Skip to main content

உயர்ந்த சிந்தை (பிலி 2:5-7)

 உயர்ந்த சிந்தை



கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது;அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.(பிலி 2:5-7)


'கிறிஸ்தவர்கள்' என்றும் 'இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள்' என்றும் அழைக்கப்படுவதோடு மாத்திரமல்ல, இயேசு கிறிஸ்துவைப் போல நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சங்களையும் பிதாவின் விருப்பப்படி அமைத்துக்கொள்வதும், பிதாவின் சித்தத்திற்கே நமது சிரசை எப்போதும் விட்டுக்கொடுப்பதும் நம்மிடத்தில் காணப்படவேண்டிய பிரதானமான குணமாயிருக்கவேண்டும். கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தை நம்மில் இல்லாதே போகுமென்றால், நம்முடைய உள்ளான மனிதனில் சத்துரு உட்புகுந்துவிடக்கூடும், அத்துடன், ஆலயமான சரீரம் சத்துருவால் அந்தகாரப்பட்டுவிடும். 

இயேசு கிறிஸ்துவின் சீஷர்களுள் ஒருவனான யூதாஸ் காரியோத்து, முத்தத்தினால் இயேசு கிறிஸ்துவைக் காட்டிக்கொடுக்கும்படி, பிரதான ஆசாரியரோடும். ஜனத்தின் மூப்பரோடும், திரளான ஜனங்களோடும் பட்டயங்களையும் தடிகளையும் பிடித்துக்கொண்டு கெத்செமெனே தோட்டத்திற்கு வந்தபோது (மத். 26:47), பிற சீஷர்களும் இயேசு கிறிஸ்துவோடு கூட இருந்தனர். அவர்கள் கிட்டவந்து, இயேசுவின்மேல் கைபோட்டு, அவரைப் பிடித்தபோது, இயேசுவோடிருந்தவர்களில் பேதுரு கைநீட்டி தன் பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காதற வெட்டினான். உடனே இயேசு கிறிஸ்து, நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான  தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா? அப்படிச் செய்வேனானால், இவ்விதமாய்ச் சம்பவிக்கவேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும் (மத் 26:50-54) என்று பேதுருவைப் பார்த்து சொன்னார்.  

கிறிஸ்து சொல்லவருவது என்ன? பிதாவை நான் வேண்டிக்கொண்டால், நிச்சயம் பாதுகாப்பு கிடைத்துவிடும், தூதர்கள் அனுப்பப்பட்டுவிடுவார்கள், விண்ணப்பம் கேட்கப்பட்டுவிடும்; ஏனென்றால், 'நீர் எப்பொழுதும் எனக்குச் செவிகொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன்' (யோவா 11:42) என்று இயேசு கிறிஸ்துவே கூறுகின்றாரே. எனினும், அந்த பாதுகாப்பை பிதா தனது பிள்ளைகளுக்கு எப்போது தேவையோ அப்போதுதான் கொடுப்பார்; என்பதையே சீஷர்களுக்கு இயேசு கிறிஸ்து உணர்த்துவிக்கிறார் எனவே, கெத்செமெனேயில் இயேசு கிறிஸ்து ஜெபித்தபோது, பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்றே  ஜெபம்பண்ணினார். (லூக் 22:42) 

  மேலும், சீஷர்களே, நான் உங்களுடைய பட்டயத்தின் பாதுகாப்பில் அல்ல; பரலோகத்திலிருக்கும் என் பிதாவின் பாதுகாப்பின் கீழ் இருக்கிறேன் என்பதை சீஷர்கள் விளங்கிக்கொள்ளும்படியாகவும், புரிந்துகொள்ளும்படியாகவும், உணர்ந்துகொள்ளும்படியாகவுமே அப்படிக் கூறினார். மேலும், பரலோக பிதாவின் பாதுகாப்பினையும், தன்னுடைய விருப்பத்தின்படியும், சுய லாபத்திற்காகவும் பயன்படுத்திக்கொள்ள விரும்பாமல், பிதாவின் விருப்பத்திற்கும் சித்தத்திற்குமே முழுவதுமாக விட்டுக்கொடுத்திருந்தார். தனது விருப்பத்தின்படி அல்ல, பிதாவின் விருப்பத்தின்படியேயும், பிதாவின் சித்தத்தின்படியேயுமே பயன்படுத்த தாம் விரும்புவதையும் சீஷர்களுக்கு இயேசு கிறிஸ்து சொல்லவரும் காரியத்தை நாமும் புரிந்துகொள்வது ஆவிக்குரிய வாழ்க்கைக்கு அவசியமானது. 

ஒலிவமலைக்கு தனது சீஷர்களுடன் இயேசு கிறிஸ்து புறப்பட்டுச் சென்றபோது (லூக். 22:39), பணப்பையும் சாமான்பையும் உடையவன் அவைகளை எடுத்துக்கொள்ளக்கடவன்; பட்டயம் இல்லாதவன் தன் வஸ்திரத்தை விற்று ஒன்றைக் கொள்ளக்கடவன் (லூக் 22:36) என்று சொன்னார். ஒவ்வொரு சீஷனிடத்திலும் கையில் பட்டயம் இருக்கவேண்டும் என்று இயேசு கிறிஸ்து அப்போது விரும்பினார்; என்றபோதிலும், ஆண்டவரே, இதோ, இங்கே இரண்டு பட்டயம் இருக்கிறது என்று சீஷர்கள் சொன்னபோது, அவர்: போதும் என்று சொல்லிவிட்டார் (லூக் 22:38). 'இல்லாதவன் வஸ்திரத்தை விற்று ஒன்றைக் கொள்ளக்டவன்' என்று இயேசு சொல்லியிருந்தபோதிலும், 'யார் யாருக்கு அந்த இரண்டு பட்டயங்கள் கொடுக்கப்படவேண்டும்? யார் யாரெல்லாம் வஸ்திரத்தை விற்று பட்டயத்தை வாங்கிக்கொள்ளவேண்டும் என்று சீஷர்களுக்குள் ஒருவேளை குழப்பம் ஏற்பட்டிருக்குமோ? அல்லது தங்களுடைய வஸ்திரத்தை விற்பதற்கு யாரும் ஒருவேளை ஆயத்தமாக இல்லாதிருந்திருப்பார்களோ? அல்லது விற்பதற்குக் கூட வஸ்திரங்கள் இல்லாத நிலையில் ஒருவேளை சீஷர்களது வாழ்க்கை காணப்பட்டிருக்குமோ? எது எப்படியாயினும், எப்பொழுதும், எல்லாவற்றிலும் முந்திக்கொள்வதைப் போல, அந்த இரண்டு பட்டயங்களில் பேதுரு தனக்கென்று ஒன்றை முந்தி எடுத்துக்கொண்டான். 

காட்டிக்கொடுக்கும்படியாக யூதாஸ் வந்தபோது, அவரைச் சூழநின்றவர்கள் நடக்கப்போகிறதைக் கண்டு: ஆண்டவரே, பட்டயத்தினாலே வெட்டுவோமா என்றார்கள். என்றபோதிலும், இயேசு கிறிஸ்துவின் வாயிலிருந்து பதில் வருவதற்குள், பட்டயத்தை ஓங்கி பிரதான ஆசாரியனின் வேலைக்காரனுடைய வலது காதை வெட்டிவிட்டான் பேதுரு. பட்டயத்தை முந்தி எடுத்தது மாத்திரமல்ல, பட்டயத்தால் முந்தி வெட்டியும் விட்டான் பேதுரு. இயேசு அதைக் கண்டதும், இம்மட்டில் நிறுத்துங்கள் என்று சொல்லி, அவனுடைய காதைத்தொட்டு, அவனைச் சொஸ்தப்படுத்தினார் (லூக் 22:49-51). 'இம்மட்டில் நிறுத்துங்கள்' இயேசு கிறிஸ்துவின் பதிலும், பகைவனையே 'குணமாக்கிய செயலும்' சீஷர்களை சிந்திக்கச் செய்திருக்கக்கூடும். பட்டயம் இல்லாதவன் தன் வஸ்திரத்தை விற்று ஒன்றைக் கொள்ளக்கடவன் என்று சொன்னாரே; ஆனால் பட்டயத்தை பயன்படுத்தவேண்டிய வேளை வந்திருக்கும்போது, பயன்படுத்தாதபடிக்கு தடைசெய்கின்றாரே? என்ற கேள்வி ஒவ்வொரு சீஷர்களது உள்ளத்திலும் எழுந்திருக்கும். 

ஒருவேளை எல்லா சீஷர்களுடைய கைகளிலும் பட்டயங்கள் காணப்பட்டிருக்குமென்றால் நிலமை என்னவாகியிருக்கும்? எல்லாரும் பட்டயத்தை எடுத்துக்கொண்டு ஆளுக்கொரு பக்கம் வெட்டத் தொடங்கியிருப்பார்கள், கெத்செமெனே தோட்டமே 'இரத்த நிலமாகியிருக்கும்.' இயேசுவைக் காட்டிக்கொடுத்தபோது வாங்கிய வெள்ளிக்காசை தேவாலயத்திலே எறிந்துவிட்டு, புறப்பட்டுப் போய் நான்றுகொண்டு செத்தான் யூதாஸ் காரியோத்து. பிரதான ஆசாரியர் அந்த வெள்ளிக்காசை எடுத்து: இது இரத்தக்கிரயமானதால், காணிக்கைப் பெட்டியிலே இதைப் போடலாகாதென்று சொல்லி, ஆலோசனைபண்ணினபின்பு, அந்நியரை அடக்கம்பண்ணுவதற்குக் குயவனுடைய நிலத்தை அதினாலே கொண்டார்கள். இதினிமித்தம் அந்த நிலம் இந்நாள் வரைக்கும் இரத்தநிலம் என்னப்படுகிறது (மத் 27:5-8). இயேசு கிறிஸ்துவைக் காட்டிக்கொடுத்த யூதாஸ் காரியோத்தினால், 'இரத்த நிலம்' ஒன்று உருவானது. ஒருவேளை இயேசுவுக்கு உடனிருந்த சீஷர்களும் பட்டயத்தை உருவி வெட்டியிருந்தால் கெத்செமெனேயை 'இரத்த நிலமாக' மாற்றியிருப்பார்கள். கெத்செமெனே என்பது, வெட்டப்பட்ட இரத்தம் சிந்தப்படவேண்டிய நிலமல்ல; வியர்வை இரத்தமாகச் சிந்தப்படவேண்டிய  இடம்.

என்னைத் தேடுகிறதுண்டானால், இவர்களைப் போகவிடுங்கள் (யோவா 18:8) என்று இயேசு சொன்னாரே. சீஷர்கள் பலியாகிவிடாதபடி தங்களைத் தற்காத்துக்கொள்ளவேண்டும் என்று விரும்பினார் இயேசு; ஆனால், அவர்கள் கையிலிருக்கும் பட்டயத்தினால் தன்னைக் காக்கவேண்டும் என்று இயேசு விரும்பவில்லை. 'சீஷர்கள் பாதுகாக்கப்படவும், தானோ பலியாகவும்' ஆயத்தமாயிருந்தார். இன்றைய நாட்களில், தலைவர்களைக் காக்கும்படியாக பலியாகும் சீடர்களின் கூட்டமே அதிகம். ஆனால், இயேசு கிறிஸ்துவோ, சீடர்களைப் பத்திரமாகக் காப்பாற்றி தன்னையோ பலியாக ஒப்புக்கொடுத்தார்.

அதுமாத்திரமல்ல, பட்டயம் நம்மை பாதுகாக்கலாம்; ஆனால், பிறரைப் பாதித்துவிடக்கூடாது என்பதிலும் இயேசு கிறிஸ்து கவனமாயிருந்தார். பிறருக்கு பாதிப்பு உண்டாக்குமென்றால், நம்முடைய பட்டயத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, பலியாவதே மேல் என்ற உன்னதத்தின் உயர்ந்த சிந்தையையே சீஷர்களுடைய உள்ளத்தில் இயேசு கிறிஸ்து விதைத்துவிட நினைத்தார். தானியேலையும், சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களையும் பாதுகாத்த அதே தேவன்; ஸ்தேவானையோ கல்லெறிந்து கொல்லப்படுவதற்கு ஒப்புக்கொடுத்தாரே. நாம் தேவனுடைய பிள்ளைகளாகக் காணப்படுவோமென்றால், நாம் பாதுகாக்கப்படுவதற்கும் ஒரு நோக்கம் உண்டு, நாம் பலியானாலும் அதற்கும் ஒரு நோக்கம் உண்டு. பலியாவதினால் தேவனுடைய பாதுகாப்பு நம்மீது இல்லை என்று நாம் ஒருபோதும் கூறிவிடமுடியாது. நம்முடைய வாழ்க்கையில் இத்தகைய பாடத்தைக் கடைபிடிப்போமென்றால், அத்தகைய உயர்வான சிந்தை நம்மிடத்தலும் காணப்படும். எதிரிகளின் கைகளில் உலகத்தின் ஆயுதங்களான பட்டயங்கள் காணப்படக்கூடும்; ஆனால், கிறிஸ்துவின் சீஷர்களாகிய நாமோ அத்தகைய ஆயுதங்களை எதிரிகளுக்கு எதிராக உபயோகித்துவிட முடியாதே. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக்கொடு. உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு. ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம்வரப் பலவந்தம்பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களைச் ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள். இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள் (மத் 5:39-41,44,45) என்று இயேசு கற்றுக்கொடுத்தாரே.

இயேசு தமக்கு விரோதமாய் வந்த பிரதான ஆசாரியர்களையும் தேவாலயத்துச் சேனைத்தலைவர்களையும் மூப்பர்களையும் நோக்கி: ஒரு கள்ளனைப் பிடிக்கப் புறப்பட்டு வருகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துப் புறப்பட்டுவந்தீர்களே (லூக் 22:52) என்றார். மேலும், அவருடைய வலது பக்கத்தில் ஒருவனும் அவருடைய இடது பக்கத்தில் ஒருவனுமாக இரண்டு கள்ளர் அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்டார்கள் (மத் 27:38); அவரை கள்ளன் என்று காண்பிக்கிறதற்காகவும், அக்கிரமக்காரரில் ஒருவராகக் காண்பிக்கவும் (ஏசா. 53:12) அவர்கள் முயற்சித்தார்கள்; என்றபோதிலும், பலியாக தன்னைத்தானே இயேசு ஒப்புக்கொடுத்தாரே.

  இன்றும் இப்படிப்பட்ட அர்ப்பணிப்பு நேராக நம்மை வழிநடத்தவே ஆண்டவர் விரும்புகின்றார். ஆயுதமான பட்டயத்தை நம்பி அல்ல, ஆத்துமாக்களை வெல்லும் பட்டயமாகிய வசனத்தைக் கையிலேந்தி, அதற்காக இரத்தஞ் சிந்தவும் ஆயத்தமாயிருப்பதற்காகவே நமக்கு அழைப்பு விடுகின்றார். அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் (மாற் 10:45) என்றும், நானே நல்ல மேய்ப்பன்; நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான் (யோவா 10:11) என்றும் இயேசு கிறிஸ்து தன்னைக் குறித்து எடுத்துக்கூறியதைப் போல, நாமும் அநேக ஆத்துமாக்களை கிறிஸ்துவண்டை நடத்துவதற்காகவும், சுவிசேஷத்தை அறிவிப்பதற்காகவுமே நமது ஜீவனை கொடுக்கவும், வாழ்நாட்களைச் செலவுசெய்யவும் அழைக்கப்பட்டவர்கள் என்பதை மறந்துவிடக்கூடாதே. ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை (யோவா 15:13) என்றே இயேசு கிறிஸ்து போதித்தார். 

தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது (எபி. 4:12) இந்த பட்டயத்தையே பயன்படுத்தவே நாம் அழைக்கப்பட்டிருக்கின்றோம். இந்த வசனமாகிய பட்டயம், மனிதனின் உடலை அல்ல; உள்ளத்திற்குள் ஊடுருவிப் பாய வல்லமையுள்ளது. மனிதர்களின் இருதயத்தினைக் குத்தும் சக்தியுள்ளது (அப். 2:37). இயேசு கிறிஸ்துவும், பிசாசு தன்னை சோதித்தபோது 'எழுதியிருக்கிறதே' (மத். 4:4,7,10) என்று வசனத்தையே வாளாகக் கொண்டு பிசாசை வீழ்த்தினார். 

  சமாரியருடைய ஒரு கிராமத்திலே இயேசு கிறிஸ்துவும் அவருடைய சீஷர்களும் பிரவேசித்தபோது, அவ்வூரார் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அப்போது, அவருடைய சீஷராகிய யாக்கோபும், யோவானும் அதைக் கண்டு, 'ஆண்டவரே, எலியா செய்ததுபோல, வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்குச் சித்தமா' என்று கேட்டார்கள். அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் ஜீவனை அழிக்கிறதற்கு அல்ல, இரட்சிக்கிறதற்கே வந்தார் என்றார் (லூக். 9:52-56). தங்களை ஏற்றுக்கொள்ளாதவர்களைக் கண்டதும், தாங்கள் அவர்கள் மீது கோபம் கொண்டதோடு மாத்திரமல்லாமல், தேவனுடைய கோபத்தையும் அவர்கள் மீது திருப்பிவிட முயற்சித்தார்கள். நாமும் சில நேரங்களில் இப்படிப்பட்ட நிலைக்கு நம்மைத் தள்ளிவிடுகின்றோம். நம்மை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு விரோதமாக செயல்பட்டுவிடுகின்றோம். அவர்களுடைய ஜீவனுக்காக நம்முடைய ஜீவனைக் கொடுப்பதற்குப் பதிலாக, அவர்களுடைய ஜீவனை அழித்துவிட முயற்சிக்கிறோம்.   

பட்டயத்தை உருவி இயேசு கிறிஸ்துவை பாதுகாக்க முயற்சித்தது உண்மைதான்; என்றாலும், தன்னுடைய உயிருக்கு ஆபத்து உண்டாகிவிடுமோ என்ற நிலை உண்டானபோதோ, இயேசு கிறிஸ்துவை பின்தொடருவதையே விட்டு பின்வாங்கிவிட்டான் பேதுரு. அதுமாத்திரமல்ல, 'நீ சொல்லுகிறது எனக்குத் தெரியாது'  (மத். 26:70) என்றும், 'அந்த மனுஷனை நான் அறியேன்' (மத். 26:72) என்றும், மீண்டும் ஒருமுறை 'அந்த மனுஷனை நான் அறியேன்' என்றும் சொல்லி, சபிக்கவும் சத்தியம்பண்ணவும் தொடங்கினான் (மத். 26:74). ஒரு வாலிபன் ஒரு துப்பட்டியை மாத்திரம் தன்மேல் போர்த்துக்கொண்டு அவர் பின்னே போனான்; அவனைப் பிடித்தார்கள். அவன் தன் துப்பட்டியைப் போட்டு விட்டு, நிர்வாணமாய் அவர்களை விட்டு ஓடிப்போனான் (மாற். 14:51,52). சீஷர்களெல்லாரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள் (மத் 26:56). மனிதர்களுடைய பாதுகாப்பு இத்தகையதே; கூட இருக்கும்போது, நமக்காக உயிரையே கொடுத்துவிடுபவர்கள் போலக் காட்சியளிப்பார்கள்; ஆனால், தங்கள் உயிருக்கே ஆபத்து என்ற நிலை வரும்போதோ அவர்கள் ஓடிவிடுவார்கள். இத்தகைய  நிலையிலேயே காணப்பட்ட சீஷர்கள், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்குப் பின் அவருக்காக தங்கள் ஜீவனையே கொடுப்பவர்களாக மாறிவிட்டார்களே. தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான் (மத் 10:39) என்றும், நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார் (யோவா 10:17) என்ற இயேசு கிறிஸ்துவின் போதனையை தங்கள் வாழ்க்கையில் சீஷர்கள் அப்பியாசப்படுத்தினரே. இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலினால் உண்டான வெற்றியே இது.  

சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் ராஜாவை நோக்கி: நேபுகாத்நேச்சாரே, இந்தக் காரியத்தைக் குறித்து உமக்கு உத்தரவு சொல்ல எங்களுக்கு அவசியமில்லை. நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார். விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றார்கள். (தானி 3:16-18)

தானியேலின் வாழ்க்கையிலும் நடந்தது இதுவே, எவனாகிலும் முப்பது நாள்வரையில் ராஜாவாகிய உம்மைத்தவிர எந்தத் தேவனையானாலும் மனுஷனையானாலும் நோக்கி, யாதொரு காரியத்தைக் குறித்து விண்ணப்பம்பண்ணினால், அவன் சிங்கங்களின் கெபியிலே போடப்பட, ராஜா கட்டளை பிறப்பித்து, அந்தக் கட்டளைப் பத்திரத்துக்குக் கையெழுத்து வைத்துவிட்டபோதிலும், தானியேல் அதனைக் குறித்து கவலைப்படவில்லை. அந்தப் பத்திரத்துக்குக் கையெழுத்து வைக்கப்பட்டதென்று அறிந்தபோதிலும், தன் மேல் அறையிலே எருசலேமுக்கு நேராகப் பலகணிகள் திறந்திருக்க, அங்கே தான் முன் செய்துவந்தபடியே, தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான் (தானி 6:7,9,10). அப்பொழுது ராஜா கட்டளையிட, அவர்கள் தானியேலைக் கொண்டுவந்து, அவனைச் சிங்கங்களின் கெபியிலே போட்டார்கள். ராஜா தானியேலை நோக்கி: நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைத் தப்புவிப்பார் என்றான். ஒரு கல் கெபியினுடைய வாசலின்மேல் கொண்டுவந்து வைக்கப்பட்டது; தானியேலைப்பற்றிய தீர்மானம் மாற்றப்படாதபடிக்கு ராஜா தன் மோதிரத்தினாலும் தன் பிரபுக்களின் மோதிரத்தினாலும் அதின்மேல் முத்திரைபோட்டான் (தானி 6:16,17). இயேசு கிறிஸ்துவின் கல்லறை ஒரு கல்லினால் மூடப்பட்டதுபோல, தானியேல் போடப்பட்ட கெபியின் வாசலும் ஒரு கல்லினால் மூடப்பட்டது.

ஓய்வுநாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்துவருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் இயேசு கிறிஸ்துவின் கல்லறையைப் பார்க்கவந்ததுபோல (மத் 28:1), காலமே கிழக்கு வெளுக்கும்போது ராஜா எழுந்திருந்து, சிங்கங்களின் கெபிக்குத் தீவிரமாய்ப் போனான். ராஜா கெபியின் கிட்டவந்தபோது, துயரசத்தமாய்த் தானியேலைக் கூப்பிட்டு: தானியேலே, ஜீவனுள்ள தேவனுடைய தாசனே, நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைச் சிங்கங்களுக்குத் தப்புவிக்க வல்லவராயிருந்தாரா என்று தானியேலைக் கேட்டான். மகதலேனா மரியாளையும் மற்ற மரியாளையும் இயேசு கிறிஸ்து வாழ்த்தினது போல (மத். 28:9), தானியேல் ராஜாவை நோக்கி: ராஜாவே, நீர் என்றும் வாழ்க என்று வாழ்த்தினான் (தானி. 6:121); உடனே, கெபியை மூடியிருந்த கல்லைத் திறந்து ராஜாவே தானியேலை வெளியே கொண்டுவந்தான் ராஜா. நம்முடைய வாழ்க்கையிலும், விரோதித்தவர்களின் கரங்களினாலேயே நம்மை அவர் விடுவிக்க முடியும்.

Comments

Popular posts from this blog

கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்

  கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்   வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கிறிஸ்துவின் குணங்களை வெளிப்படுத்தவேண்டியதும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டியதும் கிறிஸ்தவனின் தலையாயக் கடமை.  கிறிஸ்துவுக்குள்  வாழும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சில உண்மைகளை பவுல் எபேசு சபைக்குச் சுட்டிக்காட்டுகின்றார். கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்  (எபே. 1:3),  பாவமன்னிப்பாகிய மீட்பு  (எபே. 1:7) இவைகள் பொதிந்திருக்கின்றன. ஆனால், இவ்விரண்டிற்கும் பலர் முக்கியத்துவம் கொடுக்காமல், உலகத்தின் ஆசீர்வாதங்களையே அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். பாவமன்னிப்பினைப் பெறாமல், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறாமல், உலகத்தின் ஆசீர்வாதங்களுக்காகவே அவரின் பின்னே ஓடினால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் முடிவு பரிதாபமாகவே இருக்கும். உன்னதங்களில் உட்காரவேண்டிய நாம் உலகத்தோடு ஒட்டிவிடுவோம், மணவாளனோடு வாழவேண்டிய நாம் மண்ணுக்காக வாழ்ந்துவிடுவோம். கிறிஸ்துவிடம் பிரதானமாய் பாவமன்னிப்பையே முதலில் பெற நாடுவோம்; அதற்காகத்தானே பிதா இயேசுவை இந்த பூமியில் அனுப்பினார். எனவே, பிதாவின் பி...

இறைச்சியா? இச்சையா?

இறைச்சியா?  இச்சையா? 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்' (மத். 6:11) என்றும், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத். 6:34) என்றும் பிதாவை நோக்கி ஜெபிக்க இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக்கொடுத்திருந்தபோதிலும், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே 'உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்' (மத். 6:8) என்பதுதானே பிதாவைக் குறித்து இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிமுகம். 'முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்' (மாற். 7:27) என்பதுதான் அவரது விருப்பமும் கூட. 'வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (மத். 10:10) என்றும், 'வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (லூக். 10:7; 1தீமோ. 5:18) என்றும் நாம் வாசிக்கின்றோமே. அப்படியிருக்க, 'ஆகாரத்திற்காக வேலை' மற்றும் 'கூலிக்காக வேலை' என்ற என்ற பார்வையில் நமது பயணம் தொடர்ந்துவிடக்கூடாததல்லவா! 'இழிவான ஆதாயம்' நமது வழிகளை மாற்றிவிடக்...

வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்

  வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்   அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது,  இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.  ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்;  ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.(லூக் 4:25-27) இஸ்ரவேலின் தேவனாக இருந்தபோதிலும், இஸ்ரவேல் தேசத்திலேயே தனது குமாரனை மேசியாவாகப் பிறக்கச் செய்தபோதிலும், பஞ்ச காலத்தின்போது, இஸ்ரவேலருக்குள் இருந்த அநேகம் விதவைகள் போஷிக்கப்படாமற்போனதற்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், ந...