புதன், 13 அக்டோபர், 2021

வலிகள் வழிகளே (வெளி 3:8)

வலிகள் வழிகளே



உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான். (வெளி 3:8)


ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர் (வெளி 3:7) நமது ஆண்டவர். கல்லறையின் வாசலிலிருந்த கல் புரட்டப்படாமலிருந்தும்,  உயிர்த்தெழுந்து உள்ளேயிருந்து வெளியே புறப்பட்டுச் சென்றார் இயேசு கிறிஸ்து (மத். 28:2-6), தூதனைக் கண்டு பயந்த காவலாளர்கள் (மத். 28:4), இயேசு கிறிஸ்து புறப்பட்டுச் சென்றதையோ பார்க்கக்கூடாத பார்வையற்ற போர்வீரர்களாகவே பாதுகாப்புப் பணியில் நின்றுகொண்டிருந்தார்கள். அதுமாத்திரமல்ல, வாரத்தின் முதல்நாள் சாயங்காலவேளையிலே, சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார் (யோவா 20:19).

இத்தனை வல்லமை தன்னிடத்திலிருந்தும், மனிதன் மனதில் தனக்கு வழிவிடாதவரை, ஏற்றுக்கொள்ளாதவரை அவனது உள்ளத்தின் உள்ளே அவர் பிரவேசிப்பதில்லை. இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான் (வெளி 3:20) என்பதுதானே அவரது நிலைப்பாடு. 

எனினும், அடைக்கப்பட்ட மனிதர்களும் நம்மை தங்கள் வாசலண்டை அழைக்கும்படியாக, அவர்களுடைய வாழ்க்கையில் கலக்கங்களையும், நெருங்கங்களையும் உருவாக்குகின்றார். பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், தான் கண்ட சொப்பங்களினிமித்தம் கலங்கிக்கொண்டிருந்தான் (தானி. 4:5). சாஸ்திரிகளுக்கும், ஜோசியர்களுக்கும், கல்தேயர்களுக்கும், குறிசொல்லுகிறவர்களுக்கும் சொப்பனத்தைச் சொன்னபோதிலும், அதின் அர்த்தத்தையோ அவர்களால் தெரிவிக்கக்கூடாமற்போயிற்று (தானி. 4:7). எல்லாராலும் கூடாமற்போனபோது, நேபுகாத்நேச்சார் தானியேலை அழைத்தான்; இது தேவனது திட்டமே. 

அவ்வாறே, ராஜாவாகிய பார்வோன் சொப்பனம் கண்டபோது, கலங்கினவனாக, எகிப்திலுள்ள சகல மந்திரவாதிகளையும் சகல சாஸ்திரிகளையும் அழைப்பித்து, அவர்களுக்குத் தன் சொப்பனத்தைச் சொன்னான்; ஒருவராலும் அதின் அர்த்தத்தைப் பார்வோனுக்குச் சொல்லக்கூடாமற்போயிற்று (ஆதி 41:8). அப்போது, பானபாத்திரக்காரரின் தலைவன் தன்னுடைய வாழ்க்கையில் யோசேப்பு சொப்பனத்தின் அர்த்தத்தை அறிவித்ததை நினைவுகூர்ந்தவனாக, யோசேப்பைக் குறித்து பார்வோனுக்கு எடுத்துச் சொல்ல, எல்லாராலும் கூடாமற்போனநிலையில், பார்வோன் யோசேப்பை அழைப்பித்தான். அவனைத் தீவிரமாய்க் காவல்கிடங்கிலிருந்து கொண்டு வந்தார்கள். அவன் சவரம்பண்ணிக்கொண்டு, வேறு வஸ்திரம் தரித்து, பார்வோனிடத்தில் வந்தான் (ஆதி 41:14). பார்வோனுக்கு முன் யோசேப்பு கொண்டுசெல்லப்படவேண்டும் என்பதற்காகவே, அனைத்து வாசல்களையும் அடைத்தார் ஆண்டவர். 

மேலும், கர்த்தருடைய ஆவி சவுலை விட்டு நீங்கினபோது, கர்த்தரால் வரவிடப்பட்ட ஒரு பொல்லாத ஆவி அவனைக் கலங்கப்பண்ணிக்கொண்டிருந்தது (1 சாமு. 14). அப்போது, சுரமண்டலம் வாசிக்கிறதில் தேறின ஒருவனைத் தேடும்படிக்கு, எங்கள் ஆண்டவனாகிய நீர் உமக்கு முன்பாக நிற்கிற உம்முடைய அடியாருக்குக் கட்டளையிடும்; அப்பொழுது தேவனால் விடப்பட்ட பொல்லாத ஆவி உம்மேல் இறங்குகையில், அவன் தன் கையினால் அதை வாசித்தால் உமக்குச் சவுக்கியமுண்டாகும் என்றார்கள் (1சாமு 16:16) உடனிருந்தவர்கள். அப்பொழுது அந்த வேலைக்காரரில் ஒருவன் பிரதியுத்தரமாக: இதோ, பெத்லெகேமியனாகிய ஈசாயின் குமாரன் ஒருவனைக் கண்டிருக்கிறேன்; அவன் வாசிப்பதில் தேறினவன், அவன் பராக்கிரமசாலி, யுத்தவீரன், காரியசமர்த்தன், சவுந்தரியமுள்ளவன்; கர்த்தர் அவனோடேகூட இருக்கிறார் என்றான் (1சாமு 16:18). சவுலுக்கு உண்டான பிரச்சனை, தாவீதை அவனுக்கு முன்பாக கொண்டுவந்து நிறுத்தினது. மற்றவர்களது வாழ்க்கையில் உண்டாகும் வலிகள், நம்மை அவர்களுடைய வாசலுக்குள் கொண்டுசெல்லும் வழிகளே. 


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக