புதன், 13 அக்டோபர், 2021

சுத்திகரித்தால் சத்துருவா? (யோவா. 2:14-16)

 சுத்திகரித்தால் சத்துருவா?



தேவாலயத்திலே ஆடுகள் மாடுகள் புறாக்களாகிய இவைகளை விற்கிறவர்களையும், காசுக்காரர் உட்கார்ந்திருக்கிறதையும் கண்டு, கயிற்றினால் ஒரு சவுக்கையுண்டுபண்ணி, அவர்கள் யாவரையும் ஆடுமாடுகளையும் தேவாலயத்துக்குப் புறம்பே துரத்திவிட்டு, காசுக்காரருடைய காசுகளைக் கொட்டி, பலகைகளைக் கவிழ்த்துப்போட்டு, புறாவிற்கிறவர்களை நோக்கி: இவைகளை இவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டுபோங்கள்; என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள் என்றார். (யோவா. 2:14-16) 

  

தன்னுடைய பிதாவின் வீட்டில், பிதாவுக்கு விரோதமான காரியங்கள் நடைபெறுவதைக் கண்ட குமாரனாகிய ஈயேசு கிறிஸ்து, சற்றும் பொறுக்காமல் சவுக்கை எடுத்து ஆலயத்தைச் சுத்திகரித்தார். இயேசு கிறிஸ்துவின் இச்செயல் நமக்குக் கற்றுக்கொடுப்பது என்ன? தேவனுக்குரியவைகள் என்று இவ்வுலகத்தில் அடையாளப் படுத்தப்படுபவைகளில் அசுத்தங்கள் நுழைந்துவிடுமென்றால், அவைகளை அகற்றவேண்டிய பெரும் பொறுப்பு பிள்களைகளாகிய நமக்கே உண்டு என்பதே. தேவாலயத்தில் என்ன நடந்தால் எனக்கென்ன? என்று எண்ணமற்றவர்களாக நாம் இருந்துவிடமுடியாதே. மனுபுத்திரனே, உன்னை இஸ்ரவேல் வம்சத்தாருக்குக் காவலாளனாக வைத்தேன்; நீ என் வாயினாலே வார்த்தையைக்கேட்டு, என் நாமத்தினாலே அவர்களை எச்சரிப்பாயாக (எசே. 3:17) என்ற தீர்க்கதரிசியின் வார்த்தையினை நாம் மறந்துவிடமுடியாது. 

புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதிருங்கள்; வானத்தின் அடையாளங்களாலே புறஜாதிகள் கலங்குகிறார்களே என்று சொல்லி, நீங்கள் அவைகளாலே கலங்காதிருங்கள் (எரே 10:2) என்று எழுதிக்கொடுக்கப்பட்டுள்ள வசனத்தை மறந்து, ஆலங்களிலும், ஆலயத்திற்கடுத்த ஸ்தாபனங்களிலும் பொங்கல் கொண்டாடும் நிலைக்கு கிறிஸ்தவத்தை இன்று கீழ்த்தரமாக்கிவிட்டவர்கள் உண்டே. எனக்கு மனமடிவுண்டாக அந்நிய தேவர்களுக்குப் பானபலிகளை வார்க்கிறார்கள்; அவர்கள் வானராக்கினிக்குப் பணியாரங்களைச் சுடும்படி பிள்ளைகள் விறகு பொறுக்குகிறார்கள், பிதாக்கள் நெருப்பு மூட்டுகிறார்கள், ஸ்திரீகள் மாப்பிசைகிறார்கள் (எரே 7:18) என்பதற்கு இணங்க, பொங்கலிட்டு சூரிய நமஸ்காரம் செய்து, மாடுகளையும் தெய்வங்களாக்கி வணங்கி, உயர இருக்கும் சூரியனாலும், உழவுக்குக் காரணமாயிருக்கும் மாடுகளுமே உயிர்வாழக் காரணம் என்ற உணர்வினையே அடிப்படையாகக் கொண்டு கொண்டாடப்படும் பொங்கலை தமிழர் பண்டிகை என்ற பெயரில் அனுமதிப்போமென்றால், வேதத்திற்கு விரோதமான தமிழர்களின் அத்தனை பண்பாடுகளையும் நாம் பயணித்தாகவேண்டுமே! கிறிஸ்தவனுக்கு தமிழன் என்ற அடையாளம் இரண்டாந்தரமானதே. பொங்கலுடன் போதகரும் சேர்ந்து போஸ் கொடுக்கும் காட்சி, புறஜாதியுடனேயே நம்மை இணைக்குமே அல்லாமல், புறஜாதியாரை ஒருபோதும் நம்முடன் இணைக்காது. இது இப்பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷமே. (ரோமர் 12:2) 

எனினும், சுத்திகரிப்புப் பணியைச் செய்த இயேசுவை யூதர்கள் சத்துருவாகவே எண்ணினர். பவுலுக்கும் நேர்ந்தது இதுதானே (கலா. 4:16) தேவாலயத்தை சுத்திகரிக்கும் பணியில் ஈடுபட்ட இயேசுவுக்கு விரோதமாக ஜனங்கள் எழும்பி நின்றனர். அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: நீர் இவைகளைச் செய்கிறீரே, இதற்கு என்ன அடையாளத்தை எங்களுக்குக் காண்பிக்கிறீர் என்று கேட்டார்கள் (யோவா 2:18). அவர்களது கோபமான வார்த்தைகளில் பொதிந்திருக்கும் அர்த்தத்தைப் புரிந்துகொண்ட இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் (யோவா 2:19) என்று அவர்கள் தனக்குச் செய்யவிருப்பதையே முன்னறிவித்தார். தம்முடைய சரீரமாகிய ஆலயத்தைக் குறித்துப் பேசினார் (யோவா. 2:21); என்றபோதிலும், புரிந்துகொள்ள இயலாத யூதர்களோ, இந்த ஆலயத்தைக் கட்ட நாற்பத்தாறு வருஷம் சென்றதே, நீர் இதை மூன்று நாளைக்குள்ளே எழுப்புவீரோ என்றார்கள் (யோவா 2:20). 

தேவாலயத்திற்கடுத்த காரியங்களைச் சுத்திகரிக்கும் பணியில் ஈடுபடும் மனிதர்களின் சரீரத்திற்கு விரோதமாக ஜனங்கள் எழும்பக்கூடும். நம்முடைய சரீரமாகிய ஆலயங்களை அவர்கள் இடித்துப்போட்டாலும், வருகையில் நாம் அவருடைய ஆலயங்களாக எழுந்து அவரண்டையிலே நிற்போம்; அனால், தங்கள் ஆலயங்களை கள்ளர் குகைகளாக்கிப்போட்ட (மத் 21:13) அவர்களோ காரிருளுக்கே உரியவர்களாவார்கள் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக