Skip to main content

அழைப்பினைத் தொடரும் ஆயுள்


சீயோனை நியாயத்தினாலும் நீதியினாலும் நிரப்புகிறவரும் (ஏசா. 33:5), தமது பரிசுத்த ஆலயத்தின் நன்மையாலும் மற்றும் உச்சிதமான கோதுமையினாலும் நம்மைப் போஷித்து, கன்மலையின் தேனினால் நம்மைத் திருப்தியாக்குகிறவரும் (சங். 65:4; 81:16), திருப்தியாக்கினதைத் தொடர்ந்து, கழுகுக்குச் சமானமாய் நமது வயதை திரும்ப வாலவயதுபோலாக்குகிறவரும் (சங். 103:5), வாலவயதாக்கினதைத் தொடர்ந்து, நன்மையினால் நாம் போஷிக்கப்பட்டதின் காரணத்தையும் பெலத்தையும் வாழ்க்கையில் உணரச் செய்யும்படியாகவும் மற்றும் தனது இராஜ்யத்தின் பணிக்காக அதனைப் பயன்படுத்தும்படியாகவும், நம்மை பலவான் கையிலுள்ள அம்புகளாக மாற்றி, நாணமடையாமல்  சத்துருக்களைச் சந்திக்கச் செய்கிறவருமாகிய (சங். 127:4,5) ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்! 

பிரியமானவர்களே! இக்கடைசி நாட்களில், அழைப்பினைத் தொடர்ந்த புறப்படுதலிலும் மற்றும் ஆத்தும ஆதாயப் பணியின் அவசரத்திலும், தொய்வினைச் சந்திக்காமல் தொடர்ந்து முன்னேறிச் செல்லவேண்டும் என்ற தாகம் நம்மில் தணிந்துபோகாமல் நிலைத்திருக்கட்டும்.       

சூழ்நிலைகளும், சுற்றுப்புறங்களில் நடப்பவைகளும், அத்துடன், நாம் உற்றுநோக்கும் காரியங்களும், நாம் சுவிசேஷம் அறிவிப்பதனை அடக்கும் சுவர்களாக ஒருபோதும் நமது கண்களுக்குக் காட்சியளிக்கக்கூடாது. 'கதவுகள் பூட்டியிருக்கையில், நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம்' (யோவான் 20:19) என்று சொன்னவரின் சீஷர்கள் நாம் என்ற நினைவு நித்தம் நம்மை ஆட்கொள்ளுமென்றால், அடைக்கப்பட்ட மனிதர்களையும், கிராமங்களையும், பட்டணங்களையும், தேசங்களையும் அவருக்காக ஆதாயப்படுத்தவேண்டும் என்ற வேட்கை நம்மை ஆத்தும வீரர்களாக நிச்சயம் மாற்றிவிடும்.   

வஸ்திரங்கள் கிழித்துப்போடப்பட்டு, அநேக அடிகள் அடிக்கப்பட்டு, கால்கள் தொழுமரத்தில் மாட்டப்பட்ட நிலையில் பவுலும் சீலாவும் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தபோதிலும், தங்கள் கட்டுகளைக் குறித்துக் கவலைப்படாலும் அத்துடன் கண்ணீர் வடிக்காமலும், கர்த்தரைத் துதித்துப் பாடினதினால், அவர்களுடைய கட்டுகள் மாத்திரமல்ல, 'காவலில் வைக்கப்பட்டிருந்த, துதிப்பாடல்களைச் சிறைச்சாலையில் கேட்டுக்கொண்டிருந்த எல்லாருடைய கட்டுகளும்' கழன்றுபோயிற்றே! (அப். 16:26). மேலும், 'நாங்கள் எல்லாரும் இங்கேதான் இருக்கின்றோம்' (அப். 16:28) என்று பவுல் சத்தமிட்டுக் கூறுவது, 'துதிப்பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்ததைத் தொடர்ந்து, காவலில் இருந்தவர்கள், பவுல் மற்றும் சீலாவினால் அறிவிக்கப்பட்ட சுவிசேஷத்தை ஒருவேளை சிறைச்சாலையில் அமர்ந்து அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்திருக்கக்கூடும்' என்பதையும் நமக்குத் மறைவாக எடுத்துக்கூறுகின்றதே! 'சரீரப்பிரகாரமான விடுதலையைக் காட்டிலும், ஆத்தும விடுதலையே அவசியம்' என்று உணர்த்தப்பட்ட மற்றும் உடனிருந்தவர்கள் உணர்ந்துகொண்ட இரவாக அது இருந்திக்கக்கூடும். 

அதுமாத்திரமல்ல, கட்டுண்டவர்கள் ஓடிப்போனார்களென்று எண்ணி, பட்டயத்தை உருவித் தன்னைக் கொலைசெய்துகொள்ளப்போனான சிறைச்சாலைக்காரனையும் நோக்கி, பவுல் மிகுந்த சத்தமிட்டு, 'நீ உனக்குக் கெடுதி ஒன்றுஞ் செய்துகொள்ளாதே' (அப். 16:27,28) என்று அவனையும் தப்புவித்து, அவனுடையவர்கள் அனைவரையும் அவர்கள் ஆதாயப்படுத்தினார்களே! 'ஆண்டவமாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும்?' என்ற சிறைச்சாலைக்காரனின் கேள்வியும், 'கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்' (அப். 16:30,31) என்ற அப்போஸ்தலரின் பதிலும், அங்கு இரட்சிப்பின் சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்டுக்கொண்டிருந்ததையும் கூடவே மறைவாக நமக்கு எடுத்துக்காட்டுகின்றதே! காவலிலிருக்கின்றவர்களைக் காயப்படுத்துகின்ற சிறைச்சாலைக்காரயும், காயங்களைக் கழுவும் நிலைக்கு சுவிசேஷம் மாற்றிவிட்டதே! சிறைச்சாலைக்காரனே பவுலையும் சீலாவையும் சிறையிலிருந்து வெளியே வீட்டிற்கு அழைத்துக்கொண்டுபோய், வீட்டிலிருந்த யாவருக்கும் கர்த்தருடைய வசனத்தைப் போதிக்கக் கேட்டு, அவனும் அவனுடையவர்கள் அனைவரும் உடனே ஞானஸ்நானம் பெற்றார்களே! (அப் 16:33) 

பிரியமானவர்களே! நாம் அறிவிக்கிற சுவிசேஷம் நிச்சயம் ஒருநாள் நம்மைக் காயப்படுத்துகின்றவர்களையும் காயங்களைக் கழுவுகிறவர்களாக மாற்றும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. எனவே, நமக்கு விரோதமாக எழும்புகின்ற மற்றும் நம்மைக் காயப்படுத்துகின்ற ஜனங்களின் அழிவையும் தடுத்து நிறுத்தி, அவர்களையும் மற்றும் அவர்களைச் சார்ந்தோரின் ஆத்துமாக்களையும் நித்திய அழிவிற்கு விலக்கி மீட்டு நித்திய ஜீவனில் சேர்க்க கர்த்தர் நமக்கு உதவிச் செய்வாராக! சிறைச்சாலைக்காரன் தன்னைத் தானே மாய்த்துக்கொண்டால், சிறையிலிருந்து வெளியே செல்வது அப்போஸ்தலர்களுக்கு மற்றும் அவர்களோடுகூட காவலிலிருந்தவர்களுக்கும் மேலும் இலகுவாக மாறியிருக்கும்; என்றாலும், சிறைச்சாலைக்காரனின் ஆத்துமாவும் கர்த்தரின் பார்வையில் விலையுயர்ந்தது என்பதை அவர்கள் அறிந்ததினாலேயே, 'அந்த ஒரு ஆத்துமாவையும் இழக்க அவர்கள் ஆயத்தமாக இல்லை'; விளைவு, அவனே அவர்களை வெளியே அழைத்துச் சென்று வீட்டாருக்கும் மற்றும் உடனிருந்தவர்களுக்கும் சுவிசேஷத்தை அறிவிக்க வகை செய்தான். நாம் தப்புவிக்கும் ஒரு ஆத்துமா, அநேகருக்கு கிறிஸ்துவை அறிவிக்கும் பாலமாக மாறக்கூடும் என்பது எத்தனை உண்மை. 

கர்த்தருடைய சீஷரைப் பயமுறுத்திக் கொலைசெய்யும்படி சீறிப் பிரதான ஆசாரியரிடத்திற்குப்போய்; இந்த மார்க்கத்தாராகிய புருஷரையாகிலும் ஸ்திரீகளையாகிலும் தான் கண்டுபிடித்தால், அவர்களைக் கட்டி எருசலேமுக்குக் கொண்டுவரும்படி, தமஸ்குவிலுள்ள ஜெபஆலயங்களுக்கு நிருபங்களைக் கேட்டு வாங்கிச் (அப் 9:1,2) சென்றுகொண்டிருந்த சவுலை, 'அவன் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும்  இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான்' (அப். 9:15) என்று பார்க்கின்றவரல்லவா நமது தேவன்; இத்தகைய பார்வை, நம்மையும் ஆட்கொள்ளுவதாக. 

சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாகப் பூமி மிகவும் அதிர்ந்து, கதவுகளெல்லாம் திறவுண்டதும், தப்பித்தோம் பிழைத்தோம் என்று பவுலும் சீலாவும் சிறைச்சாலையை விட்டு உடனே வெளியே ஓடியிருந்தால், காவலில் வைக்கப்பட்டிருந்த, மற்றும் அவர்களோடு கட்டப்பட்டிருந்த மற்றவர்களும் சிறைச்சாலையை விட்டு வெளியே ஓடியிருப்பார்கள்; 'காவலிலிருந்த மற்றவர்களுக்கு சரீரப்பிரகாரமான விடுதலை கிடைத்திருக்கும்; ஆனால், கிறிஸ்துவின் மீதான விசுவாசம் கிடைத்திருக்காதே!' அநேக நேரங்களில், நம்முடைய வாழ்க்கையின் விடுதலையை மாத்திரமே மனதில் கொண்டவர்களாக வாழ்வதினால், மற்றவர்களை விடுவிக்கும் பணியிலிருந்து நாம் விலகிப் பயணிக்கின்றோம் அல்லது வெளியேறிவிடுகின்றோம். அல்லது, மற்றவர்களது கட்டுகள் கழன்றுவிழுவதற்காக மாத்திரமே காரியங்களைச் செய்து, அவர்களது ஆத்தும இரட்சிப்பைக் குறித்து அக்கரையற்றவர்களாகச் சென்றுவிடுகின்றோம். இத்தகையப் பிழையினால், மண்ணுலக வாழ்க்கையில் மகிழ்ச்சி கிட்டினாலும், விண்ணகம் சேராமல் விலைமதிப்புள்ள ஆத்துமாக்கள் விட்டுவிடப்பட்டுவிடுமே! என்றபோதிலும், இந்த நிலையில் வாழ விரும்பும் கூட்டத்தினரும், வாழத் தூண்டும் கூட்டத்தினரும் பெருகி வரும் காலம் இது. இம்மைக்காகமாத்திரம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்து, பரிதபிக்கப்படத்தக்க நிலையில் (1 கொரி. 15:19), சரீரத்தோடும் மற்றும் சரீரத்திற்குச் சார்ந்தவைகளோடும் திருப்தியாகிவிடுகின்றவர்களின் வாழ்க்கை, சத்துருவுக்குச் சாதகமாகவே மாறிவிடுகின்றது என்பதை மறுப்பதற்கில்லை. 

 மேலும், பிரதான ஆசாரியனும் அவனுடனேகூட  இருந்த சதுசேயசமயத்தாரனைவரும் எழும்பி, பொறாமையினால் நிறைந்து, அப்போஸ்தலர்களைப் பிடித்து, பொதுவான சிறைச்சாலையிலே வைத்தபோது,  கர்த்தருடைய தூதன் இராத்திரியிலே சிறைச்சாலையின் கதவுகளைத் திறந்து, அவர்களை வெளியே கொண்டுவந்தான் (அப். 5:17-19). சிறைச்சாலையில் வைக்கப்பட்டு அப்போஸ்தலர் பத்திரமாகப் பூட்டப்பட்டிருந்தபோதிலும், தூதனால் அக்கதவுகள் திறக்கப்பட்டு மீண்டும் பூட்டப்பட்டதே! 

(அப். 5:19,23). இதனால், சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்கள் அடைக்கப்படும்போது, 'ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவர்' (வெளி. 3:7) அவர் என்பது எத்தனை தெளிவாகிறது. என்றபோதிலும், விடுவிக்கப்பட்டுவிட்டோம் என்று அப்போஸ்தலர்கள் ஓடி ஒளிந்துகொள்ளவில்லையே! மீண்டும் பகீரங்கமாகப் பிரசங்கித்தால், சிறை செல்ல நேரிடும் என்றும் அவர்கள் எண்ணி அஞ்சவில்லையே! 'நீங்கள் போய், தேவாலயத்திலே நின்று, இந்த ஜீவவார்த்தைகள் எல்லாவற்றையும் ஜனங்களுக்குச் சொல்லுங்கள்' என்ற தூதனுடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து, அதிகாலமே தேவாலயத்தில் பிரவேசித்துப் போதகம்பண்ணினார்கள் அல்லவா! (அப். 5:20,21) நீங்கள் அந்த நாமத்தைக்குறித்துப் போதகம்பண்ணக்கூடாதென்று நாங்கள் உங்களுக்கு உறுதியாய்க் கட்டளையிடவில்லையா? (அப். 5:28) என்ற பிரதான ஆசாரியனின் கேள்விக்கு, 'மனுஷருக்குக் கீழ்ப்படிவதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது' (அப். 5:29) என்பதுதானே அவர்களது உறுதியான பதிலாயிருந்தது. 

அவ்வாறே, எருசலேமின் அலங்கம் கட்டிமுடிக்கப்பட்டபோது, சன்பல்லாத்தும் கேஷேமும் நெகேமியாவுக்குப் பொல்லாப்புச் செய்ய நினைத்து, ஆள் அனுப்பி: நாம் ஓனோ பள்ளத்தாக்கில் இருக்கிற கிராமங்கள் ஒன்றில் ஒருவரையொருவர் கண்டு பேசுவோம் வாரும் என்று கூப்பிட்டபோது, 'நான் பெரிய வேலையைச் செய்கிறேன், நான் வரக்கூடாது' (நெகே. 6:3) என்பதுதானே நெகேமியாவின் பதிலாயிருந்தது. மேலும், தொபியாவும் சன்பல்லாத்தும் கூலிகொடுத்ததினால், 'நாம் இருவருமாய் தேவனுடைய வீடாகிய ஆலயத்துக்குள்ளே போய், தேவாலயத்தின் கதவுகளைப் பூட்டுவோம் வாரும்; உம்மைக் கொன்றுபோட வருவார்கள், இரவிலே உம்மைக் கொன்றுபோட வருவார்கள்' (நெகே. 6:10) என்று  செமாயா சொன்னபோது, 'என்னைப்போன்ற மனிதன் ஓடிப்போவானோ? என்னைப் போன்றவன் உயிர் பிழைக்கும்படி தேவாலயத்திலே போய்ப் பதுங்குவானோ? நான் போவதில்லை' (நெகே 6:11) என்பதுதானே நெகேமியாவின் பதிலாயிருந்தது. இத்தகைய உறுதியான அர்ப்பணிப்பு, இந்நாட்களில் வாழுகின்ற நமக்கும் எத்தனை அவசியமானது! சூழ்நிலைகளைப் பார்த்து சுவிசேஷத்தினை மூடிவிட அல்ல; மறாக, சூழ்நிலைகள் எதுவானாலும் சுவிசேஷத்திற்காக உயிர்விட அழைக்கப்பட்டவர்கள் நாம் என்ற நினைவு நம்மை விட்டு நீங்காதிருக்கட்டும். 

பிரியமானவர்களே! 'நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது' (ஏசா. 43:2) என்று ஏசாயா தீர்க்கதரிசியின் மூலமாக உரைக்கப்பட்ட தீர்க்கதரிசன வார்த்தைகளை, அநேக நேரங்களில், தனிப்பட்ட வாழ்க்கையுடன் மாத்திரமே நாம் பொருத்திப் பார்ப்பதினால், 'நான் உன் சந்ததியைக் கிழக்கிலிருந்து வரப்பண்ணி, உன்னை மேற்கிலும் இருந்து கூட்டிச்சேர்ப்பேன்' என்றும்,  'வடக்கே நோக்கி: கொடு என்றும், தெற்கை நோக்கி: வைத்திராதே என்றும் சொல்லி, தூரத்திலிருந்து என் குமாரரையும், பூமியின் கடையாந்தரத்திலிருந்து என் குமாரத்திகளையும்,  நான் என் மகிமைக்கென்று சிருஷ்டித்து உருவாக்கிப் படைத்து, என் நாமந்தரிக்கப்பட்ட யாவரையும் கொண்டுவா என்பேன்' என்றும், 'கண்களிருந்தும் குருடராயிருக்கிற ஜனத்தையும், காதுகளிருந்தும் செவிடராயிருக்கிறவர்களையும் புறப்பட்டு வரப்பண்ணுங்கள்' என்றும் (ஏசா. 43:5-7,8) பரந்த பார்வையுடன் தரிசனமாகக் கொடுக்கப்பட்ட பரலோகத்திற்கடுத்த ஆத்துமத் தாகம் நம்மில் தணிந்துபோய்விடுகின்றதே! 

மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது (கலா. 5:17) என்று  எச்சரிக்கையாக கலாத்தியருக்கும் மற்றும் மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள் (ரோமர் 8:5) என்று அறிவுறுத்துதலாக ரோமாபுரியாருக்கும் எழுதப்பட்ட அப்போஸ்தலனாகிய பவுலின் வார்த்தைகளை நாம் மறந்துவிடக்கூடாது. 'யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான்?' என்று உரைக்கிற ஆண்டவரின் சத்தத்தை நமது ஆவிக்குரிய செவிகள் கேட்டபின்னும், 'இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும்' (ஏசா. 6:8) என்று அதற்குக் கீழ்ப்படிவதற்கு மாறாக, மறுத்து, மாம்சம் எதிர்த்து நிற்பதினால், அழைப்பும், அத்துடன் அழைப்பினை நோக்கியப் பயணமும் வாழ்க்கையில் அமைதியாக்கப்பட்டுவிடக்கூடாதே! யோனாவைப் போன்ற திசை மாறியப் பயணத்தினால், நம்மையும் நம்மைச் சார்ந்தோரையும் காப்பதற்குப் பதிலாக, அவர்களின் அழிவுக்குக் காரணமாகும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுவிடக்கூடாதே! 'ஆ கர்த்தாவே, இந்த மனுஷனுடைய ஜீவனிமித்தம் எங்களை அழித்துப்போடாதேயும்; குற்றமில்லாத இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தாதேயும்' (யோனா 1:14) என்று அழைக்கப்பட்டோரால் அலறும் நிலைக்கு ஜனங்கள் தள்ளப்பட்டுவிடக்கூடாதே! அதுமாத்திரமல்ல, நாம் சென்றிருக்கவேண்டிய நினிவேயும் அழிவைச் சந்தித்துவிடக்கூடாதே! அவசரமான கர்த்தரின் வேலையில், நாம் அசதியாய் இருந்துவிடாதபடிக்கு கர்த்தர் நம்மைக் காப்பாராக! (எரே. 48:10)

'அவர்களுடைய அக்கிரமம் என் சமுகத்தில் வந்து எட்டினது' என்றும் (யோனா 1:2), 'இப்பொழுதும் இஸ்ரவேல் புத்திரரின் கூக்குரல் என் சந்நிதியில் வந்து எட்டினது' (யாத். 3:9) என்றும், யோனாவைப் போல அல்லது மோசேயைப் போல நம்மையும் தேவன் தனது பணிக்காத் தேடக்கூடுமே! அப்படியிருக்க, 'நான் எம்மாத்திரம்' (யாத். 3:11) என்றும், 'நான் அவர்களுக்கு என்ன சொல்லுவேன்?' (யாத். 3:13) என்றும், 'அவர்கள் என்னை நம்பார்கள்; என் வாக்குக்குச் செவிகொடார்கள்' (யாத். 4:11) என்றும், 'நான் வாக்கு வல்லவன் அல்ல' (யாத். 4:10) என்றும், 'ஆண்டவரே, நீர் அனுப்பச் சித்தமாயிருக்கிற யாரையாகிலும் அனுப்பும்' (யாத். 4:13) என்றும் மோசேயைப் போலவும் மற்றும் யோனாவைப் போலவும் விலகியோட விரும்பும் மனநிலையிலிருந்து கர்த்தர் நம்மைக் காப்பாராக!  

மனுபுத்திரனே, உன்னை  இஸ்ரவேல் வம்சத்தாருக்குக் காவலாளனாக வைத்தேன்; நீ என் வாயினாலே வார்த்தையைக்கேட்டு, என் நாமத்தினாலே அவர்களை எச்சரிப்பாயாக. சாகவே சாவாய் என்று நான் துன்மார்க்கனுக்குச் சொல்லுகையில், நீ துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கமான வழியில் இராதபடிக்கு எச்சரிக்கும்படியாகவும், அவனை உயிரோடே காக்கும்படியாகவும், அதை அவனுக்குச் சொல்லாமலும், நீ அவனை எச்சரிக்காமலும் இருந்தால், அந்தத் துன்மார்க்கன் தன் துன்மார்க்கத்திலே சாவான்; அவன் இரத்தப்பழியையோ உன் கையிலே கேட்பேன் (எசே. 3:17,18) என்று எசேக்கியேல் தீர்க்கதரிசியின் மூலமாக தேவன் எச்சரிக்கின்றாரே. அப்படியிருக்க, துன்மார்க்கத்தில் வாழும் ஜனங்களுக்கு தூய்மையின் வழி காட்ட, சுவிசேஷத்தை நாம் சுமந்துசெல்லவேண்டியது எத்தனை அவசியமானது; அவசரமானது. 'என்னால் இயன்றமட்டும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க விரும்புகிறேன்' (ரோமர் 1:15) என்றும், 'சுவிசேஷத்தைப் பூரணமாய்ப் பிரசங்கித்திருக்கிறேன்' (ரோமர் 15:19) என்றும், 'கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்பட்டிராத இடங்களில் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி நாடுகிறேன்' (ரோமர் 15:21) என்றும், 'சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ' (1 கொரி. 9:16) என்றும் அப்போஸ்தலனாகிய பவுல் எழுதிய வார்த்தைகள் நம்முடைய வாழ்க்கையையும் பற்றிக்கொள்ளட்டும். 

'நான் தேகத்தை விட்டுப் பிரியும் காலம் வந்தது. நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது' (2 தீமோ. 4:6-8) என்றும், 'தேகத்தைவிட்டுப் பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும்' (பிலி. 1:23) என்றும், 'இந்த தேகத்தை விட்டுக் குடிபோகவும் கர்த்தரிடத்தில் குடியிருக்கவும் அதிகமாய் விரும்புகிறோம்' (2 கொரி. 5:8) என்றும், தனது இதயத்தின் வாஞ்சையை வெளிப்படுத்தும் பவுல், 'அப்படியிருந்தும், நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம்' (பிலி. 1:24) என்றும், 'நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடர்கிறேன்' (பிலி. 3:12) என்றும் எஞ்சியிருக்கும் தனது முடிவுறாத ஆசையினை முன்வைக்கின்றாரே! கிறிஸ்துவுக்கடுத்த மற்றும் ஆண்டவரின் இராஜ்யத்திற்கடுத்த காரியங்களில், தனது வாழ்க்கையின் பங்கு நிறைவேறிவிட்டது என்ற குறுகிய எண்ணத்துடன், தனது ஓட்டத்தை முடித்துக்கொள்ள பவுல் ஒருபோதும் விரும்பவில்லை; மாறாக, தனது வாழ்க்கை முடிவுறுகின்ற தருவாயிலும், 'ஆசையாய்த் தொடர்கிறேன்' என்ற வார்த்தைகளையே கூறுகின்றார். 

அநேக நேரங்களில், கிறிஸ்துவுக்கடுத்த காரியங்களில், நாம் செய்துமுடித்துவிட்டவைகளை நினைவுகூர்ந்து, அவைகளை வரிசையாகப் பட்டியலிட்டு, சாதித்துவிட்டோம் என்பதைப் போன்றதோர் சரித்திரத்தினை எழுதி, நமது வரலாற்றை அத்துடன் முடித்துவிட விரும்புகின்றோம். நமது வாழ்க்கைப் புத்தகத்தில் அதிகமதிகமாய் பக்கங்களை அவர் சேர்க்க விரும்பும் நேரத்தில், எலியாவைப்போல எடுத்துக்கொள்ளுதலை எதிர்பார்க்கிறோம். நாம் சேர்த்துவைத்திருக்கும் வாழ்க்கையின் பக்கங்களைப் பார்த்து, உலகம் ஒருவேளை நமது பயணத்தைப் பல விதங்களில் பாராட்டிப் பேசினாலும், பரலோகத்தின் பார்வையில், பாதி வழியில் நின்றுவிட்ட பேருந்தைப் போல நமது வாழ்க்கை காணப்பட்டுவிடக்கூடாதே! 

யேசபேல் எலியாவினிடத்தில் ஆள் அனுப்பி: அவர்களின் ஒவ்வொருவனுடைய பிராணனுக்குச் செய்யப்பட்டதுபோல, நான் நாளை இந்நேரத்தில் உன் பிராணனுக்குச் செய்யாதேபோனால் தேவர்கள் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்கள் என்று சொல்லச்சொன்னபோது, 'போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்' (1 இராஜா. 19:2,4) என்று தனது பயணத்தைப் பாதியில் நிறுத்திவிட ஆயத்தமாகிவிட்டான் எலியா. போஜனம் கொடுத்து, 'நீ பண்ணவேண்டிய பிரயாணம் வெகுதூரம்' (1 இராஜா. 19:7) என்று தைரியப்படுத்தினபோதிலும், ஒரு கெபிக்குள் போய்த் தங்கிவிட்டான். 'நான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருக்கிறேன்' (1 இராஜா. 19:10) என்று சொன்ன அவனுக்கு, 'பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களையும், அவனை முத்தஞ்செய்யாதிருக்கிற வாய்களையுமுடைய ஏழாயிரம்பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக்கிறேன்' (1 இராஜா. 19:18) என்று கர்த்தர் சொன்னபோதிலும், தன்னுடைய பணியை முடித்துக்கொள்ளவேண்டும் என்றும், எத்தனை சீக்கிரமாக தன்னுடைய பணியிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முடியுமோ அத்தனை சீக்கிரமாக தன்னை விடுவித்துக்கொள்ளவேண்டும் என்றுமே அவன் விரும்பினான்; எனவே, முதல் இரண்டு பணிகளான, ஆசகேலைச் சீரியாவின் மேல் இராஜாவாகவும், யெகூவை இஸ்ரவேலின் மேல் இராஜாவாகவும் அபிஷேகம்பண்ணுவதற்கு முன், மூன்றாவது பணியாகச் சொல்லப்பட்டிருந்த எலிசாவின் மேல் தன் சால்வையைப் போட்டான் (1 இராஜா (1 இராஜா. 19:15,16.19). கர்த்தரின் பணியில் இருக்கும் நமக்கு, எலியாவைப் போன்ற இத்தகைய அவசரம் வந்துவிட்டால், அழைப்பின் பயணம் பாதியில் நின்றுபோய்விடுமே!   

திருப்தியடைந்தவன் தேன்கூட்டையும் மிதிப்பான்; பசியுள்ளவனுக்கோ கசப்பான பதார்த்தங்களும் தித்திப்பாயிருக்கும் (நீதி. 27:7) என்ற வசனத்திற்கொப்ப, தனிப்பட்ட வாழ்க்கையில் தேவனிடத்தில் நாம் வேண்டிக்கொண்ட மற்றும் தேவனிடத்திலிருந்து இவ்வுலகத்தில் நாம் பெற்றனுபவிக்கும் ஆசீர்வாதங்களில் மாத்திரமே திருப்தியடைந்து, தேன்கூடாகிய 'ஆத்தும அறுவடை' என்னும் அவரது பணியினைப் புறந்தள்ளிவிடக்கூடாதே! 'பசியுள்ளவனுக்கோ கசப்பான பதார்த்தங்களும் தித்திப்பாயிருக்கும்' என்ற வார்த்தையின்படி, எத்தனை துன்பங்களை, பாடுகளை மற்றும் இன்னல்களை நாம் சகித்தாலும் மற்றும் சந்தித்தாலும்,  'கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்' (2 கொரி. 12:10) என்ற ஆத்தும அறுவடைக்கடுத்தத் தித்திப்பான வாழ்க்கையை நோக்கி நித்தமும் நமது பயணம் நகரட்டும். 2 கொரி. 11:23-27, அப். 5:41, ரோமர் 8:36-39, 2 கொரி. 1:6, கொலோ. 1:24 ஆகிய பகுதிகளில் எழுதப்பட்டுள்ள ஆத்துமாக்களைத் தேடியலைந்த பவுல் மற்றும் அப்போஸ்தலரின் அனுபவங்கள், நம்முடைய வாழ்க்கைக்கும் பாடமாகட்டும். திருப்தியடையாதவைகளின் பட்டியலில் 'பாதாளம்' இடம்பெற்றிருக்க (நீதி. 30:15,16; ஆபகூக் 2:5), பரலோக இராஜ்யத்தில் ஆத்துமாக்களைக் கொண்டுவந்து சேர்க்கவேண்டிய நாம் திருப்தியாகிவிடுவது தகுமோ? 

தீரு பட்டணத்து சீஷர்கள், பவுலை நோக்கி, 'நீர் எருசலேமுக்குப் போகவேண்டாம்' (அப். 21:4) என்று சொன்னபோதிலும் மற்றும் செசரியாவில், அகபு தீர்க்கதரிசி, 'பவுலினுடைய கச்சையை எடுத்துத் தன் கைகளையும் கால்களையும் கட்டிக்கொண்டு: இந்தக் கச்சையையுடையவனை எருசலேமிலுள்ள யூதர் இவ்விதமாய்க் கட்டிப் புறஜாதியார் கைகளில் ஒப்புக்கொடுப்பார்கள் என்று பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறார்' (அப். 21:11) என்று சொன்னதைக் கேட்ட ஜனங்கள் பவுலை வேண்டிக்கொண்டபோதிலும், 'நீங்கள் அழுது என் இருதயத்தை ஏன் உடைந்துபோகப்பண்ணுகிறீர்கள்? எருசலேமில் நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்காகக் கட்டப்படுவதற்குமாத்திரமல்ல, மரிப்பதற்கும் ஆயத்தமாயிருக்கிறேன்' (அப். 21:13) என்ற பவுலின் அர்ப்பணிப்பு மிக்க வார்த்தைகள், நம்முடைய வாழ்க்கையிலும் பிரதிபலிக்கட்டும்! 


வாழ்க்கையின் எல்லையிலும் 

வார்த்தையின் வில்லை ஏந்துவோம்

முன்னிருக்கும் பணிக்கு என்றும்

முற்றுப் புள்ளி வைக்காதிருப்போம் 


போதும் என்று எண்ணிவிட்டால்

போகும் தூரம் கண்ணில் தென்படாதே

வழிகள் இன்னும் தூரமிருந்தாலும்

விழிகளும் காண முற்படாதே


ஆசீர்வாதங்களில் திருப்தியாகிவிட்டால் 

ஆத்தும பாரம் அகன்றுபோய்விடுமே

பாடுகளைக் கண்டதும் பயந்துவிட்டால் 

பாதியில் பயணம் நின்றுபோய்விடுமே


திருப்தியான வாழ்க்கை தந்தவரின் 

தேன்கூட்டை நாம் மிதித்துவிடக்கூடாதே

நெருக்கங்களானாலும் கசப்புகளானாலும்   

நேசருக்காக அவை தித்திப்பானவைகளே

 



அன்பரின் அறுவடைப் பணியில்

சகோ. P. J. கிருபாகரன்


Comments

Popular posts from this blog

கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்

  கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்   வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கிறிஸ்துவின் குணங்களை வெளிப்படுத்தவேண்டியதும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டியதும் கிறிஸ்தவனின் தலையாயக் கடமை.  கிறிஸ்துவுக்குள்  வாழும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சில உண்மைகளை பவுல் எபேசு சபைக்குச் சுட்டிக்காட்டுகின்றார். கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்  (எபே. 1:3),  பாவமன்னிப்பாகிய மீட்பு  (எபே. 1:7) இவைகள் பொதிந்திருக்கின்றன. ஆனால், இவ்விரண்டிற்கும் பலர் முக்கியத்துவம் கொடுக்காமல், உலகத்தின் ஆசீர்வாதங்களையே அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். பாவமன்னிப்பினைப் பெறாமல், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறாமல், உலகத்தின் ஆசீர்வாதங்களுக்காகவே அவரின் பின்னே ஓடினால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் முடிவு பரிதாபமாகவே இருக்கும். உன்னதங்களில் உட்காரவேண்டிய நாம் உலகத்தோடு ஒட்டிவிடுவோம், மணவாளனோடு வாழவேண்டிய நாம் மண்ணுக்காக வாழ்ந்துவிடுவோம். கிறிஸ்துவிடம் பிரதானமாய் பாவமன்னிப்பையே முதலில் பெற நாடுவோம்; அதற்காகத்தானே பிதா இயேசுவை இந்த பூமியில் அனுப்பினார். எனவே, பிதாவின் பி...

இறைச்சியா? இச்சையா?

இறைச்சியா?  இச்சையா? 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்' (மத். 6:11) என்றும், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத். 6:34) என்றும் பிதாவை நோக்கி ஜெபிக்க இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக்கொடுத்திருந்தபோதிலும், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே 'உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்' (மத். 6:8) என்பதுதானே பிதாவைக் குறித்து இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிமுகம். 'முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்' (மாற். 7:27) என்பதுதான் அவரது விருப்பமும் கூட. 'வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (மத். 10:10) என்றும், 'வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (லூக். 10:7; 1தீமோ. 5:18) என்றும் நாம் வாசிக்கின்றோமே. அப்படியிருக்க, 'ஆகாரத்திற்காக வேலை' மற்றும் 'கூலிக்காக வேலை' என்ற என்ற பார்வையில் நமது பயணம் தொடர்ந்துவிடக்கூடாததல்லவா! 'இழிவான ஆதாயம்' நமது வழிகளை மாற்றிவிடக்...

வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்

  வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்   அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது,  இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.  ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்;  ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.(லூக் 4:25-27) இஸ்ரவேலின் தேவனாக இருந்தபோதிலும், இஸ்ரவேல் தேசத்திலேயே தனது குமாரனை மேசியாவாகப் பிறக்கச் செய்தபோதிலும், பஞ்ச காலத்தின்போது, இஸ்ரவேலருக்குள் இருந்த அநேகம் விதவைகள் போஷிக்கப்படாமற்போனதற்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், ந...