நாணயம்
ஆசீர்வாதத்திற்குக் காரணமானவர்களை அற்பமாக எண்ணினால், ஆண்டவரின் கோபத்திற்கு ஆளாகவேண்டியதாகிவிடும். அத்துடன், ஆசீர்வாத்திற்குக் காரணமானவர்களின் மடி கனமாகிவிடாமல், அத்தனையையும் தன்னுடைய மடியிலேயே கட்டிக்கொள்ளவேண்டும் என்ற மனப்பான்மை தேவனுக்கு முன் மனிதர்களை பகையாளிகளாகவே மாற்றிவிடும்.
நம்முடைய கரங்களில் கர்த்தர் கொடுக்கும் அத்தனையும், மொத்தமாக நமக்கு மாத்திரமேயான சொத்து அல்ல; அதிலே, ஆண்டவருக்கும் அயலகத்தாருக்கும்கூட பங்கு உண்டு என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. மேஜையில் இருக்கும் அத்தனையும் எனக்கே என்று நினைத்தால், துணிக்கைகளைப் பொறுக்கும்படியாக இருக்கும் மனிதர்களின் பசிக்கு நாம் பொறுப்பாகிவிடுவோம். நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே (மத் 15:27) என்ற கானானிய ஸ்திரீயின் வேண்டுதலைக் கேட்டு, எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் மேஜையிலிருந்து ஓர் அப்பம் (அற்புதம்) சிந்தப்பட்டதே.
இன்றும் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாயிருக்கும் லாசருக்கள் (லூக் 16:21) அநேகர் உண்டு. நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு நான் என்ன செய்யவேண்டும்? (லூக். 18:18) என்று கேட்ட தலைவனுக்கு, 'உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரருக்குக் கொடு' (லூக். 18:22) என்ற இயேசு கிறிஸ்துவின் பதிலோ ஏற்றுக்கொள்ள இயலாததாகவே காணப்பட்டதைப் போல, தங்களுடையதைப் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் வைத்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் பரலோத்திற்குத் தங்களைத் தூரமாக்கிக்கொண்ட மனிதர்கள் அநேகர். நித்திய ஜீவனுக்குரியவைகளைத் தியானித்துக்கொண்டு, இத்தகைய விதியிலிந்தோ இன்னும் விலகிப்போவோர் அநேகர். இத்தகையோர், இப்பூமியிலிருந்து தங்கள் பொக்கிஷங்களை விட்டுப் புறப்படும்போது, பரலோகத்திலோ இவர்களை வரவேற்க எவரும் இருக்கமாட்டார்கள். (லூக். 16:9)
மனிதர்களுடைய பங்கை மனிதர்களுக்குக் கொடுப்பதில் ஒருபோதும் நாம் தயங்கி நிற்கக்கூடாது. இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதைத் தேவனுக்கும் செலுத்துங்கள் (மத் 22:21) என்று இயேசு கிறிஸ்து ஆலோசனை சொன்னாரே. தேவனுடையதை மாத்திரம் தேவனுக்குக் கொடுத்துவிட்டு, இராயனுடையதை கொடுக்கத் தவறிவிடுவோமென்றால், நம்முடைய நாணயத்தின் மறுபுறம் செல்லாததாகவே காணப்படும். கர்த்தருக்குக் காணிக்கையைச் செலுத்தும் நாம், தேசத்தின் சட்டத்திற்கும் உட்பட்டு செலுத்தப்படவேண்டிய வரிப்பணத்தையோ மறைத்துவைத்துவிடக்கூடாதே. சேதத்திற்கு மாத்தரமல்ல, மனிதர்களுக்குக் கொடுக்கவும் நம்முடைய மனம் மறுத்துவிடக்கூடாது. உங்களுக்கு உண்டானவைகளில் பிச்சை கொடுங்கள், அப்பொழுது சகலமும் உங்களுக்குச் சுத்தமாயிருக்கும். பரிசேயரே, உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாம் மருக்கொழுந்து முதலிய சகலவித பூண்டுகளிலும் தசமபாகம் கொடுத்து, நியாயத்தையும் தேவ அன்பையும் விட்டுவிடுகிறீர்கள்; இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே (லூக் 11:41,42) என்று இயேசு கிறிஸ்து போதித்தாரே. ஆண்டவருக்குக் கொடுப்பதில் மாத்திரமே திருப்தி காணுவதும், மனிதர்களுக்குக் கொடுப்பதில் மாத்திரமே திருப்தி காணுவதும் தவறானதே; நம்முடைய தராசிற்கு இரண்டு தட்டுகள் உண்டே. ஆண்டவருக்குக் கொடுக்கவேண்டியதை ஆண்டவருக்கும், மனிதர்களுக்குக் கொடுக்கவேண்டியதை மனிதர்களுக்கும் கொடுத்தால் மாத்திரமே நம்முடைய தராசின் முள் நடுநிலையாக நிற்கும் என்பது நிச்சயம். விலையேறப்பெற்ற பரிமளதைலமுள்ள வெள்ளைக்கல்பரணியை அவரது சிரசில் ஊற்றவும் (மத். 26:7); ஜீவனத்திற்கு உண்டான எல்லாவற்iயும் ஆண்டவருக்குக் கொடுத்துவிடவும் (லூக். 21:4) நாம் ஆயத்தமாயிருக்கவேண்டும்; அப்படியே, உண்டானவைகளில் தரித்திரர்களுக்குக் கொடுக்கவும் நாம் ஆயத்தமாயிருக்கவேண்டும்.
மேலும், அவர்களுடையதை அவர்களிடத்தில் கொடுப்பதிலும் நாம் காலம் தாழ்த்தக்கூடாது. உன் சகோதரரிலும், உன் தேசத்தின் வாசல்களிலுள்ள அந்நியரிலும் ஏழையும் எளிமையுமான கூலிக்காரனை ஒடுக்காயாக. அவன் வேலைசெய்த நாளில்தானே, பொழுதுபோகுமுன்னே, அவன் கூலியை அவனுக்குக் கொடுத்துவிடவேண்டும்; அவன் ஏழையும் அதின்மேல் ஆவலுமாயிருக்கிறான்; அதைக் கொடாவிட்டால் அவன் உன்னைக்குறித்துக் கர்த்தரை நோக்கி முறையிடுவான்; அது உனக்குப் பாவமாயிருக்கும் (உபா 24:14,15) என்று பிரமாணமாக கர்த்தர் நமக்கு எழுதித்தந்திருக்கின்றாரே. பொழுதுபோகும் முன்னே செய்தால் பரலோகம் புகழும்.
Comments
Post a Comment