உன் கையாவது உன் காலாவது உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்துபோடு நீ இரண்டு கையுடையவனாய், அல்லது இரண்டு காலுடையவனாய் நித்திய அக்கினியிலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், சப்பாணியாய், அல்லது ஊனனாய், நித்திய ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும். உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; இரண்டு கண்ணுடையவனாய் எரிநரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், ஒற்றைக்கண்ணனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.(மத் 18:8,9)
உன்னிலே இடறாதே
மேற்கண்ட இந்த இரண்டு வசனங்களிலுள்ள இயேசுவின் போதனையின் அச்சாரத்தினை நாம் அறிந்துகொள்வது நல்லது. என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும் (மத் 18:6) என மற்றொருவனால் நாம் இடறிவிடக்கூடாது முந்தைய வசனத்தில் போதித்தாலும், நம்மாலேயே நாம் இடறிவிடக்கூடாது என இந்த வசனங்களில் போதிக்கின்றார். நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன? (மத் 7:3) என மற்றவர்களைத் தூக்கிவிடுவதைக் காட்டிலும், நாம் தடுக்கிவிடக்கூடாது என்பதில் கரிசனையுள்ளவர் இயேசு. நம்மை ஆதாயப்படுத்தாமல், உலகத்தை ஆதாயப்படுத்த இயேசு கற்றுக்கொடுத்ததில்லையே. மனுஷன் (ஊழியன், மிஷனரி) உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்? (மத் 16:26) என உலகத்தை ஆதாயப்படுத்தும் முன் நம்மை நாம் ஆதாயப்படுத்திக்கொள்ளவேண்டும் என்கிறாரே. தன்னைக் கொடுத்தவர், நம்மை நாம் இழந்துவிடக்கூடாது என்பதில் கரிசனையுடையவர். இயேசுவையே அல்லாமல், தன் ஜீவனை எதை ஈடுகொடுத்தும் காப்பாற்ற முடியாது என்று எச்சரிக்கிறார். தன்னைக் காக்க மறந்து, விண்ணுக்காகப் பணி செய்தால் விளைவு விபரீதமாகத்தான் இருக்கும். விபசாரம் செய்யக்கூடாதென்று சொல்லுகிற நீ விபசாரம் செய்யலாமா? விக்கிரகங்களை அருவருக்கிற நீ கோவில்களைக் கொள்ளையிடலாமா? நியாயப்பிரமாணத்தைக்குறித்து மேன்மைபாராட்டுகிற நீ நியாயப்பிரமாணத்தை மீறிநடந்து, தேவனைக்கனவீனம்பண்ணலாமா? எழுதியிருக்கிறபடி, தேவனுடைய நாமம் புறஜாதிகளுக்குள்ளே உங்கள் மூலமாய்த் தூஷிக்கப்படுகிறதே (ரோம 2:22-24) என்பதல்லவா அப்போஸ்தலர்களின் அடித்தள உபதேசம். தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான் (1யோவான் 5:18). இயேசுவின் இரத்தத்தினால் நமது ஆத்துமா கழுவப்பட்டாலும், அதனைக் கறைபடாமல் காக்கும் பொறுப்பு நமக்கு உண்டு.
உறுப்பினை இழக்காதே
தறித்து எறிந்துபோடு, பிடுங்கி எறிந்துபோடு, கல்லைக் கட்டி அமிழ்த்திப்போடு என்ற இயேசுவின் போதனைகள், இழப்பை ஏற்படுத்துவதுபோலத் தெரிந்தாலும், நமக்கு அது நலமாயிருக்கும், நலமாயிருக்கும், நலமாயிருக்கும் என்றே இயேசு சொல்கிறார். நலமானதைப் பெற நம்முடையதைக் கொடுக்கலாம், ஆனால் சரீரத்தின் அங்கங்களைத் தறித்து ஊனமாக்கினால் எப்படி? என்ற கேள்வி நம் மனதில் எழும் முன்னரே, உடல் ஊனத்தைக் காட்டிலும், பரத்தில் நுழைவது முக்கியமானது என பரலோகத்திற்குக் நாம் கொடுக்கவேண்டிய முன்னுரிமையையும், முதலுரிமையையும் சுட்டிக்காட்டுகின்றது இயேசுவின் போதனை; சரீரத்தின் அங்கங்கள் அல்ல, பரலோகமாகிய அங்கு நுழைவதுதானே முக்கியம். இந்தப் போதனையை நேரடி அர்த்தத்தோடல்ல, பரலோகம் செல்ல போரடும் நாம் ஒருபடி மேலே செல்லவே இயேசு கற்றுக்கொடுக்கிறார். சீஷர்களுக்கு இயேசு போதித்த இந்தச் சத்தியம் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கும் சக்தியைக் கொடுக்கும். இவ்வுலகத்தின் வாழ்க்கை, நியாயத்தீர்ப்பில் நம்மைத் தோற்றுப்போகப்பண்ணுமானால், நித்தியத்தை எட்டிப்பிடிக்க இயலாமல் பாதாளத்தில் விட்டெறியப்படுவோம்.
பரலோகம் செல்ல நம்மை நாமே காயப்படுத்திக்கொள்ளவேண்டிய, அடித்துக்கொள்ளவேண்டிய, அறுத்துக்கொள்ளவேண்டிய, அவயவங்களைத் தறித்தெறியவேண்டிய அவசியமில்லை. இயேசு நமக்காக, நமது பாவங்களுக்காக, சாபங்களுக்காக சிலுவையில் அடிக்கப்பட்டார். அவரது சரீரத்தின் அங்கங்கள் போர்ச் சேவகர்களால் அடிக்கப்பட்டன. இரத்தம் சிந்த, சிந்த, முடிந்தது என்று அவர் சொன்னபோது இரட்சிப்பு நமக்குச் சொந்தமானது. 'நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்' (ஏசா 53:5). பாவிகளான நம்முடைய சரீரங்கள் அடிக்கப்படுவதற்குப் பதிலாக, அவர் ஒருவரே அத்தனையையும் ஏற்றுக்கொண்டார். அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார் (ரோம 4:25). இப்படியிருக்க, நமது சரீரத்தினைக் காயப்படுத்துவதனை, தறித்து எறிந்துபோடுவதனை கர்த்தர் விரும்புவாரோ! இல்லை. இதனை அறியாததினாலேயே, இயேசுவை அறியாதவர்கள், தங்களை வற்புறுத்திக்கொள்கின்றனர், காயப்படுத்திக்கொள்கின்றனர், தங்களைத் தாங்களே அடித்துக்கொள்கின்றனர். அடிக்கப்பட்டவரை அவர்கள் அறிந்துகொண்டால், தாங்கள் செய்வது அவசியமற்றது என அவர்கள் அறிந்துகொள்வார்கள். தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே (லூக் 23:34) என்றுதானே இயேசு சொன்னார். நல்ல அவயவங்களோடு வாழும் நாம் பரத்திற்காக அவைகளை இழக்கவேண்டிய அவசியமில்லையென்றால், எதனைக் குறிக்கிறது இயேசுவின் இந்தப் போதனை? நமது அங்கங்களையல்ல, அகத்தினையே நோக்கிச் செல்கிறது இயேசுவின் இப்போதனை. அங்கமில்லாதவர்கள் பரலோகத்திலே பிரவேசிக்கலாம், ஆனால், அகத்தில் அவரில்லாதவர்கள் அதில் பிரவேசிப்பது இயலாது. கற்றுக்கொள்ளக் கருகலாயிருப்பினும், ஆவியானவரோடு இச்சத்தியத்தை அறிவது சாத்தியமே. அங்கங்கள்தானே ஊனமாகும், அகம் எப்படி ஊனமாகும்?
இழந்ததைப் பார்க்காதே
இழப்பைத் திரும்பிப் பார்க்கும் குணம் இடைவழியிலேயே ஊழியர்கள் பலருக்கு உண்டாகிவிடுகிறது. இது பல ஊழியர்களை பாதாளம் இழுத்துச் சென்றுவிடுகிறது. கிறிஸ்து எதை அடைய அனுப்பினாரோ அதை அடையாமல், தங்கள் வாழ்க்கையில் தாங்கள் எதை விரும்பினார்களோ அதனை அடையும் எண்ணம் இடையில் உண்டாகிவிட்டதால், தரிசனம் கரிசனையும் தங்களைப் பற்றியதாகவே மாறிவிடுகிறது; ஆத்துமபாரம் உடைந்துபோய்விடுகின்றது.
கிறிஸ்துவுக்காக தன்னை அர்ப்பணித்தவர்கள், ஆர்வமாய் அவரைச் சார்ந்து, சத்தியத்தைச் சுமந்து அவரை அறிவிக்கச் செல்கின்றனர். இலாபமான பலவற்றை நஷ்டமென்று எண்ணித் துறந்து, சொந்தம் மறந்து, அவரை அறிவிக்கவேண்டுமே என்ற அறிவிலேயே தூரத்துக்குத் தங்களைத் தூக்கிச் செல்கின்றனர்; அர்ப்பணிப்பின் ஆரம்பம் அது; உலகத்தின் வழியில், சுவிசேஷம் அறிவிப்பதை மறந்து பலர் இருக்க, கிறிஸ்துவுக்காக இவைகளையெல்லாம் நான் இழந்து செல்கிறேன் என்று இழந்ததைக் குறித்த சந்தோஷம், ஆனந்தத்தின் ஆரவாரம் புறப்படும் அவர்களிடத்தில் புறப்படும்போது உண்டு. ஆனால், காலம் செல்லச் செல்ல, தான் இழந்து வந்தவைகளை, விட்டு வந்தவைகளை திரும்பிப் பார்க்கும் நிலை பலரில் உண்டாகிறது. உடன் பிறந்தவர்களின் நிலையினை, உடன் படித்தவர்களின் நிலையினை, ஒன்றாய் உலாவிய நண்பர்களின் நிலையினை, உறவினர்கள் பலரை ஒப்பிடும்போது, வாழ்க்கைத் தரத்தினை ஒப்பிடும்போது உன்னதமானவருக்குப் பணிசெய்துகொண்டிருந்தாலும், எதையோ இழந்துவிட்டது போன்ற உணர்வு உண்டாகத் தொடங்குகிறது. இழந்துபோனதைத் (மக்களை) தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் (லூக் 19:10) என்ற எண்ணத்தோடு ஓடத்தொடங்கிய ஊழியர்கள், தாங்கள் இழந்துவந்த பொருட்களை, பதவிகளை, அந்தஸ்;துக்களை, ஆஸ்திகளை மீண்டும் நாடி ஓடத் தொடங்குகின்றனர்.
'இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே; எங்களுக்கு என்ன கிடைக்கும்?' (மத் 19:27) என்ற கேள்வி பரமனின் பக்கத்தில் நிற்போர் உள்ளத்தில் உண்டாகும்போது, உலகத்தின் பக்கத்தில் நிற்கும் சத்துரு, அவர்களை நோக்கி: 'நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன்' (மத் 4:9) என்று சொல்லி அவைகளில் சிக்கவைப்பான்.
ஆண்டவரே, நீர் எங்கே போனானலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்று வந்தவனை இயேசு நோக்கி, நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார் (மத் 8:20). அவர் தலைசாய்த்த இடம் சிலுவையே. சிலுவையில் இயேசு தொங்கியபோது, காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார் (யோவா 19:30). பிதா அனுப்பின எல்லாவற்றையும் செய்து முடித்த பின்னரே அவரது தலை சிலுவையில் சாய்ந்தது. இன்றோ பலரது தலைகள், பிதா அனுப்பின் காரியத்தினை மறந்து சாய்ந்து, சரிந்து கிடக்கின்றன.
மிஷனரி ஒருவர், 'நாம்தான் இப்படி இருக்கிறோம், புள்ளைங்களாவது நல்லாயிருக்கட்டுமே' என்று என்னிடத்தில் சொன்னார். அவரது வார்த்தைகளில், ஊழியத்திற்கு அவர் வந்தபோது விட்டு வந்தவைகளின் இழப்பு ஒட்டிக்கொண்டிருந்தது. தன்னுடைய நிலை தாழ்வாகவும், மற்றவர்கள் உயர்வாகவும் இருப்பதைப்போன்ற நினைவுக்கு அவர் தள்ளப்பட்டிருந்தார். தொடர்ந்து, தனது முந்தைய வாழ்க்கையைப் பற்றி, 'நான் இப்படி இருந்தேன், கார் வைத்திருந்தேன், நல்ல சம்பளத்தில் இருந்தேன், நல்ல அலுவலகத்தில் பணிபுரிந்தேன், எனக்குக் கீழே இத்தனை பேர் பணியாற்றினார்கள், இந்த உயர்ந்த பதவியில் இருந்தேன்' என்ற முந்தைய இழப்புகளைப் பற்றி அவரது வாயிலிருந்து உதிர்ந்தன வார்த்தைகள்; அந்நினைவு அவரை சோகத்திலும் தள்ளியிருந்ததை முகக்களை சுட்டிக்காட்டியது; அகத்தின் அழகு முகத்திலே தெரியுமே. இவர்கள் இதனையெல்லாம் விட்டுவிட்டு வந்துவிட்டோமே! என தங்களை இழந்தவர்களாக எண்ணி ஊனர்களாகிப்போனவர்கள். இப்படி பின்னிட்டுப் பார்க்கும் தன்மையிருக்குமானால், குணம் வருமானால் அது எத்தகைய விலைமதிப்புள்ளதுபோல நமது கண்களுக்குத் தெரிந்தாலும், அதனை தறித்து எறிந்துபோடவேண்டும்; இல்லையென்றால், அது நம்மை ஊனமாக்கிவிடுவது மாத்திரமல்ல, நம்மை இடறச் செய்துவிடும், எரி நரகம் வரைக்கும் கொண்டுசென்றுவிடும்.
அப்படியே, நன்றாக படித்து வேலைக்குச் செல்லும் தருவாயிலிருந்த ஓர் மிஷனரியின் மகனிடத்தில், 'உனது ஆசை என்ன?' என்று கேட்டேன். யோசிக்காமலேயே சட்டென உடனே, 'இங்க கஷ்டப்படும் எங்க அம்மா அப்பாவை தமிழ்நாட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போகனும்' என்றான். இது அதிர்ச்சி மட்டுமல்ல, அடுத்த சந்ததியின் வீழ்ச்சி. மிஷனரிப் பணியினை இறைப்பணியாக, உயர்பணியாக, உன்னதப்பணியாக, உலகிலுள்ளவற்றிற்கெல்லாவற்றிற்கும் மேலான மாபணியாக எண்ணவேண்டிய மிஷனரியின் வாழ்விலும், மிஷனரி சந்ததியின் வாழ்விலும், மிஷனரிப் பணி கீழாகக், கடினமானதாகக், முன்னுரிமையற்றதாகக் காணப்பட்டால் கர்த்தரின் பணி தொடருவதெப்படி? மிஷனரிக் குழந்தைகள் உயர்கல்வி பயிலுவதும், உயர்பதவியில் அமருவதும் தவறல்ல, ஆயினும் அவர்கள் பார்வையில் மிஷனரிப் பணி உயர்ந்ததாகக் காணப்படாவிட்டால் அது தவறே.
யாரோ ஒருவருடைய வீட்டிற்குச் செல்லும்போது, ஒரு பொருளைக் கண்டு, அதின்மேல் ஆசைகொண்டு, நான் அந்த வேலையில் இருந்திருந்தால், நல்ல சம்பளத்தில் இருந்திருந்தால், இந்த விலையுயர்ந்தப் பொருளை வாங்கியிருப்பேன், இப்பொழுது இயலாமற்போய்விட்டதே என்ற குறைமனம் உண்டாகுமானால் அது ஊனமே; அங்கத்தில் அல்ல, உள்ளத்தின் ஊனம்; இது வெளியே தெரிவது கடினம்; கர்த்தரின் பணியில் தொடராதபடி நமது கால்களை இடறிவிடும். நாம் விட்டுவந்தவைகள், வலதுகையைப் போன்றதானாலும், வலது கண்ணைப்போன்றதானாலும், அதனை மீண்டும் பார்க்கும் கண் நமக்கு வேண்டாம்.
மிஷனரிப் பணியில் இருந்துகொண்டு, எப்படியாவது மற்றவர்களைப் போல பணம் சேர்க்கவேண்டும் என்ற மனம் பலரில் உண்டாகிறது. இப்படிப்பட்ட குணம் ஊண்டாகுமென்றால், அதனைத் தறித்து எறிந்துபோடவேண்டும். விட்டு வந்தவைகளை மீண்டும் நினைத்து, தறித்து எறிவதால் ஊனம் என்றதோர் உணர்வு. இதனால், எல்லாவற்றையும் விட்டுவந்தவர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய பயம் உயரத் தொடங்குகிறது. கவனம் சிதறத் தொடங்குகிறது; இதனால், தரிசனத்திலும், அர்ப்பணத்திலும் தளர்வு உண்டாகின்றது. ஆண்டவருக்காக, ஆத்துமாக்களை ஆதாயம் செய்யப் புறப்பட்ட இவர்கள், மீண்டும்தங்களுக்கானவைகளை ஆதாயம் செய்யும் நோக்கமுடையவர்களாக மாறிவிடுகின்றனர். பணியில் தொடரமுடியாதபடி வசதிகள் அவர்களை வழிமறித்துவிடுகின்றன. 'வசதியைத் தேடி ஓடாதே, ஓடாதே அது தொடுவானம்' என்று பாடினாலும் இந்த ஞானம் கூட இல்லாமல் போய்விடுகின்றனர்.
ஒரே காலுடையவர்களாக, ஒரே தரிசனமுடையவர்களாக, ஒரே பார்வையுடையவர்களாக உன்னதத்தையே நோக்கி ஓடிய இவர்களுக்கு, உலகத்தின் வழியில் செல்லும் மற்றும் ஒரு கால், உலக ஆஸ்திகளை, பதவிகளை, பொருட்களைப் பார்க்கும் மற்றும் ஒரு கண் முளைத்தெழும்புகின்றது. ஒரே எஜமானுக்கு ஊழியம் செய்யப் புறப்பட்ட இவர்கள், தேவன் உலகம் என்ற இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்யத் தொடங்குகின்றனர். இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது (மத் 6:24) என்றல்லவா இயேசு எச்சரிக்கின்றார்.
குறைவானவர்களோடு நிறைவானவர்
உலகத்தில் அங்கவீனமானவர்களையே, ஊனர்களாக இன்னும் பார்த்துக்கொண்டிருக்கும் நமது கண்களில் ஓர் மாற்றுப்பார்வை தேவை. மோசே தன்னுடைய குறைபாட்டை முன்னிறுத்தி, ஆண்டவரே, இதற்கு முன்னாவது, தேவரீர் உமது அடியேனோடே பேசினதற்குப் பின்னாவது நான் வாக்குவல்லவன் அல்ல; நான் திக்குவாயும் மந்தநாவும் உள்ளவன் (யாத் 4:10) என்றபோது, கர்த்தர் அவனை நோக்கி: மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார்? ஊமையனையும் செவிடனையும் பார்வையுள்ளவனையும் குருடனையும் உண்டாக்கினவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவா? (யாத் 4:11) என்று அவர்களை உருவாக்கியதின் உரிமையாளர் தானே என்பதை எடுத்துரைக்கின்றார்.
எதற்கு யார் காரணம்? என்ற கேள்விகளுக்கு, மனிதன் தனக்குச் சாதகமாகவே பதிலளிக்கக் கற்றுக்கொண்டவன். நல்லதை தன்னைக் காட்டி, பொல்லாததற்குப் பொதுமக்களைக் காட்டி, தன்னைச் சுகமாகவே வைத்துக்கொள்ளப் பழகிவிட்டவன்; கர்த்தர் அப்படியல்ல. குறைவானால், தானல்ல என்று தலைமறைவாகிவிடும் மக்கள் வசிக்கும் உலகில், சரீரத்தில் குறைபாடுகளாக நம் கண்களுக்குத் தெரியும் மனிதர்களும் தன்னால் படைக்கப்பட்டவர்கள் என்றுச் சொல்லுவது எத்தனைக் கர்த்தத்துவத்தின் தன்மை. தாங்கள் பெருமையாய் பேசப்பட பெரிய காரியங்களுடன் தன்னை அடையாளப்படுத்திக்கொள்வர் மனிதர். ஏழை, பணக்காரன், குறைவான, சிறிய, பெரிய, அழகான, உயர்ந்த, குள்ளமான, ஊனமான என பல்வேறு பதங்களை அடைமொழியாகக் கொடுத்து மனிதர்களை அடையாளப்படுத்தும் மனிதர்களுக்கு சவாலாக, குறைவானவற்றுடன் நிறைவான தன்னை நிறுத்துகிறார்; இதனால்; அவரது தெய்வீகத் தன்மை குறைந்துபோகவில்லையே! உடலில் ஊனமானவர்களை உதறித்தள்ளும் மனிதர்களின் மனதில் படைத்தவரின் பண்பு உருவாகட்டும்.
பிறவிக்குருடனான ஒரு மனிதனைக் கண்டபோது, சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன் செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டபோது, இயேசு பிரதியுத்தரமாக: அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும் பொருட்டு இப்படிப் பிறந்தான் (யோவா 9:2,3) என்று, படைப்பிற்குத் தானே காரணம் என்பதை வெளிக்காட்டுகிறார். பெற்றோர்கள் பெற்றெடுத்தாலும், பிறப்பிற்குத் தானே காரணம் என்பதைக் காட்டிக்கொடுக்கின்றார் தேவன்; அவரே உலகிற்கு வரும் ஒவ்வொரு சிசுவுக்கும் பிதா. தாயின் வயிற்றில் சிசுவினை உருவாக்கி உயிர்கொடுத்து உலகிற்குக் கொடுப்பது அவரே.
மாற்றுத்திறனாளிகள் அல்ல மாதிரிகள்
தன்னையே அவர்கள் பக்கம் நிறுத்திவிட்டு, தானே காரணம் எனச் சொன்னபோதிலும், உன் சந்ததியாருக்குள்ளே அங்கவீனமுள்ளவன் தலைமுறைதோறும் தேவனுடைய அப்பத்தைச் செலுத்தும்படி சேரலாகாது. அங்கவீனமுள்ள ஒருவனும் அணுகலாகாது; குருடனானாலும், சப்பாணியானாலும், குறுகின அல்லது நீண்ட அவயவமுள்ளவனானாலும், காலொடிந்தவனானாலும், கையொடிந்தவனானாலும், கூனனானாலும், குள்ளனானாலும், பூவிழுந்த கண்ணனானாலும், சொறியனானாலும், அசறுள்ளவனானாலும், விதை நசுங்கினவனானாலும் அணுகலாகாது. ஆசாரியனாகிய ஆரோனின் சந்ததியாரில் அங்கவீனமுள்ள ஒருவனும் கர்த்தரின் தகனபலிகளைச் செலுத்தச் சேரலாகாது; அவன் அங்கவீனமுள்ளவனாகையால், அவன் தேவனுடைய அப்பத்தைச் செலுத்தச் சேரலாகாது. அவன் தன் தேவனுடைய அப்பமாகிய மகா பரிசுத்தமானவைகளிலும் மற்ற பரிசுத்தமானவைகளிலும் புசிக்கலாம்.அவன் அங்கவீனமுள்ளவனாகையால், அவன் என் பரிசுத்த ஸ்தலங்களைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடிக்குத் திரைக்குள்ளே போகாமலும் பலிபீடத்தண்டையில் சேராமலும் இருப்பானாக; நான் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர் என்று சொல் (லேவி 21:18-23) என்று சொல்கிறார் தேவன். ஊனமாய் பிறந்த தனது பிள்ளையே உலகத்தாயே புறக்கணிக்கத் தயங்கும்போது, தாய் மறந்தாலும் நான் உன்னை மறவேன் என்று வாக்குக் கொடுத்தவர் இப்படிச் செய்வது ஏன்? புரிந்துகொள்ளக் கடினமாயிருக்கிறதல்லவா?
நீங்கள் கண் ஊனமானதைப் பலியிடக்கொண்டுவந்தாலும் அது பொல்லாப்பல்ல, நீங்கள் காலூனமானதையும் நசல் பிடித்ததையும் கொண்டுவந்தாலும் அது பொல்லாப்பல்ல என்கிறீர்களே; அதை நீ உன் அதிபதிக்குச் செலுத்து, அவன் உன்மேல் பிரியமாயிருப்பானோ? உன் முகத்தைப் பார்ப்பானோ என்றும் (மல் 1:8) சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறாரே! அங்கவீனமுள்ள, ஊனமானவர்களை, ஊனமானவைகளைத் தான் ஏற்றுக்கொள்வதில்லை என்று தேவன் சுட்டிக்காட்டுகிறாரே; இதன் அர்த்தம் என்ன? தான் விரும்பாதவைகளைத் தானே உருவாக்கி, அதனை வெறுப்பவரா தேவன்? தேவன் விரும்பவில்லையென்றால், ஏன் உருவாக்கவேண்டும்? என்ற கேள்வி எழுகிறதல்லவா? நம்மிடத்தில் பின்பு எழும் கேள்விகளுக்கெல்லாம் முன்பே விடை அவரிடத்தில் உண்டு என்பதை அறிவோமாக.
ஊனமானவர்களை மனிதர்கள் மாற்றுத்திறனாளிகள் எனப் பெயர் வைத்து அழைக்கின்றனர்; ஆனால், அவர்கள் மாற்றுத்திறனாளிகள் அல்ல மாதிரிகள். தேவனை சந்திக்க இயலாத மனிதன் எப்படியிருப்பான்? தேவனால் வெறுக்கப்பட்ட மனிதன் எப்படியிருப்பான்? என்பதை வெளிக்காட்டும் மாதிரிகள். கண்கள் அற்றிருந்தால் நாமும் இப்படித்தானே இருப்போம் என்றும், கேட்கும் திறனை இழந்திருந்தால் இப்படித்தானே இருந்திருப்போம் என இருக்கும் நமதை இல்லாததாய்ப் பாவித்துப் பார்க்கப் படைக்கப்பட்ட மாதிரிகள் அவர்கள்.
குருடன் அந்தகாரத்திலே தடவித்திரிகிறதுபோல, நீ பட்டப்பகலிலே தடவிக்கொண்டு திரிவாய்; (உபா 28:29) என நாம் பாடம் கற்க கண் இழந்தவர்கள் மாதிரிகள். அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான் (ஏசா 35:6) என்பது களிப்பிற்கான மாதிரி.
தேவ சந்நிதியில் அப்பத்தைச் செலுத்த இயலாத மனிதனின் நிலையையும், தகனபலிகளைச் செலுத்த இயலாத மனிதர்களையும், எல்லா மனிதர்களும் திரைக்கு உள்ளே செல்லும்போது திரைக்கு உள்ளே போக இயலாத மனிதர்களையும் பார்க்கும்போது, நாம் நம்மை அதிகம் உணர்ந்துகொள்ளவும், அறிந்துகொள்ளவும், படைத்தவரை அதிகம் தொழுதுகொள்ளவும் அது ஏதுவாகும். ஆனால், மாதிரியான படைப்பான இவர்களை உலகம் வித்தியாசமாகத்தான் இன்று பார்க்கிறது; அப்படியே திருநங்கைகளையும்.
சரீரத்தில் ஊனமானவர்களை நிந்தித்து;ப் பேசவும், அவர்களை இடறச் செய்யவும் தேவன் இடம்கொடுக்கவில்லையே. செவிடனை நிந்தியாமலும், குருடனுக்கு முன்னே தடுக்கலை வையாமலும், உன் தேவனுக்குப் பயந்திருப்பாயாக; நான் கர்த்தர் (லேவி 19:14) என்றார் தேவன். எனினும், குறைபாடு உள்ளவர்களை சந்தியில் நிந்திக்கம் நிலை இன்றும் உண்டு. ஊமையானவர்களை, கொண்னை வாயுடையவர்களை, முடமானவர்களை, அவர்களைப் போலச் செய்து காட்டியும், கண்டு கிண்டலடித்தும் சாபத்தைப் பெருக்கிக்கொள்ளும் மனிதர்கள் உண்டு. ஊனத்தை, சரீர குறைபாடுகளை மனிதன் விரும்புவதில்லை. 'எவன் சாலகத்தின் வழியாய் ஏறி, எபூசியரையும் தாவீதின் ஆத்துமா பகைக்கிற சப்பாணிகளையும், குருடரையும் முறிய அடிக்கிறானோ, அவன் தலைவனாயிருப்பான் என்று தாவீது அன்றையதினம் சொல்லியிருந்தான்; அதனால் குருடனும் சப்பாணியும் வீட்டிலே வரலாகாது என்று சொல்லுகிறதுண்டு (2சாமு 5:8).
குறைவுடையவர்களை விரும்பாதவர்கள், விருந்தளிக்காதவர்கள், விருந்தோம்பாதவர்கள், விசாரிக்காதவர்கள், பரத்திலும் பிரவேசிக்கமுடியாதென்கிறது வேத சத்தம். அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் போஜனங்கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், நீங்கள் என் தாகத்தைத் தீர்க்கவில்லை; அந்நியனாயிருந்தேன், நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; வஸ்திரமில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு வஸ்திரங்கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாயும் காவலிலடைக்கப்பட்டவனாயும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லையென்பார்.(மத் 25:41-43)
யோபுவோ, நான் குருடனுக்குக் கண்ணும், சப்பாணிக்குக் காலுமாயிருந்தேன் (யோபு 29:15) என்று மாதிரிகள் மேல் உள்ள பரிவைக் காட்டுகிறான். பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்; வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள் (மத் 25:35,36) என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கு உரியவர்களாக மாறுவோம் நாம்.
மாதிரிகளுக்கு மறுவாழ்வு
இயேசுவின் வருகை மாற்றத்தை இந்த மாதிரிகளிடத்தில் உண்டாக்கியது. உலகத்தினரால் தள்ளப்பட்ட மக்கள் இயேசுவின் பார்வையினால் தளைத்தனர். குருடர் பார்வையடைந்தார்கள், சப்பாணிகள் நடந்தார்கள், குஷ்டரோகிகள் சுத்தமானார்கள், செவிடர் கேடட்டார்கள் (மத் 11:5).
'இரண்டு குருடர் அவர் பின்னே சென்று: தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும்' (மத் 9:27) என்று கூப்பிட்டபோது, இயேசுவின் காது செவிடாயிருக்கவில்லை; குருடரின் சத்தத்தைக் கேட்டது, அவர்களைப் பார்வையடையப்பண்ணினார். குருடர் அவரிடத்தில் வந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: இதைச் செய்ய எனக்கு வல்லமை உண்டென்று விசுவாசிக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம் விசுவாசிக்கிறோம், ஆண்டவரே! என்றார்கள்; (மத் 9:28) அவர்கள் பார்வையடைந்தனர். பிசாசு பிடித்த குருடும் ஊமையுமான ஒருவன் அவரிடத்தில் கொண்டுவரப்பட்டான்; குருடும் ஊமையுமானவன் பேசவுங் காணவுந்தக்கதாக அவனைச் சொஸ்தமாக்கினார் (மத் 12:22). குருடர், ஊமையர், ஊனர் முதலிய அநேகரை, திரளான ஜனங்கள் கூட்டிக்கொண்டு இயேசுவினிடத்தில் வந்து, அவர்களை அவர் பாதத்திலே வைத்தார்கள்; அவர்களை அவர் சொஸ்தப்படுத்தினார் (மத் 15:30). குருடரும் சப்பாணிகளும் தேவாலயத்திலே அவரிடத்திற்கு வந்தார்கள், அவர்களைச் சொஸ்தமாக்கினார் (மத் 21:14). பின்பு அவர் பெத்சாயிதா ஊருக்கு வந்தார்; அப்பொழுது ஒரு குருடனை அவரிடத்தில் கொண்டு வந்து, அவனைத் தொடும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள் (மாற் 8:22); அவன் சொஸ்தமாகி தெளிவாய்க் கண்டான் (மாற் 8:25). மாத்திரமல்ல, நீ விருந்துபண்ணும்போது ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் அழைப்பாயாக (லூக் 14:13) என்று இயேசு கற்றுக்கொடுத்தார்.
தேவாலயத்திற்கு வெளியே ஒதுக்கப்பட்டுக் கிடந்த குறையுள்ளவர்களை தேவனே தேடித் தொட தன் குமாரனை அனுப்பினாரே. தேவாலயத்திற்குள் வர இயலாத குஷ்டரோகிகள் இயேசுவால் தொடப்;பட்டனர். ஜனங்களால் இதனை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. பாளையத்திற்குப் புறம்பாயிருந்தவர்களின் பக்கத்தில் சென்றார்; அவர்களும் மக்களே என்பதை மக்களுக்கு உணர்த்தினார். நிறைவானவர்களுக்குச் சமமாய் குறைவானர்களைச் சுகமாக்கி நிறுத்தினார்.
அப்போஸ்தலர்களும் இதையே செய்தனர்; மனிதர்கள் பிரவேசிக்கும் ஆலயத்திற்குள் பிரவேசிக்க முடியாமல் பிச்சை எடுத்துக்கொண்டிந்தான் சப்பாணி ஒருவன். பேதுருவும், யோவானும் தேவாலயத்திற்கு வருவதைக் கண்ட அவன், அவர்களிடத்தில் பிச்சை கேட்டபோது, தேவாலயத்திற்குள் பிரவேசிக்கும் மாபெரும் தேவ பிச்சை அவனுக்குக் கிடைத்தது. 'வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சப்பாணியாய் பிறந்த மனிதனை பேதுரு வலதுகையினால் பிடித்துத்தூக்கிவிட்டான்; உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலன்கொண்டது.'(அப் 3:6,7)
ஆலயத்தின் வாசலுக்கு வெளியே நிறுத்தப்பட்ட அவன் குதித்தெழுந்து நின்று நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடனேகூடத் தேவாலயத்திற்குள் பிரவேசித்தான்.(அப் 3:8)
ஜனக்கூட்டத்தினிமித்தம் அவருக்குச் சமீபமாய்ச் சேரக்கூடாமல், அவர் இருந்த வீட்டின் மேற்கூரையைப் பிரித்துத் திறப்பாக்கி, திமிர்வாதக்காரன் கிடக்கிற படுக்கையை இறக்கினார்கள் மனிதர்கள் (மாற் 2:4), ஆனால் சப்பாணியான இவனையோ தேவாலயத்தின் வாசலிலேயே விட்டுவிட்டுச் தேவாலயத்தின் உள்ளே அவனைச் சுமந்துவந்தவர்கள் மட்டுமே சென்றனர். தேவனும், தேவாலயமான பெதஸ்தா குளத்தினுள் செல்லும் வாய்ப்பினைப் பெறாமல், சுகம் பெறும் வாசலில் சோகமான வாழ்வு இவனுக்கு; சீடர்களால் கிடைத்தது மறுவாழ்வு.
பார்வை இழந்தோர்
அப்பொழுது இயேசு: காணாதவர்கள் காணும்படியாகவும், காண்கிறவர்கள் குருடராகும்படியாகவும் நியாயத்தீர்ப்புக்கு நான் இந்த உலகத்தில் வந்தேன் என்றார். (யோவா 9:39)
உண்மையான ஊனம், உண்மையான குருட்டுத்தன்மை என்னவென்றே தெரியாமல், சதையின் ஊனத்தையே மனதில் கொண்டு தனது வாழ்க்கைக் கதையை முடித்துவிடும் மக்கள் ஏராளம். கண் தெரியும் குருடர்கள், காது கேட்கும் செவிடர்கள் என தேவனின் கணக்கு வித்தியாசமானது.
செவிடரே, கேளுங்கள்; குருடரே, நீங்கள் காணும்படி நோக்கிப்பாருங்கள் (ஏசா 42:18) என்ற தேவனின் வார்த்தை உண்மையையும், ஊனத்தின் தன்மையினையும் உணர்த்துகின்றதே. கண் தெரியாதவர்கள்தான் குருடர்கள் என்று நினைத்துக்கொண்டிருந்த உலத்தைப் பார்த்து, 'என் தாசனையல்லாமல் குருடன் யார்? நான் அனுப்பிய தூதனையல்லாமல் செவிடன் யார்? உத்தமனையல்லாமல் குருடன் யார்? கர்த்தருடைய ஊழியக்காரனையல்லாமல் அந்தகன் யார்?' (ஏசா 42:19) என்கிறாரே! கண்களிருந்தும் குருடராயிருக்கிற ஜனத்தையும், காதுகளிருந்தும் செவிடராயிருக்கிறவர்களையும் புறப்பட்டு வரப்பண்ணுங்கள் (ஏசா 43:8) என்று கண்கள் இருப்போரையே கைப்பிடித்து நடத்த ஓர் அழைப்பு.
அவர்களை விட்டுவிடுங்கள், அவர்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள் (மத் 15:14). குருடரான வழிகாட்டிகளே! (மத் 23:16). மதிகேடரே, குருடரே! எது முக்கியம்? பொன்னோ, பொன்னைப் பரிசுத்தமாக்குகிற தேவாலயமோ? (மத் 23:17). மதிகேடரே, குருடரே! எது முக்கியம்? காணிக்கையோ, காணிக்கையைப் பரிசுத்தமாக்குகிற பலிபீடமோ? (மத் 23:19). குருடரான வழிகாட்டிகளே, கொசுயில்லாதபடி வடிகட்டி, ஒட்டகத்தை விழுங்குகிறவர்களாயிருக்கிறீர்கள். (மத் 23:24). குருடரான வழிகாட்டிகளே, கொசுயில்லாதபடி வடிகட்டி, ஒட்டகத்தை விழுங்குகிறவர்களாயிருக்கிறீர்கள் (மத் 23:24). குருடனான பரிசேயனே! போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு (மத் 23:26) போன்ற சவாலான பிரசங்கங்கள் கண்கள் இருந்த, பார்வை தெரிந்த குருடர்களுக்கே சொல்லப்பட்டவைகள்.
குருடன் பார்வையடைந்தபோது கூட இயேசுவை ஏற்றுக்கொள்ள இயலாமல், குருடனாயிருந்து இயேசுவால் சுகமாக்கப்பட்ட மனிதனை அழைத்து: நீ தேவனை மகிமைப்படுத்து; இந்த மனுஷன் பாவியென்று நாங்கள் அறிந்திருக்கிறோம் என்றார்கள் (யோவா 9:24). தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும் பொருட்டு இப்படிப் பிறந்தான் (யோவா 9:2,3) என்றுதான் இயேசுவும் சொல்லியிருந்தார்; வெறுத்தவர்கள் வாயினாலே 'தேவ நாமமும் மகிமைப்பட்டது'.
தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான் (2கொரி 4:4) என்றும், இவைகள் இல்லாதவன் எவனோ, அவன் முன்செய்த பாவங்களறத் தான் சுத்திகரிக்கப்பட்டதை மறந்து கண்சொருகிப்போன குருடனாயிருக்கிறான் (2பேது 1:9) என்றும், தன் சகோதரனைப் பகைக்கிறவன் இருளிலே இருந்து இருளிலே நடக்கிறான்; இருளானது அவன் கண்களைக் குருடாக்கினபடியால் தான் போகும் இடம் இன்னதென்று அறியாதிருக்கிறான் (1யோவா 2:11) என்றும், அவர்கள் கண்களினால் காணாமலும், இருதயத்தினால் உணராமலும், குணப்படாமலும் இருக்கும்படிக்கும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமல் இருக்கும்படிக்கும், அவர்களுடைய கண்களை அவர் குருடாக்கி, அவர்கள் இருதயத்தைக் கடினமாக்கினார்; (யோவா 12:40) என்றும், நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதைஅறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும், சொல்லுகிறபடியால் (வெளி 3:17) என்றும், உண்மையாகக் குருடாக்கப்பட்டவர்களையும், குருடராக வாழ்பவர்களையும் அடையாளம் காட்டிக்கொடுக்கிறது வேதம்.
அப்பொழுது இயேசு: காணாதவர்கள் காணும்படியாகவும், காண்கிறவர்கள் குருடராகும்படியாகவும் நியாயத்தீர்ப்புக்கு நான் இந்த உலகத்தில் வந்தேன் என்றார் இயேசு. (யோவா 9:39) அவருடனேகூட இருந்த பரிசேயரில் சிலர் இவைகளைக் கேட்டபொழுது: நாங்களும் குருடரோ என்றார்கள். (யோவா 9:40)
Comments
Post a Comment