Skip to main content

முதுமை

 

முதுமை

 

ஓட்டத்தைத் தொடங்கும் ஓர் வீரன், ஒரு முனையிலிருந்து மறுமுனையைச் சென்று அடைந்துவிட்டால், அவனது முகத்தில் ஆனந்தமும் களிப்பும் தென்படும். ஒரு காரியத்தின் துவக்கத்தைப் பார்க்கிலும் அதின் முடிவு நல்லதாக இருக்கவேண்டும் (பிரச. 7:8). நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன் (2தீமோ 4:7) என்பது பவுலின் வார்த்தைகள். முதிர்வயதைத் தொடும்போது, பல்வேறு சிந்தனைகள் மனதில் எழத்தொடங்குகின்றன. ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது (மத். 26:41) என்ற இயேசுவின் வார்த்தைகளை அனுபவிக்கவேண்டிய நாட்கள் அவைகள். மாம்சத்தின் பலன் ஒடுங்கும்போது, ஆவியின் பலனும் ஒடுங்கிவிடக்கூடாது. சுகவீனம் நேரிட்டாலும், வியாதியினால் பீடிக்கப்பட்டு படுக்கையில் கிடந்தாலும் அதற்கும் நமது ஆவியின் பலத்திற்கும் சம்பந்தமில்லை. ஆனால், மாம்சத்தின் பெலன் சுருங்கும்போது, ஆவியை சோர்பு நெருங்குகின்றது. இதற்கு இடம்கொடுத்துவிட்டால், ஆவியின் பலத்தை நாம் பலவீனப்படுத்திவிடுவோம். நமக்குள் வாசமாயிருக்கும் தேவனுடைய பரிசுத்த ஆவியை துக்கப்படுத்திவிடாத வாழ்க்கை வாழுவோம் (எபே. 4:30). உலகினைப் பிரிந்து, உறவினைப் பிரிந்து, பிதாவினை நெருங்கும் வேளையே முதிர்வயதின் வேளை. முதிர்வயதில் என்னைத் தள்ளிவிடாமலும், என் பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாமலும் இரும் என்றும், தேவனே இந்தச் சந்ததிக்கு உமது வல்லமையையும், வரப்போகிற யாவருக்கும் உமது பராக்கிரமத்தையும் நான் அறிவிக்குமளவும், முதிர்வயதும் நரைமயிருமுள்ளவனாகும் வரைக்கும் என்னைக் கைவிடீராக (சங். 71:9,18) என்று தாவீது ஜெபிக்கிறான். இது முதிர்வயதை எட்டும்போது நம்முடைய ஜெபமாகவும் இருக்கும். நாம் முதிர்வயதிலும் கனி தந்து, புஷ்டியும் பசுமையுமாயிருப்போம் (சங். 92:15) என்பதை அறிந்துகொள்வோம். கனிதருகிற நமது வாழ்க்கையாகிய மரத்தை தேவன் உலகத்திலிருந்து பிடுங்கி பரத்திலே நாட்டுகிறார். ஜீவ விருட்சம் இடமாற்றம் செய்யப்பட்டதுபோல, ஜீவ விருட்சத்தின் கனியைப் புசிக்கவிருக்கும் நாமும் இடமாற்றம் செய்யப்படுகின்றோம் அவ்வளவே. வெள்ளிக்கயிறு கட்டுவிடுவதைப்போல, பொற்கிண்ணி நசுங்குவதைப்போல, ஊற்றின் அருகே சால் உடைந்துபோவதைப்போல, துரவண்டையில் உருளை நொறுங்கிப்போவதைப்போல மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகிற காலம் அதுவே (பிர 12:6,7)

எனினும், நாம் முதிர்வயதை அடைந்தாலும், நடக்கவேண்டிய வழியை நாம் விட்டுவிடக்கூடாது (நீதி. 22:6); அதற்காகவே நாம் போதிக்கப்பட்டோம். கர்த்தர் ஆபிரகாமை நோக்கி: நீ சமாதானத்தோடே உன் பிதாக்களிடத்தில் சேருவாய்; நல்ல முதிர்வயதிலே அடக்கம்பண்ணப்படுவாய் (ஆதி. 15:15) என்றார். அப்படியே, நல்ல நரைவயதிலும், முதிர்ந்த பூரண ஆயுசிலும் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான் ஆபிரகாம் (ஆதி. 25:8). தானியம் ஏற்ற காலத்திலே அம்பாரத்தில் சேருகிறதுபோல, முதிர்வயதிலே கல்லறையில் சேருவீர் (யோபு 5:26) என்பது யோபுவுக்குச் சொல்லப்பட்டது.

கருகருவென இருந்த முடிகள் கொஞ்சம் கொஞ்சமாக நரைக்கத் தொடங்கும்போது, அதனைக் காணும்போது, நரையினை ஒத்துக்கொள்ள மனம்வருவதில்லை. அதனை எப்படியாவது கருமையாகவே பார்க்க விரும்பி சாயங்கள் பலவற்றை முடிகளில் பூசுகின்றோம். அதினால், மாயமான ஒரு சந்தோஷத்திற்குள் மனதைத் தள்ளுகின்றோம். 'முதிர்வயதானவர்களின் மகிமை அவர்கள் நரை' (நீதி. 20:29) என்ற வசனத்தின்படி, நரையில் உள்ள மகிமையைக் காண முடிவதில்லை. நரையை மறைக்கிறோம் என்றால், மகிமையை மறைக்கிறோம் என்பது அதன் மாற்றர்த்தமல்லவா. முதிர்வயதுள்ளவர்களை தகப்பனைப் போல நடத்தவேண்டும் (1தீமோ. 5:1,2) என்று தீமோத்தேயுவுக்கு ஆலோசனையாக எழுதுகின்றார் பவுல். நரைத்தவனுக்கு முன்பாக எழுந்து, முதிர்வயதுள்ளவன் முகத்தைக் கனம்பண்ணி, உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயப்படுவாயாக, உன் தேவனுக்குப் பயப்படுவாயாக; நான் கர்த்தர் (லேவி 19:32) என்பது ஆண்டவரின் வார்த்தை.

முதிர்வயதில் காணப்படவேண்டிய ஒரு குணத்தை பவுலின் வாழ்க்கையிலிருந்து நாம் அறிந்துகொள்ளுவோம். பவுல் தனது முதிர்வயதில், கட்டப்பட்டிருக்கும்போது, உடனிருந்த ஒநேசிமுவுக்காக பிலேமோனுக்கு எழுதும்போது, தன்னுடைய முதுமையைக் கையிலெடுத்து பிலேமோனுக்குக் கட்டளையிடவில்லை. பவுலாகிய நான் முதிர்வயதுள்ளவனாகவும், இயேசுகிறிஸ்துவினிமித்தம் இப்பொழுது கட்டப்பட்டவனாகவும் இருக்கிறபடியால், நீர் செய்யத்தக்கதை உமக்குக் கட்டளையிடும்படிக்குக் கிறிஸ்துவுக்குள் நான் துணியத்தக்கவனாயிருந்தாலும், அப்படிச் செய்யாமல், அன்பின் நிமித்தம் மன்றாடுகிறேன் (பிலே. 1:8,9) என்று எழுதுகின்றார். இத்தகைய மனப்பாங்கு முதிர்வயதின்போது நம்மிடத்திலும் உண்டாயிருக்கவேண்டும். ஊழியத்திலும், குடும்பவாழ்க்கையிலும் இத்தகைய அன்பின் மன்றாடுதல் அவசியம். கட்டளையிடுதல், சில நேரங்களில் நம்மைக் கவலைக்குள்ளாக்கிவிடுமே.

வாழ்க்கையின் இறுதி நாட்களுக்குள் வரும்போது, நமது இதயத்தின் நிலை எப்படியிருக்கின்றது? ஓட்டத்தை முடித்த அனுபவம் இருக்கிறதா? அல்லது ஓட்டத்தில் ஓரமாய் நின்றுவிட்ட, ஒதுங்கிவிட்ட அனுபவம் கண்ணில் படுகின்றதா? வாலிபத்தில் மாத்திரமல்ல, வயோதிபத்திலும் நம்மைக் காக்கிறவர் அவரே. உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்துவந்தேன்; இனிமட்டும் நான் உங்களை தாங்குவேன்; நான் அப்படிச் செய்துவந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4) என்பது அவர் நமக்குத் தந்த வாக்கு அல்லவா. முதிர்வயதாகும்போது, சரீரத்தின் பெலன் எல்லாம் போய்விட்டது என்ற மன்பாவனைக்குள் வரும் மனிதர்கள் சோர்புக்குள்ளாகத் தள்ளப்படுகின்றனர். வாழ்க்கையின் முடிவு நிலைக்குள் வந்துவிட்டேன், எல்லாம் முடிந்துவிட்டது, இனி மரணம்தான் என்ற சிந்தையினையே மேலோங்க விட்டுவிடுகின்றனர். 'இனி மரணம்தான்' என்பதும் 'மரணத்தைச் சந்திப்பது உண்மைதான்' என்றாலும், வாழ்க்கை முடிந்துவிடவில்லை என்பதை ஆவிக்குரியவர்களாகிய நாம் புரிந்துகொள்ளவேண்டும். உலகத்தின் வாழ்க்கையினை நிறைவு செய்து (காலியாக்கிவிட்டு அல்ல), பரம வாழ்வைத் தொடரவிருக்கும் நமது வாழ்க்கைப் பாதையில் இடையில் வரும் பாலமே மரணம். சகோதரரே, நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப்போலத் துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை (1தெச 4:13) என்று மரணத்தைக் குறித்து பவுல் குறிப்பிடுகின்றாரே.

இயேசு தனது சீஷர்களைப் பார்த்து 'அக்கரைக்குப் போவோம் வாருங்கள்' (மாற். 4:35) என்று சொன்ன வார்த்தை நமது காதுகளில் தொனிக்கட்டும். 'அக்கரைக்கு யாத்ரை செய்யும் சீயோன் சஞ்சாரி' என்பது நான் விரும்பும் ஓர் மலையாளப் பாடல். பார்ப்பவர்களுக்கு மரணமாய்த் தோன்றினாலும், கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட நமக்கோ மரணம் ஒரு தொடர் பயணமே. 

Comments

Popular posts from this blog

கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்

  கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்   வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கிறிஸ்துவின் குணங்களை வெளிப்படுத்தவேண்டியதும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டியதும் கிறிஸ்தவனின் தலையாயக் கடமை.  கிறிஸ்துவுக்குள்  வாழும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சில உண்மைகளை பவுல் எபேசு சபைக்குச் சுட்டிக்காட்டுகின்றார். கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்  (எபே. 1:3),  பாவமன்னிப்பாகிய மீட்பு  (எபே. 1:7) இவைகள் பொதிந்திருக்கின்றன. ஆனால், இவ்விரண்டிற்கும் பலர் முக்கியத்துவம் கொடுக்காமல், உலகத்தின் ஆசீர்வாதங்களையே அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். பாவமன்னிப்பினைப் பெறாமல், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறாமல், உலகத்தின் ஆசீர்வாதங்களுக்காகவே அவரின் பின்னே ஓடினால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் முடிவு பரிதாபமாகவே இருக்கும். உன்னதங்களில் உட்காரவேண்டிய நாம் உலகத்தோடு ஒட்டிவிடுவோம், மணவாளனோடு வாழவேண்டிய நாம் மண்ணுக்காக வாழ்ந்துவிடுவோம். கிறிஸ்துவிடம் பிரதானமாய் பாவமன்னிப்பையே முதலில் பெற நாடுவோம்; அதற்காகத்தானே பிதா இயேசுவை இந்த பூமியில் அனுப்பினார். எனவே, பிதாவின் பி...

இறைச்சியா? இச்சையா?

இறைச்சியா?  இச்சையா? 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்' (மத். 6:11) என்றும், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத். 6:34) என்றும் பிதாவை நோக்கி ஜெபிக்க இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக்கொடுத்திருந்தபோதிலும், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே 'உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்' (மத். 6:8) என்பதுதானே பிதாவைக் குறித்து இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிமுகம். 'முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்' (மாற். 7:27) என்பதுதான் அவரது விருப்பமும் கூட. 'வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (மத். 10:10) என்றும், 'வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (லூக். 10:7; 1தீமோ. 5:18) என்றும் நாம் வாசிக்கின்றோமே. அப்படியிருக்க, 'ஆகாரத்திற்காக வேலை' மற்றும் 'கூலிக்காக வேலை' என்ற என்ற பார்வையில் நமது பயணம் தொடர்ந்துவிடக்கூடாததல்லவா! 'இழிவான ஆதாயம்' நமது வழிகளை மாற்றிவிடக்...

வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்

  வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்   அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது,  இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.  ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்;  ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.(லூக் 4:25-27) இஸ்ரவேலின் தேவனாக இருந்தபோதிலும், இஸ்ரவேல் தேசத்திலேயே தனது குமாரனை மேசியாவாகப் பிறக்கச் செய்தபோதிலும், பஞ்ச காலத்தின்போது, இஸ்ரவேலருக்குள் இருந்த அநேகம் விதவைகள் போஷிக்கப்படாமற்போனதற்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், ந...