பந்தியும், பணியும்
அப்பொழுது பன்னிருவரும் சீஷர் கூட்டத்தை வரவழைத்து: நாங்கள் தேவவசனத்தைப் போதியாமல், பந்திவிசாரணைசெய்வது தகுதியல்ல. (அப் 6:2)
ஆவிக்குரிய மனிதன், எந்த நிலையில் தான் வைக்கப்பட்டிருந்தாலும், வசிக்கும் சூழ்நிலைக்குள் தனது வாழ்க்கையைச் சுருக்கிக்கொள்ளமாட்டான்; மாறாக, எல்லையைக் கடந்து அவனுடைய எண்ணங்கள் எங்கும் பயணித்துக்கொண்டேயிருக்கும். ஸ்தேவானுடைய வாழ்க்கை இதற்கு ஓர் மாதிரி. அன்றாட விசாரணையில் தங்கள் விதவைகள் திட்டமாய் விசாரிக்கப்படவில்லை என்று கிரேக்கர்கள் முறுமுறுத்தபோது (அப். 6:1), அப்போஸ்தலர்களுடைய ஆலோசனையின்படி, முறுமுறுத்தவர்களாலேயே முன்நிறுத்தப்பட்ட ஏழு மனிதர்களில் இருவர் ஸ்தேவான் மற்றும் பிலிப்பு (அப். 6:5). ஸ்தேவானைக் குறித்து, ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்தவனாய் ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான் (அப். 6:7,8) என்றும், அவன் பேசின ஞானத்தையும் ஆவியையும் எதிர்த்துநிற்க அவர்களால் கூடாமற்போயிற்று (அப் 6:10) என்றும், ஆலோசனைச் சங்கத்தில் உட்கார்ந்திருந்த அனைவரும் அவன்மேல் கண்ணோக்கமாயிருந்து, அவன் முகம் தேவதூதன் முகம்போலிருக்கக் கண்டார்கள் (அப். 6:15) என்றும் ஜனங்கள் மூர்க்கமடைந்து, அவனைப் பார்த்துப் பல்லைக் கடிக்கும்போதும், பரிசுத்த ஆவியினால் நிறைகின்றவன் (அப். 7:54,55) என்றும் வாசிக்கின்றோம்.
அப்படியே பிலிப்புவைக் குறித்தும், அப்பொழுது பிலிப்பென்பவன் சமாரியாவிலுள்ள ஒரு பட்டணத்திற்குப்போய், அங்குள்ளவர்களுக்குக் கிறிஸ்துவைக் குறித்துப் பிரசங்கித்தான் என்றும், பிலிப்பு செய்த அதிசயங்களை ஜனங்கள் கேள்விப்பட்டுக் கண்டு, அவனால் சொல்லப்பட்டவைகளை ஒருமனப்பட்டுக் கவனித்தார்கள் என்றும், அநேகரிலிருந்து அசுத்தஆவிகள் மிகுந்த சத்தத்தோடே கூப்பிட்டு அவர்களை விட்டுப் புறப்பட்டது. அநேகந் திமிர்வாதக்காரரும் சப்பாணிகளும் குணமாக்கப்பட்டார்கள் என்றும் அந்தப் பட்டணத்திலே மிகுந்த சந்தோஷம் உண்டாயிற்று (அப். 8:5-8) என்றும், தேவனுடைய ராஜ்யத்துக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய நாமத்துக்கும் ஏற்றவைகளைக்குறித்து, பிலிப்பு பிரசங்கித்ததை அவர்கள் விசுவாசித்தபோது, புருஷரும் ஸ்திரீகளும் ஞானஸ்நானம் பெற்றார்கள் என்றும், மாயவித்தைக்காரனாகிய சீமோனும் விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்று, பிலிப்பைப் பற்றிக்கொண்டு, அவனால் நடந்த அடையாளங்களையும் பெரிய அற்புதங்களையும் கண்டு பிரமித்தான் (அப் 8:12,13) என்றும் வாசிக்கின்றோமே.
அதுமாத்திரமல்ல, எத்தியோப்பியருடைய ராஜஸ்திரீயாகிய கந்தாகே என்பவளுக்கு மந்திரியும் அவளுடைய பொக்கிஷமெல்லாவற்றிற்கும் தலைவனுமாயிருந்த எத்தியோப்பியனாகிய ஒருவன் பணிந்துகொள்ளும்படி எருசலேமுக்கு வந்திருந்து; ஊருக்குத் திரும்பிப்போகும்போது, தன் இரதத்திலே உட்கார்ந்து, ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசித்துக்கொண்டிருந்தபோது, ஆவியானவர்: நீ போய், அந்த இரதத்துடனே சேர்ந்துகொள் என்று பிலிப்புடனே சொல்ல, பிலிப்பு ஓடிப்போய் இரதத்துடன் சேர்ந்துகொண்டது மாத்திரமல்ல, இயேசுவைக் குறித்து மந்திரிக்கு எடுத்துச் சொல்லி, ஞானஸ்நானமும் கொடுத்துவிட்டானே. (அப் 8:29)
இத்தனை குணங்களும், வல்லமையும் நிறைந்த இவர்கள், பந்திவிசாரனைக்கென்று தெரிந்துகொள்ளப்பட்டு, அப்போஸ்தலருக்குமுன்பாக நிறுத்தப்பட்டபோது, அப்போஸ்தலர்கள் ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள் (அப் 6:6). மிஷனரிகளுக்கு, ஊழியர்களுக்கு மாத்திரமே அர்ப்பணிப்பு ஆராதனை (னநனiஉயவழைn ளநசஎiஉந) நடத்திப் பழகிவிட்ட இன்றைய ஊழிய உலகில், பந்தி விசாரணை செய்பவர்களுக்கும் அர்ப்பணிப்பு ஆராதனை நடத்திய அபோஸ்தலர்களின் நடைமுறை சற்று வித்தியாசமானதே. இத்தகைய அர்ப்பணிப்பு ஆராதனை ஊழியங்களில் அனைத்து பணிகளிலும் இணையும் மனிதர்களுக்கு இன்றைய நாட்களில் அவசியமானதே.
ஸ்தேவானும், பிலிப்புவும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புக்களை சந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்டார்கள். தங்களுக்கு இருக்கும் தகுதியோடு, திறமையை வெளிப்படுத்த கொடுக்கப்படும் வாய்ப்பாகவே அதனைப் பயன்படுத்திக்கொண்டார்கள். ஸ்தேவானைப் போலவும், பிலிப்புவைப் போலவும் இத்தனை வல்லமை நிறைந்தவர்களாக ஒருவேளை நாம் காணப்படுவோமென்றால், நம்முடைய மனநிலை அப்போது எப்படியிருந்திருக்கும்? இத்தனை வேதவசனங்களை அறிந்திருந்தும், பிரசங்கிக்கும் ஞானமுடையவனாயிருந்தும், தேவனால் வல்லமையாக ஜனங்கள் மத்தியில் பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருந்தும், அற்புதங்களையும் அடையாளங்களையும் ஜனங்கள் மத்தியிலே செய்கிறவனாயிருந்தும் எனக்கு இப்படி ஒரு பொறுப்பைக் கொடுத்துவிட்டார்களே என்று பொழுதெல்லாம் பொறுமிக்கொண்டேதானிருந்திருப்போம்.
அத்தகைய மனநிலையிலிருந்து வெளிவர இயலாமல், வாழ்க்கையையே மௌனமாக்கியிருப்போம். கைகளில் இருக்கும் தாலந்துகளைப் பயன்படுத்தாமல், அவைகளைப் புதைத்துவைத்துவிட்டு முறுமுறுப்போடு வாழ்ந்துகொண்டிருந்திருப்போம். எஜமான், அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக, ஒருவனிடத்தில் ஐந்து தாலந்தும், ஒருவனிடத்தில் இரண்டு தாலந்தும், ஒருவனிடத்தில் ஒரு தாலந்துமாகக் கொடுத்து, உடனே பிரயாணப்பட்டுப் போனான். எனினும், ஒரு தாலந்தை வாங்கினவனோ, போய், நிலத்தைத் தோண்டி, தன் எஜமானுடைய பணத்தைப் புதைத்துவைத்தான் (மத் 25:15,18). அதுமாத்திரமல்ல, கணக்கு கேட்கும் வேளையில், ஒரு தாலந்தை வாங்கினவன் வந்து: ஆண்டவனே, நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவருமான கடினமுள்ள மனுஷன் என்று அறிவேன். ஆகையால், நான் பயந்து, போய், உமது தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன்; இதோ, உம்முடையதை வாங்கிக்கொள்ளும் (மத் 25:24,25) என்றே சொல்லுகின்றான். பங்கிட்டுக்கொடுத்ததில் உண்டான வித்தியாசம் ஒருவேளை ஒருதாலந்து வாங்கின மனிதனை பாதித்திருக்கக்கூடுமோ? அல்லது எல்லாருக்கும் இத்தனை கொடுத்திருக்க, எனக்கு மட்டும் ஒன்றைக் கொடுத்தது ஏன்? என்ற கேள்வி அவனது மனதில் எழுந்திருக்கக்கூடுமோ? அது அவனை தொடர்ந்து செயல்படவிடாதிருந்திருக்குமோ? இன்றும், இத்தகைய முறுமுறுப்பு நம்முடைய வாழ்க்கையில் காணப்படுமென்றால், நமக்குள் இருக்கும் வல்லமையை தொடர்ந்து செயல்படுத்த விடாதபடி அதனை முடிவுக்கும் கொண்டுவந்துவிடும். இன்றும், அமர்த்தப்பட்டிருக்கும் இருக்கையை நினைத்து நினைத்து, அழைப்பினை மறந்துபோனவர்கள் அநேகர்.
நாங்கள் தேவவசனத்தைப் போதியாமல், பந்திவிசாரணைசெய்வது தகுதியல்ல (அப் 6:2) என்று அப்போஸ்தலர்கள் சொன்னதைப் போல, பந்திவிசாரணைக்கென்று நியமிக்கப்பட்டிருக்கிற நாங்கள் தேவவசனத்தைப் போதிப்பது தகுதியல்ல என்று ஸ்தேவானும், பிலிப்புவும் சொல்லிவிடவில்லை. சுவிசேஷம் அறிவிப்பது சுவாசம் போன்றது, கைகளினால் செய்யும் வேலை அதனை கட்டுப்படுத்த முடியாது என்பதை அறிந்தவர்கள் அவர்கள்.
'தேவவசனத்தைப் போதியாமல், பந்திவிசாரணை செய்வது தகுதியல்ல' (அப். 6:2) என்ற அப்போஸ்தலர்களின் வார்த்தைகளை, 'வேத வசனத்தைப் போதியாமல், பந்திவிசாரணை மாத்திரம் செய்துகொண்டிருப்பது சரியல்ல' என்று சத்தியமாகப் புரிந்துகொண்டவர்கள். மறுநாளிலே பவுலைச் சேர்ந்தவர்களாகிய நாங்கள் புறப்பட்டுச் செசரியாபட்டணத்துக்கு வந்து, ஏழுபேரில் ஒருவனாகிய பிலிப்பென்னும் சுவிசேஷகனுடைய வீட்டிலே பிரவேசித்து, அவனிடத்தில் தங்கினோம் என்றும், தீர்கதரிசனஞ்சொல்லுகிற கன்னியாஸ்திரீகளாகிய நாலு குமாரத்திகள் அவனுக்கு இருந்தார்கள் (அப் 21:8,9) என்றுமே அவனை வர்ணிக்கிறது வேதம். 'பந்திவிசாரணைக்காரனாகிய பிலிப்பு' என்று அல்ல, 'சுவிசேஷகனான பிலிப்பு' என்றே அழைக்கப்படுகிறான். பரலோக பந்தி இவர்களாலேயே நிறையும்.
இப்படிப்பட்டவர்களே, 'பட்டயத்தைத் தங்கள் இடுப்பிலே கட்டிக்கொண்டவர்களாய் பணிசெய்பவர்கள்' (நெகே. 4:18). பணித்தளங்களிலும், அலுவலகங்களிலும், ஊழியத்தின் எந்த ஒரு சிறு பணியிலும் ஸ்தேவானைப் போன்ற, பிலிப்பைப் போன்ற மக்கள் நியமிக்கப்பட்டால் மாத்திரமே தேவவசனம் விருத்தியடையும்; இல்லையென்றால், நமது தேவை நிறைவேறும்; ஆனால், தேவராஜ்யமோ பின்தங்கிவிடும். அவரது கால்களில் பூசப்படவேண்டிய விலையேறப்பெற்ற பரிமளதைலம் (மத். 26:7), செத்த ஈக்களால் நாறிக்கெட்டுப்போய்விடக்கூடும் (பிர. 10:1). கர்த்தருடைய ஆலயம் கட்டப்படுகையில், அது பணிதீர்ந்து கொண்டுவரப்பட்ட கற்களாலே கட்டப்பட்டது (1இரா 6:7) என்றும், இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அனுதினமும் சபையில் சேர்த்துக்கொண்டு வந்தார் (அப் 2:47) என்றும் வாசிக்கின்றோமே; இது, சபைக்கும், ஸ்தாபனங்களுக்கும், அனைத்து ஊழியங்களுக்கும் பொருந்தக்கூடியதே. கழுதைக்கும் கண்ணில் தூதன் தெரிந்தால் நல்லதுதானே (எண். 22:25). நமது கட்டடம் களைகளோடு கட்டப்பட்டுவிடக்கூடாது. சரீரத்திற்கு வெளியே உபயோகிக்கவேண்டியவைகளை, சரீரத்தின் உள்ளே உணவாக்கினால், முழு சரீரமும் கெட்டுப்போய்விடுமே..
Comments
Post a Comment