ஊழியனே உனக்குத்தான்
தேவனுடனான நம்முடைய உறவின் பெலத்தை வீணாகச் செலவிடச் செய்கிறவன் சாத்தான். இயேசு நாற்பது நாள் உபவாசமாயிருந்த பின்பு, பிசாசு அவரிடத்தில் வந்து, 'நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படிச் சொல்லும்' (மத். 4:2,3) என்று சொன்னான். ஜீவ அப்பமாகவும், ஆத்துமாக்களை தேவனுக்கேற்ற அப்பங்களாகவும் மாற்ற உலகத்திற்கு வந்த இயேசுவை, கல்லுகளை அப்பங்களாக்கும் பணியினைச் செய்யத் தூண்டுகின்றான் சாத்தான். எத்தனை இழிவான நிலைக்குத் தள்ள பிசாசு எத்தனிக்கின்றான். தேவனுடைய வார்த்தையே ஒரு மனிதனைப் போஷித்துவிடும் வலிமையுடையது என்பதை இயேசு சாத்தானுக்குப் புரியவைத்தாரே. ஆத்துமாக்களுக்காக உபயோகப்படுத்தவேண்டிய வார்த்தையை கல்லுகளுக்கு உபயோகப்படுத்தத் தூண்டினானே சாத்தான். தேவ ஊழியர்களாக நாம் இருப்போமென்றால், ஆத்துமாக்களுக்குச் செலவு செய்வதிலேயே முனைந்து நிற்போம். தேவன் தரும் பணங்களை, பொருட்களைக் கொண்டு ஆத்துமாக்களைச் சம்பாதிப்போம். எனவே பவுல், நான் உங்களில் எவ்வளவு அதிகமாய் அன்புகூருகிறேனோ அவ்வளவு குறைவாய் உங்களால் அன்புகூரப்பட்டிருந்தாலும், மிகவும் சந்தோஷமாய் நான் உங்கள் ஆத்துமாக்களுக்காகச் செலவுபண்ணவும் செலவுபண்ணப்படவும் விரும்புகிறேன் (2கொரி 12:15) என்று எழுதுகின்றார். ஊழியத்திற்காக வரும் பணத்தில் உயர்ந்த மாளிகை வேண்டாமே, ஊழியத்திற்காக வரும் பணத்தில் உல்லாசம் வேண்டாமே, ஊழியத்திற்காக வரும் பணத்தில் ஊதாரித்தனம் வேண்டாமே. அநேக ஊழியங்களில் கல்லுகள்தான் முடிவில் அப்பங்களாக நிற்கின்றன; ஆத்துமாக்களைக் காணோம். கோடிக்கணக்கான பணங்களை கட்டிடங்களுக்குச் செலவிட்டு, ஆத்துமாக்களின்றி கைதட்டிக்கொண்டிருக்கும் நிலைக்கு சத்துரு நம்மைத் தள்ளிவிடாதபடிக்கு நாம் எச்சரிக்கையாயிருப்போம். நம்முடைய வேலைப்பாடுகள் வெளியாகும் நாள் வருகின்றது, ஒருவன் கட்டினது நிலைத்தால், அவன் கூலியைப் பெறுவான். ஒருவன் கட்டினது வெந்துபொனால், அவன் நஷ்டமடைவான்; அவனோ இரட்சிக்கப்படுவான்; அதுவும், அக்கினியிலகப்பட்டுத் தப்பினதுபோலிருக்கும் (1கொரி. 13-15). ஊழியர்கள் எதைக் கட்டினார்கள் என்பது இறுதியில்தான் தெரியும்; ஆத்துமாக்களைக் கட்டியெழுப்பியிருந்தால் ஆத்துமாக்கள் இருக்கும், கற்களைக் கட்டியெழுப்புவதிலேயே கவனமாயிருந்தால் கற்களே மிஞ்சி நிற்கும். கல்லுகளை அப்பங்களாக மாற்றும் 'உணவு திட்டத்தின்' ஊழியர்களாக நாம் மாறிவிடாதபடிக்கு எச்சரிக்கையாயிருப்போம்.
சாத்தான் இயேசுவை எருசலேமுக்குக் கொண்டுபொய், தேவாலயத்து உப்பரிக்கையின்மேல் அவரை நிறுத்தி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இங்கேயிருந்து தாழக்குதியும். ஏனெனில், உம்மைக் காக்கும்படிக்குத் தம்முடைய தூதர்களுகு;கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார் என்றும் எழுதியிருக்கிறது என்று சொன்னான் (லூக். 4:8,9). சாத்தானின் அந்த வார்த்தைகள், பெலத்தை நிரூபிக்க அல்ல பரீட்சை பார்ப்பதற்கே என்பதை இயேசு அறிந்துகொண்டார். இதுபோன்று, இன்று நம்மிடம் சத்துரு கொண்டுவரும் சவால்களை நம்மால் அடையாளம் கண்டுகொள்ள முடிகிறதா? இல்லையென்றால், சாத்தானின் சத்தத்திற்குச் செவிகொடுத்து, பெலத்தை நிரூபிக்கத் துணிந்து, பெலவீனர்களாகிவிடுகின்றோமா? உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார் (யாத். 20:7) என்றல்லவா கர்த்தர் உரைக்கின்றார். அத்துடன், வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் (மத். 12:36) என்றும் இயேசு போதித்தாரல்லவா. எனவே பவுல், 'மற்றப் புறஜாதிகள் தங்கள் வீணான சிந்தையிலே நடக்கிறதுபோல நீங்கள் நடவாமலிருங்கள்' (எபே. 4:17) என்று எபேசியருக்கு எழுதுகின்றாரே. கர்த்தருடைய பெலத்தை வீணாகச் செலவிட சாத்தான் பல வழிகளில் நம்மைத் துண்டுவான். ஊழியத்திற்கு வரும் பணத்தைக் கொண்டு ஊழியம் செய்யாமல், வேறு பல காரியங்களைச் செய்ய சத்துரு திட்டங்கள் பலவற்றைத் தருவான். இத்தகைய சத்துருவின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து, சத்துருவின் திட்டங்களைச் செய்துகொண்டிருக்கும் ஊழியர்கள் அநேகர். 'கர்த்தருடைய ஊழியம்' என்ற பெயரில் ஊழியங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோதிலும், ஊழியத்திற்கென ஜனங்கள் கொடுக்கும் பணத்தையும், பொருளையும் சத்துருவின் சத்தத்திற்கேற்க திட்டங்களைத் தீட்டி செயல்படுத்திக்கொண்டிருப்போர் அநேகர். இவைகளெல்லாம் தேவையா? சுவிசேஷம் அல்லவா முந்திப் பிரசங்கிக்கப்படவேண்டியது? சுவிசேஷகர்கள் அல்லவோ முன்னுரிமை கொடுக்கப்படவேண்டியவர்கள் என்று இத்தகைய ஊழியர்களிடம் சொன்னாலும், அவர்களிடமிருந்து வரும் பதிலோ 'இது தேவனுடைய திட்டம்' என்பதே. சத்துருவின் சத்தத்தை அடையாளம் கண்டுகொள்ளாமல், எத்தனையோ ஊழியர்கள், ஊழியப் பணங்கள், ஊழியர்களின் பெலன்கள் இன்று வீணாகிக்கொண்டிருக்கின்றன. சுவிசேஷம் அறிவிக்கவேண்டியவர்கள் சத்துருவின் சுமைகூலிகளாகிவிட்டனர்; எச்சரிப்புடன் வாழ்வோம்; எச்சரிப்புடன் ஊழியம் செய்வோம்; திட்டங்கள் தேவனுடையதா? இல்லையென்றால், உப்பரிக்கையின் மேலிருந்து நமது பெலனை வீணாக்குவதா? தேவன் நமக்குக் கொடுத்த பலனையும் பாதுகாப்பையும் வீணாக்கவேண்டும் என்பதற்காக சத்துரு கொடுக்கும் 'உப்பரிக்கை' திட்டத்தில் நாம் சிக்கிக்கொள்ளவேண்டாம்.
பிசாசு இயேசுவை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்து: இவைகள் எல்லாவற்றின்மேலுமுள்ள அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன், இவைகள் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுக்கிறேன். நீர் என்னைப் பணிந்துகொண்டால் எல்லாம் உம்முடையதாகும் என்று சொன்னான் (லூக் 4:5-7). ஆனால், இயேசுவோ அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்குப் பின்னாகப் போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார் (லூக். 4:8). 'எல்லாம் உம்முடையதாகும்' என பிசாசு குறிப்பிடுவது, ஆத்துமாக்களை அல்ல, அதிகாரத்தையும், மகிமையையுமே. ஆனால், இயேசுவோ, தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வதையே முதன்மையானதாகக் கருதினார். மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்? (மத் 16:26) என்றாரே இயேசு. ஆத்துமாக்களை ஆதாயப்படுத்தாமல், ஆதாயத்துக்காக சத்துரு தரும் திட்டங்களில் சிக்கிக்கொண்டு ஊழியத்தின் பாதையில் முன்னேற முடியாமல், தேவ திட்டங்களைச் செயல்படுத்த முடியாமல் இருக்கும் ஊழியர்கள் அநேகர். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும் (மத் 6:33) என்பதல்லவோ இயேசுவின் போதனை. மனந்திரும்புதலைக் குறித்து ஊர் ஊராகப் பிரசங்கித்தார் இயேசு, அப்படியிருந்தும், நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை (மத் 8:20) என்பதுதானே அவரது நிலை. மரியாதையும், மகிமையும் கிடைக்கவேண்டும் என்பதற்காகவும், உயர்ந்த இடத்தில் தான் இருக்கவேண்டும் என்பதற்காகவும், அதிகாரமுள்ளவர்களாக மாறவேண்டும் என்பதற்காகவும், சத்துரு தரும் 'உயர்ந்த மலைத்'திட்டத்தில் சிக்கிக்கொள்ளவேண்டாம்.
Comments
Post a Comment