கல்லெறியும் சந்ததி
இயேசு இந்த உலகத்தில் வாழ்ந்தபோது, இழந்துபோன மனிதனை மீண்டும் பிதாவண்டைக்கு கொண்டுவரும் நோக்கில், பல்வேறு காரியங்களைப் போதித்தார். அறிவாளிகளாயிருந்தவர்களுக்கும், அறிவிலிகளாயிருந்தவர்களுக்கும் எவரையும் வெறுத்துவிடாமல் அனைவரையும் சென்றடைந்தது அவரது போதனை. எனினும், இயேசுவின் போதனைகளும், செயல்களும் பலருக்கு விளங்காத புதிரைப் போலவே காணப்பட்டது. தங்களது புத்தியைக் கொண்டு, இயேசுவை புரிந்துகொள்ள முயற்சித்த வேதபாரகர், பரிசேயர், ஆசாரியர், அரசர் மற்றும் ஏனைய பிற வர்க்கத்தினைச் சார்ந்த ஜனங்களுக்கு அது அத்தனை சுலபமாயிருக்கவில்லை. 'யார் இவர்?' 'இவரைச் சுற்றி என்ன நடக்கிறது?' என்ற கேள்விக்குள் இருந்து அவர்கள் மீளாமலேயே காணப்பட்டனர். வார்த்தைகளினாலோ, கேள்விகளினாலோ, நியாயப்பிரமாணத்துக்கடுத்த காரியங்களினாலோ அவரை குற்றஞ்சாட்ட இயலாதவர்களாகவே அவரை விரோதித்தவர்கள் காணப்பட்டனர்.
திமிர்வாதக்காரனை நோக்கி: 'மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது' (மாற். 2:5) என்று சொன்னபோது, 'இவன் இப்படி தேவதூஷணம் சொல்லுகிறதென்ன?' தேவன் ஒருவரேயன்றிப் பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார் என்று தங்கள் இருதயங்களில் சிந்தித்துக்கொண்டிருந்தார்கள் (மாற். 2:7). இயேசுவையும், பிதாவையும் காண இயலாத குருடர்களாக அவர்கள் இருந்ததே அதற்குக் காரணம். 'இவன் யார்?' (லூக். 5:21, 7:49, 9:9) என்ற கேள்வியையே தொடர்ந்து தங்களுக்குள்ளும், பிறருடனும் அவர்கள் கேட்டுக்கொண்டிருந்தனர். உலகத்தில் அவர் பிறந்த குடும்பத்தை, தகப்பனை, தாயை மற்றும் உடன் பிறந்த சகோதரர்களை ஜனங்களால் அடையாளம் கண்டுகொள்ள முடிந்திருந்தபோதிலும், பரம பிதாவின் பிள்ளை அவர், தேவனுடைய ஒரே பேரான குமாரன், அவரே மேசியா என்பதை அடையாளம் கண்டுகொண்டோர் சொற்பமே. ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள்? என்று இயேசு தனது சீஷர்களிடத்தில் கேட்டபோது, 'யோவான் ஸ்நானன் என்றும், எலியா என்றும், எரேமியா என்றும் தீர்க்கதரிசிகளில் ஒருவர்' என்ற பதில்கள்தான் கிடைத்தன. இயேசு கிறிஸ்து, தேவனுடைய குமாரன் என்ற பதில் ஜனங்களிடமிருந்து வரவில்லை. அதன் அர்த்தம் என்ன? அவர்கள் அவரை இயேசுவாக அதாவது மேசியாவாக அதாவது தேவனுடைய ஒரே பேரான குமாரனாக பார்க்கவில்லை என்பதுதானே. உலக உறவை அறிந்திருந்த ஜனங்கள், அவருக்கு இருந்த உன்னத உறவை அறியாதிருந்தனர். அவரோடு உடனிருந்த சீஷர்கள் கூட தட்டுத் தடுமாறித்தான் சென்றுகொண்டிருந்தனர்.
நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே (யோவா 6:51) என்று இயேசு போதித்தபோது, யூதர்களோ, 'இவன் தன்னுடைய மாம்சத்தை எப்படி நமக்குப் புசிக்கக் கொடுப்பான் என்று தங்களுக்குள்ளே வாக்குவாதம்பண்ணினார்கள்' (யோவான் 6:52). அந்த சத்தியம் அவர்களுக்குப் புரியாதிருந்தது. என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது. என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன் (யோவா 6:55,56) என்று இயேசு போதித்தNபுhது, அவருடைய சீஷரில் அநேகர் அவருடனேகூட நடவாமல் பின் வாங்கிப்போனார்கள் (யோவா 6:66).
விபசாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிக்கப்பட்ட ஸ்திரீயை, கல்லெறியவேண்டும் என்று வேதபாரகரும், பரிசேயரும் கொண்டுவந்தனர். இயேசுவோ, அவளது பாவங்களை மன்னித்து, அந்த மாபெரும் தண்டணையிலிருந்து அவளை தப்புவித்தார் (யோவான் 8:4,11). உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் (யோவான் 8:7) என்று இயேசு சொன்னபோது, மனசாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்ட சிறியோர் முதல் பெரியோர்வரைக்கும் ஒவ்வொருவராகப் போய்விட்டார்கள்; கொண்டுவந்தவர்கள் பாவிகள் என்பதுதானே புலப்படுகிறது. எனினும், கொண்டுவந்தவர்கள் பாவ மன்னிப்பைப் பெற்றுக்கொள்ளாமல், மனந்திரும்புதலைப் பெற்றுக்கொள்ளாமல் திரும்பிப்போனார்கள்; அவர்கள் கொண்டுவந்தவளோ மனம்மாறி, பாவ மன்னிப்பினையும் பெற்றவளாக திரும்பிப்போனாள். இயேசு பாவங்களை மன்னிக்க அதிகாரமுடையவர் என்று தெரிந்திருந்தால், அவர்களும் 'ஆண்டவரே, எங்கள் பாவங்களையும் மன்னியும்' என்று கேட்டிருப்பார்களே. தங்களை பாவிகள் என்று உணர்ந்துகொள்ள முடிந்தபோதிலும், மனந்திரும்பக்கூடாதவர்களாக இருந்தார்கள் அவர்கள்.
'ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால் என்றென்றைக்கும் மரணத்தை ருசிபார்ப்பதில்லை' (யோவான் 8:52) என்று இயேசு போதித்தபோது, 'எங்கள் பிதாவாகிய ஆபிரகாமிலும் நீ பெரியவனோ? அவர் மரித்தார், தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள்; உன்னை நீ எப்படிப்பட்டவனாக்குகிறாய்' என்றார்கள் (யோவான் 8:53). 'உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான்' (யோவான் 8:56) என்று இயேசு சொன்னபோது, 'உனக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லையே, நீ ஆபிரகாமைக் கண்டாயோ?' என்றார்கள் (யோவான் 8:57). அதற்கு பதிலாக, 'உலகம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன்' (யோவான் 8:58) என்று சொன்னபோது, அவர்மேல் எறியும்படி கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள்' (யோவான் 8:59). இயேசுவைக் குறித்து அவர்களுக்கு இருந்த அறிவு அவ்வளவுதான். விபச்சாரத்தில் ஈடுபட்ட அந்த ஸ்திரீயை கல்லெறியவேண்டும் என்று வந்தவர்கள், இயெசுவையும் கல்லெறியும்படி வந்துவிட்டார்கள் (யோவான் 8:59). அப்படியே, ஸ்தேவான் பேசியதைக் கேட்டபொழுது, மூர்க்கமடைந்து, அவனைப் பார்த்துப் பல்லைக் கடித்தார்கள் (அப் 7:54). அவர்களால் அவனது வார்த்தைகளைப் புரிந்துகொள்ள இயலாமற் போயிற்று. இப்படி கல்லெறியும் மக்களை சத்துரு அநேக இடங்கள் தனக்காக நிறுத்திவைத்திருப்பான்.
ஒரு ஊரிலுள்ள ஆலயத்தில் ஞாயிறு ஆராதனையில் நான் செய்தியளிக்கும்படிக்குச் சென்றிருந்தேன். நான் செய்தியளித்துக்கொண்டிருக்க, ஆலயத்தில் உள்ள மக்கள் அமைதியாக அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, தீடீரென வெளியிலிருந்து ஆலயத்தினுள் ஓடிவந்தார் ஒரு தாயார், நான் செய்தியளித்துக்கொண்டிருக்கும் இடத்தை நோக்கி ஓடிவந்தார். அவரது கைகள் என்னை அடித்துவிடும் ஆத்திரத்தில் ஓங்கியவாறு இருந்தன. ஆலயத்தினுள் வந்ததும், 'யார்டா பாவத்தில புள்ள பெத்தா, என்னடா எங்ககிட்ட வந்து சொல்லிகிட்டிருக்க, உங்க அம்மா எப்படி பெத்தா?' என்று என்னைப் பார்த்து கூக்குரலிட்டார். அவரது கொச்சையான வார்த்தைகள் கேட்பதற்கே எனக்கு கூச்சமாயிருந்தன. அப்போதுதான் எனக்குப் புரிந்தது, 'என் தாய் என்னைப் பாவத்தில் கற்பந்தரித்தாள்' (சங். 51:5) என்று நான் பிரசங்கத்தின் இடையில் சொன்ன வார்த்தையினை தவறாகப் புரிந்துகொண்டு அந்த தாய் வந்திருந்தார் என்று. சபை ஊழியர் ஒருவாராக அவரை சாமாதானப்படுத்த, அது வேத வசனம் என்று புரியவைக்க முயன்றும் அவர் அடங்குவதற்கு நேரம் பிடித்தது. அந்தத் தாய் ஆலயத்தை விட்டு வெளியே சென்ற பின்பு நான் எனது செய்தியை தொடர்ந்தேன். ஆராதனையின் முடிந்த பின்னர், நான் வந்திருந்த சைக்கிளில் வீட்டிற்குப் புறப்பட நான் ஆயத்தமானபோது, எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. எனது சைக்கிளின் இரண்டு டயர்களையும் ஆணிகளால் குத்தி பஞ்சராக்கியிருந்தனர் அந்த ஊரைச் சேர்ந்தவர்கள். நான் சைக்கிளை உருட்டிக்கொண்டே நடந்து சென்றபோது, என்னைச் சுற்றி நின்று வேடிக்கையுடன் சிரித்துக்கொண்டிருந்த வாலிபர்களைப் கண்டேன்; அந்தச் செயலைச் செய்தவர்கள் யார் என்பதை என்னால் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது.
இயேசுவை அறியாதவர்களாக, சுவிசேஷத்தின் அருமையைப் புரியாதவர்களாக இருக்கும் ஜனங்கள்; அதனைச் சுமந்து செல்லும் சுவிசேஷகர்களை இவ்விதமாகவே நடத்துகின்றனர். அதுமாத்திரமல்ல, ஆலயத்திலும், கன்வென்ஷன் கூட்டங்களிலும் கிறிஸ்தவர்களிடையேயும் சில போதகர்களின் நிலை இப்படியே காணப்படுகின்றது. சத்தியத்தைப் பேசும் சபை ஊழியர் மாற்றம் செய்யப்படுகிறார், ஆவிக்குரிய வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போதகர் சபையை விட்டு அகற்றப்படுகிறார். சத்தியத்தையும் அறிந்துகொள்ள இயலாத மக்கள், சத்தியத்தைப் போதிக்கும் அத்தகையோருக்கு விரோதமாகவே எழும்பி நிற்கின்றனர். தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கிவைத்திருக்கிறான் (2கொரி. 4:4). இத்தகைய குருடர்களின் கண்களைத் திறக்கும்போது, சத்துரு நிச்சயம் உங்களோடு போராடுவான்.
ஆம், பிரியானவர்களே; ஜனங்கள் வேதத்தின் வசனங்களைப் புரிந்துகொள்ள இயலாமற்போவார்களானால், தவறாக புரிந்துகொள்ளுவார்களென்றால் அதனால் நீங்கள் பாதிக்கப்படலாம்; என்றாலும், இயேசு சிலுவையில் அறையப்பட்டதையே நினைத்துக்கொள்ளுங்கள். இயேசுவை அறிந்துகொள்ளாத, இரட்சிப்பின் வழியைத் தெரிந்துகொள்ளாத, வேதத்தை விட்டு விலகி வாழ்கிற ஜனங்களோடு, குடும்பத்திலோ, அலுவலகத்திலோ, சபைகளிலோ நீங்கள் இருக்கும்போது, உங்களது வார்த்தைகளை அவர்கள் எள்ளி நகையாடும் நிலை உண்டாகலாம். 'நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையிலிருந்து இறங்கி வா' (மத். 27:40) என்று இயேசுவின் நிலையினை நமக்கும் உருவாக்கலாம். மற்றவர்களை ரட்சித்தான்; தன்னைத்தான் ரட்சித்துக்கொள்ளத் திராணியில்லை' (மத். 27:42) என்றும், 'உன்னை அடித்தவன் யார்?' (லூக். 22:64) இயேசுவை நிந்தித்தது போல நம்மை நிந்திக்கலாம். நமது ஆலோசனைகள், பிரசங்கங்கள், அறிவுரைகள் அத்தனையும் அவர்களுக்கு அருவருப்பாகத் தோன்றலாம், உங்களை அவர்கள் தூற்றலாம் என்றாலும் நீங்கள் தேவனுடையவர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். அவர்களது எதிரான வார்ததைகளினால், நமது ஆவிக்குரிய வாழ்க்கையினை இழந்துவிடக்கூடாது. 'சத்தமிடமாத ஆட்டுக்குட்டியிருக்கக் கற்றுக்கொள்ளுவோம்.' நாம் பலியாகிவிட்டால் அவர்களுக்குப் பாடம் புரியும். 'பிதாவே, இவர்களுக்கு மன்னியும் தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே' (லூக். 23:34) என்ற ஜெபமே நமது வாயிலிருந்தும் புறப்படட்டும்.
Comments
Post a Comment