Skip to main content

வேலிகளா? போலிகளா?

 

வேலிகளா? போலிகளா?



நம்மிடத்திலிருக்கும் விலைமதிப்புள்ளவைகளை அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக விலைமதிப்பில்லாதவைகளை வைத்துவிட விரும்புபவன் சத்துரு; அப்படியே, மனிதர்களையும், சபைகளையும், ஊழியர்களையும், ஊழியங்களையும் மனிதர்களுடைய பார்வைக்குப் பசுமையாகவும் பரத்தின் பார்வையிலோ பட்டுப்போன மரம்போலவும் மாற்றிவிட விரும்புபவன். சத்துரு உள்ளே நுழைந்துவிடாதபடி வேலிகளாயிருப்பவைர்களை விரட்டிவிட்டு, போலிகளால் தோட்டத்தை நிரப்பி, கர்த்தருடைய பார்வையில் 'கனி இல்லாத மரத்தைப் போல' காலியாக வைத்துவிட முயற்சிப்பவன் சத்துரு. மேலும், வேலிகளுக்குள் இருக்கும் பொக்கிஷங்களையும் மற்றும் பொக்கிஷங்கள்; போன்றவர்களையும் வெளியேற்றிவிட்டு, 'வெள்ளையடிக்கப்பட்ட கல்லறையைப் போல' வெளிப்புறத்தில் பொய்த் தோற்றத்தை உண்டாக்கிவிட விரும்புபவன். சத்துருவின் இத்தகைய சதித்திட்டத்திற்கு நாம் எச்சரிக்கையாயிருந்து எதிர்த்து நின்றால், வெள்ளாண்மையான விளைச்சலை மாத்திரமல்ல, விளைந்த கதிர்களை அறுக்கும்படியாக வந்த அர்ப்பணிப்புள்ள வேலைக்காரர்களையும் இழந்துவிடாது காத்துக்கொள்ளலாம். 

தனக்கு எதிர்த்து நிற்பவர்களை எல்லையை விட்டு வெளியேற்றிவிட்டால், உள்ளே நுழைந்து தாக்குவது எதிரிக்கு எளிதாகிவிடுமே; 'பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள்' என்ற பவுலின் ஆலோசனையை வாழ்க்கையில் அப்பியாசப்படுத்தும் மக்களை அப்புறப்படுத்திவிட்டால், அதிகாரம் அப்புறம் தன்னுடைய கைகளில் வந்துவிடுமே என்ற சத்துருவின் திட்டத்திற்கு நாம் இடங்கொடுத்துவிடாதபடி கவனமாயிருப்போம். தான் உட்புக இயலாத எல்லைகளுக்குள், தனக்கு அடிமையாயிருப்பவர்களின் உதவியோடு, அவர்களின் உள்ளத்தின் வழியாக உள்ளே நுழைந்துவிடும் சத்துருவின் வாசல்களை அடையாளம் கண்டுகொண்டு நாம் அடைக்காவிட்டால், நாட்கள் வரும்போது அத்தனையும் சத்துருவுடையதாகிவிடும் என்பதில் சந்தேகமில்லை. அர்ப்பணித்தோரை அணைத்துவிட சத்துரு செய்யும் யுக்திகளுக்கு எதிர்த்து யுத்தம் செய்து, நம்முடைய கரங்களில் கொடுத்த ஊழியத்தைக் காத்துக்கொள்வது நம்முடைய கடமை.

தாவீது தேவனுடைய ஆலயத்திற்காக பொருட்களைச் சேர்த்துவைத்தான். நான் என்னாலே இயன்றமட்டும் என் தேவனுடைய ஆலயத்துக்கென்று பொன் வேலைக்குப் பொன்னையும், வெள்ளி வேலைக்கு வெள்ளியையும், வெண்கல வேலைக்கு வெண்கலத்தையும், இரும்பு வேலைக்கு இரும்பையும், மரவேலைக்கு மரத்தையும், பதிக்கப்படத்தக்க காந்தியுள்ள கற்களையும், பலவருணக் கற்களையும், விலையேறப்பெற்ற சகலவித ரத்தினங்களையும், வெண்கற்பாளங்களையும், கோமேதக முதலிய கற்களையும் ஏராளமாகச் சவதரித்தேன் (1 நாளா 29:2) என்கிறான் தாவீது. 

தாவீதின் குமாரனான சாலொமோனோ சேர்த்துவைக்கப்பட்ட பொருட்களினால் தேவாலயத்திற்குத் தேவையான பரிசைகளையும், பணிமுட்டுகளையும் மற்றும் ஏனைய பொருட்களையும் செய்தான். 'கேதுரு மரம்' 'தேவதாரு விருட்சங்கள்' 'ஒலிவ மரம்' போன்ற விலையுயர்ந்த மரங்களையும், விலைமதிப்புடைய கற்களையும், பொன்னையும் உபயோகித்து, மாளிகைகளையும், தேவனுக்கென்று ஓர் ஆலயத்தையும் கட்டி முடித்தான் (1 இராஜா. 6-ம் அதிகாரம்). ராஜாவாகிய சாலொமோனுக்கு இருந்த பானபாத்திரங்களெல்லாம் பொன்னும், லீபனோன் வனம் என்கிற மாளிகையின் பணிமுட்டுக்களெல்லாம் பசும்பொன்னுமாயிருந்தது; ஒன்றும் வெள்ளியினால் செய்யப்படவில்லை; சாலொமோனின் நாட்களில் வெள்ளி ஒரு பொருளாய் எண்ணப்படவில்லை (1இரா 10:21) என்றே வாசிக்கின்றோம்.

கர்த்தருக்கென்று ஆலயத்தைக் கட்டினபோது, கேதுருப்பலகைகளையும், தேவதாரி விருட்சங்களையும், ஒலிவ மரங்களையும்  உபயோகித்தே ஆலயத்திற்கான வாசல்களையும், நிலைகளையும், கதவுகளையும், ஜன்னல்களையும், மேல்மச்சையும், உட்புறத்தையும், தளத்தையும், மறைப்பையும், சந்நிதி ஸ்தானத்தையும், பலிபீடத்தையும், கேருபீன்களையும் (1இரா 6-ம் அதி.) செய்ததோடு, பணிதீhந்து கொண்டுவரப்பட்ட கற்களாலேயே ஆலயத்தைக் கட்டினான் (1 இரா. 6:7), ஆலயம் முழுவதையும் பொன்தகட்டால் மூடி, சந்நிதி ஸ்தானத்திற்கு முன்பாக இருக்கிற பலிபீடத்தை முழுவதும் பொன்தகட்டால் மூடினான். (1 இரா 6:22) இத்தனை அங்குலம் அங்குலமாக கர்த்தருக்காக அழகுபார்த்துக் கட்டப்பட்ட தேவாலயத்தை அடையாளம் காணக்கூடாதபடி அழித்துவிடவேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டான் சத்துரு. 

ராஜாவாகிய சாலொமோன், பார்வோனின் குமாரத்தியை நேசித்ததுமல்லாமல், மோவாபியரும், அம்மோனியரும், ஏதோமியரும், சீதோனியரும், ஏத்தியருமாகிய அந்நிய ஜாதியாரான அநேகம் ஸ்திரீகள்மேலும் ஆசைவைத்ததினால் (1 இரா 11:1), சாலொமோன் கட்டின ஆலயத்திற்கு எதிராக சாலொமோனையே செயல்படும்படிச் செய்துவிட்டான். ஸ்திரீகள் அவன் இருதயத்தை வழுவிப்போகப் பண்ணினதினால் (1இரா 11:3), சீதோனியரின் தேவியாகிய அஸ்தரோத்தையும், அம்மோனியரின் அருவருப்பாகிய மில்கோமையும் பின்பற்றினதோடு (1இரா 11:5), எருசலேமுக்கு எதிரான மலையிலே மோவாபியரின் அருவருப்பாகிய காமோசுக்கும், அம்மோன் புத்திரரின் அருவருப்பாகிய மோளோகுக்கும் மேடையைக் கட்டினான் (1இரா 11:7). கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நீங்கள் அவர்களண்டைக்கும் அவர்கள் உங்களண்டைக்கும் பிரவேசிக்கலாகாது; அவர்கள் நிச்சயமாய்த் தங்கள் தேவர்களைப் பின்பற்றும்படி உங்கள் இருதயத்தைச் சாயப்பண்ணுவார்கள் என்று சொல்லியிருந்தார்; சாலொமோன் அவர்கள்மேல் ஆசைவைத்து, அவர்களோடு ஐக்கியமாயிருந்ததினால் (1இரா 11:2) அவர்கள் சாலொமோனைச் சாயப்பண்ணினார்கள். 

பெரிய காரியங்களைச் செய்யும்படியாக கர்த்தர் நம்மை தெரிந்தெடுத்திருக்கக்கூடும்; என்றபோதிலும், அந்தக் காரியத்தைச் செய்துமுடித்த பின், ஊழியத்தைக் கட்டியெழுப்பின பின், அதே கரங்களைக் கொண்டே அதனைக் கவிழ்த்துப்போடுவதற்காக சத்துரு முயற்சி செய்வான். தேவனுக்கென்று கட்டின ஆலயத்திற்கு எதிராகவே, அந்நிய தெய்வங்களுக்கும் கோவில்களையும் கட்டினானே சாலொமோன். இன்றைய நாட்களிலும், கர்த்தருக்காக கட்டின அதே கரங்களினாலேயே, சத்துருவுக்காகவும் கட்டிக்கொண்டிருக்கும் ஊழியர்கள் உண்டு. கர்த்தரைவிட்டு நாம் பின்வாங்குவோமென்றால், சத்துரு ஊடுருவும் வழியினை அறிந்துகொண்டு அடைக்காவிட்டால், அனைத்தும் உருக்குலைந்துபோய்விடும். 

எனவே, ஊழியத்தின் பாதையில் நாம் கவனமாயிருக்கவேண்டிய அவசியம் உண்டு. கிறிஸ்தவர்கள்தான் என்றாலும், அவர்களது ஆசையும், விருப்பமும் நமது தரிசனத்திற்கு விரோதமானதாக இருக்கக்கூடும்; அப்படிப்பட்டவர்கள்மேல் ஆசைவைத்து, அவர்களோடு நாம் ஐக்கியமாயிருப்போமென்றால், அவர்கள் நம்முடைய கரங்களை 'தரிசனத்திற்கு விரோதமானவைகளைக்' கட்ட உபயோகித்துவிடுவார்கள். தரிசனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், தடம்மாறிச் சென்றுகொண்டிருக்கும் ஊழியங்கள் இந்த நாட்களில் ஏராளம். ஆண்டவரை சரிவர புரிந்துகொள்ளாத மக்களால், ஆலோசனை என்ற பெயரில், 'தரிசனத்திற்கு எதிரான புயல்காற்று' ஊழியத்திற்கு எதிராக வீசக்கூடும்; என்றாலும், நம்முடைய அஸ்திபாரம் உறுதியாயிருந்தால், அசையாது. 

சாலொமோனின் குமாரனான ரெகொபெயாமின் நாட்களில், தேவனுடைய ஆலயத்தையே அந்நிய அரசன் கொள்ளையடித்துவிட்டான். ரெகொபெயாம் ராஜ்யபாரம்பண்ணும் ஐந்தாம் வருஷத்திலே, எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் எருசலேமுக்கு விரோதமாய் வந்து,  கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களையும், ராஜாவுடைய அரமனையின் பொக்கிஷங்களையும், சாலொமோன் செய்வித்த பொன் பரிசைகள் ஆகிய சகலத்தையும் எடுத்துக்கொண்டு போய்விட்டான் (1இரா 14:25-26). எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் வந்து கர்த்தருடைய ஆலயத்தின் பொன்னையும் மற்றும் கொருட்களையும் எடுத்துச் சென்றபோது, அவைகளுக்குப் பதிலாக ராஜாவாகிய ரெகொபெயாம் வெண்கலப் பரிசைகளைச் செய்வித்து, அவைகளை ராஜாவின் வாசற்படியைக் காக்கிற சேவகருடைய தலைவரின் கையில் ஒப்;பித்தான் (1 இராஜா. 14:27). 

நம்முடைய ஊழியங்கள் வருங்காலங்களில் இப்படிப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்டுவிடக்கூடாது. சபையையோ, ஊழியத்தினையோ தொடங்கும்போது,  அர்ப்பணிக்கப்பட்ட, அழைப்பு பெற்ற, பொன்னைப் போன்று புடமிடப்பட்ட மனிதர்களையும் (யோபு 23:10), அபிஷேகத்தை இறங்கப்பண்ணும் ஒலிவமரங்களைப் போன்ற மனிதர்களையுமே (சகரி. 4:14) உடன்வைத்துக்கொள்ள ஊழியர்கள் விரும்புகின்றனர்; அப்படிப்பட்ட மனிதர்களையே தேடித் தேடி தங்களோடு குழுவில் இணைத்துக்கொண்டு, சபையையும், ஊழியத்தையும் ஆண்டவருக்குப் பிரியமானபடி கட்டியெழுப்புகின்றனர். ஆனால் சத்துருவோ, சபையிலும், ஊழியத்திலும் பொன்னைப்போலவும், வெள்ளியைப் போலவும், தேவதாரு விருட்சங்களைப்போலவும், ஒலிவமரத்தைப் போலவும் இருக்கும் அர்ப்பணிப்புள்ள மனிதர்களை அகற்றிவிட்டு, அவர்களுக்குப் பதிலாக போலியான மனிதர்களால் இடத்தை நிரப்பிவிட நினைக்கின்றான். பரம தரிசனத்திற்கும், ஊழிய பாரத்திற்கும், அபிஷேகத்திற்கும், அர்ப்பணிப்பிற்கும், சுவிசேஷம் அறிவிப்பதற்கும், ஆத்தும பாரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து ஆரம்ப நாட்களில் முன்னேறிய பல ஊழியங்கள், சத்துருவின் ஊடுருவலைக் கண்டுகொள்ள இயலாததினால், பரம தரிசனமில்லாத, ஊழியபாரமில்லாத, அபிஷேகமில்லாத, அர்ப்பணிப்பில்லாத, சுவிசேஷம் அறிவிக்க இயலாத, ஆத்தும பாரமில்லாத வெண்கலம் போன்ற மனிதர்களை உள்ளே நுழைத்து, நோக்கத்தையே நொறுக்கிவிட்டன. 

ஆலயம் கட்டப்படுகையில், அது பணிதீர்ந்து கொண்டுவரப்பட்ட கற்களாலே கட்டப்பட்டது; ஆகையால் அது கட்டப்படுகிறபோது, சுத்திகள் வாச்சிகள் முதலான எந்த இருப்பு ஆயுதங்களின் சத்தமும் அதிலே கேட்கப்படவில்லை (1இரா 6:7). ஆனால், சத்துருவோ பணிதீராத கற்களைப் போன்ற மனிதர்களைக் கொண்டுவந்து, ஊழியத்தின் உள்ளே நுழைத்து, 'சத்தங்களைக் கேட்கச்செய்துவிடுகின்றான்; உறவுகளிலே உரசல்களை உண்டாக்குகின்றான்.' மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது (கலா 5:17) என்ற நிலையிலும், இயேசு அவர்கள் சிந்தனைகளை அறிந்து, அவர்களை நோக்கி: தனக்குத் தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாய்ப்போம்; தனக்குத்  தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்தப் பட்டணமும் எந்த வீடும் நிலைநிற்கமாட்டாது (மத் 12:25) என்ற நிலையிலும் சபையையும், ஊழியத்தையும் கொண்டுவந்து நிறுத்திவிடுகின்றான். வேர்களை வெட்டும், சத்துருவை அடையாளம் கண்டுகொண்டால், வேர்களை மாத்திரமல்ல, வேர்கள் தாங்கியிருக்கும் கிளைகளையும், இலைகளையும், கனிகளையும் கூட நாம் காத்துக்கொள்ள முடியும்.

நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை (மத் 16:18) என்று இயேசு கிறிஸ்து சொல்லியிருப்பது உண்மையே; என்றபோதிலும், மூலைக்கல்லாகிய இயேசு கிறிஸ்துவுக்கே முக்கியத்துவம் கொடுக்காத நிலைக்குத் தங்களைத் தள்ளிக்கொண்டு, பாதாளத்தின் வாசல்கள் தங்களை மேற்கொள்ளும்படியாக தாங்களே வாசல்களைத் திறந்துவிடும் சபைகளும், ஊழியங்களும் சத்துருவின் சத்துருவின் ஆளுகைக்குள் சிக்கிக்கொள்வது நிச்சயம். தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவுந்தக்கதான மனுஷர்களை (எசே 22:30) அகற்றிவிட்டால், சுவரிலே உண்டாகும் துவாரத்தின் மூலம் சத்துரு உட்புகுந்துவிட வழி உண்டாகிவிடுமே. 

மேலும், சாலொமோனின் மகனான ரெகொபெயாமின் மகன் அபியாமின் குமாரன் ஆசா யூதாவின் மேல் ராஜாவானபோது, ஆசா தன் தகப்பனாகிய தாவீதைப்போல் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான். அவன் இலட்சையான புணர்ச்சிக்காரரை தேசத்திலிருந்து அகற்றி, தன் பிதாக்கள் உண்டுபண்ணின நரகலான விக்கிரகங்களையெல்லாம் விலக்கி,  தோப்பிலே அருவருப்பான விக்கிரகத்தை உண்டுபண்ணின தன் தாயாகிய மாகாளையும் ராஜாத்தியாய் இராதபடிக்கு விலக்கிவிட்டான்; அவளுடைய விக்கிரகத்தையும் ஆசா நிர்மூலமாக்கி, கீதரோன் ஆற்றண்டையிலே சுட்டெரித்துப்போட்டான் (1இரா 15:11-13). அவன் இருதயம் கர்த்தரோடே உத்தமமாயிருந்தது (1இரா 15:14). தன் தகப்பனும் தானும் பரிசுத்தப்படுத்தும்படி நேர்ந்துகொண்ட வெள்ளியையும் பொன்னையும் பணிமுட்டுகளையும் அவன் கர்த்தருடைய ஆலயத்திலே கொண்டுவந்தான். (1இரா 15:15)

என்றபோதிலும், இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷாவின் மேல் இருந்த பயத்தினால், கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களில் மீதியான எல்லா வெள்ளியையும் பொன்னையும், ராஜாவின் அரமனையின் பொக்கிஷங்களையும் எடுத்து, அவைகளைத் தன் ஊழியக்காரர் கையிலே தமஸ்குவிலே வாசமாயிருக்கிற எசியோனின் மகனாகிய தப்ரிமோனின் குமாரன் பெனாதாத் என்னும் சீரியாவின் ராஜாவுக்குக் கொடுத்தனுப்பி எனக்கும் உமக்கும் என் தகப்பனுக்கும் உம்முடைய தகப்பனுக்கும் உடன்படிக்கை உண்டே; இதோ, உமக்கு வெகுமதியாய் வெள்ளியையும் பொன்னையும் அனுப்புகிறேன்; இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா என்னைவிட்டு விலகிப்போகும்படிக்கு, நீர் வந்து அவனோடு செய்த உடன்படிக்கையைத் தள்ளிப்போடும் என்று சொல்லச்சொன்னான் (1இரா 15:18,19). இப்படிப்பட்ட நிலையில் இருக்கும் மனிதர்கள் இன்றும் உண்டு. தேவனோடு உத்தமமாயிருப்பார்கள்; ஆனால், பயப்படும்போது 'தேவனுக்கடுத்தவைகளை விட்டுக்கொடுத்துவிடுவார்கள்.' கர்த்தர் தனது பட்சத்திலிருக்கிறார் என்பதை மறந்து மனிதர்களது பலத்தில் சாய்ந்துகொள்பவர்கள் இவர்கள். உலகப்பிரகாரமான மனிதர்களோடு உடன்படிக்கை செய்துகொள்வதற்காக, ஆண்டவருக்குரியவர்களை விட்டுக்கொடுத்துவிடுவார்கள். தாவீது சேகரித்த பொக்கிஷங்கள், தலைமுறை தலைமுறையாக தேய்ந்துகொண்டே போய்விட்டதே; எனவே, சத்துரு வேலிக்குள் நுழைந்துவிடாமலும், வேலிக்குள் இருப்பவற்றை போலிகளாக மாற்றிவிடாமலும், காத்துக்கொள்ளவேண்டியது நம்முடைய கடமை. 

 

 

Comments

Popular posts from this blog

கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்

  கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்   வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கிறிஸ்துவின் குணங்களை வெளிப்படுத்தவேண்டியதும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டியதும் கிறிஸ்தவனின் தலையாயக் கடமை.  கிறிஸ்துவுக்குள்  வாழும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சில உண்மைகளை பவுல் எபேசு சபைக்குச் சுட்டிக்காட்டுகின்றார். கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்  (எபே. 1:3),  பாவமன்னிப்பாகிய மீட்பு  (எபே. 1:7) இவைகள் பொதிந்திருக்கின்றன. ஆனால், இவ்விரண்டிற்கும் பலர் முக்கியத்துவம் கொடுக்காமல், உலகத்தின் ஆசீர்வாதங்களையே அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். பாவமன்னிப்பினைப் பெறாமல், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறாமல், உலகத்தின் ஆசீர்வாதங்களுக்காகவே அவரின் பின்னே ஓடினால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் முடிவு பரிதாபமாகவே இருக்கும். உன்னதங்களில் உட்காரவேண்டிய நாம் உலகத்தோடு ஒட்டிவிடுவோம், மணவாளனோடு வாழவேண்டிய நாம் மண்ணுக்காக வாழ்ந்துவிடுவோம். கிறிஸ்துவிடம் பிரதானமாய் பாவமன்னிப்பையே முதலில் பெற நாடுவோம்; அதற்காகத்தானே பிதா இயேசுவை இந்த பூமியில் அனுப்பினார். எனவே, பிதாவின் பி...

இறைச்சியா? இச்சையா?

இறைச்சியா?  இச்சையா? 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்' (மத். 6:11) என்றும், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத். 6:34) என்றும் பிதாவை நோக்கி ஜெபிக்க இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக்கொடுத்திருந்தபோதிலும், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே 'உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்' (மத். 6:8) என்பதுதானே பிதாவைக் குறித்து இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிமுகம். 'முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்' (மாற். 7:27) என்பதுதான் அவரது விருப்பமும் கூட. 'வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (மத். 10:10) என்றும், 'வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (லூக். 10:7; 1தீமோ. 5:18) என்றும் நாம் வாசிக்கின்றோமே. அப்படியிருக்க, 'ஆகாரத்திற்காக வேலை' மற்றும் 'கூலிக்காக வேலை' என்ற என்ற பார்வையில் நமது பயணம் தொடர்ந்துவிடக்கூடாததல்லவா! 'இழிவான ஆதாயம்' நமது வழிகளை மாற்றிவிடக்...

வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்

  வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்   அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது,  இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.  ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்;  ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.(லூக் 4:25-27) இஸ்ரவேலின் தேவனாக இருந்தபோதிலும், இஸ்ரவேல் தேசத்திலேயே தனது குமாரனை மேசியாவாகப் பிறக்கச் செய்தபோதிலும், பஞ்ச காலத்தின்போது, இஸ்ரவேலருக்குள் இருந்த அநேகம் விதவைகள் போஷிக்கப்படாமற்போனதற்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், ந...