ஈர்ப்பா? தீர்ப்பா?
கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களாக உலகத்திற்கு வெளிச்சத்தை வீசிக்கொண்டிருக்கும் நாம், தேவனுக்கு விரோதமானவைகளால் ஈர்க்கப்பட்டுப்போய்விடக்கூடாது. துரோகம் செய்யும் சத்துருவினால் தொல்லைகள் பலவற்றை வாழ்க்கையின் பாதையில் சந்திக்க நேரிட்டாலும், மாம்சத்தின் பக்கமாய் ஈர்க்கப்பட்டுப்போய்விடக்கூடாது. ஆவியின் பக்கமாகவே நின்றுகொண்டு, வென்றுவிடும் வீரர்களாக நாம் மாறிவிடவேண்டும். பல்வேறு சட்டங்கள் உலகத்தில் ஏற்றப்பட்டிருந்தாலும், ஆவியின் கட்டளைகளை நாம் அவித்துவிடக்கூடாது, ஆவியின் அச்சாரத்தைக் கழற்றிவிடக்கூடாது, ஆவிக்குரிய சக்கரத்தை உடைத்துவிடக்கூடாது. சாகும்வரை சத்தியத்தின் பக்கமே நிற்போராக, சத்தியத்தைக் கொண்டே ஆவிக்குரிய வாழ்க்கையின் சரித்திரத்தை எழுதுவோராக நாம் காணப்படவேண்டும். மாம்சத்தின்படி நியாயந்தீர்த்த்தாலும் நீதி மரணத்தைச் சந்திப்பதில்லை, அது நிச்சயம் நித்திய ஜீவனுக்குள் நுழையும். மாம்சத்தின் வழிகளில் ஈர்ப்புண்டு, தவறான தீர்ப்பை தனது வாழ்க்கையில் எழுதிக்கொண்ட மக்கள் அநேகர்.
ஈர்ப்புக்கெல்லாம் இணங்காமல், நமது வாழ்க்கையின் தீர்ப்பை தவறாக்கிக்கொள்ளாமல் நம்மைக் காத்துக்கொள்ள, நான்கு காரியங்களை உங்கள் தியானத்திற்காக முன்வைக்க விரும்புகின்றேன்.
நீங்கள் மாம்சத்துக்கேற்றபடி நியாயந்தீர்க்கிறீர்கள், நான் ஒருவனையும் (மாம்சத்தின்படி) நியாயந்தீர்க்கிறதில்லை; நான் நியாயந்தீர்த்தால், என் தீர்ப்பு சத்தியத்தின்படியிருக்கும்; ஏனெனில் நான் தனித்திருக்கவில்லை, நானும் என்னை அனுப்பின பிதாவுமாக இருக்கிறோம் (யோவா 8:15,16) என்றார் இயேசு.
மாம்சத்தின்படியான தீர்ப்பு, சத்தியத்தின்படியான தீர்ப்பு இவ்விரண்டையும் வலுத்திக் கூறும் இந்த வசனத்தில் புதைபொருள் ரகசியமாகக் காணப்படுகிறார் 'பிதா'. மாம்சத்துக்குரியவர்களாக மாறிவிடாமல், சத்தியத்திற்குள்ளும், நித்தியத்திற்கு நேராகவும் நம்மை நடத்துகிறவர் பிதா ஒருவரே; நாம் அவருடைய பிள்ளைகளல்லவா!
அது ஒரு ஞாயிற்றுக்கிழமை; வேதாகமச் சங்கத்திலிருந்து பத்தாயிரம் வேதாகமங்கள் வாகனம் ஒன்றில் வந்திருந்தன; காலை சுமார் ஏழு மணி; வாகன ஓட்டியோ, உடனே வேதாகமங்களை இறக்கிவிட்டு செல்லவேண்டும் என்று என்னை அவசரப்படுத்திக்கொண்டிருந்தார். அவைகளை எப்படி இறக்குவது என்று அங்கும் இங்கும் உதவிக்காக நபர்களைத் தேடிக்கொண்டிருந்தேன் நான்; எட்டு மணிக்கு தொடங்கவிருக்கும் ஆலய ஆராதனையில் பங்கேற்பதற்காக அவசர அவசரமாக எல்லோரும் ஆலயத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். வேறு வழி அறியாதவனாக, அருகாமையிலுள்ள கிராமத்திற்குச் சென்று, ஆலயத்திற்குச் செல்லாத, ஆண்டவரை அறியாத சில நபர்களைக் கூட்டிக்கொண்டுவந்து வேதாகமங்களை இறக்கிக்கொண்டிருந்தேன்; நானும், வாகனத்தின் அருகே உட்கார்ந்தவனாயிருந்தேன். அப்போது அவ்வழியே வந்த சிலர், 'என்ன? ஆலய ஆராதனைக்குப் போகலையா?' என்று கேட்டனர். கிறிஸ்துவுக்காக நான் செய்யும் இந்தப் பணியும் ஓர் ஆராதனையே என்று என் உள்ளம் உண்மையை உரக்கச் சொன்னது.
இன்றைய நாட்களில், ஆராதனை என்றால் ஆலயத்திற்குச் செல்வது மட்டும்தான் என்று நினைக்கும் மக்கள் பலர் ஆண்வருக்காச் செய்யவேண்டிய பணியை மறந்துவிட்டனர். ஆராதனையில் இருந்துவிட்டு ஆத்துமாக்களை மறந்துவிட்டவர்களாக வந்தால் அந்த ஆராதனையினால் பலன் என்ன? பெதஸ்தா குளத்திலே முப்பத்தெட்டு வருஷம் வியாதிகொண்டிருந்த ஒரு மனுஷன் கிடக்கும்போது, அதற்கு முதலிடம் கொடுப்பது ஆராதனைக்கு இழுக்காகிவிடுமோ? ஜெபவேளையாகிய ஒன்பதாம்மணி நேரத்திலே பேதுருவும், யோவானும் தேவாலயத்துக்குப் போனபோது, தேவாலயத்திலே பிரவேசிப்பதற்கு முன்பாக சப்பாணியான மனுஷனை குணமாக்கினார்களே (அப். 3:6,7) அதனால் உண்டாகும் தாமதம் ஆராதனையை அசட்டை செய்வதாகிவிடுமோ?. தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார் (மத். 12:6) என்று இயேசுவின் பாதத்தில் உட்கார்ந்திருந்தால், ஆலயத்தில் இருப்பதாக எண்ணப்படாதோ? ஓய்வுநாளன்று என்ன செய்யக்கூடாது என்பதைப் போதித்த நியாயப்பிரமானத்தை அறிந்த ஜனங்கள், ஓய்வுநாளில் என்ன செய்யலாம் என்ற அறிவில்லாமற்போய்விட்டனர்; மற்றுமல்ல, அறிவோடிருப்பவரையும் அதட்டத் துணிந்துவிட்டனரே. இது ஓய்வுநாளை உடைக்கும் சத்தியமல்ல, ஓய்வுநாளை மேலும் உருவாக்கும் சத்தியம், ஓய்வுநாளுக்கு மேலும் மெருகூட்டும் சத்தியம், ஓய்வுநாளை மேலும் அர்த்தமுள்ளதாகவும், அழகானதாகவும் மாற்றும் சத்தியம். ஓய்வுநாளில் ஓய்வுநாளிலும் மேலானவைகளைச் செய்வது தேவனுக்குப் பிரியமானதே. நம்முடைய தீர்ப்பு எதைச் சார்ந்ததாயிருக்கிறது?
மாம்சத்தின்படி பிள்ளைகளானவர்கள் தேவனுடைய பிள்ளைகளல்ல, வாக்குத்தத்தத்தின்படி பிள்ளைகளானவர்களே அந்தச் சந்ததி என்றெண்ணப்படுகிறார்கள் (ரோம 9:8) என்று எழுதுகின்றார் பவுல். இன்றும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையில் பலர் மாம்சத்தின்படி பிள்ளைகளானவர்கள்தான், இதை வைத்துதான் கணக்கீடு செய்துகொண்டிருக்கின்றது கிறிஸ்தவ உலகு. ஆனால், கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள், சத்தியத்திற்கு தங்களை அர்ப்பணித்தவர்கள், பிதாவோடு இணைந்து வாழ்பவர்கள் மாத்திரம் கணக்கீடு செய்யப்பட்டால் தொகை எத்தனையாயிருக்கும்? மாம்சத்தின்படி இத்தனை கோடி மக்கள் என்று சந்தோஷப்படும் நாம், ஆவியின்படி தீர்த்தால் ஒருவேளை அழ நேரிடலாம். கிறிஸ்தவ பெற்றோர்களுக்குப் பிறந்ததினால் கிறிஸ்தவர்கள் என்ற பட்டியலில் சேர்க்கப்பட்டுவிட்டவர்கள் ஏராளம். பல நேரங்களில் மாம்சத்தைத் துணையாக வைத்துக்கொண்டே மனிதர்களை நியாயந்தீர்க்க முற்படுகின்றோம். எங்கள் சபைக்கு அதிகமான பேர் வருகின்றனர் என்பதிலேயே ஆனந்தமடைந்துவிடுகின்றனர் பல ஊழியர்கள். இயேசுவோ, 'என் தீர்ப்பு சத்தியத்தின்படியிருக்கும்' என்கிறார் (யோவான் 8:16).
பிதாவோடு பிணைந்திருங்கள்: பிதாவோடு இணைந்திருக்கும் மக்களே, சத்தியத்தின்படியான தீர்ப்பை அளிக்கும் மக்கள். இயேசு தனித்திராமல் தன்னை அனுப்பின பிதாவோடு இணைந்து இருந்ததே அவர் சத்தியத்தின்படி தீர்ப்பளிக்கிறதற்குக் காரணம் (யோவான் 8:16). பிதாவோடு கூட இணைந்து இருப்பதே நம்மை சத்தியத்தோடு கூட இணையச் செய்யும். பிதாவை விட்டுப் பிரிந்து வாழ்ந்தால், மாம்சம் நம்மோடு இணைந்துகொள்ளும். பிள்ளையாக மாறிய பின்னர், தகப்பனும் மகனும் தனித்தனியே வாழ்ந்தால் எப்படியிருக்கும்? ஆனால், இன்றோ பலரது நிலை இப்படித்தானே இருக்கின்றது. இயேசுவை ஏற்றுக்கொண்டேன் என்று சொல்கிறார்கள், ஞானஸ்நானம் பெற்றுவிட்டேன் என்று சொல்லுகிறார்கள், அபிஷேகிக்கப்பட்டிருக்கிறேன் என்று அறிவிக்கிறார்கள்; ஆனால், அவர்களின் வாழ்க்கையில் நடக்கையில், பேச்சின் வார்த்தைகளில் சத்தியத்தைக் காணமுடியவில்லையே. மாம்சத்தின்படியே முடிவெடுத்து, மாம்சீக வார்த்தைகளையே உதிர்த்து, மாம்சீக குணங்களை வெளிக்காட்டி நிற்கும் இத்தகையோர், பிள்ளையானாலும் 'பிதாவை விட்டுத் தனித்து வாழ்பவர்கள்'; பிதாவுடனான இணைப்பில் நிலைத்திருக்காதவர்கள். 'நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்' (யோவான் 10:30) என்றார் இயேசு. பிதா, குமாரன், பரிசுத்தஆவி இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள் (1யோவான் 5:7). இவர்களுக்குள் பிரிவினையில்லை, தனித்தியங்கினாலும் தனித்திராதவர்கள். பிதாவை எங்களுக்குக் காண்பியும் அது எங்களுக்குப் போதும் என்றான் பிலிப்பு. அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? (யோவா 14:8-10) என்றார். இத்தகைய பிணைப்பில் இருந்த இயேசுதான் 'நானே சத்தியம்' (யோவான் 14:6) என்று சத்தியமாகத் தன்னை வெளிப்படுத்தினார்.
இப்படியே நாமும் பிதாவுக்குள் இருக்வேண்டும், சத்தியத்தினால் நிறைந்திருக்கவேண்டும் என்று இயேசு விரும்புகின்றார். எனவே, 'பிதாவே, நீர் என்னிலேயும், நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்கிறேன்' (யோவான் 17:21) என்று ஜெபித்தார். 'பிதாவை விட்டுப் பிரிந்திருக்காமல் இருப்பதே சத்தியம்'. இயேசுவைப்போல பிதாவோடு இணைந்தோராக நாம் வாழும் வாழ்க்கையே சத்தியத்தை உலகத்திற்கு வெளிப்படுத்தும். அவருடைய வசனமே சத்தியம் (யோவான் 17:17) அதை விட்டு வலது இடது புறம் விலகாமல் நடக்க நம்மைப் பழக்குவித்துக்கொள்ளுவோம்.
இயேசுவோடு இணைந்திருங்கள்: பிதாவோடு இணைந்திருக்கவேண்டும் என்பதனால், குமாரனையோ, பரிசுத்த ஆவியையோ ஒதுக்கப்படவேண்டியவர்களோ, விடப்படவேண்டியவர்களோ அல்ல. பிதாவைச் சென்றடைய வழி ஒன்றே, அது ஒருவரே, அது இயேசுவே. இந்த மார்க்கத்தை விட்டு மாறிச்செல்லும் மனிதர்களின் பயணங்கள் பிதாவைச் சென்றடைவதில்லை. குமாரனை (இயேசுவை) மறுதலிக்கிறவன் பிதாவையுடையவனல்ல, குமாரனை அறிக்கையிடுகிறவன் பிதாவையும் உடையவனாயிருக்கிறான் (1யோவான் 2:23). இயேசுவை ஏற்றுக்கொள்ளாமல், பிதாவை மட்டுமே வணங்கவேண்டும் என்று இயேசுவை மறுதலிக்கிறவர்கள் உலகத்தில் உண்டு. வழியாகிய 'இயேசுவை' விட்டுவிட்டால், சேரவேண்டிய இடத்திற்குப் போய் சேருவது எப்படி? ரகசிய வருகையானாலும், பகீரங்கமான வருகையானாலும் வரப்போவது பிதா அல்ல இயேசுவே என்பதை மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள். இயேசு தன்னை ஏற்றுக்கொண்டவர்களை பிதாவினிடத்திற்கு அழைத்துச் செல்லுவார். அழைத்துச் செல்லும் பேருந்தே வேண்டாம் என்றால், பரலோகம் போவது எப்படி? பிதாவிடம் சென்றடைவது எப்படி?
சகோதரர்களோடு சமமாயிருங்கள்: பிதா, குமாரன், பரிசுத்த ஆவியோடு மாத்திரமல்ல, உடனிருக்கும் சகோதரர்களோடும் பிரிவினையின்றி வாழவே நாம் அழைக்கப்பட்டவர்கள். வழிக்குள் வந்துவிட்ட பின்னரும் பிரிவினை என்னும் வலியால் உடனிருப்போரை வதைத்துக்கொண்டிருக்கும் மனிதர்கள் உண்டு. ஜாதியின் பெயரிலும், ஊர்களின் பெயரிலும், குடும்ப அந்தஸ்துக்களைக் கொண்டும், சமுதாய ஏற்றத் தாழ்வுகளைக் கொண்டும் பிரிவினைகளை உள்ளடக்கிய சகோதரர்களாக நாம் வாழக்கூடாது. யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை. அடிமையென்றும், சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நாம் எல்லோரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறோம் (கலா. 3:28). யூதரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு யூதருக்கு யூதனைப்போலவும், நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவனைப்போலவுமானேன். நியாயப்பிரமாணமில்லாதவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு அவர்களுக்கு நியாயப்பிரமாணம் இல்லாதவனைப்போலவுமானேன். அப்படியிருந்தும், நான் தேவனுக்குமுன்பாக நியாயப்பிரமாணமில்லாதவனாயிராமல், கிறிஸ்துவின் பிரமாணத்துக்குள்ளானவனாயிருக்கிறேன். பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப்போலானேன்; எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன் (1கொரி 9:20-22) என்று கிறிஸ்துவுக்குள்ளான தனது நிலையினை பவுல் குறிப்பிடுகின்றார். தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்? (1யோவா 4:20) என்று கேள்வியெழுப்புகிறார் யோவான்.
ஒரு பட்டணத்திற்குச் சென்றிருந்தேன், நண்பர் ஒருவர் தன்னுடைய காரில் அப்பட்டணத்தைச் சுற்றிப்பார்க்கும்படியாக அழைத்துச் சென்றார். காரில், முன் இருக்கையில் இருந்தவாறு பல்வேறு பகுதிகளை எனக்கு காண்பித்துக்கொண்டே வந்தார் அந்த நண்பர். ஒரு குறிப்பிட்ட பகுதி வந்ததும், காரை நிறுத்திவிட்டு, காருக்குள் இருந்தவராக இடப்புறம் இருக்கும் ஓர் ஆலயத்தையும், வலப்புறம் இருக்கும் மற்றொரு ஆலயத்தையும் எனக்குக் காண்பித்தார். அத்துடன், அது B.C (உயர் ஜாதியினர்) ஆலயம் இது S.C (தாழ்த்தப்பட்ட ஜாதியினர்) ஆலயம் என்று அடையாளப்படுத்திக்கொடுத்தார். அவ்வளவுதான், அந்தப் பட்டணத்தைச் சுற்றிப் பார்க்கும் மனநிலையிலிருந்து நான் விடுபட்டுவிட்டேன். தமிழகத்திலே, மிஷனரிகள் வந்து சுவிசேஷத்தைப் போதித்த மண்ணிலேயே இந்த நிலை என்றால்? நியாயத்தீர்ப்பில் இவர்களது நிலை என்னாவது? மாம்சத்தின்படி (ஜாதியின்படி) பிரித்துவைக்கும் இவர்களை என்னவென்று சொல்வது. அப்படியே, இந்த ஜாதி மக்கள் இந்த ஆலயத்தில் அதிகம் இருக்கிறார்கள் எனவே, அந்த ஜாதி போதகர்தான் பணிக்கு அமர்த்தப்படவேண்டும் என்பதும், ஆலயங்களின் பொறுப்புக்களிலும் அந்த ஜாதியினரே ஆளவேண்டும் என்பதும் மாளும் மாம்சத்தோடு நிற்பவர்களின் செயல் என்பதில் சந்தேகத்திற்கிடமில்லை.
ஒரு கிறிஸ்தவ சகோதரர் என்னிடம் பேசிக்கொண்டேயிருந்தார். திடீரென குறிப்பிட்ட ஒரு ஊழியரின் பெயரைச் சொல்லி, அவர் யார் தெரியுமா? என்று கேட்டார்; ஆம், தெரியும் என்று சொன்னேன். அட, அதக்கேக்கல என்றார்? நானோ, எதைக் கேட்கிறார் என்று குழம்பியவனாக யோசித்துக்கொண்டிருந்தேன், அப்போது அவர், 'அந்த ஊழியர் 'L' என்றார். எனக்கோ ஒன்றும் புரியவில்லை. 'L' என்றால் என்னது? என்று நான் அவரிடம் கேட்டபோது, குறிப்பிட்ட ஒரு ஜாதியின் பெயரைச் சொல்லி, 'அவங்க எல்லாம் அப்படித்தான் இருப்பாங்க' என்றார் அடைமொழியோடு. இந்த நிலையை என்னவென்று சொல்ல. சகோதரன் ஒருவன் குறிப்பிட்ட ஒரு ஊழியத்தின் பெயரைச் சொல்லி, எங்க அப்பா அந்த ஊழியத்தை அதிகம் தாங்குவதற்குக் காரணம், அந்த ஊழியர் எங்க ஜாதி என்றான். இவை அனைத்திற்கும், நானே நேரடி சாட்சி.
இத்தகைய பிரிவினைக்குள் விழுந்துகிடக்கும் நபராக நீங்கள் இருப்பீர்களென்றால், எழுந்தோடும் வேளை இது, பிதாவோடு பிணைந்துகொள்ளும் வேளை இது, இயேசுவோடு இணைந்துகொள்ளும் வேளை இது, ஆவியானவருக்கு இடமளியுங்கள், வாழ்க்கையின் ஆனந்தத்தை அனுபவியுங்கள்.
Comments
Post a Comment