதையும் தகர்த்துவிடவேண்டும் என்று துடித்தானே. இத்தகைய நிலையிலுள்ள தலைவர்கள் இன்றும் உண்டு, பிரசங்க பீடத்திலோ, பொறுப்பிலோ, ஸ்தானத்திலோ, உடனிருக்கும் ஊழியர்கள் தங்களைக் காட்டிலும் ஒருபடி உயர்ந்தால்கூட உடைந்துபோகும் மனதுடைய தலைவர்கள் உண்டே. சபையில் அவர்களை சிறுமைப்படுத்தாமல், பரந்த மனதோடு சிறந்த ஸ்தானத்தில் வைத்தால், பரலோகம் மகிழும். 

Comments

Popular posts from this blog

கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்

  கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்   வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கிறிஸ்துவின் குணங்களை வெளிப்படுத்தவேண்டியதும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டியதும் கிறிஸ்தவனின் தலையாயக் கடமை.  கிறிஸ்துவுக்குள்  வாழும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சில உண்மைகளை பவுல் எபேசு சபைக்குச் சுட்டிக்காட்டுகின்றார். கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்  (எபே. 1:3),  பாவமன்னிப்பாகிய மீட்பு  (எபே. 1:7) இவைகள் பொதிந்திருக்கின்றன. ஆனால், இவ்விரண்டிற்கும் பலர் முக்கியத்துவம் கொடுக்காமல், உலகத்தின் ஆசீர்வாதங்களையே அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். பாவமன்னிப்பினைப் பெறாமல், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறாமல், உலகத்தின் ஆசீர்வாதங்களுக்காகவே அவரின் பின்னே ஓடினால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் முடிவு பரிதாபமாகவே இருக்கும். உன்னதங்களில் உட்காரவேண்டிய நாம் உலகத்தோடு ஒட்டிவிடுவோம், மணவாளனோடு வாழவேண்டிய நாம் மண்ணுக்காக வாழ்ந்துவிடுவோம். கிறிஸ்துவிடம் பிரதானமாய் பாவமன்னிப்பையே முதலில் பெற நாடுவோம்; அதற்காகத்தானே பிதா இயேசுவை இந்த பூமியில் அனுப்பினார். எனவே, பிதாவின் பி...

இறைச்சியா? இச்சையா?

இறைச்சியா?  இச்சையா? 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்' (மத். 6:11) என்றும், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத். 6:34) என்றும் பிதாவை நோக்கி ஜெபிக்க இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக்கொடுத்திருந்தபோதிலும், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே 'உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்' (மத். 6:8) என்பதுதானே பிதாவைக் குறித்து இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிமுகம். 'முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்' (மாற். 7:27) என்பதுதான் அவரது விருப்பமும் கூட. 'வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (மத். 10:10) என்றும், 'வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (லூக். 10:7; 1தீமோ. 5:18) என்றும் நாம் வாசிக்கின்றோமே. அப்படியிருக்க, 'ஆகாரத்திற்காக வேலை' மற்றும் 'கூலிக்காக வேலை' என்ற என்ற பார்வையில் நமது பயணம் தொடர்ந்துவிடக்கூடாததல்லவா! 'இழிவான ஆதாயம்' நமது வழிகளை மாற்றிவிடக்...

வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்

  வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்   அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது,  இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.  ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்;  ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.(லூக் 4:25-27) இஸ்ரவேலின் தேவனாக இருந்தபோதிலும், இஸ்ரவேல் தேசத்திலேயே தனது குமாரனை மேசியாவாகப் பிறக்கச் செய்தபோதிலும், பஞ்ச காலத்தின்போது, இஸ்ரவேலருக்குள் இருந்த அநேகம் விதவைகள் போஷிக்கப்படாமற்போனதற்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், ந...