விசுவாசத்தை மூடிய
அவிசுவாசம்
கிறிஸ்துவை பிறர் அறிந்துகொள்ளவேண்டும் என்ற தரிசனத்திற்காக நம்முடைய ஜீவனையும் பணையம் வைத்து நாம் முன்னேறும் பயணம் பிதாவுக்குப் பிரியமானது. 'சகல ஜாதிகளுக்கும் சுவிசேஷம் முந்திப் பிரசங்கிக்கப்படவேண்டும்' (மாற் 13:10) என்றாரே இயேசு கிறிஸ்து. கலக்கத்தோடும், நடுக்கத்தோடும், சந்தேகத்தோடும் தங்களது ஒவ்வொரு நாட்களையும் இத்தரையில் சமாதானமின்றியும் சந்தோஷமின்றியும் கடத்திக்கொண்டிருக்கும் இம்மனுக்குலத்திற்காக, சத்தியத்தை அறிவிக்க சட்டென நமது பாதங்கள் புறபட்டுச் செல்லாவிடில், பிதாவை அறியும் பாக்கியம் பிறருக்கு கிடைக்காமற்போய்விடக்கூடும். 'ஆண்டவரே, நீர் அனுப்பச் சித்தமாயிருக்கிற யாரையாகிலும் அனுப்பும்' (யாத் 4:13) என்று நமக்கான அழைப்பை தாமதப்படுத்தவோ அல்லது பிறர் மீது சுமத்தவோ முற்படாமல், யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டதும், 'இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும்' (ஏசா 6:8) என்று ஏசாயா தீர்க்கதரிசியைப்போல எழுந்து செல்ல ஆயத்தமாகவேண்டுமே.
கடலின் மீது தனது படகில் மீனவனாக மிதந்துகொண்டிருந்தபோது, தன்னைத் தேடிவந்த அழைப்பினை தயக்கத்துடன் ஏற்றுக்கொண்டவன் சீமோன் பேதுரு. படகு நிரம்பும்படியாக ஆண்டவர் கொடுத்த ஆசீர்வாதங்கள் அனைத்தையும் அப்படியே, அங்கேயே விட்டுவிட்டுச் சென்றவன் அவன். முந்தி முந்தி பேதுரு பேசின அனைத்து வார்த்தைகளுக்கும், அவனது உள்ளத்தில் இருந்த உற்சாகமே காரணம் என்பதை அவனது ஒவ்வொரு உரையாடல்களிலிருந்தும் நாம் உணர்ந்துகொள்ள இயலும். அப்போஸ்தலர்களின் நாமங்களின் வரிசை எழுதப்படும்போதும், 'முந்தினவன் பேதுரு என்னப்பட்ட சீமோன்' என்றே வேதம் அவனை வர்ணிக்கிறது (மத். 10:2). வழியில் அவனை அழைத்ததோடு மாத்திரமல்ல, வீட்டிற்கும் சென்று அவனது மாமியைக் குணமாக்கினார் இயேசு கிறிஸ்து (மத். 8:14,15). எனினும், முந்தி முந்தி பேசிக்கொண்டிருந்த பேதுருவின் வாழ்க்கையில் காணப்பட்ட முன்மாதிரியான காரியத்தையும் நாம் அறிந்துகொள்வது அவசியம். சீஷர்கள் கடலில் பயணித்துக்கொண்டிருந்தபோது, படவு நடுக்கடலிலே எதிர்காற்றாயிருந்தபடியால் அலைகளினால் அலைவுபட்டது. அப்போது, இரவின் நாலாம் ஜாமத்திலே, இயேசு கடலின்மேல் நடந்து அவர்களிடத்திற்கு வந்தபோது, அவர் கடலின்மேல் நடக்கிறதைச் சீஷர்கள் கண்டு, கலக்கமடைந்து, ஆவேசம் என்று சொல்லி, பயத்தினால் அலறினார்கள். உடனே இயேசு அவர்களோடே பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள் என்று சொன்னபோது, பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே! நீரேயானால் நான் ஜலத்தின்மேல் நடந்து உம்மிடத்தில் வரக் கட்டளையிடும் என்றான் (மத் 14:24-28).
அதற்கு அவர்: 'வா' என்று சொன்னபோது, பேதுரு படவை விட்டிறங்கி, இயேசுவினிடத்தில் போக ஜலத்தின் மேல் நடந்தான் (மத். 14:29). கடலின் மேல் நடந்துவருகிறவர் இயேசு கிறிஸ்துதானா? என்ற சந்தேகம் சீஷர்கள்
மனதில் காணபட்டது. சற்று நேரத்திற்கு முன்னர்தான் இயேசுவோடு கூட அவர்கள் இருந்திருக்கிறார்கள்; இயேசுவின் போதனைகளைக்
காதாரக் கேட்டிருக்கிறார்கள்; ஐந்து அப்பங்களையும் இரண்டு மீனையும் கொண்டு இயேசு செய்த அற்புதத்தையும் கண்ணாரக் கண்டிருக்கிறார்கள்; என்றபோதிலும், தங்களோடு கூட படகில் இயேசு கிறிஸ்து ஏறாததினாலும் மற்றும் கடலின் மேல் நடக்கிறவராக அவரை இதுவரை அவர்கள் காணாததினாலேயும், 'திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள்' என்று அவர் சொன்ன வார்த்தைகளை அவர்களால் நம்ப முடியவில்லை. படகிலிருந்த சீஷர்கள் கலக்கமடைந்து, ஆவேசம் என்று சொல்லி, பயத்தினால் அலறினார்கள் (மத். 14:26). படகிலிருந்த பேதுருவும் 'நீரேயானால்' (மத். 14:28) என்று சொன்னவனாகவே படகினை விட்டு கீழே கடலில் இறங்குகின்றான்; இப்படியிருக்க, பேதுருவின் செயலைக் கண்ட மற்ற சீஷர்கள் அவனைக் குறித்து என்ன நினைத்திருப்பார்கள்? மேலும், இயேசுவும் கையை நீட்டி அவனைப் பிடித்து: 'அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய்?' (மத். 14:31) என்றே கூறுகின்றதையே வேதத்தில் நாம் வாசிக்கின்றோம்.
சக சீஷர்கள் பயத்தினால் அலறிக்கொண்டிருந்தபோதிலும், சந்தேகம் ஒருபுறம் தன்னை அழுத்திக்கொண்டிருந்தபோதிலும், சத்தியத்தை அதாவது உண்மை என்ன என்பதை அறிந்துகொள்ளும்படியாக பேதுரு முதலில் கடலில் அடியெடுத்துவைத்தானே. அவ்வாறே இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தபோது, பேதுருவும் மற்றச் சீஷனும் கல்லறையினிடத்திற்குப் போகும்படி புறப்பட்டு, இருவரும் ஒருமித்து ஓடினார்கள். பேதுருவைப்பார்க்கிலும் மற்றச் சீஷன் துரிதமாய் ஓடி, முந்திக் கல்லறையினிடத்தில் வந்து, அதற்குள்ளே குனிந்துபார்த்து, சீலைகள் கிடக்கிறதைக் கண்டான்; ஆனாலும் அவன் உள்ளே போகவில்லை. சீமோன் பேதுரு அவனுக்குப் பின்னே வந்து, கல்லறைக்குள்ளே பிரவேசித்தான் (யோவா 20:3-6) என்று வாசிக்கின்றோமே.
காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு, பயந்து, அமிழ்ந்துபோகையில்: 'ஆண்டவரே, என்னை ரட்சியும்' என்று கூப்பிட்டான். உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து: அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய் (மத் 14:31) என்று அவனைத் தூக்கிவிட்டார். இது எதைக் காட்டுகின்றது? அது ஆண்டவர்தான் என்ற விசுவாசம் பேதுருவினிடத்தில் காணப்பட்டது; என்றபோதிலும், அவிசுவாசம் அதனை மூடியிருந்தது என்பதைத்தானே. அலைகளினால் அவனது அவிசுவாசம் வெளிப்பட்டது. 'விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும்' (மாற் 9:24) என்று நாமும் ஜெபிப்போம். பேதுரு தனது ஜீவனை பணயமாக வைத்ததினாலேயே, உடனிருந்தவர்கள் அது கிறிஸ்துதான் என்பதை உறுதிசெய்துகொண்டார்கள். மற்றவர்கள் கிறிஸ்துவை அறிந்துகொள்ள, நாமும் பேதுருவைப்போல முந்தி பயணிப்போம்.
Comments
Post a Comment