பயணம்
அனுமதியோடு மாத்திரமல்ல, ஆண்டவரையும் உடன் அழைத்துச் சென்றால் மாத்திரமே, இடறினையும் தாண்டி அழைப்பினை தொடர்ந்து நிறைவேற்ற இயலும். தீர்க்கதரிசிகளின் புத்திரர் எலிசாவை நோக்கி: இதோ, நாங்கள் உம்முடன் குடியிருக்கிற இந்த இடம் எங்களுக்கு நெருக்கமாய் இருக்கிறது. நாங்கள் யோர்தான்மட்டும் போய் அவ்விடத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு உத்திரத்தை வெட்டி, குடியிருக்க அங்கே எங்களுக்கு ஒரு இடத்தை உண்டாக்குவோம் என்று சொன்னபோது, எலிசாவோ 'போங்கள்' (2இரா 6:2) என்று அவர்களுக்கு அனுமதி அளித்தான். என்றாலும், அவர்களுள் ஒருவனோ, 'நீர் தயவுசெய்து உமது அடியாரோடே கூட வரவேண்டும்' என்று எலிசாவினிடத்தில் கேட்டுக்கொண்டான்; எலிசாவும், 'நான் வருகிறேன்' என்று பதிலளித்தான்' (2இராஜா. 6:3).
எல்லோரும் வெட்டிக்கொண்டிருக்கும்போது, ஒருவன் உத்திரத்தை வெட்டி விழுத்துகையில் கோடாரி தண்ணீரில் விழுந்தது; அவன் ஐயோ என் ஆண்டவனே, அது இரவலாக வாங்கப்பட்டதே என்று கூவினான் (2இராஜா. 6:5); கோடாரி தண்ணீருக்குள் விழுந்ததும் பல்வேறு சிந்தனைகள் அவனது மனதில் எழுந்திருக்கக்கூடும். நானாக சுயவிருப்பத்தின்படி புறப்பட்டு இங்கே வரவில்லையே, தேவமனிதனிடத்தில் அனுமதி பெற்றுதானே வந்தேன்! பிறரிடம் வாங்கின பொருளினாலேயே உத்திரத்தை வெட்டுவதற்குப் புறப்பட்டு வந்தேன்! ஏன் இந்த இழப்பு? என்று அவன் சிந்தித்திருக்கக்கூடும். என்றபோதிலும், தேவனுயை மனுஷன் அங்கே இருந்ததால், ஒரு கொம்பை வெட்டி, அதை அங்கே எறிந்து, அந்த இரும்பை மிதக்கப்பண்ணி,அதை எடுத்துக்கொள் என்றான்; அப்படியே அவன் தன் கையை நீட்டி அதை எடுத்துக்கொண்டான் (2இரா 6:5-7). அனுமதி மாத்திரம் போதும் என்று புறப்பட்டுவந்திருந்த அந்த தீர்க்கதரிகளின் புத்திரர்களுள் ஒருவன், எலிசாவை உடன் அழைத்துக்கொண்டுவந்தது எத்தனை நல்லது என்று அப்போது நினைத்திருப்பானே. அடுத்த உத்திரத்தையும் வெட்டுவதற்கு அவனுக்கு உற்சாகம் பிறந்திருக்குமே.
பத்து குஷ்டரோகிகள் இயேசு கிறிஸ்துவைக் கண்டதும், 'ஐயரே, எங்களுக்கு இரங்கும்' என்று சத்தமிட்டார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, 'நீங்கள் போய், ஆசாரியர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள்' என்றார். அந்தப்படி அவர்கள் போகையில் சுத்தமானார்கள் (லூக். 17:12-14). என்றபோதிலும், அவர்களில் ஒருவன் தான் ஆரோக்கியமானதைக் கண்டு, திரும்பிவந்து, உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தி, அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தினான் (லூக். 17:15,16). 'ஆசாரியர்களுக்க உங்களைக் காண்பியுங்கள்' என்றார் இயேசு கிறிஸ்து; திரும்பி வந்த அந்த மனிதனோ 'பிரதான ஆசாரியனாம் இயேசு கிறிஸ்துவினிடத்திலேயே' தான் சுத்தமானதைக் காட்டிவிட்டானே. 'சுகமானால் மாத்திரம் போதாது சுகமாக்கியவரும் வேண்டும்.' 'உமது நாமத்தில்தான் சுகமானோம், உமது நாமத்தில்தான் எங்களிடத்திலிருந்து பிசாசுகள் விரட்டப்பட்டது, உமது நாமத்தில்தான் எங்களுடைய வாழ்க்கையில் அற்புதங்கள் நடந்தது' என்று சொல்வதனால் நாம் பரலோகத்திற்குள் பிரவேசித்துவிட முடியாது.
தேவனுடைய அனுமதியைப் பெற்றே இன்றும் அநேகர் ஊழியத்திற்குள் அடியெடுத்துவைக்கின்றனர்; அனுமதி என்பது அழைப்பின் ஓர் பகுதியே; என்றபோதிலும், அழைக்கப்பட்டவர்கள் அவரையும் அழைத்துக்கொண்டு சென்றால் மாத்திரமே போர்முனையின் இழப்புகளை ஈடுகட்ட இயலும். ஆத்துமாக்களை ஆதாயம் செய்ய அழைப்பு பெற்று, அதற்காக பிறரிடத்தில் பொருட்களை வாங்கிக்கொண்டு நாம் புறப்பட்டுச் சென்றாலும், நம்மை நம்பி பிறர் கொடுக்கும் உதவிகள் தண்ணீரில் மூழ்விவிடக்கூடாது; மாறாக, பொக்கிஷமாக பரலோகத்தில் சேரவேண்டும். மேலும், ஜலத்தின் மேல் நடந்துகொண்டிருந்த பேதுரு, காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு, பயந்து, அமிழ்ந்துபோகையில்: ஆண்டவரே, என்னை இரட்சியும் என்று கூப்பிட்டான். உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து: அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய் (மத். 14:29-31) என்று தூக்கிவிட்டாரே. 'நம்முடைய வாழ்க்கையில் உண்டாகும் அற்பவிசுவாசம் எந்நேரமும் நம்மை தண்ணீரில் மூழ்கச்செய்துவிடக்கூடியது.' கோடாரி மூழ்கினதைப் போல, ஆத்துமாக்களை ஆதாயம் செய்யவேண்டுமென்று புறப்பட்டுச் சென்ற நம்முடைய வாழ்க்கை பல்வேறு சூழ்நிலைகளினால், போராட்டங்களினால் மூழ்கும் நிலை உண்டானாலும், உடனிருந்து நம்மை மீட்டெடுக்கவும், மிதக்கச்செய்யவும் அவர் வேண்டுமே.
Comments
Post a Comment